நூல் தொண்டில் உயர்ந்த தூயவர் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார்
ஆசிரியர் ந.க. மங்களமுருகேசன்
வெளியீடு தென்றல் பதிப்பகம்
13/3 பீட்டர்சாலை குடியிருப்பு, இராயப்பேட்டை, சென்னை – 14.
பக்கங்கள் 512 விலை: ரூ. 280/-
எளிமையில் வாழ்ந்த இளமை
பெரியாருக்கு இயக்கப் பணிகளுக்கும் தனிப்பட்ட உதவிகளுக்கும் என வந்த மணியம்மையார் அப்போது பெண் என்று அழைக்கக்கூடிய வயதினர். அப்போது சீவிமுடித்துப் பூச்சூடித் தன்னை அலங்கரித்துக் கொள்ள வேண்டும் என்ற பெண்களுக்கே உரிய இயற்கையான ஆர்வம் தோன்றும் பருவம், பறக்கும் தலை, கருப்பு ஆடை, எளிமையான தோற்றம்.
பெரியார் போர்த்தியிருக்கிற சால்வை கீழே விழ அதை எடுத்துப் போர்த்தி விடுகிறார். பெட்டியைத் தூக்கிக் கொள்கிறார். பெரியார் மறந்துபோய் விட்டு வந்த கைத்தடியை எடுத்துக்கொண்டு ஓடுகிறார். தொண்டு! தொண்டு! தொண்டு! இதைத்தவிர வேறு குறிக்கோள் கிடையாது.
எது நடந்தபோதும் எவர் எது சொன்னபோதும் அதுபற்றிக் கொஞ்சமும் கவலையினைக் கொள்ளாது தன் தொண்டு என்று வந்த நிலையில் இயந்திரம் போல இறுதிவரை இயங்கிவந்த ஓர் அபூர்வப் பெண்மணி அவர்.
அதுமட்டுமா? ஒவ்வொரு போராட்டத்திலும் தொண்டர்களுக்கு உணவு சமைத்துத் தம் கையால் பரிமாறிப் போராட்டத்திற்கு அனுப்பிய வீரம் மிக்க தாய் அவர். அவர் தலைமை ஏற்ற போது பெண்மணிதானே என்று ஏளனம் செய்தவர்களின் இழிமொழிகளைத் துச்சமென எண்ணியவர் அவர்.
அய்யாவின் கிண்டல் அம்மாவிடம்
பெரியார் அவ்வப்போது தனது கிண்டலால் அம்மாவையும், சுற்றி இருப்பவர்களையும் நகைக்க வைத்தது உண்டு. கடினமான போராட்ட வாழ்க்கையின் ஊடே, தொண்டு வாழ்க்கையினூடே , தியாக வாழ்க்கையினூடே கேள்விப்படுவோருக்கு மெல்லிய இதழ் ஓரங்களில் புன்னகைப் பூக்கள் செய்யும் நிகழ்வுகள் பல உண்டு.
அவற்றில் ஒன்று:
ஒரு சமயம் திருச்சியில் பெரியார் மாளிகையில் அய்யாவும், அம்மாவும் தங்கியிருந்தார்கள். அப்போது பணியாளர் பித்தளை, வெண்கலப் பாத்திரங்களை உருட்டிச் சத்தம் ஏற்படச் செய்தார். அம்மாவிற்குக் கோபம் வந்துவிட்டது. என்ன சத்தம் அங்கே என்று உரக்கக் கேட்டார்.
அப்போது பெரியார் அம்மாவின் சத்தத்தைக் கேட்டு, அம்மா அவர்களே! பாத்திரத்தின் சப்தத்தைவிடத் தங்களுடைய சப்தமே பெரிதாக இருக்கிறது என்று தனக்குரிய பாணியில் நக்கல் தொனிக்கச் சொல்ல, கூடியிருந்த பிள்ளைகள் எல்லாம் குதூகலமடைந்து நகைத்தார்களாம்.
இரண்டாவது அன்னை
திராவிட இயக்கத்தில் இன்று யார், யாரையோ எதற்காகவோ என்ன ஆதாயத்திற்காகவோ ஊரறிய மணவிழாக்காணாதவரையெல்லாம் அம்மா என்று அழைக்கிறார்கள். இயக்கத் தொண்டர்களுக்கு அம்மாவாக_ தாயாக முதலில் விளங்கியவர் அன்னை மணியம்மையாருக்கு முன் அய்யாவின் துணைவியார் அன்னை நாகம்மையார்தான்.
சாத்தான் குளம் இராகவன் முன்பு ஒருமுறை பேசிக்கொண்டிருக்கையில் குறிப்பிட்டார். ஈரோட்டில் அய்யா வீட்டில் நாங்களெல்லாம் சாப்பிட்டுக் கொண்டிருப்போம். நாகம்மையார் உணவு பரிமாறுவார்கள். பெரியார் சாவியை எடுத்துக்கொண்டு கடை திறக்கப்போகையில் எங்களையெல்லாம் பார்த்துக்கொண்டே போவார்.
அன்னையார் மறைந்து பத்து ஆண்டுகளுக்குப் பின் அய்யாவின் உதவிக்கு என்று அன்னை மணியம்மையார் பெரியாரிடம் வந்து சேர்ந்த பிறகும் அப்பழக்கம் தொடர்ந்தது. இப்போது அன்னமிட்ட கை அன்னை மணியம்மையாரின் கை.
அரங்கண்ணல் எழுதுகிறார்
பெரியார் வீட்டில் அன்னை நாகம்மை இல்லை. நெடுஞ்செழியன், அன்பழகன், கருணாநிதி, திராவிடமணி, தவமணி இராசன், கருணானந்தம், சனார்த்தனம் என்று இப்படி ஒரு படை வரிசை பெரியாரின் இல்லத்தில் முகாமிடத் துவங்கியது. அனைவரையும் வரவேற்று உணவு படைத்து அன்பு பொழிய ஆரம்பித்தது ஓர் உருவம். அதுதான் இன்று எல்லோராலும் இரண்டாவது அன்னை என்று அழைக்கப்பட்டு மண்ணுக்குச் சொந்தமாகிவிட்ட மணியம்மையார்.
ஒருமுறை அம்மை நோய் கண்டு குடியரசு அலுவலகத்தில் இருந்த அரங்கண்ணலுக்கு வெங்காயம் போட்ட கஞ்சியும், இளநீரும் உணவு வகைகளும் வீட்டிலிருந்து தாமே எடுத்துவந்து கவனித்த பண்புமிக்கவர்.
இயக்கம் தொடர்பான அம்மாவின் நடவடிக்கை
தந்தை பெரியார் மறைந்த பின்னர் வெளியான 96ஆவது பிறந்த நாள் மலரில் பிறந்த நாளில் நமது பணி என்று அன்னை மணியம்மையார் எழுதிய எழுத்துக்கள்: இயக்கம் தொடர்பானவை இவை:
இத்தனை ஆண்டுக்காலம் ஆகியும் இதுவரை எப்படிப்பட்ட கருத்தையும் நான் வெளியிட்டதில்லை. எனக்கு என்று எந்தவிதமான ஆசையையும் எண்ணத்தையும் ஏற்படுத்திக் கொண்டதும் இல்லை. எனக்கென்று இருந்த ஒரே ஒரு அன்புப் பிடிப்பையும் இழந்துவிட்டு அனாதை போல் தன்னம் தனிமையாய் விடப்பட்டு இருக்கிறேன்.
என்னைப் புரிந்து கொண்டு, எனக்கு அன்பும் ஆதரவும் அவ்வப்போது காட்டுவதற்கு அருகில் ஒருவரும் இல்லாமலும் அது போன்றே எனக்குச் சிற்சில சமயங்களில் ஏற்படும் துயரத்தையும் துக்கத்தையும் வாய்விட்டு மனம் திறந்து சொல்வதற்குக்கூட ஒருவருமே இன்றித் தனிமையான சூழ்நிலையில் இருக்கும்படியான ஒரு துயர நிலை ஏற்பட்டுவிட்டது.
இப்படிப்பட்ட ஒரு தன்மை எனக்கு என்றேனும் ஒரு நாள் வரக்கூடும் என்று முன்னதாகவே தெரிந்து கொண்டுதானோ என்னவோ, என் அருமைத் துணைவர் என்னைத் தனிமையில் இருக்கவிடாமல் இருப்பதற்காகத்தான் என்னிடம் திக்கற்ற தாய் தந்தையர்கள், கன்னித்தாய்மார்கள், கண்கலங்கி நின்று தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட சின்னம் சிறு சிறார்களையும் நூற்றுக்கு மேற்பட்ட அனாதைக் குழந்தைகளையும் துணையாக வைத்துவிட்டு அவர்களை ஆளாக்கும் பொறுப்பினையும் என் மீது சுமத்திவிட்டு, எனக்குப்பின், உன் வேலைகளை ஓய்வு ஒழிவு இல்லாமல் செய்வதற்காக இவர்களை விட்டு இருக்கிறேன்.
எதைப்பற்றியும் கவலைப்படாமல், யாரும் இல்லையே என்றும் நினைக்காமல் இவர்களைப் பராமரித்து என் ஆசையை எண்ணத்தைக் கொள்கையை நிறைவேற்று, என்று சொல்லாமல் சொல்லி அந்த அனாதைக் குழந்தைகளோடு ஒன்றாக என்னையும் ஓர் அனாதையாக (ஆனால் வளர்க்கும் செவிலியாக) விட்டுவிட்டுப் போய்விட்டார் என்றே எண்ணுகிறேன்.
அவருடைய கொள்கைப் பிடிப்புள்ள செம்மல்களாக_ தந்தையின் கொள்கைகளான பகுத்தறிவு_ கடவுள் நம்பிக்கை ஒழிப்பு_ மூடப்பழக்கங்களை முறியடித்தல், ஆகியவைகள் உலகு எங்கும் பரப்பிடும்படியாக, திறமைமிக்க திறமைசாலிகளாக, அறிவின் சிகரங்களாக ஊக்கமும் உழைப்பும் நாணயமும் மிக்கவர்களாக வளர்த்து ஆளாக்கிடும் பணியினை எல்லாப் பணியிலும் முதன்மையானதாகக் கொண்டு செயல்பட என்னை முழுமையாக ஆளாக்கிக் கொண்டு வருகிறேன்
முதல் பணி
அய்யா விட்டுச் சென்ற ஆதரவற்ற குழந்தைகள் எதிர்காலம் குறித்துத் தொடர்ந்து அவர்களைப் பாதுகாக்கும் உறுதிமொழியினை அம்மா முதலில் மேற்கொண்டார்.
அடுத்து அவர் அண்ணா, பெரியார் ஆகிய இருவரின் நினைவு காலமெல்லாம் நிலைக்கச் செய்ய மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அய்ந்து ஆண்டுக்காலமாக நம் அருமைத் தந்தை இருந்து தன் தலைமகனான அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிப்பார். அப்பெரும் விழாக்களில் மகிழ்ச்சியோடு யார் அழைத்த போதிலும், சென்று அப்பெருமகனின் அறிவுத் திறனையும், ஆற்றலையும் தொண்டினையும் அவர்தம் ஆட்சியில் செய்த பற்பல நன்மைகளையும் பற்றியும், சாதனைகளைப் பற்றியும், அவருக்குப்பின் அவரின் அன்புத் தம்பிகளால் ஆளப்படுகின்ற அதாவது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியின் திறமைகளைப் பற்றி எல்லாம் விளக்கி மக்கள் மதித்துக் கொள்ளும்படியான வகையில் பேசியும், எடுத்துச் சொல்லியும் வந்தார். இனி அந்தப்படி உண்மையை உள்ளவாறு சொல்வதற்குத் தமிழகத்தில் ஒருவருமே காணப்படவும் இல்லை, காணவும் முடியாது என்ற நிலைமை ஏற்பட்டதே.
பெரியார், மணியம்மை கல்வி அறக்கட்டளை
தந்தை பெரியார் மறைந்தபின் 1974 செப்டம்பரில் அய்யாவின் 96ஆவது பிறந்தநாளில், அம்மா தாம் செய்யவிருக்கும் சொத்து தொடர்பான ஏற்பாட்டைக் கூறுகிறார். அதில் தன் குடும்பம், தான் கடந்து வந்த பாதை, தன் லட்சியம், ஆகியவை குறித்து முதல் முதலாக வெளிப்படையாகக் கூறக் காண்கிறோம்.
நான் ஒரு இலட்சியத்திற்காகவே வாழ்கிறேன். உன்னையும் ஒரு இலட்சியவாதியாக ஆக்கவே விரும்புகிறேன் என்று 28 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சமயம் எனக்கு அய்யா எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அந்த அருமையான உள்ளத் தூய்மையான வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகின்றன. அதன் உட்பொருளை_ மெய்ப்பொருளைப் புரிந்து கொள்ளும் வல்லமை அறிவு தகுதி அன்று எனக்குப் போதாமல் இருந்த காரணத்தால் அதிகமாக அதைப்பற்றிச் சிந்திக்கவோ மனதில் ஏற்கவோ இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அடுத்தாற்போல் என்னைப்பற்றிச் சில வார்த்தைகள் பெருமைக்காகவோ, அகம்பத்திற்காகவோ, இவை என்று எடுத்துக் கொள்ளாமல் அய்யாவின் தொண்டு புரிவது லட்சியம் என்று ஒப்படைத்த ஒரு சிறிய ஜீவனின் உள்ளக்கிடக்கை என்பதற்கு நமது தோழர்கள் நினைத்தால்தான் நான் சொல்வதில் உண்மை நன்கு புரியும். தந்தை பெரியார் அவர்களிடம் நான் வந்து அடைந்தது எந்தவிதமான பலனை எதிர்பார்த்தோ, பணத்திற்கு ஆசைப்பட்டோ, பெருமை ஆடம்பர உல்லாச வாழ்வு வாழ்வதற்கோ, என் குடும்ப முன்னேற்றம் கருதியோ அல்லது வேறு எந்தவிதமான பலனையும் எதிர்பார்த்தோ, வந்தவள் அல்லவே அல்ல.
என் குடும்பத்தைப் பொறுத்தவரையில் பெரும் பணக்காரத் தன்மையில் இல்லையென்றாலும் போதிய கௌரவமும் மதிப்பும் கொண்ட நடுத்தரநிலையில் கஷ்டம் இன்னதென்று தெரிந்து கொள்ள முடியாத தன்மையில் இருந்து வந்ததுதான். வாழ்க்கைக்குப் போதுமான வசதியான ஓரளவிற்கு ஏதோ கொஞ்சம் இருந்தாலும் மனக்குறை இல்லாது, மற்றவர்களின் ஆதரவையும் எதிர்பார்க்காது வாழத் தகுதியுடைய நிலையில் இருந்ததுதான். சிறு வயது முதல் என் தந்தையாரால் சுயமரியாதைக் கருத்துப்பட வளர்க்கப்பட்டுத் தந்தை பெரியார் அவர்களால் அடிக்கடி எங்கள் இல்லத்தில் தங்குவதில் அன்போடு பழகி அவரது கருத்துக்களாலும் கொள்கையாலும் கவரப்பட்டதால் என் தந்தையார் மறைவுக்குப்பிறகு நான் ஒரு திடமான முடிவுக்கு வந்து, அய்யா அவர்களின் தொண்டுக்கு நம்மால் அதைச் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்து, இயக்கத்தில் தீவிரப் பணிபுரியச் சேர்ந்தேனே தவிர வேறில்லை.
1943 லிருந்து என்னை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும், அன்று முதல் இன்று வரை என் செயல்கள் நடவடிக்கைகள் வாழுகின்ற முறைகள், அய்யா மறைவிற்குப் பிறகு என் போக்கு தன்மை இவைகளெல்லாம் எப்படிப்பட்டவை என்று என்னைப் பொறுத்தவரையில் ஒன்றும் ஒளிவு மறைவு இல்லாத ஒரே சீரான தன்மையில்தான் இருந்து வருகிறேன். எந்த விதமான புதிய மாற்றங்களும் அவசியமில்லை என்பதையும் உணர்ந்திடுக.
தந்தை பெரியார் அவர்கள் தனது இயக்க இலட்சியங்கள் கருத்துக்கள் பணிகள் தொடர்ந்து நடைபெறவேண்டும் என்பதற்காகச் செய்துள்ள ஏற்பாடுகள் நாட்டு மக்களிடத்தில் அவர் கொண்டுள்ள உண்மையான அன்பின் அடிப்படையின் ஆழத்தையும் பிரதிபலிக்கிறது.
தனக்கென என்று ஒன்றும் வைத்துக்கொள்ளாமல் பொது நன்மைக்கே பயன்படும் வகையில் தக்க முறையில் ஏற்பாடு செய்து, தனக்குப் பின்னால் பயனுறும் வகையில் செய்துள்ள அந்த நற்செயல்கள் மற்ற எவரும் சாதாரணமாய் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்றாகும். அப்படிப்பட்ட தன்மை மற்றத் தியாகம், அன்பு உள்ளமும் கொண்ட ஒரு உத்தமரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு வாழ்ந்த நாள் முழுவதும் பணிபுரிய வந்த என்னைச் சில ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கத்திற்காக ஓர் ஏற்பாடு என்ற தன்மையில் தனது வாழ்க்கைத் துணைவி என்று எதிர்ப்பு, ஏளனம் இவற்றைப் பொருட்படுத்தாமல் அறிவித்தார்கள்.
சில சமயங்களில் சுபாவ குணத்தில் எனக்கு வரும் பிடிவாதம் அர்த்தமற்ற கோபம், இவைகளால் ஏற்படுகிற தொல்லைகளை எல்லாம் அன்போடு சேர்ந்து அனுசரித்து, அரவணைத்து ஏற்றுக் கொண்டு தனது மனநிலைக்கு ஏற்றவாறு என்னையும் மாற்றி அமைத்துப் பக்குவமான நிலையை அடையச் செய்தார்கள்.
அவர்களது காலத்திற்குப் பிறகு எனக்குப் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று கருதி எனக்குத் தெரியாமல் சில ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தது பல ஆண்டுகள் கழித்தே எனக்குத் தெரிய வந்தது.
அந்த ஏற்பாட்டின்படி எனக்குத் தனிப்பட்ட வாழ்வுக்கென ஏற்பாடு செய்யப்பட்ட, கிடைத்துள்ள சொத்துக்களையும், அதன் மூலம் வரும் வருமானங்களையும் வைத்து, அய்யா அவர்கள் காட்டிய வழியிலேயே, அய்யா அவர்களைப் போன்று, பொது மக்களுக்கும் உபயோகப்படும் தன்மையில், நான் நல்ல வண்ணம் சிந்தித்து, ஒரு ஏற்பாடு செய்வது என்ற திடமான முடிவுக்கு வந்து சென்ற 1974 ஆம் ஆண்டு செப்டம்பர் 24ந் தேதி பெரியார் மணியம்மை கல்வி அறக்கட்டளை என்ற பெயரால் ஓர் அறக்கட்டளை ஏற்படுத்தித் தக்க வழிமுறையாகச் சட்டரீதியாக அதற்குச் செய்யவேண்டிய காரியங்களைச் செய்து முடித்துவிட்டேன்.