கேள்வி : அறிவியலைப் பயன்படுத்தி, வாழ்வை வளப்படுத்திக் கொள்ளும் ஊடகங்கள்…மக்களிடம் மட்டும் அறிவியல் உணர்வை ஊட்டத் தயங்குவது ஏன்?.. . – நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்
பதில் : உங்கள் கேள்வியிலேயே பதில் பொதிந்து உள்ளதே! அவைகளின் நோக்கம் அவர்களது வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ளவே; சமுதாயத்திற்கு அறிவியல் உணர்வை ஊட்டி – நலப்படுத்துவது அல்லவே!
கேள்வி : (மொழியால்) தம்மைத் தமிழர்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் பார்ப்பனர்கள் – (இனத்தால்) திராவிடர்கள் என்று சொல்லிக்கொள்ள முன்வருவதில்லையே ஏன்? – கு.நா. இராமண்ணா, சீர்காழி
பதில் : திராவிடர்கள் என்றால் போர்வை நீங்கி _ ஒப்பனை அற்ற உண்மை உருவம்! தமிழர்கள் என்றால் பேசும்பகுதியில் பேசும் மொழியை நடைமுறையில் கையாளும் போர்வையுடன் கூடிய நிலை என்பதுதான்!
கேள்வி : ஆன்மீகமே இல்லாத நாடுகள் சிலவற்றைக் கூறுங்கள் அய்யா?
– வீ. உதயக்குமாரன், வீரன்வயல்
பதில் : கிறுக்கர்கள் இல்லாத தேசத்தைத் தேடி நம் நேரத்தை வீணாக்க வேண்டுமா? _ நண்பரே?
கேள்வி : மகரஜோதி மகத்துவம் மலையேறியும்கூட, தொடரும் பயணங்கள் பற்றி…. – சிந்தனை, ஊற்றங்கரை
பதில் : மூடநம்பிக்கைக் கிருமிகளுக்குக் கெட்டியான ஆயுள் உண்டே!
கேள்வி : கம்யூனிசக் கொள்கைகளை முழுமையாக ஏற்று, அறிவாசன் தந்தை பெரியார் 1932_ இல் ருசியா சென்றிருந்தபோது, அதிபர் ஸ்டாலினைச் சந்திக்க ஒப்புதல் பெறப்பட்டிருந்தும் சந்திக்கும் வாய்ப்பைப்பெறும் வரை அங்கு தங்குவதற்கு அனுமதி மறுக்கக் காரணமான நடவடிக்கை யாது?
– சொர்ணம், ஊற்றங்கரை
பதில் : உடன் சென்ற இராமநாதன் ஒரு ரகசிய சந்திப்பை ஒரு ரஷ்ய அமைப்பினைச் சேர்ந்தவருடன் நடத்தியது – (பெரியாருக்குத் தெரியாமலேயே நடத்தியது) சோவியத் அரசுக்கு எட்டி, இதனை ரத்து செய்துவிட்டார் ஸ்டாலின். அவ்வளவு கெடுபிடி – கட்டுப்பாடு அங்கே, அப்போது! (பெரியார் திரைப்படத்தில் இது விளக்கப்பட்டுள்ளதே)
கேள்வி : தானே தலைவன், தன் நிழலே தொண்டன் என்ற நிலையில் கட்சியை வைத்திருக்கும் சு. சாமி, ஊழலை ஒழிப்பதே என் ஜனதா கட்சியின் லட்சியம் என்கிறாரே? – க. ராசன், நெய்வேலி
பதில் : பிளாக்மெயில் அரசியல் புரோக்கர்களுக்கு இப்படி புருடா விடுவது சர்வ சாதாரண அன்றாடத் தொழில் ஆயிற்றே!
கேள்வி : ராமர் பாலம் என்ற ஒன்று இருப்பதாகப் பேசப்பட்டு வரும் நிலையில் சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று பாரதியார் பாடியது ஏன்..?
– சே.சிக்கந்தர்ஹயாத், இளையான்குடி
பதில் : அதன் மூலம் பாரதியாரும் இராமர்பாலத்தை ஒப்புக்கொள்ளவில்லை என்பது புரியவேண்டும். கடலினைத்தாவும் குரங்கும்… கற்பனை என்று பாரதியார் பாடியுள்ளாரே!
கேள்வி : தேர்வு நேரத்தில் நடைபெறும் உலகக் கோப்பைக் கிரிக்கெட்டைத் தடுக்க முடியாதா? – ஆர். பிருந்தா, அறந்தாங்கி
பதில் : தடுக்கவேண்டிய அரசுகள் அவற்றை ரசித்துச் சுவைக்கின்றன _ வருவாய்க் கண்ணோட்டமோ என்னவோ – நமக்கு மட்டும் அந்தக் கவலை இருந்தால் போதுமா?
கேள்வி : ஒரு கிலோ அரிசி ரூபாய் 2க்கு வழங்கியபோது ஆதரித்த கம்யூனிஸ்ட் கட்சிகள் 1 கிலோ ரூபாய் 1க்கு வழங்கும்போது எதிர்க்கிறார்களே… இதுதான் கம்யூனிசமா? – எஸ். தீபா, புதுக்கோட்டை
பதில் : இது கம்யூனிசம் அல்ல; சந்தர்ப்பவாதம்!
கேள்வி : பொதுவுடைமைக் கொள்கைக்கு மூலதனம் என்ற காரல்மாக்சின் நூலைப் போல பெரியாரியலைப்பற்றித் தெரிந்து கொள்ள எந்த நூலைப் படிக்க வேண்டும். – வை. கலைமன்னன், அரியலூர்
பதில் : பெரியார் களஞ்சியங்கள் பல தொகுதிகளைப் படிக்க வேண்டும். இதுவரை 27 தொகுதிகள் வெளிவந்துள்ளன, பல்வேறு தலைப்புகளில்!