தமிழ்நாட்டில் காதல் பற்றிய விவாதம் தற்போது பரபரப்பான விற்பனையில் இருக்கிறது. மக்களிடம் எப்போதும் விற்பனையாகக் கூடிய பண்டங்களில் காதலுக்குத்தான் முதல் இடம். கதை, கவிதை, நாடகம், திரைப்படம் என எத்தனை வடிவமெடுத்தாலும், காதலின் மினுமினுப்பு குறைவதேயில்லை.
அண்மைக்காலமாக செய்திகளில் முக்கிய இடம் பிடித்த காதல் ஆராய்ச்சிக்குக் காரணம் தர்மபுரி மாவட்டத்தில் பற்றி எரிந்த ஜாதித் தீ. தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே வாழும் இரண்டு ஊர்களை மற்றொரு ஜாதியைச் சேர்ந்தவர்கள் பட்டப்பகலில் பலமணிநேரம் நின்று நிதானமாகக் கொளுத்தினார்கள். அப்படி இரு ஊர்களை எரித்து பொருட்களை கொள்ளையடித்து அம்மக்களை அகதிகளைப்போல் தெருவில் நிறுத்திய கொடுமையை ஜாதிக்கட்சியின் தலைவர்கள் ஆதரித்துப் பேசினார்கள், பேசுகிறார்கள். அத்துடன் தங்களுக்கு இணையான அந்தஸ்துடைய ஜாதிகள் என்று கருதும் வேறு சில ஜாதிகளின் தலைவர்களுடன் சேர்ந்து ஒரு கூட்டணி அமைக்கும் முயற்சியிலும் இறங்கிவிட்டார்கள். இது ஓர் எச்சரிக்கை என்று தாழ்த்தப்பட்ட மக்களை மிரட்டுகிறார்கள்.
எரிந்த கட்சி – எரியாத கட்சி என்று பழைய நாடகங்களில் சிவன் -மன்மதனை எரித்த புராணக் கதையை லாவணி என்ற எதிர்ப்பாட்டு கூத்தாகப் பார்த்த நிலை மாறி, இப்போது எரித்த கட்சி – எரிந்த கட்சி காட்சிகளைப் பார்த்து திகைத்துப் போய் நிற்கிறார்கள். ஏனெனில், எரிக்கப்பட்டவை வீடுகள் அல்ல. ஒரு நூற்றாண்டுப் போராட்டத் திற்குப் பின் கட்டி எழுப்பப்பட்ட நம்பிக்கைகள். நாகரிகமான வாழ்வைப் பற்றிய கனவுகள்.
ஜாதிப் பிரச்சனையில் ஊரை எரித்ததற்கும் காதல் விவாதத்திற்கும் என்ன தொடர்பு? பொதுவாக காதலுக்கு ஜாதி தடையாக வந்தால் காதலர்கள் அழிந்து போவதுதான் கதைகளில் நடப்பது. இங்கோ காதலர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் காதலை ஏற்றுக்கொண்ட ஊர் எரிகிறது. சம்பந்தம் இல்லாமல் பக்கத்து ஊரும் எரிகிறது. ஏன் என்று கேட்டால் இனி இப்படிப்பட்ட காதல் திருமணம் செய்யும் எண்ணமே யாருக்கும் வரக்கூடாது என்பதற்காகத்தான் என்று பதில் வருகிறது. காதல் திருமணம் அவ்வளவு பெரிய குற்றமா என்றால் காதல் திருமணத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. காதல் நாடகத் திருமணத்தைத் தான் எதிர்க்கிறோம் என்கிறார்கள். திருமணம் நடந்து சில காலம் கழிந்த பிறகுதானே அது காதலா? நாடகமா என்று தெரியும் அதற்கு முன்பே இந்தக் காதல் நல்லக்காதல் அந்தக்காதல் நாடகக் காதல் என்று எப்படி கண்டுபிடித்தார்கள் என்று யாரும் கேட்கவில்லை. கேட்க வேண்டிய தேவையுமில்லை. ஏனெனில், ஜாதி மாறி நடக்கும் காதல் அதிலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தோடு ஏற்படும் காதல்தான் நாடகக் காதல் பட்டம் பெறுகிறது என்ற உண்மை யாரும், சொல்லாமலே விளங்கி விடுகிறது.
காதல் எதிர்ப்பு விவகாரத்தில் ஒரு ஜாதித் தலைவர் விளக்கமாகக் கூறிவிட்டார். நாங்கள் காதலையே எதிர்க்கிறோம். அதனால் காதல் திருமணங்களை ஆதரிக்கமாட்டோம் என்று. இன்னொரு ஜாதிக் கட்சியின் தலைவர், நாங்கள் காதலை ஆதரிக்கிறோம். நாடகக் காதலைத்தான் எதிர்க்கிறோம் என்று பேசிவந்தார். அப்படிப் பேசிய ஜாதிக்கட்சித் தலைவருக்கு திடீரென்று காதலையே எதிர்த்து விட்டால் என்ன என்று தோன்றியது. இதுவரை நாம் காதலை எதிர்ப்பதாக சொல்லவில்லையே எப்படி உடனே எதிர்ப்பது என்று யோசித்தார். எதிர்ப்புகளுக்கு முன்நிறுத்தும் கேடயமாக எப்போதும் பயன்படுத்தும் பெரியாரின் பெயர் நினைவிற்கு வந்துவிட்டது. மீண்டும் வாரஏடுகளில் தலைப்புச் செய்தியாகி பெரியார் காதலை எதிர்த்தார் என்ற புதியதொரு கண்டுபிடிப்பு வெளியானது. தந்தை பெரியாரைப் பற்றி ஓரளவு அறிந்த தமிழர்களுக்கு அதிர்ச்சி. அய்யாவை உள்ளார்ந்து கற்று உணர்ந்தவர்களுக்கோ பேரதிர்ச்சி பெரியார் அப்படிச் சொல்லவில்லையே என்று நிமிர்ந்து பார்க்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். காதல் பற்றிய பெரியாரின் கருத்துக்களை மறுவாசிப்பு செய்யலாமா என்றும் சிலருக்கு யோசனை.
இவ்வளவு குழப்பம் எதற்கு? காதலைப் பற்றி பெரியார் என்ன கருதினார், என்று அறிந்து கொள்ள அவர் எழுத்தும் பேச்சும் அச்சாகி ஆயிரக்கணக்கான புத்தகங்களாக உலா வருகின்றனவே. அவற்றை படித்துப் பார்த்தாலே போதும். அவ்வளவு வேலை கூடத் தேவையில்லை. காதல் என்று ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை பெண் ஏன் அடிமையானாள் என்ற தொகுப்பில் உள்ளது. அதைப் படித்தாலே காதலின் பரிமாணங்களும் புரிந்துவிடும். காதலைப் பற்றி பெரியாரின் கருத்து என்ன? பெரியார் காதலுக்கு எதிரியா? என்ற கேள்விகளுக்கு விடையும் கிடைத்துவிடும்.
காதல் என்ற சொல்லை மையமாக வைத்து உருவாக்கப்படும் கனவுகளையும் புனைவுகளையும் தான் பெரியார் எதிர்க்கிறாரே தவிர காதல் என்ற ஒரு உணர்வையோ, காதல் கொள்ளும் இயற்கையையோ, காதல் கொண்டு வாழும் உரிமையையோ பெரியார் எதிர்க்கவும் இல்லை. மறுக்கவும் இல்லை. மாறாக காதலுக்கு பூசப்படும் புனிதப் பூச்சுக்களைத் தவிர்த்து விட்டு அதனையும் மனித உணர்வுகளான அன்பு, ஆசை, நட்பு, பாசம் போன்ற ஒன்றாகக் கருத வேண்டும் என்றுதான் கூறுகிறார். காதலர்கள் இப்படியல்லவா இருப்பார்கள் என்று பிறர் சொல்லிவிட்டால் தூங்கும் குழந்தை கால் ஆட்டுமே என்று சொல்லி பெரியவர்கள் சோதிக்கும் போது, கண்மூடித் தூங்குவதாக நடிக்கும் குழந்தை தானே காலைச் சிறிது ஆட்டுவதைப் போல காதலர்களும் மற்றவர்கள் கற்பித்தபடியெல்லாம் நடந்து நகைப்புக்கு ஆளாகக் கூடாது என்பதுதான் பெரியாரின் அறிவுரை.
காதலைப் பற்றிய கற்பிதங்கள் பல. கண்டதும் காதல், தெய்வீகக் காதல், அழியாக் காதல், காவியக் காதல் என்று பல அடைமொழிகள். காதல் ஒரு முறைதான் வரும் (பெண்களுக்கு மட்டும்). காதலுக்குக் கண் இல்லை, காரணமும் இல்லை, காதல் தீயில் வேகாது சாவில் அழியாது, துயரத்தில் பிரியாது, பிரிந்தாலும் பிறரிடம் தோன்றாது இப்படி சில இலக்கண வரையறைகள்.
இந்தப் பொய்யுருவங்களைத்தான் பெரியார் அறிவு வெளிச்சம் காட்டி ஓட்டுகிறார்.
காதலுக்குக் கண் உண்டு, அறிவு உண்டு, காரணமும் உண்டு, காதல் ஒரே முறைதான் வரும் என்பது இயற்கைக்கு எதிரான கருத்து. காதல் கொள்ளும்போது காதலர்கள் நிலைமை, மனப்பான்மை, பக்குவம், லட்சியம் ஆகியவை ஒரு மாதிரியாக இருக்கலாம். பிறகு காலம் மாற இயற்கையாகவே அவை மாறலாம். அப்போதும் ஒருவருக்கொருவர் அதிருப்திப்பட்டுக் கொண்டு, விட்டுக்கொடுத்து வாழ்வதாக நினைத்து – துன்பத்தில் அழுந்த வேண்டிய அவசியமில்லை.
காதலர்களில் ஒருவர் ஞானியாய் – துறவியாய் மாறிவிட்டால் அவர்கள் பிரிந்து விடுவது காதலுக்கு விரோதமாகாது. இவையாவும் அய்யாவின் சொற்களே. பெரியாரின் – சிந்தனையை விளக்குவதற்கு அகராதியோ, அருஞ்சொற்பொருள் விளக்கமோ தேவையில்லை. அவரது எழுத்தோட் டத்தில் எந்த சொல்லையும் நாம் மாற்றிப்போட முடியாது என்பது கல்லுப் போன்ற உண்மையாகும்.
காதலைப்பற்றிய உண்மைநிலை என்ன என்பதை பெரியார் இப்படிக் கூறுகிறார்.
பொதுவாக மனித ஜீவன் ஒன்றைப் பார்த்து, நினைத்து ஆசைப்படுவதும், ஒன்றிடம் – பலவற்றி னிடம் அன்பை வைப்பதும், நேசம் காட்டுவதும் இயற்கையேயாகும். அதுபோலவே மனிதனுக்கு தானாகவே எதிலும் விரக்தி வருவதும், வெறுப்புக் கொள்ளுவதும், பிரிவதும் இயற்கையாகும்.
இத்தகைய மனித இயற்கையை அடிப்படையாகக் கொண்டே ஆணும் பெண்ணும் இணைந்து ஒரு கூட்டு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ளுவது பல ஆயிரமாண்டுகளாக இருந்து வந்த நடைமுறையாகும். இந்த வாழ்க்கை முறையில் ஒருவருக்கொருவர் உடன்பாடு இல்லாத நிலை ஏற்பட்டால் பிரிந்து விடுவதும் இயற்கை யானதாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டது இதுதான் மனிதனின் பழமையான வாழ்க்கை முறை. இந்த பழமையை மதச்சட்டங்களாலும் சாஸ்திரங்களாலும் செயற்கையான ஆணாதிக்க கட்டுப்பாடுகளாலும் மாற்றியமைத்து பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணமாகி அதுவும் ஜாதியாலும், ஜாதகத்தாலும் முடிவு செய்யப்படுவதாக மாறியபின் வாழ்க்கைச் சுதந்திரம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் மறுக்கப் பட்டது. ஆனாலும் ஆணின் ஆதிக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு அல்லவா திருமணம்.
அதில் ஆணின் வசதிகள், ஆசைகள் நிறைவேற் றப்பட வழி வகை செய்யவேண்டுமே. அதற்கேற்ப – ஒருமுறைதான் திருமணம் ஒருவனுக்கு ஒருத்தி ஒரு முறைதான் பூக்கும் ஆகியவை பெண்ணுக்கு மட்டுமே என்று மாற்றப்பட்டு ஆணின் தேவைகளை திட்டிக்கொண்டே நிறைவேற்றும் அடிமையாக பெண் மாற்றப்பட்டதும் கல்யாணப் பரிசுதான். அதற்காகத்தான் கிளிமாதிரி மனைவி இருந்தாலும் குரங்கு மாதிரி வைப்பாட்டி வைத்துக் கொள்வதுதான் ஆணின் புத்தி என்று கடிந்து கொள்வதைப் போல அங்கீகாரம் கொடுக்கப்பட்டு ஆணின் தேவைகளை பாதுகாத்துக் கொள்ளும் வசதி ஜாதித் திருமணத்தில் மட்டுமே உண்டு. காதல் திருமணம் செய்த பெண்ணோ ஒருவேளை கரடி மாதிரி கள்வனை தேடிவிட்டால் என்ன செய்வது? அதனால்தான் ஜாதிக்குள்ளேயே திருமணம் செய்து காலை ஒடித்துப் போட்டால் எப்படி ஓடுவாள் என்று காவலாகவும் நிற்கிறது ஜாதித் திருமணம்.
இதுதான் காதல்_ஜாதி மறுப்புத் திருமணத்திற்கும் பெற்றோர் ஏற்பாடு செய்யும் ஜாதி _ ஜாதகத் திருமணத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடு. மற்றபடி. ஆண் ஆதிக்கம் செலுத்துவது இரண்டு வகை திருமணங்களிலும் ஒன்றுதான். அதை எதிர்க்கும் உரிமை காதல் திருமணம் செய்த பெண்ணுக்கு இயல்பாக இருக்கிறது. ஜாதி திருமணம் செய்த பெண் தன் கழுத்தை அழுத்தும் திருமணத் தடியை விட்டு விலகி வருவதற்கு முதலில் தன் பெற்றோருடன் போராட வேண்டியிருக்கிறது. பிறகு உறவினர்களிடம் மன்றாட வேண்டியிருக் கிறது. இந்த உரிமையை காதல் திருமணம் செய்தவர் கள் செயல்படுத்தும்போது அவர்களுடைய காதலை காதலே அல்ல என்றும் அது காதலின் புனிதத்தன் மையை கெடுப்பதாகவும் குற்றம் சாட்டுகிறவர் களுக்கு அறிவு புகட்டுவதற்காகத்தான் காதலுக்கு ஏற்றப்படும் மகத்துவத்தின் பொய்மையை அம்பலப்படுத்தினார் பெரியார். எனவே அவரது கருத்துக்கள் காதலுக்கு எதிரானவை அல்ல என்பதை பெரியாரே இப்படிக் கூறுகிறார். ஆகவே இதிலிருந்து நாம், யாரிடமும் அன்பும், ஆசையும், நட்பும் பொருளாகக்கொண்ட காதல் கூடாதென்றோ, அப்படிப்பட்டதில்லை என்றோ சொல்ல வரவில்லை.
ஆனால், அன்பும், ஆசையும், நட்பும் மற்றும் எதுவானாலும் மன இன்பத்திற்கும் திருப்திக்குமேயொழிய, மனத்திற்குத் திருப்தியும் இன்பமும் இல்லாமல் அன்பும், ஆசையும், நட்பும் இருப்பதாகக் காட்டுவதற்காக அல்ல என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவே இதை எழுதுகிறோம். எல்லாம் சரிதான், பருவ வயதில் கவர்ச்சிக்கு இரையாகி ஏமாந்து போகும் பெண்களுக்கு காதல் திருமணம் என்பது எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்ற கேள்விக்கும் பெரியாரிடம் பதில் உண்டு. ஒத்த அன்பும், காதலும் ஏற்பட வேண்டுமென விரும்பினால் அந்த முறையில் நாம் மக்களை வளர்ப் பதில்லை. பக்குவம் வந்தவுடன் பெண் ணை அடைக்கிறோம். பெண்களுக்குத் தக்க கல்வி அனுபவம் தருவதில்லை. இப்படிப்பட்ட இப்பெண் களைத் தங்களுக்கு வேண்டியவைகளைத் தெரிந்தெ டுத்துக் கொள்ளும்படி சொன்னால் டிராமா (நாடக) காரனைத்தான் தெரிந்தெடுப்பார்கள்.
அத்தகையை அறிவும் தெளிவும் உள்ளவர் களாகக் பெண்களை வளர்க்க வேண்டும். அதுதான் பெண்களுக்கு நல்லது என்கிறார் பெரியார்.
பெண்களைப் புருஷனுக்கு நல்ல பண்டமாக மாத்திரம் ஆக்காமல், மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றவும், கீர்த்தி புகழ் பெறும் பெண்மணியாக்கவும் வேண்டும். பெண்ணும் தன்னை பெண்ணினம் என்று கருத இடமும் எண்ணமும் உண்டாகும்படியாக நடக்கவே கூடாது. ஒவ்வொரு பெண்ணுக்கும் நமக்கும் ஆணுக்கும் ஏன் பேதம்? ஏன் நிபந்தனை? உயர்வு _- தாழ்வு? என்ற எண்ணம் எழ வேண்டும். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், நம் பெண்கள் வெறும் போகப் பொருள்களாக ஆக்கப் படக்கூடாது. அவர்கள் புது உலகம் சித்தரிக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து. என்ற பெரியாரின் உயர்ந்த வாழ்வியல் அறிவுரைகளை பெண்களுக்கு சிறுவயது முதல் பக்குவமாக கற்றுக் கொடுக்க வேண்டுமே தவிர, அவர்களுக்கு ஜாதியைப்பற்றி வெறியூட்டி வளர்ப்பதால் அவர்கள் ஏமாறுவதை தடுக்க முடியாது. மாறாக ஜீன்ஸ் பேண்ட்டும், பூட்சும், கூலிங்கிளாசும் அணிந்து வரும் தன் ஜாதி ஆண்களிடமோ அல்லது மேல் ஜாதி ஆண்களிடமோ ஏமாந்து விடக் கூடும். அப்படியே அறிவாக வளர்த்தாலும் அவர்களே தேர்ந்தெடுத்தாலும் காதல் திருமணங்களில் தோல்வி ஏற்படாதா? என்பதும் நியாயமான கேள்விதான். அதற்கு பெரியார் சொல்லும் பதிலை புரிந்துக் கொண்டால் சேர்ந்து வாழ்வதும், பிரிந்து போவதும் வெற்றி தோல்விகள் இல்லை என்பது நமக்கு புரியும். எந்த உறவிலும் விரிசல் அல்லது பிளவு ஏற்டபடுவது எப்படி இயற்கையோ அப்படித்தான் காதலிலும் ஏற்படும் என்பதுதான் பெரியாரின் பதில். ஏனெனில், மற்ற உறவுகளைப் போன்றதுதான் காதலும் என்கிறார் பெரியார்.
ஆகவே ஆசையைவிட, அன்பைவிட, நட்பைவிட, காதல் என்பதாக வேறு ஒன்று இல்லை என்றும்; அந்த அன்பு, ஆசை, நட்பு ஆகியவைகள் கூட மக்களுக்கு அஃறிணைப் பொருள்கள் இடத்திலும், மற்ற உயர்திணைப் பொருள் களிடத்திலும் ஏற்படுவதுபோல்தானே ஒழிய, வேறில்லையென்றும் அதுவும் ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வதில் இருந்து, நடவடிக்கை யிலிருந்து, யோக்யதையிலிருந்து, மனப்பான்மை யிலிருந்து, தேவையிலிருந்து, ஆசையிலிருந்து உண்டாவதென்றும்; அவ்வறிவும், நடவடிக்கையும், யோக்யதையும், மனப்பான்மையும், தேவையும், ஆசையும், நட்பும் மாற வேண்டியதுதான் என்றும் – மாறக்கூடியதுதான் என்றும் நாம் கருதுகின்றோம்.
இத்தகைய பிரச்சனைகள் பெற்றோர் ஏற்பாடு செய்யும் ஜாதி திருமணத்தில் வராது என்று நம்புகிறவர்கள் தங்களை ஏமாற்றிக் கொள்கிறார்கள் என்றுதான் கருத வேண்டியிருக்கிறது. அப்படி நம்பாமல் வாதம் செய்பவர்களுக்கு ஜாதியே ஆதாரமாகவும், ஆதாயமாகவும் இருக்கிறது என்று நாம் புரிந்து கொள்ள முடியும். தனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் உறவு, அந்தஸ்த்து, ஜாதி ஆகிய காரணங்களுக்காக திருமணம் செய்வது விபசாரத்திற்கு சமமானது என்கிறார் பெரியார். அவர்களுடைய வாழ்க்கை எப்படி நடக்கிறது என்பதை தன் அனுபவத்தில் இருந்து கூறுகிறார் பெரியார். நமது மணமக்கள் பெரும்பாலோர் தாய், தகப்பன்மார்கள் தங்களை ஜோடி சேர்த்துவிட்டார் களே என்பதற்காகவே இணங்கி இருக்கிறார்கள். மற்றும் பலர் தங்களுக்கும் வேற்றுமை உணர்ச்சியும் (அன்பு) ஆசை இன்மையும் ஏற்பட்டும் பிரிந்து கொள்ள முடியவில்லையே என்பதற்கு ஆகவே இணங்கி இருப்பது போல் இருக்கிறார்கள். இதுபோன்றவைகள் எல்லாம் நிர்பந்த விபசாரங்களேயாகும். மற்றும் பல செல்வத்தையே பிரதானமாய்க் கருதி இன்ப உணர்ச்சியைப் பறிகொடுத்து இணங்கி இருக்கிறார்கள். இது போன்றவை காசு, பணம், சொத்துகளுக்காகக் செய்கிற விபசாரங்களேயாகும்.
மேலே எடுத்துகாட்டியிருப்பவை தந்தை பெரியார் அவர்களுடைய பட்டறிவும் உலகியல் பார்வையும் தத்துவ நோக்கும் உருவாக்கிய சுயசிந்தனையின் பதிவுகள் ஆகும். இவை காதல் பற்றிய பெரியாரின் கருத்துக்களின் தொகுப்பாகும். இவற்றிற்கு முத்தாய்ப்பாக இந்த பிரச்சினைகளுக்கு பெரியார் முன் வைக்கும் தீர்வு இதோ.
இவை ஒருபுறமிருக்க, இன்று உலக வழக்கில் இருக்கின்ற விபசாரத் தன்மைகள் தாம் ஆகட்டும் ஏன் ஏற்பட வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள். பால்ய மணங்களை ஒழித்துக் காதல் மணம், கல்யாண ரத்து, விதவை மணம், சம உரிமை ஆகியவைகள் ஒரு சமூகத்தில் இருக்குமானால், இன்றுள்ள விபசாரகளில் 100-க்கு 90 பாகம் மறைந்து போகும் என்றே சொல்லுவேன். அதோடு பெண் மக்களை நன்றாகப் படிக்க வைத்து, அவர்களுக்குச் சுதந்திர உணர்ச்சியை ஊட்டி, சொத்து உரிமையையும், வழங்கிவிடுவோமானால் விபசாரம் என்பது எப்படி நேரும் என்பதை யோசித்து பாருங்கள்.
பெரியார் காட்டும் வழியில் யோசித்துப் பாருங்கள். ஆணும் பெண்ணும் குற்றவாளி யாகவும் பலிகடாவாகவும் வாழும் இப் பாழும் சமூக அமைப்பு ஒழிக்கப்பட வேண்டாமா? புதியதோர் உலகம் படைக்க இதுவல்லவா சரியான நேரம். இனி வரும் உலகம் எப்படியிருக்கும் என்று நினைத்துப்பாருங்கள். மக்களுக்கு தன்மான உணர்ச்சி ஏற்பட்ட காலத்தில் ஒருவரை யொருவர் அடக்கி ஆள முடியாது. ஒருவர் தயவைக் கோரி ஒருவர் இணங்கிவிட முடியாது. ஒருவரையொருவர் அதாவது ஆணும் பெண்ணும் மனப்பூர்வமாக சமவிருப்பமின்றிக் காதல் அனுபவிக்க மாட்டார்கள். கல்வி விஷயத்தில் யாவருக்கும் தேர்ந்த அறிவும், கல்வியும் ஏற்படும். ஆனதால் மன மொத்த உண்மைக் காதல் வாழ்க்கை என்பதைத் தவிர புதுமைக்காக, மாறுதலுக்காக, அடிக்கடி மாறும் தன்மை சுலபத்தில் ஏற்பட்டுவிடாது. அன்றியும், உடல்நலம் பற்றிய அறிவும் கவலையும் ஒவ்வொரு வருக்கும் ஏற்பட்டிருக்கும். தன்மான உணர்ச்சியும் இருக்கும்.
முடிவுக்கு வருவதற்கு முன் ஒரு முக்கியமான கேள்வி உங்களுக்கும் எழலாம். இவ்வளவு சாதாரணமான காதல் என்கிற ஒரு விஷயத்துக்கு இவ்வளவு பெரிய ஆராய்ச்சியை ஏன் செய்தார் பெரியார்? பெரியாரே சொல்கிறார் பதில். இதுவும் ஏன் எழுத வேண்டியதாயிற்று என்றால், மற்றவர்கள் திருப்தியிலும், சந்தோஷத் திலும் நுழைந்து கொண்டு, தொட்டதற்கெல்லாம் இது காதலல்ல அது காதலுக்கு விரோதம் அது காம இச்சை இது விபசாரம் போன்ற அதிகப்பிரசங் கித்தனமான வார்த்தைகளை ஒருவிதப் பொறுப்பு மில்லாதவர்கள் எல்லாம் கூறுவதால் அப்படிப் பட்டவர்கள் கூற்றையும் கூறும் காதலையும் சற்றுப் பார்த்துவிடலாம் என்றே இதைப் பற்றி எழுதலானோம் என்கிறார் பெரியார். இன்றைக்கும் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது!