Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அன்னை நாகம்மையார் ….. எஸ்.சி. சிவகாமி .

பெண் மக்களுக்கு ஒரு வழிகாட்டி; பொதுஜன ஊழியர்கள், தலைவர்கள் அனைவராலும் நன்கு அறியப்பட்டவர்; அன்பும், நாணமும், அடக்கமும், அஞ்சாமையும் ஒருங்கே அமையப்பெற்ற அன்னையார்; ஈ.வெ.ரா. நாகம்மையார் அவர்கள்.

இவருடைய வாழ்க்கைச் சரிதம் மக்களுக்குப் பெரும் படிப்பினையை ஊட்டக்கூடியது; அன்னையார் பிறந்த குடும்பம் செல்வம்
படைத்த பெருங்குடியன்று. சாதாரண
வாழ்க்கையையுடைய நடுத்
தரக்குடி ஈ.வெ.ராவின் அன்னை
யாருக்கு உறவினர்.

ஈ.வெ.ரா. தமது இளம்பருவத்திலேயே நாகம்மாளைச் சந்தித்
தார். இருவரும் ஒருவர்
மேல் ஒருவர் அன்பு கொண்டி
ருந்தனர். நாகம்மையாருக்கு வயது 12 ஈ.வெ.ராவுக்கு நல்ல வாலிபப்பருவம். வயது 19.
ஈ.வெ.ராவின் தந்தையார் வெங்கட்ட நாயக்கர், பெரிய வைணவ மத பக்தர். பிரபல வியாபாரி;
பெருந்தனவந்தர்; தமது மைந்தன் ஈ.வெ.ராவுக்கு மணம்புரிவிக்க எண்ணினார். செல்வக்குடியில் சம்பந்தம் பண்ணவேண்டும் என்பது அவரது ஆசை அவர் கருத்து ஈ.வெ.ராவுக்குத் தெரிந்தது. ஈ.வெ.ரா.வோ நாகம்மாளே நான் விரும்பும் மனைவி என்றார்; வேறொரு பெண்ணை விரும்பேன் என்றார். இவர் பிடிவாதத்தின் முன் தந்தையின் ஆசை நிலைக்கவில்லை.

நாகம்மையாரின் பெற்றோரும், அவருக்கு வேறு மணம் பேசினர். மணம் பேசப்பட்டவர் முதிர்ந்த வயதினர். இருமுறை மணமாகி இரு மனைவிகளையும் இழந்தவர், மூன்றாந்தார
மாகவே அன்னையாரைப் பேசினர். இச்செய்தியை அறிந்தார் அன்னையார். ஈ.வெ.ராவையே மணப்பேன்! அந்த முதிர்ந்த வயதினரை மணப்பதைவிட உயிர் விடுவேன்! என்று கூறினார். 12 வயதில் என்ன தைரியம்! என்ன உறுதி!

கடைசியில் ஈ.வெ.ராவுக்கும் அன்னை
யார்க்கும் மணம் முடிந்தது. காதல் மணம் நிறைவேறியது.

இல்லற வாழ்வு

‘நாகம்மாளை மணந்து வாழ்க்கைத் துணையாகக் கொண்டு 35 ஆண்டு காலம் வாழ்ந்து விட்டேன், நாகம்மாளை நான்தான் வாழ்க்கைத் துணையாகக் கொண்டிருந்தேனே அல்லாமல், நாகம்மாளுக்கு நான் வாழ்க்
கைத் துணையாக இருந்
தேனா என்பது எனக்கே ஞாபகத்துக்கு வரவில்லை. பொதுநல வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டனாய் இருந்த காலத்தில் எனக்கு
வாழ்வில் ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதரவாய் இருந்தார்.”

“நாகம்மாள் உயிர்வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தளக்காக அல்ல; என்பதை நான் ஒவ்வொரு விநாடியும் உணர்ந்து வந்தேன்.

மேலே கூறியவை, ஈ.வெ.ராவின் சொற்கள். அம்மையார் இறந்தபோது, பிரிவாற்றாது உள்ளம் வருந்திக் கூறிய உண்மையுரைகள்.

மணவாழ்க்கையைப் பொறுத்த வரையிலும் அன்னையார் பழங்காலத்துப்பெண் தன் விருப்பப்
படி கணவனை நடக்கச் செய்யும் நாகரிகப் பெண்ணல்லர். கணவன் எண்ணம் சரியோ தவறோ அதற்கு மாறுபடாதவர். அவர் செய்கை எதுவாயினும், அதற்குத் துணை செய்பவர்.

அரசியல் வாழ்வு

ஈ.வெ.ரா. சொந்த வாழ்வைத் துறந்து பொதுநல வாழ்வில் ஈடுபட்டார். அன்னையாரும் கூடவே அச்சேவையில் இறங்கினார்.

1920ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பித்தது. ஈ.வெ.ராவும் அதில் அதிதீவிரமாக ஈடுபட்டார். அன்னையாரும் தமது சுகவாழ்வைத் துறந்தார். விலையுயர்ந்த நகைகளைத் துறந்தார். மெல்லிய பட்டாடை
களை வெறுத்தார். முரட்டுக்கதராடை உடுத்தினார். ஒத்துழையாமைப் போராட்டத்தில் அன்னையார் முன்னணியில் நின்று போராடினார். இது தமிழ்நாட்டில் ஒரு பெருங்கிளர்ச்சியை உண்டாக்கிற்று. இதனால் அநேக பெண் மக்களும் தைரியமாக இப்போரில் கலந்துகொள்ள முன்வந்தனர்.

1921ஆம் ஆண்டில் ஈரோட்டில் கள்ளுக்கடை மறியல் வெகு மும்முரமாக நடைபெற்றது. அரசாங்கத்தாரால் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஈ.வெ.ராவும் அவர் தொண்டர்களும் தடையை மீறினர்; கைது செய்யப்பட்டனர். மறுநாள் அன்னையார் ஈ.வெ.ராவின் தங்கை எஸ்.ஆர். கண்ணம்மாளுடன் புறப்பட்டார். அரசாங்கத்தின் தடையுத்தரவை மீறினார். ஈரோட்டில் பெருங்கொந்தளிப்பு. தமிழ்நாட்டில் பெருங்கிளர்ச்சி அரசாங்கத்துக்குப் பெருந் திகைப்பு. உடனே தடையுத்தரவை நீக்கினர். அரசாங்கத்தார், அன்னையாரையும் அவர் தோழர்களையும் கைது செய்யாமல் விட்டனர். கைது செய்திருந்தால் ஈரோட்டின் நிலைமை எப்படியாகி இருக்கும் என்பது அரசாங்கத்துக்குத் தெரியும்.

அச்சமயம் மறியல் சம்பந்தமாக அரசாங்கத்துடன் சமாதான ஒப்பந்தப் பேச்சு நடந்தது. சர். சங்கரநாயர் தலைமையில் ஒரு மகாநாடு கூட்டப்பட்டது. இதற்கு மாளவியா மகாநாடு என்று பெயர். இம்மகாநாட்டில் திரு காந்தியார், முக்கியமாக ஈரோட்டு மறியலையே குறிப்பிட்டார். ஈ.வெ.ரா. நாகம்மாளின் அபிப்பிராயம் தெரிந்தே முடிவு செய்யவேண்டும் என்று கூறினார்.

1920ஆம் ஆண்டு முதல் 6 ஆண்டுகள் அன்னையார் அனைத்து அரசியல் மகாநாடுகளுக்கும் கணவருடன் தவறாமல் போய் வந்தார். அவர் மாகாண காங்கிரஸ் கமிட்டிக்கும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கும் தெரிந்தெடுக்கப்பட்ட உறுப்பினராயிருந்திருக்கிறார்.

வைக்கம் சத்தியாக்கிரகம்

ஒத்துழையாமை இயக்கம் மறைந்தது. 1924ஆம் ஆண்டில் வைக்கம் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப்பட்டது. அதில் ஈ.வெ.ரா. ஈடுபட்டார். நாகம்மையாரும் முக்கிய பங்கெடுத்துக் கொண்டார். தமிழ்நாட்டிலிருந்து பல பெண்களையும் வைக்கத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போராட்டத்தில் கேரளப் பெண்களும் உற்சாகத்துடன் சேரும்படி செய்தார். தமது கணவர் கைதியான பிறகும். காங்கிரசின் உதவி கிடைப்பதற்கு முன்பும் தனித்து நின்று அப்போராட்டத்தை அஞ்சாமல் நடத்தினார். வைக்கத்தில் தமது வெற்றிக் கொடியைப் பல மாதங்கள் பறக்கும்படி செய்தார். அவர் சேனாதிபதியாக இருந்து வைக்கம் தெருக்களில் பெண்கள் படையை நடத்திச் சென்ற காட்சி சமூக ஊழியர்களைத் தட்டியெழுப்பியது. கொடிய சூரிய வெப்பத்திற்கும் பெருத்த மழைக்கும் பின் வாங்காமல் கோவில் வாசற்படி முன்பு அவர் நின்று சத்தியாக்கிரகம் செய்த காட்சி எல்லோருடைய உள்ளத்தையும் கொள்ளை கொண்டது; அப்போரில் ஈடுபடும்படி செய்தது. தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்ச்சியை அதிகமாகக் கிளப்பி விட்டது. வைதீகர்களின் மனத்திலும் பெருந்திகிலை உண்டாக்கிற்று.

இதுவரை உலகில் நடந்த சத்தியாக்கிரகங்
களில் வெற்றி பெற்றது என்று சொல்லக்கூடியது வைக்கம் சத்தியாக்கிரகம் ஒன்றேயாகும். இவ்வெற்றிக்குக் நாகம்மையார் பெரும்பங்
காற்றினார்.

வீட்டின் ஒரு மூலையில் பேடெனப் பதுங்கிக் கிடந்த நம் அம்மையார் தீண்டாமை எனும் பேயை வெட்டி வீழ்த்துவான் வேண்டி வைக்கம் சத்தியாக்கிரகப் போரில் புகுந்து சிறை சென்று அரசாங்கத்தை நடுங்கச் செய்ததுடன் அமையாது வாகைமாலையும் சூடினார்” என்று திரு.வி.க. முதலியார் அவர்கள் கூறியிருப்பது உண்மை! உண்மை!! உண்மை!!!

சுயமரியாதை இயக்கம்

பின்னர் 1926ஆம் ஆண்டில் சுயமரியாதை
இயக்கம் ஆரம்பமாயிற்று. அவ்வியக்கத்
திற்கென்றே ‘குடியரசும்” அந்த ஆண்டிலேயே பிறந்தது. பத்திரிகை தோன்றியது முதல் அன்னையார் இறக்கும் வரையிலும் தாமே அதன் பதிப்பாசிரியராகவும் பிரகர கர்த்தாவாகவும் இருந்து வந்திருக்கிறார். அவர்கள் செல்லாத சுயமரியாதை மகாநாடுகள் இல்லை, ஈ.வெ.ரா. போகும் இடமெல்லாம் தவறாமல் உடன் செல்வதே வழக்கம்.

மூடக்கொள்கைகளினின்று மக்களை விடுவிக்கும் பொருட்டு அவர், தமிழ்நாடு, கேரளம், மலாய் ஆகிய இடங்களில் உள்ள எல்லா ஜில்லாக்களிலும் சுற்றுப்பிரயாணம் செய்திருக்கிறார். அவர் ஒரு பிரசங்கியல்ல; ஆனால், அவர் பிரசன்னமாயிருக்கும் ஒவ்வொரு கூட்டத்திலும் பெண்கள் தீவிரமாகக் கலந்து கொள்ளுவார்கள். அவர் எல்லோரையும் அன்புடன் உபசரிப்பார். அவருக்கு மக்கட்பேறு இல்லை; ஆனால், பொதுஜன நன்மைக்காக வேலை செய்த எல்லா இளைஞர்களையும் பெண்களையும் தமது சொந்தப் பிள்ளைகளாகப் பாவித்து வந்தார். அவர் தமது சிறந்த கொள்கைகளுக்காக வேலை செய்தவர்களுக் கெல்லாம் ஒருதாயாக இருந்தார்.

அன்னையாரின் மலாய்நாட்டு விஜயத்தைப்
பற்றி, சிங்கப்பூர், முன்னேற்றம் பத்திரிகை, தங்களுக்கு விருப்பமான – தேவையான மலாய் நாட்டுப் பொருள் என்ன வேண்டுமென்று நாம் கேட்டதற்கு ‘நீங்கள் எல்லாம் இம்மலாய் நாட்டில் சுயமரியாதை இயக்கத்தைப் பரப்பியிருப்பதே நான் விரும்பும் பொருள்” என்று அன்னையார் சொல்லிய வார்த்தைகள் இன்னும் நமது செவியில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன” என்று எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஈ.வெ.ரா. அவர்கள், மேல் நாட்டுச் சுற்றுப் பிரயாணம் சென்றபோது இயக்கத்தையும் பத்திரிகையையும் நடத்தி வந்தார்கள். ஈ.வெ.ரா. சுற்றுப்பிரயாணத்திலிருந்த சுமார் பத்து மாதங்களும் சுயமரியாதை இயக்கமானது அதற்கு முன்செய்த வேலையை விட அதிக வேலை செய்தது. இதற்குக்காரணம் அன்னையார் இயக்கத் தோழர்களுக்கு அளித்த உற்சாகமேயாகும்.

திறமையும் பெருமையும்

அன்னையாருக்குக் கல்வியில்லை; ஆனால் பிற்காலத்தில், ஈ.வெ.ரா. மேல்நாட்டுச் சுற்றுப்பிரயாணம் போயிருந்த காலத்தில் கொஞ்சம் படிப்புக் கற்றுக் கொண்டார். அந்தப் படிப்பு கையெழுத்திடுவதோடும். தட்டுத்தடுமாறிப் படிப்பதோடும் நின்றுவிட்டது. பலபேருக்கு அன்னமிட்டு மகிழ்வதையே அவர் தமது எல்லாச் செயல்களிலும் தலை சிறந்த செயலாகக் கொண்டிருந்தார். உண்போர் கூட்டம் குறைவாயிருந்தால் அன்னையார் முகத்தில் மகிழ்ச்சியும் குறைந்திருக்கும். உண்போர் கூட்டம் மிகுதிப்பட மிகுதிப்பட அவர் முகத்தில் மகிழ்ச்சியும் மிகுதிப்பட்டுக் கொண்டே இருக்கும். இது வெறும் மகிழ்ச்சியன்று; அகமலர்ச்சியை வெளிப்படுத்தும் உண்மைத் தோற்றம்.

அன்னையார் சாதாரணக் குடியிற் பிறந்தவ
ராயினும் பெருந்தன்மையே உருக்கொண்டது போன்றவர் பரந்த நோக்கமுள்ளவர். ஏழை – பணக்காரர் என்ற வித்தியாசம் பாராட்டாதவர். வந்தவர்களை ஆதரிக்கும் விஷயத்தில் சிக்கனம் என்பதைச் சிறிதும் எண்ணாதவர். செல்வக் குடியிற் புகுந்தவராயினும் அகங்காரம் என்பது என்னவென்றே அறியாதவர். ஆடம்பர வாழ்க்கையை அறவே வெறுத்தவர்.

அன்னையார் தன்னை எதிர்ப்போர், மதியாதவர் எவராயினும் அவர்களைத் தானும்
மதிப்பதில்லை. ஈ.வெ.ராவுடன், அவர் வெளியிற்
செல்வதும், அரசியல் சமுதாய விஷயங்களில் கலந்து கொள்வதும், உறவினர் சிலருக்குச் சம்மதமில்லை. அவர்கள் அன்னையாரைக் கண்டிப்பதுண்டு. “ஆண்பிள்ளை எப்படியாவது திரிகிறான்; நீயும் அவனுடன் சேர்ந்து கெட்டலைகிறாய்” என்று இடித்துக் கூறுவதுண்டு. இதைச்சிறிதும் அன்னையார் லட்சியம் செய்ததில்லை. கணவர் விருப்பத்திற்கு மாறாக நடப்பதில்லை என்பதையே இறுதிவரையிலும் அவர் கடைப்பிடித்து வந்தார்.

‘இவ்வாறு ஈ.வெ.ராவின் வாழ்க்கைத் துறைகள்
எல்லாவற்றிலும் ஒத்துழைத்து வெற்றியளித்த அன்னையார், தென்னாட்டின் அரசியல் துறையிலும் சமுதாயத் துறையிலும் இணையற்ற சிரோன்மணியாகத் திகழ்ந்த நாகம்மையார் சென்ற 1933ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி பொதுஜன ஊழியர்களும் உறவினர்களும், அவர் கணவரும் மனம் பதைக்க மாண்டார்.

அன்னையார் உயிருடன் வாழ்ந்த ஆண்டுகள் 48. இந்த நாற்பத்தியெட்டு ஆண்டுகளில் அவர் நமது சமூகத்துக்குச் செய்த ஊழியம் நமது சமூகம் உள்ளவரையிலும் மறக்கக் கூடியதன்று. அன்னையாருக்குப் பின், அவர் மறைந்ததனால் உண்டான நஷ்டத்தை வேறு யாரும் நீக்கமுடியாது.

பகுத்தறிவு 1935, மே1 இதழ்2 ப. 58