நேர மேலாண்மை :
டிஜிட்டல் யுகத்தில் மிகவும் சேதமடைந்த ஒரு பண்பு இந்த நேர மேலாண்மையே. “டைமே இல்ல” என்பது இப்போது மிக வழக்கமான சொல்லாடலாக மாறிவிட்டது. ஆனால், ஒவ்வொரு நாளும் அதே இருபத்து நாலு மணி நேரமாகவே அப்போதும், இப்போதும், எப்போதும் இருக்கிறது. அப்புறம் எப்படி நேரம் போதாமல் இருக்கும்?
உண்மையில் நேரம் போதவில்லை என்பதன் உண்மையான பொருள் – ‘நேரத்தைத் திட்டமிடவில்லை’ என்பதுதான்.
நாம் நேரத்தை எதற்காகச் செலவிடுகிறோம் என்பதுதான் நேர மேலாண்மையில் முக்கியமான அம்சம். போன அத்தியாயத்தில் சொன்னபடி ஒரு நாளில், அத்தியாவசியத் தேவைகளுக்காக நாம் எவ்வளவு நேரம் செலவிடுகிறோம், விருப்பங்களுக்காக எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்று யோசித்துப் பாருங்கள். எந்தச் செயல்களைச் செய்ய நாம் முன்னுரிமை கொடுக்கிறோம்?
நமது விருப்பங்களுக்காக நேரத்தைச் செலவிடும்போது ‘நேரம் போனதே தெரியல’ எனச் சொல்கிறோம் அதுவே ஏதாவது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள நேரத்தைச் செலவிட்டால் “என்ன நேரமே போக மாட்டேங்குது!” எனச் சொல்கிறோம்.
நமது ஈடுபாடு சுயவிருப்பங்களிலும், ஆடம்பரக் கொண்டாட்டங்களிலும் மட்டுமே அதிகமாக இருக்கிறது. அதனால் அதில் செலவிடும் நேரம் பற்றி நமக்கு எந்தக் கவலையுமில்லை. அதுவே ஒரு வகுப்பு கவனிக்க வேண்டும் என்றாலோ அல்லது ஏதாவது
வேலை செய்ய வேண்டும் என்றாலோ அலுப்பு வந்து
விடுகிறது, ஈடுபாடு குறைந்து
விடுகிறது அதனால் நேரத்தின் மீது முழுக் கவனம் வந்துவிடுகிறது, ஒரு மணி நேரம் என்றால் சரியாக ஒரு மணி நேரத்தில் அதை முடித்து விட்டுச் சென்றுவிடுகிறோம்.
எப்போதும் இப்படி விருப்பங்களைத் தேடி ஓடும் மன நிலை இந்த டிஜிட்டல் காலத்தில் அதிகமாக இருக்கிறது.
“எக்சல் ஷீட்ல எண்ட் ரி போட ஒரு மணி நேரம் கூட ஆகாது டாக்டர். ஆனால்,
காலையில் இருந்து அதைத்தான் பண்ணிக்கிட்டு இருக்கேன், கொஞ்ச நேரம் போடுவேன் அப்புறம் அப்படியே பேஸ்புக் பக்கம் போனா அது அப்படியே எல்லா இடத்துக்கும் என்னைக் கூட்டிட்டுப் போயிடும். அய்ந்து நிமிடம் எக்சல் ஷீட்ல போட்ட ரெண்டு மணி நேரம் சோசியல் மீடியால உலாத்திட்டு இருக்கேன்” என்று அந்த இளைஞர் சொல்லும்போது பலபேர் அப்படித்தான் இருக்கிறார்கள் என எண்ணத் தோன்றியது. வீடியோ பார்த்துகிட்டே பைக் ஓட்டிச் செல்லும் நிறைய பேரை நான் பார்த்திருக்கிறேன். டிஜிட்டல் யுகம் நமது கவனச் சிதறல்களை அதிகரித்து இருக்கிறது. நேரம் எந்தவித நோக்கங்களும் இன்றி விரயமாகிறது. அதைப் பற்றிய சிறு சலனம் கூட யாரிடமும் இல்லை. இதனால் அத்தியாவசிய வேலைகள் தடைபடுகின்றன, அதற்காக மிகக் குறைவான நேரமே செலவிடுவதால் அவற்றில் முழுமை இல்லை, நேர்த்தி இல்லை. கடைசி நேரத்திலேயே அனைத்து அவசியமான வேலை
களையும் பண்ணிக்கொள்ளலாம் என்கிற மன நிலைக்குப் பெரும்பாலானவர்கள் வந்து
விட்டதால், முடிக்கப்படாத வேலை அவர்களுக்
குள் நெருடிக்கொண்டேயிருக்கிறது, கடைசி
நேரத்தில் அது பதற்றத்தையும், மனவுளைச்சலை
யும், நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்து
கிறது. அது இன்னும் மனவுளைச்சலை அதிகமாக்கு
கிறது. அதனால் தேவைகளை முடித்துவிடு
வதற்கு முன்னுரிமை கொடுத்து விருப்பங்களுக்
காகச் செலவிடும் நேரத்தை முறைப்படுத்
தினால்தான் மனதை நிம்மதியாகவும், அமைதியாகவும் வைத்துக்கொள்ள முடியும்.
தன்னை அறிதல் :
ஆரோக்கியமான மன நிலைக்கு, தன்னை அறிந்திருப்பது மிகவும் அவசியமான ஒன்று. தன்னை அறிந்திருப்பது என்றால் நமது பலங்களின் மீதும், பலவீனங்களின் மீதும் திறந்த மனதோடு நமக்கிருக்கும் புரிதல் தான். நிறைய நேரங்களில் நாம் நமது பலங்களை மிகையாகவும், பலவீனங்களைக் குறைத்தும் மதிப்பிடுகிறோம், அதுவும் நமது பலவீனத்தை யாராவது சுட்டிக்காட்டினால் கூட அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை நமக்கு வருவதில்லை. தன்னம்பிக்கைக்கும், ஆணவத்திற்கும், நார்சிஸ்டிக் மனப்பான்மைக்
கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. நாம் எப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறோமோ அல்லது மற்றவர்களின் பார்வையில் நாம் எப்படி தெரிய வேண்டும் என நினைக்கிறோமோ அப்படியே தான் நாம் இருப்பதாக நம்புகிறோம், அது தான் நாம் எனவும் நம்புகிறோம். இதனால் நமது சுயமதிப்பீடு தவறாகிறது, சுயமதிப்பீடு தவறாகும் போது அதைச் சார்ந்த நமது திட்டமிடல்களும் தவறாகின்றன.
உதாரணத்திற்கு, ஓர் அலுவலகத்தில் வேலை செய்கிறோம்; அங்கு நாம் வேலை செய்யும் முறை என்பது மற்றவர்களிடம் இருந்து வேறுபடுகிறது என வைத்துக்கொள்வோம், அதாவது மற்றவர்கள் சிறிது நேரத்தில் செய்துவிடும் வேலையை நம்மால் அதே வேகத்தில் செய்ய முடியாது. ஏனென்றால் நான் அந்த வேலையை நிதானமாகவும், தவறுகள் வராதவாறும் செய்வதற்காக பொறுமையாகச் செய்கிறேன், செய்து முடித்தும் கூட அதைச் சரியாகத் தான் செய்திருக்கிறோமா என்று திரும்பவும் சில முறை பார்த்துக்கொண்டால் தான் நமக்குத் திருப்தி கிடைக்கும். அதனால் பொதுவாகவே பொறுமையாகவும், நேர்த்தியாகவும் செய்யக்கூடியவர் நாம் என்ற புரிதல் வேண்டும், அதற்கு ஏற்றவாறுதான் நமது வேலைகளைத் திட்டமிட வேண்டும், அதற்கு மாறாக “என்னாலும் வேகமாகச் செய்ய முடியும்” என்று நினைத்து பல வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டால், எதையுமே சரியாகச் செய்ய முடியாது, முடிக்கவும் முடியாது. முடிக்க முடியாமல் போகும்போது நமக்கு நம் மீதான தன்னம்பிக்கை குறையும். அதனால் அந்த வேலை இன்னும் சுமையானதாகவும், ஈடுபாடற்றும் போகும். அது மனவுளைச்சலை அதிகப்படுத்தும்.
எந்தவிதப் பாசாங்குகளும் இன்றி, ஒளிவு மறைவின்றி நம்மை முழுமையாகப் புரிந்து கொள்ளும்போது நமது திட்டமிடல்களையும் வெற்றிகரமாக முடிக்க முடியும், அது நமது தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும், இன்னும் உற்சாகத்தையும்,ஈடுபாட்டையும் கொடுக்கும் அது நமது மனநிலையையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
தினமும் நடைப்பயிற்சி :
அன்றாட வாழ்க்கையில் நாம் நமது உடலுக்கெனச் செலவிடும் நேரம் என்பது மிகக் குறைவு. புறவுலகத்தின் நிர்ப்பந்தங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நமது உடலின் ஆரோக்கியத்திற்குக் கொடுப்பதில்லை. தினமும் குறைந்தபட்சம் நாற்பது நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரமாவது நடைப்பயிற்சி செல்வது பலவகைகளில் ஓர் ஆரோக்கியமான செயல்பாடு.
நடைப்பயிற்சி செய்யும்போது உடற்பகுதி
களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஊட்டச்சத்து
கள் ஆற்றலாக மாறுகின்றன, உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகின்றன. உடலும், மனதும் புத்துணர்வு பெறுகின்றன. மேலும், பல ஹார்மோன்களின் செயல்பாடுகள் நடைப்பயிற்சியின் போது சீராகின்றன. பதற்றத்தின் போதும், ஸ்ட்ரெஸ்ஸின் போதும் அதிகப்படியாக வெளிப்படும் அட்ரினலின் ஹார்மோன்களும், ஸ்டீராய்டு ஹார்மோன்களும் பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. மேலும் இந்த ஹார்மோன்களின் சம நிலையின்மைகளும் கூட பதற்றத்தையும், ஸ்ட்ரெஸ்ஸையும் உருவாக்குகின்றன. நடைப்பயிற்சியை நீண்ட காலம் தொடரும்போது அது இந்த ஹார்மோன்களின் செயல்பாடுகளைச் சீராக்கு
கின்றன. இதனால் பதற்றம் தீவிரமானதாக, நீண்டதாக மாறும் நிலை குறைகிறது.
நடைப்பயிற்சியின் போது இதயத்தின் செயல்பாடும் மேம்படுகிறது. இரத்த ஓட்டம் சீராகிறது, இதயத்தின் உந்து திறன் அதிகமாகிறது, அதனால் மூளை உட்பட அனைத்துப் பகுதிகளுக்கும் செல்லும் இரத்த ஓட்டம் சீராகிறது. இதனால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கிறது, அதன் விளைவாக, சிந்தனைத் திறனும், ஆக்கப்பூர்வமான முடிவெடுக்கும் திறனும் அதிகமாகின்றன. புறவுலகில் நாம் சந்திக்கும் பிரச்சினைகளை இந்தத் திறன்களைக் கொண்டு நம்மால் பக்குவமாக, நிதானமாகச் சரி செய்ய முடிகிறது. அதுவே பலவிதமான நெருக்கடி நிலைகளில் இருந்து நம்மைக் காப்பாற்றுகிறது.
நடைப்பயிற்சி நல்ல, ஆழ்ந்த, திருப்தியான தூக்கத்தைக் கொடுக்கிறது. பெரும்பாலான
நேரங்களில், பதற்றமும், மனஅழுத்தமும் தூக்கத்தைப் பாதிக்கின்றன. தூக்கமின்மை என்பது
பதற்றத்தினால் உருவாகக்கூடிய பிரச்சினைகளை இன்னும் அதிகமாக்குகிறது, மேலும் அது பதற்றத்
தையும் அதிகப்படுத்துகிறது. நல்ல தூக்கம் என்பது பலவகைகளில் ஒரு மனஅழுத்தத்தைக் குறைக்கும் செயல்பாடு. அந்த வகையில் தினமும் நடைப்பயிற்சிக்கு பதற்றத்தைக் குறைப்பதிலும், மனஅழுத்தத்தைத் தடுப்பதிலும் மிக முக்கியமான பங்கு இருக்கிறது.
இந்த வாழ்க்கை முறைகள் எல்லாம் குறைந்த
பட்ச நமது நிம்மதியான வாழ்க்கைக்கு அவசிய
மானவை. பயம், பதற்றம் போன்ற இயல்பான
உணர்ச்சிகளை எல்லாம் நாம் பயன்படுத்திக்
கொண்டு நமது வாழ்க்கையை மேம்படுத்திக்
கொள்ளத் தேவையானவை. இந்த வாழ்க்கை முறைகளுக்கு எதிரானதாக நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் போது இந்த இயல்பான உணர்ச்சிகளெல்லாம் நோய்ம்மையாக மாற வாய்ப்புள்ளது.
மனித மனம் என்பது உணர்ச்சிகளாலும், அறிவாலும் நிரம்பியது. பயம் மட்டுமல்ல, எந்த
ஓர் உணர்ச்சியும் தேவையற்றது அல்ல; ஒவ்வொன்
றிற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. இந்த உணர்ச்சி
களை நாம் எவ்வளவு ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்திக்கொள்கிறோம் என்பது, நமது
வாழ்க்கை முறைகளை எவ்வளவு ஆரோக்கிய
மாக வைத்துக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது. ஒன்றில் ஆரோக்கியம் இல்லாத
போது மற்றொன்று நோய்ம்மையாக மாறுவதைத் தடுக்க முடியாது.
– தொடரும்