அய்யா பெரியார் வாழ்வின் இணையராய்
மெய்யாய்த் திகழ்ந்து மேன்மை சேர்த்தவர்!
சிந்தனைச் செழுமையர்; செந்தமிழ்ப் பற்றினர்;
இந்தியச் சமூகச் செயல்பாட் டாளர்;
கடவுள் மறுப்புக் கொள்கை யாளர்;
மடமை எதிர்ப்பினர்; மகளிர் உரிமை
வேண்டிக் களத்தினில் நின்றநா கம்மை
மாண்புறு மனித நேயம் மிக்கவர்;
ஒப்பிலாத் தலைவரின் இல்லற வாழ்வில்
முப்பத் தைந்தாண் டுகளைக் கழித்தவர்!
கொள்கை வழியிலும் துணையாய் இருந்தவர்;
கள்ளுக் கடைமுன் மறியல் போரில்
கலந்து கொண்டதால் கைதும் ஆனவர்;
உளத்தால் புரட்சி உணர்வு மிக்கவர்;
காதல் மணத்தால் களிப்புக் கொண்டவர்;
சாதி மறுப்புத் திருமணம் நடத்தியும்
சுயமரி யாதை இயக்கப் பணிகளில்
வியத்தகு ஈடுபாட் டாலும் உயர்ந்தவர்;
கனிவுடன் இல்லம் வருவோர்க் கெல்லாம்
உணவினை வழங்கி உவகை கொண்டவர்;
பெரியார் சிறைக்குச் சென்றதன் பின்னர்
அரியதோர் வைக்கம் போரைத் தொடர்ந்தவர்;
அரியன ஆற்றும் ஆர்வம் மிகவே
பெரியார் தங்கை கண்ணம் மாளுடன்
ஒத்துழை யாமை இயக்கம் தன்னில்
ஒத்த கருத்துடன் உழைப்பைத் தந்தவர்;
கதரா டையினைக் கனிவுடன் ஏற்றவர்;
உதவும் மனத்தர்; உயரிய குணத்தர்;
அயலகப் பயணம் அய்யா உடனே
நயத்தகு முறையில் மேற்கொண் டிருந்தவர்;
மதிப்புடன் அந்நாள் ‘குடியரசு’ இதழின்
பதிப்பா சிரியர், வெளியீட் டாளராய்
அரும்பணி ஆற்றிய அன்னைநா கம்மையார்!
திறத்தால் ஒளிர்வார் திராவிடர் நெஞ்சிலே! w