காவி பயங்கரவாதிகளுக்குத் தண்டனை எப்போது?

பிப்ரவரி 01-15

மாலேகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப் பட்ட இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ்.காரர்களான ஜோஷி, லோகேஷ் சர்மா முதலிய பார்ப்பனர்கள் அதில் மட்டுமல்லாமல், அய்தராபாத்தின் மெக்கா மஜிஸ்த் ஆஜ்மீர்தர்கா குண்டுவெடிப்புகளிலும் சம்பந்தப்பட்டு, அதற்கு மேலும் குஜராத் கலவரத்தை  திட்டமிட்டே அங்கே  நிகழ்த்திவிட்டு, முஸ்லீம்கள்மீது  பழியைப் போட்டு விட்டு செயலை மிகவும் பக்குவமாகச் செய்துள்ளார்கள்!

2002-ல் குஜராத்தில் நிகழ்ந்த சம்ஜுத்தா எக்ஸ்பிரஸ்  கோத்ரா ரயில் எரிப்பில்

50 கரசேவகர்களைக் கொன்ற சதி நிகழ்விலும் இதே லோகேஷ் சர்மா, ஆர்.எஸ்.எஸ். முக்கியப் புள்ளியான ஜோஷியின் ஆணைப்படி அதிலும் கலந்து கொண்டு தனது பங்களிப்பைச் செலுத்திடத் தவறவில்லை என்ற திடுக்கிடும் தகவல் நேஷனல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி (ழிமிகி) மூலம் கிடைத்துள்ளதாக 13.1.2013 டைமஸ் ஆஃப் இந்தியா நாளேடு தெளிவாக வெளியிட்டுள்ளது.

டில்லி பாலியல் வன்கொடுமைக்கு உடன் தீர்ப்பு வர வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

மும்பை ஹோட்டலில் பாக். தீவிரவாதிகள் நடத்திய திட்டமிட்ட, உடனே தூக்கில் போட வேண்டும் என்பவர்கள், நாடாளுமன்றக் கட்டடம் தாக்கப்பட்ட வழக்கில் பிடிபட்டவர்கள் – கசாப்புகள் போன்றவர்கள் உடனே தண்டனையை நிறைவேற்றுங்கள் என்று துள்ளிக் குதிக்கும் பா.ஜ.க., மற்றும் வலது சாரி தீவிரவாதிகள் – இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ். படைகள் இந்த மாதிரி வழக்குகளில் சிக்கியவர்கள்மீது ஏன் நீதி விசாரணை – வழக்குகள் – நத்தை வேகத்தில் நகர வேண்டும்?

பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமான குற்றவாளிகளான பிரபல ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., முன்னணித் தலைவர்கள் குற்றப் பத்திரிக்கையில் இடம் பெற்று வழக்கு – விசாரணை ஜவ்வு மிட்டாய் மாதிரி ஏன் 20 ஆண்டுகளுக்கு மேல் ஆக வேண்டும்? வெள்ளி விழா வரட்டும் என்று மத்திய அரசு காத்திருக்கிறதோ என்ற கேள்வி பொதுநல ஆர்வலர்களிடமிருந்து நீண்ட காலமாகவே கிளம்பி நிலை கொண்டு, இன்னமும் விடை கிடைக்காதவைகளாக இருக்கிறது.

தீவிரவாதம் என்றாலே இஸ்லாமி யர்கள்தான் என்பது போன்ற ஒரு படத்தை நாடு முழுவதும் ஊடகங்களும், இத்தகைய மதவெறி அரசியல்வாதிகளும் வரைந்து காட்டுவதில் பெரு வெற்றி அடைந் துள்ளார்கள்.

மத்தியில் உள்ள அதிகார வர்க்கம் முழுக்க இதில் காவி உணர்வு கொண்ட உயர் ஜாதியினராகவே உள்ளதால், காவல்துறை, விசாரணைத் துறையில் முன்பிருந்த பா.ஜ.க. ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்ட தங்கள் ஆதரவு, அனுதாபங் கொண்ட பலரும், அதே போல நீதித்துறையில் அந்த ஆட்சி பருவத்தில் இடம் பெற்றவர்களும், தற்போதுள்ள ஆட்சியின் கீழ் பணிபுரியும் பல உயர் அதிகாரிகள் நீதித்துறையில் உள்ளோரும், ஒரு வேளை அடுத்து அவர்கள் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வது என்று மனதிற்குள் கணக்குப் போட்டு,  செயலை மந்தப்படுத்துவதும் தான் இந்த மெத்தனத்திற்கு முக்கியக் காரணங் களாக இருக்க வேண்டும்!

நீதி வழங்குவதில், குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்தி தண்டனை வழங்குவதில் ஏன் இரட்டை மனப்பான்மையான ஜாதிய மனுதர்மப் பார்வை இருக்க வேண்டும்?

தாங்களே முன்னின்று கலவரங்கள், தீ வைப்புகள், மக்களை அழிக்க வெடிகுண்டு களை  நட்டு வைத்து வெடிக்கச் செய்து, பழியை பிற மக்கள்மீது போட்டு, மதக் கலவரங்களைத் தூண்டுவதில் மிகப் பெரிய தேசியக் குற்றம் – சமூக விரோத நடவடிக்கை வேறு உண்டா?

எனவே மத்திய அரசின் உள்துறை இந்த வழக்குகளை விரைந்து நடத்தி குற்றம் புரிந்தோரைத் தண்டிக்க ஆவன செய்ய உடனே முன்வர வேண்டும். ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவா அமைப்புகள் இந்து பயங்கரவாதத்தினை முன்னிறுத்தி நடத்துவதாகவும், அதற்காக பயிற்சிகள் அளிப்பதாகவும் உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அவர்கள் கூறியிருப்பதை எதிர்த்து பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் வானத்திற்கும் பூமிக்குமாக குதித்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்; அதற்கு அவர் மன்னிப்புக் கோர வேண்டும்; இல்லையேல் கடந்த 24ஆம் தேதி கிளர்ச்சி, கண்டன ஆர்ப்பாட்டம் செய்து ஷிண்டே பதவி விலக வேண்டும் என்றும் உடனே ஆர்ப்பரித்துள்ளனர்!

அவர் ஏதோ ஆதாரமில்லாமல் பேசியதைப் போல ஊடகங்கள் உயர்ஜாதி, பார்ப்பன, ஹிந்துத்வாவாதிகளின் ஆயுதங்களாக இருப்பதால், இதற்காக ஓங்காரக் கூச்சல் இடுகின்றனர்!

தங்களை சுத்த சுயம் பிரகாசிகளாகக் காட்டிக் கொள்ளும் இந்த வீராதி வீரர்கள், நமது சில கேள்விகளுக்கு விடை கூறட்டும்!

1. மாலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் எல்லாம் லேபிளை மாற்றிக் கொண்ட ஹிந்துத்துவா வாதிகள் அல்லாமல் வேறு யார்?

இந்திய இராணுவத்தில் ஊடுருவி, அங்குள்ள RDX என்ற சக்தி வாய்ந்த வெடி மருந்து, பொருள்களைக் கடத்தி, பயிற்சி தந்து பிறகு சிக்கிக் கொண்டு, சிறைவாசம் அனுபவிப்பதோடு, காவி அணிந்த சந்நியாசி வேடம் தரித்து தாங்கள் செய்த வன்முறைகளை – இஸ்லாமியர்கள் மீது பழி போட்டவர்கள் இவர்களைத் தவிர வேறு யார்?

2. அண்மையில் வெளியான செய்தியில் இவர்களின் முக்கிய புள்ளியான ஒருவர்தான் (உயர்ஜாதி பார்ப்பனர் அவர்) குஜராத் சம்ஜுத்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ வைத்து கொளுத்தியது (கோத்ரா ரயில் எரிப்பு) அய்தராபாத் குண்டு வெடிப்பு ஆகிய எல்லாவற்றுக்கும் சூத்திரதாரிகளாக இருந்தனர் என்ற செய்தி சென்ற வாரம் வரவேயில்லையா? (டைம்ஸ் ஆஃப் இந்தியா 13.1.2013).

புலன் விசாரணை செய்த ஆய்வு நிறுவனம் இச்செய்தியை வெளியிட்டு ஏடுகளில் வெளி வந்துள்ளதே!

3.பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளின் பட்டியலில் இவர்கள் அமைப்பினர் சம்பந்தப்பட்டுள்ளார்களா – இல்லையா?

4. அந்நாள் உ.பி. முதல் அமைச்சர் கல்யாண் சிங் தந்த ஒரு பேட்டியில், இவர்களை நம்பித்தான் நான் உத்தரவாதம் அளித்தேன்; ஆனால் இவர்கள் இடித்து தரைமட்டமாக்கி என்னை குற்றம் புரிந்தவர்கள் பட்டியலில் இடம் பெற வைத்தனர் என்று மனம் நொந்து கூறவில்லையா? அந்த இடிப்பின் எதிர்வினையாகத் தானே நாட்டில் 3000, 4000 பேர்கள் கொல்லப்பட்டதும், ரத்த ஆறு ஓடியதுமான கோரத் தாண்டவம்! இது நடைபெற்றதற்கு மூல காரணம் யார்? தென்காசியில் சொந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு – இந்து முன்னணியினர் ஒருவரைக் கொன்று, அதை முஸ்லீம்கள்மேல் பழி போட்டு, மதக் கலவரம் ஏற்பட்டு மோதல்களுக்குப்பிறகு, இவர்களே நடத்திய நாடகம் என்ற உண்மை ஒப்புதல் வாக்குமூலம் வரவில்லையா?

5. தேசப்பிதா காந்தியாரை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு பயிற்சிக்கூடம் ஆர்.எஸ்.எஸ். என்பதும், அவர் சம்பவத்திற்குமுன் விலகியிருந்தார் என்பது புறத்தோற்றம் அல்லவா! அதனை மறுத்த நிலையில், அவரது தம்பி கோபால் கோட்சே – பூனாவில் தனது அண்ணன் நாதுராம் விநாயக் கோட்சே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்தவர் என்பதை ஏன் இவர்கள் மறைக்கிறார்கள் என்று பிரண்ட் லைன் ஆங்கில ஏட்டிற்குப் பேட்டி அளித்த போது சொல்லவில்லையா?

6. ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் போல இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு வேறு உண்டா?

7. டெல்லியில் பச்சைத் தமிழர், அ.இ.காங்கிரஸ் தலைவர் காமராஜரை பட்டப் பகலில் அவர் வீட்டிற்குத் தீ வைத்து உயிருடன் கொளுத்த முயன்றவர்கள் ஹிந்துத்துவா தீவிரவாதிகளும், நிர்வாண சாமியார்களும், ஆன (பசுவதைத் தடுப்புப் போராட்டம் என்ற பெயரில்) இந்துத்துவா தீவிரவாதிகள் அல்லாமல் வேறு யார்?

8. டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த அன்றைய முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களை நேரில் சந்தித்து, விவாதித்துக் கொண்டு இருக்கையில் கையை முறுக்கி வன்முறையில், ஈடுபட்டு பிறகு விரட்டப்பட்டவர் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அல்லவா?

உண்மையை ஊடகங்களின் ஓங்காரச் கூச்சல் மூலமாக, மறைத்துவிட முடியாது.

திரு. ஷிண்டே அவர்கள் உள்துறை அமைச்சர்; ஆதாரங்கள் இல்லாமலா அவர் பேசுவார்? நடைபெற்ற நிகழ்வுகள் எதைக் காட்டுகின்றன? ஹிந்துத்துவா பேசுவோர்தானே! வழக்கு நீதிமன்றத்தில் மாலேகான் குண்டுவெடிப்பு சம்பந்தமாக நடக்கும் நிலையில் இதுபற்றி உள்துறை அமைச்சர் பேசலாமா? என்ற அருள் உபதேசம் செய்கிறது ஆர்.எஸ்.எஸ்.காரரை – உணர்வாளரை ஆசிரியராகக் கொண்டுள்ள தினமணி நாளேடு?

என்னே திடீர் ஞானோதயம்! ஏன் இதே வாதம் 2ஜி வழக்கு உச்சநீதிமன்றத்திலும், டில்லி தனி நீதிமன்றத்திலும் நடைபெற்று வருகிற நிலையில் இவர்கள் எவ்வளவு எழுதினார்கள் – பேசினார்கள் – விமர்சித்தார்கள்? பேசு நா இரண்டுடையாய் போற்றி போற்றி என்ற அண்ணாவின் ஆரிய மாயை வரிகள்தான் இவர்களைப்பற்றி நம் நினைக்கு வருகிறது.

மாண்புமிகு ஷிண்டே அவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர் உள்துறை அமைச்சராக இருப்பது என்பது பார்ப்பன உயர் ஜாதி வர்க்கத்திற்கு  உறுத்தலாகத் தானே இருக்கும்; அதற்காகத்தான் இந்தப் பதவி விலகல் கூச்சல் போலும்!

ஷிண்டேவின் கருத்துகண்டு இப்படிக் கூறுவது எதைக் காட்டுகிறது? நடுநிலையாளர்கள் ஆழ்ந்து சிந்திக்கட்டும்!

–                   கி.வீரமணி,
ஆசிரியர்.

 

 


குண்டுவெடிப்பில் ஆர்.எஸ்.எஸ்.தொடர்பு
உறுதி செய்கிறார் உள்துறைச் செயலாளர்

பயங்கரவாதத் தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக, மத்திய உள் துறை செயலாளர் ஆர்.கே.சிங் ஜனவரி 22 அன்று அறிவித்துள்ளார். சம்ஜாவ்தா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா ஷரீப் பில் நடந்த பயங்கரவாத குண்டு வெடிப்பு தாக்கு தல்களில், குறைந்தபட் சம் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 10 பேர் ஈடுபட்ட தற்கான ஆதாரங்கள் உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த சுனில் ஜோஷிக்கு (இவர் இப்  போது உயிருடன் இல்லை) சம்ஜெதா ரயில் குண்டு  வெடிப்பு மற்றும் அஜ் மீர் ஷெரீப் தர்கா குண்டுவெடிப்பில் தொடர்புள்ளது.இவர் 1990 முதல் 2003 வரை மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ்.  அமைப்பின் பணிகளை மேற்கொண்டவர். சந்தீப் தாங்கே என்பவருக்கு (தலைமறைவாக உள்ளார்) சம்ஜெதா, மெக்கா மசூதி, அஜ்மீர் ஷெரீப் தர்கா குண்டு வெடிப்பில் தொடர்புள்ளது. இவர் இந்தூர் உள் ளிட்ட பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராகச் செயல்பட்டவர். அதே போன்று லோகேஷ் சர்மா, சுவாமி அசீமானந்த், ராஜேந்தர் என்ற சமுந்தர், முகேஷ் வாசனி, தேவேந்தர் குப்தா, சந்திரசேகர், கமல் செகான், ராம்ஜி கல்சங்ரா ஆகியோருக்கு இந்த மூன்று குண்டு வெடிப்பு சம்பவங்களிலோ அல்லது ஏதாவதொன்றிலோ தொடர்புள்ளது. இவர்களில் ராம்ஜியை தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார் ஆர்.கே. சிங்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *