பிரதமர் ஏன் மவுனம் சாதிக்கிறார்? ஏன் இந்த ஊழல்கள் பற்றிய பிரச்சினைகளில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் ஏதும் அளிக்கத் தயங்குகிறார் என்று பா.ஜ.க உள்பட எதிர்க்கட்சியினர், ஊடகங்கள் எல்லாம் கோரஸ் பாடி வந்தனர்.
இவர்கள் வாயை அடைக்க, பேச வேண் டிய அவசியம் வரும்போது பேசுவேன், இதோ தொலைக்காட்சி ஆசிரியர்களை செய்தியாளர்களை அழைத்து அவர்களது கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறேன். அது நாட்டுமக்களுக்கு நேரடி ஒளிபரப்பாகப் போய்ச் சேரட்டும் என்று முடிவு எடுத்து, 16.2.2011 காலை 10.30 மணிக்கு பிரதமர் சுமார் 70 நிமிடங்களுக்கு மேலாக பொறுமையாக, எந்தவிதப் பதற்றமும் இன்றி சிறப்பாகப் பதில் அளித்தார்.
அவரது பதில்கள் பொறுப்பானவை களாகவும், உண்மை விளக்கங்களாகவும் இருந்தன. சில ஊடக ஓநாய்களுக்கும் (குறிப்பாக ஆரிய ஊடகங்களுக்கும்), ஆர்.எஸ்.எஸ் சிந்தனையில் மிதப்பவர்களுக்கும், தி.மு.க.வை எப்படியாவது தனிமைப்படுத்திவிட வேண்டும் என்று பல தடவை தொடர்ந்து முயற்சித்து இம்முறையும் தோற்றுவிட்டோமே என்ற எரிச்சல் மேலோங்கிய பார்ப்பன ஊடகங்களுக்கும் இன்னும் அவர்களது வேட்டைக்கான தீனி கிட்டவில்லையே என்ற ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. (இந்து, எக்ஸ்பிரஸ், தினமணி தலையங்கங்கள் காண்க).
2 ஜி (ஸ்பெக்ட்ரம்) அலைவரிசைப் பிரச்சினையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசாவைக் குறி வைத்த அவ்வூடகங்களின் விஷமங்கள் அந்தத் தனிநபருக்கு எதிரானது மட்டுமல்ல; ஒட்டுமொத்தமாக தி.மு.க கட்சி, ஆட்சித் தலைமையையே குறி வைத்த அசல் கண்ணி வெடிகளாகும்.
அதனாலேயே எங்கே எது நடந்தாலும் அது 2 ஜியின் உத்தேச கற்பனை இழப்பு (PRESUMPTIVE LOSS) மூலம் கிட்டிய லாபத்தால்தான் என்பது போன்ற பிரமையை பிரச்சாரத்தைத் தொடர்ந்து கட்டவிழ்த்துவிட்டு வந்தனர்; வருகின்றனர்!
தோலைக்கடித்து, துருத்தியைக் கடித்து, ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, பிறகு கடைசியில் மனிதனையே கடித்த கதை என்ற பழமொழிக்கொப்ப இப்போது பிரதமர் மன்மோகன் சிங்கையும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) தலைவர் திருமதி சோனியாகாந்தியையும்கூட குறி வைக்கக் கிளம்பிவிட்டன. பட்ஜெட்டுக்கான நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது இது மேலும் முழுவீச்சில் கிளம்பும்; இப்போதிலிருந்தே திட்டமிட்டு வருகின்றனர் என்பது நாட்டுமக்களுக்குத் தெளிவாகவே விளங்கும்.
பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் அளித்துள்ள பல பதில்கள் யதார்த்தமான உண்மைகளை-_ஆதாரப்பூர்வமான செய்தி 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடுகளைப் பற்றித் தெளிவாக வெளிக்கொணர்ந்துள்ளது.
அவரது அமைச்சரவையில் இருந்த தனது சகா ஆ.இராசா பற்றிய ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கையில்,
முதலில் இராசாவிற்குக் கடிதம் மூலம் என்ன தெரிவித்தேன் என்பதை விளக்கி யுள்ளார். 2007 நவம்பர் 2ஆம் தேதி எழுதிய அந்தக் கடிதத்தில் சில ஏடுகளில் வந்துள்ள செய்திகள், சில தொலைத்தொடர்புக் கம்பெனிகளில் கூறப்பட்ட கருத்துகளின்படி நீங்கள் ஆராய்ந்து பார்த்து சரியான அணுகு முறையைக் கையாளுங்கள் என்பது போன்று எழுதினேன்.
அதே நாளில் சக அமைச்சர் திரு. ஆ.இராசா அவர்கள் (தாமதியாமல்) உடனே பதில் கடிதம் எனக்கு அனுப்பிவிட்டார்.
அதில் அவர், எல்லாம் வெளிப்படையா கவே இப்போது நடைபெற்று வருகிறது. இதே அணுகு முறைதான் இக்காலத்தில் மட்டுமல்ல; வருங்காலத்திலும் இப்படி வெளிப்படையான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பேன் என்று எழுதி உறுதி அளித்தார்.
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விஷயத் தில் ஏலம் விடும் முறையை (AUCTION) பின்பற்ற இயலாத நிலை ஏன் என்பதை விளக்கினார்.
(TRAI) என்ற இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இந்த ஏலமுறை கூடாது என்ற நிலைப்பாட்டை வைத்துள்ளது. அதுபோலவே தொலைத் தொடர்புக் கமிஷனும் ((TELECOM COMMISSION) இந்த ஏலம் விடும் முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஏலத்துக்கு உடன்படவில்லை; இதை மீறி ஏலம் விடுவதில் மற்றொரு முக்கிய சிக்கலான_-முரணான-நிலை என்னவென்றால், புதிதாக வருபவர்கள் ஏற்கெனவே இத்துறையில் இருப்பவர்களுக்குச் சமமாக தங்கள் தொழிலை நடத்த இயலாத வாய்ப்பு ஏற்படக்கூடும். ஏனெனில், ஏற்கெனவே இதில் ஈடுபட்டுள்ள அலைவரிசை ஒதுக்கீடு செய்யும் உரிமம் பெற்றோர் 10 மெகா ஹெர்ட்ஸ் என்ற அளவு வரை பணம் தராமலேயே இலவசமாகப் பெற்றுள்ளனர். (முந்தைய காலங்களில்_-ஆட்சிகள்_-அமைச்சர்கள் காலத்தில்).
எனவே, மேலே காட்டிய டிராய், டெலிகாம் கமிஷன் ஆகிய அதிகார அமைப்புகளின் அறிவுரை வழிகாட்டல் நெறிமுறையின்படி, இந்த 2 ஜி அலைக்கற்றையை ஏலம் விடாதது, 2003 முதல் பின்பற்றப்பட்ட முறையேயாகும். இம்முறை மூலம்தான் போட்டி காரணமாக தொலைத்தொடர்புகளைப் பரவலாக ஆக்க இயலும் என்ற கருத்தை உள்ளடக்கிய நிலையில், பின்னால் அடுத்து வரும் 3ஜி அலைக்கற்றைக்கும் நாம் ஏலமுறையைப் பின்பற்றிவிடலாம்; (ஏனெனில் அதன் அளவு, தன்மை சேவை எல்லாம் 2ஜியைவிட, உயர் சக்தி வாய்ந்ததாகும்). எனவே, 2ஜியைப், பொறுத்தவரை தற்போதுள்ள முறையைத் தொடருவதுதான் சரியான அணுகுமுறை_-உசிதம் என்றே தெளிவுபடுத்தினார் ஆ.இராசா. (அதனால்தான் 30 கோடி தொலைத்தொடர்பு இணைப்பு இராசா காலத்தில் 79 கோடியாகப் பரவியது – ஆசிரியர்)
இது பிறகு நிதியமைச்சகத்திடமும் விவாதிக்கப்பட்டு, அவர்களும் ஏற்றனர். காரணம், 2003இல் ஏற்பட்ட அமைச்சரவைக் கொள்கை முடிவின்படி அலைக்கற்றையில் விலை நிர்ணயம், முதலியவை நிதியமைச்சகம், தொலைத்தொடர்பு அமைச்சகம் எல்லாம் ஒப்புக்கொண்ட நிலையில் டிராய் அமைப்பு நிபுணர்களைக் கொண்ட அமைப்பு என்பதாலும், டெலிகாம் கமிஷனும் இதே கருத்தில் உடன்பட்டதாலும், 2ஜி அலைக்கற்றையை ஏலமுறையில் வற்புறுத்த வேண்டிய அவசியம் எனக்கு (பிரதமருக்கு) ஏற்படவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார் பிரதமர்.
மற்றொரு கேள்விக்குப் பதில் அளிக்கை யிலும் பிரதமர், முதலில் வருகிறவர்களுக்கு முன்னுரிமை (FIRST COME FIRST SERVED) என்ற முறை ஏற்கெனவே பல காலமாக முந்தைய அரசுகளால் நடைமுறைப்படுத்தப் பட்டதுதானே என்பதால் அமைச்சர் ஆ.இராசா அதே கொள்கையைப் (POLICY) பின்பற்றி வழங்க ஆரம்பித்தார் என்ற நிலையில் – இந்த உரிமங்கள் வழங்குவது என்னிடம் வருவதற்கோ, விவாதிப்பதற்கோ, அமைச்சரவையில் வைக்கப்படுவதற்கோ வாய்ப்பு ஏற்படவில்லை. அவரே அதனை வழங்கினார்.
இது சம்பந்தமான மற்றொரு கேள்வி 2 ஜி அலைக்கற்றை வழங்கியதன் மூலம் எந்த இழப்பும் இல்லை – ஜீரோ – பூஜ்யம் இழப்புதான் (ZERO LOSS) என்று தற்போதைய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் அவர்கள் குறிப்பிட்டிருப்பதை நீங்கள் ஏற்கின்றீர்களா என்பதே அந்தக் கேள்வியாகும்.
அதற்கும் பிரதமர் அவர்கள் நன்றாகவே தெளிவாக பதில் அளித்துள்ளார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு என்று தலைமைக் கணக்கு அதிகாரி (சிஏஜி) கணித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தோராயமாகக் கணிக்கப்பட்டதுதான் என்று தணிக்கை அதிகாரி கூறியிருப்பதை மன்மோகன் சுட்டிக் காட்டினார்.
உணவுப்பொருள் மானியத்துக்கு ரூபாய் 80 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது. இது போல் எரிவாயு, மண்ணெண்ணெய் போன்றவற்றிற்கும் மானியம் ஒதுக்கப்படுகிறது. உர மானியமாக ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது. இதை எல்லாம் இழப்பு என்று கூற முடியுமா என்ற கேள்வியை எழுப்பினார் பிரதமர். (தினமணி 17.2.2011 முதல் பக்கம்).
இப்படிப்பட்ட பல உண்மைகளும் அடுக்கடுக்கான வாதங்களும் பிரதமரால் எடுத்து வைக்கப்பட்டதோடு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடத்த முடியாது. ஒருபோதும் பதவி விலக வேண்டும் என்று எண்ணியதில்லை. சில விஷயங்களில் நீக்குப் போக்குடன் நடந்து எனது பணியை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு என்றும் திட்டவட்டமாகக் கூறிவிட்டார் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள்.
இதற்காகவே பார்ப்பன நாளேடுகள் அவர் மீது பாய்ந்து பிராண்டிக் கொண்டுள்ளன. இதனால் எல்லைமீறிய எரிச்சலுக்கும், ஏமாற்றத்திற்கும் ஆளான பார்ப்பன ஊடகங்கள், ஏடுகள் பிரதமர்மீது இப்போது கடுமையான தாக்குதல்களைத் தங்களது தலையங்கங்களை அஸ்திரங்களாக்கி வசை மாரி பொழிந்துள்ளன. ஆசிரியர் கடிதங்களும் அவாளின் குருசேத்திரங்கள்தானே!
இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி ஊழல் ஊழல் என்று ஓங்காரக் கூச்சலிட்டு பார்ப்பனரல்லாத பிரதமரான மன்மோகன்சிங் அவர்களையும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியையும் டில்லியில் இல்லாமல் செய்திட_-மக்களால் வாக்களிக்கப் பட்டிருந்தாலும், குறுக்கு வழியில் கிட்டாதா என்பதே அவர்களது உள்நோக்கம்!
பார்ப்பனரல்லாத திருமதி சோனியாகாந்தி, கூட்டணியின் தலைவராக உள்ளதாலும் அதையும் கவிழ்த்து, மீண்டும் பா.ஜ.க தலைமையில் பார்ப்பன சாம்ராஜ்ஜியத்தை நிறுவ இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டே ஊழல் பிரச்சாரத்தை, தங்கள் தங்கள் முதுகில் உள்ளவைகளை மறைத்துவிட்டு, செய்ய முனைப்புடன் நிற்கிறார்கள்!
ஏனெனில், பா.ஜ.கவில் எதிர்க்கட்சித் தலைவரும் (திருமதி சுஷ்மா) பார்ப்பனர். மாநிலங்கள் அவைத் தலைவரும் (அருண் ஜேட்லி) பார்ப்பனர். அவர்கள் ஆட்சி மீண்டும் வராதா என்பது அந்த வட்டாரத்தின் கனவு.
அப்படி ஏற்படாவிட்டால், காங்கிரஸ் கட்சியில் மன்மோகன்சிங் ராஜினாமா செய்தால் ஒரு பார்ப்பனரைப் பிரதமராகக் கொண்டு வருவதற்காகவாவது இந்த ஊழல் புரளிகள் பயன்பட்டாலும் அவர்களுக்கு நல்லதுதானே என்பது ஒரு நப்பாசை!
தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு பார்ப்பன ஆட்சியை பார்ப்பனத் தலைமை மூலம் கொண்டுவர, தி.மு.க. தலைமைமீது வெறுப்பை ஏற்படுத்த, இந்த ஊழல் பிரச்சாரம் பயனளிக்காதா என்ற கூடுதல் நப்பாசையும் கூட!
தமிழக வாக்காளர்கள் ஏமாறமாட்டார்கள் என்பதை மே மாத இறுதியில் புரிந்துகொள்வார்கள்- _ நமது தமிழ்நாட்டுக் கனவு கட்சித் தலைவர்கள்.
– கி.வீரமணி
ஆசிரியர்