இலங்கையில் சிங்கள இராஜபக்சே அரசால் நடத்தப் பெற்ற தமிழர் இன அழிப்புப் படுகொலைகள் உச்சக் கட்டத்தில் 2009 வாக்கில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
விடுதலைப்புலிகள் ஈழத் தமிழரின் மான உரிமை மீட்பர்களாக இருந்து உயிரைக் கொடுத்து களத்தில் நின்று போராடிய நிலையில், லட்சக்கணக்கான அப்பாவி பொது மக்களான தமிழர்கள் வன்னிப் பகுதி போன்ற வைகளிலும்கூட இலங்கை அரசின் விமான குண்டு வீச்சாலும், மற்ற சிங்கள இராணுவ வன்கொடுமையாலும் பல வகையில் நாசத்திற்கு ஆளாக்கப்பட்டார்கள்.
கோயில்கள், பள்ளி வாசல்கள், சர்ச்சுகள் ஆகிய வற்றில் தஞ்சம் அடைந்த மக்களையும்கூட குறி வைத்து குண்டு வீசித் தமிழர்களை அழித்தனர். சுமார் 90 ஆயிரம் தமிழச்சிகள் போர்க் கொடுமையால் விதவைகளாக்கப் பட்டனர்! வன்புணர்ச்சிக்கும், மானபங்கத்திற்கும் ஆளான அவலங்கள் நம் இதயங்களில் இன்னமும் இரத்தம் வழியச் செய்கிறது.
செஞ்சிலுவைச் சங்கம் என்ற உலகப் பொது மருத்துவ அமைப்பு அதன் உதவியை அடிபட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்காமல் தடுக்கப்பட்டனர் சிங்கள இராணுவத்தால்!
அய்.நா. செய்த தவறும் – பான்-கீ-மூனின் ஒப்புதலும் இந்தக் கால கட்டத்தில் அங்கு இருந்த அய்.நா. சபையில் அதிகாரிகள் உண்மையான நிலவரத்தைக் கூறி இந்தக் கொடுமையைத் தடுப்பதற்குக்கூட முன்வரவில்லை என்ற தகவல்கள் அண்மையில் அய்.நா. மனித உரிமை, போர்க் குற்றங்கள் பற்றி அலசி ஆராயப்படும் போது, ஓர் உள் அறிக்கையாக வெளிவந்து, அது கசிந்துள்ளது; அது உண்மைதான்; அய்.நா. தன் கடமையைச் செய்யத் தவறியது என்றும் அதனை நாம் பாடமாக எடுத்துக் கொண்டு இனி விழிப்போடு செயல்படுவோம் என்றும் அய்.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-முன் அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் போன்று கூறியுள்ளது – அவரது பெருந் தன்மையையும், மனச் சாட்சியுடன் நடந்து கொள்ளும் ஒரு மாமனிதர் அவர் என்பதையும் உணர்த்துவ தாக அமைந்துள்ளது.
இலங்கையில் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக அய்.நா.வின் அலுவலராக அக்கால கட்டத்தில் (வன்னிப் பேரவலம் நடைபெற்றபோது) பணியாற்றி பிறகு வெளியேறி தற்போது ஆஸ்திரேலிய தாயகத்தில் வாழும் பத்திரிகை யாளர் – எழுத்தாளர் – கருத்தாளர் கார்டன்வைஸ் அவர்கள் முதன்முதலாக ஓராண்டுக்கு முன் 2011இல் எழுதிய ஆங்கில நூல் கூந ஊயபந என்பதாகும். தமிழில் அது கூண்டு என்ற பெயரில் இலங்கைப் போரும் விடுதலைப்புலிகளின் இறுதி நாட்களும் என்ற தலைப்பில் தமிழில் மொழியாக்கம் செய்து இரண்டு பதிப்புகள் வெளிவந்துள்ளது.
அந்நூலில் அப்பட்டமான பல உண்மை களை அதாவது அய்.நா.வின் போர்க்கால செயலின்மை இலங்கையில் எப்படி என்பதை விளக்கியுள் ளார்கள். 2008இல் அங்கே நடந்த கொடுமைபற்றி கார்டன்வைஸ் அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
இறுதிக் கட்டத்தில், எவ்வளவு பேர் இறந்தனர் என்பது தெரிய வேண்டுமானால், எல்லா உண்மை களும் வெளிக் கொணரப்பட வேண்டுமென்றால், ஏழாண்டு களோடு நாம் நிறுத்தக் கூடாது. குறிப்பாக 1983இல், ஆயிரத்திலிருந்து மூவாயிரம் தமிழர்கள் வரை கொல்லப் பட்டனர்; பல ஆயிரம் தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.
அக்கலவரங்களின்போது உடைகள் எல்லாம் களையப்பட்டு, தங்களை நோக்கிப் பாய்ந்து வரும் சிங்களக் கும்பலைப் பார்த்து நடு நடுங்கிக் கொண்டிருக்கும் – கழுத்தில் டயர் மாட்டப்பட்டு, எப்போது அதற்குத் தீ வைக்கப்பட்டு தாங்களும் உடல் கருகி இறக்கப் போகிறோம் என்ற மரண பீதியில் இப்படிக் கொடுமையான முடிவுகளைச் சந்தித்த தமிழர் பலரது புகைப்படங்களை நாம் பார்க்க முடியும்!
நாஜி ஜெர்மனியில் யூதர்களின் கடைகள் உடைக்கப் பட்டு, பலர் கொல்லப்பட்டு, 30,000 பேர்கள் வரை சித்ரவதை முகாம்களுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட அக்கண் ணாடிகள் உடைந்த இரவு, கிரிஸ்டலில் நாட் எப்படி அய்ரோப்பிய வரலாற்றில் மிகக் கொடுமையான தொரு பகுதியோ, யூத மனங்களில் ஆறாத ரணத்தை அச்சம்பவங்கள் ஏற்படுத்தினவோ, அதேபோல்தான் இலங்கைத் தமிழர் அனைவரையும் அக்கறுப்பு ஜூலை நாளும் மிக ஆழமாகப் பாதித்தது. ஜெர்மனியைப் போல், இலங்கையிலும் அரசே முன்னின்று அரங்கேற்றிய கொடுமைகள் தான் அவை. படுகொலை செய்து, சொத்துக்களை தீக்கிரையாக்கி, இனியும் அங்கு வாழ இயலாது என்ற அச்சத்தை உருவாக்கி, ஈழத் தமிழர்களை நாட்டைவிட்டே வெளியேறச் செய்த நாள், அச்சம்பவங் களின் உடன் விளைவு, சில நூறு பேர் மட்டும் இருந்த விடுதலைப்புலிகள் அமைப்பில், ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் இணைந்தனர்…
இதன் மூலம் தீவிரவாதம், பயங்கரவாதம் இலங்கை யில் பரவி விட்டது என கூறிய இலங்கை அரசுதான் அதனை உருவாக்கியது என்பது தெள்ளத் தெளியத் தெரியவில்லையா?
அதே ஆசிரியர் – 2008இல் போர் உச்சக் கட்டத்தில் இலங்கையில் நடந்தபோது அங்கே அய்.நா.வின் பங்களிப்பு எப்படி இருந்தது என்பதை (பக்கம் 181இல்) விவரிக்கிறார்.
இலங்கைச் சமூகமே அச்சத்தின் பிடியில் இருந்தது. எதிர்ப்பவர்கள் ஈவிரக்கமில்லாமல் கொல்லப்பட்டார்கள். அரசை எதிர்த்து நிற்கும் திராணியே அய்.நா. பன்னாட்டு நிறுவனத்திற்குத் தான் இருக்க முடியும்.
அப்படி இருந்தும் அய்.நா. மவுனம் சாதித்தது. தார் மீக ரீதியான தனது அதிகாரத்தைப் பயன்படுத்தத் தவறிய இலங்கை அரசின்மீது அழுத்தம் கொடுக்காம லிருந்தது. எல்லாமே குடிமை சமூகத்திற்கு, மனித உரிமை ஆர்வலர்களுக்குப் பின்னடைவுதான்
ஓராண்டுக்கு முன்னர் கார்டன்வைஸ் கூறிய தகவலை, அய்.நா. பொதுச் செயலாளர் இப்போது ஒப்புக் கொண்டு பாடமாக எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்!
இந்தக் கால கட்டத்தில் இந்தியாவின் பங்களிப்பு அய்.நா.விலும் சரி; இலங்கை அரசுக்கும் எச்சரிக்கும் வகையிலும் சரி முக்கிய பங்காற்றி, எஞ்சி இருப்பவர்களின் உரிமையை மீட்டு எடுத்து வாழ வைக்க செயல்பட முன்வரவேண்டும்.
இலங்கை பற்றிப் பேசும் போதும் இந்திய அரசு கவலையளிக்கிறது, மெத்தவும் கவலை கொள்கிறது என்ற வழக்கமான வார்த்தைகளோடு நிறுத்தி விடாமல், ஆக்கப் பூர்வ விளைவுகளை ஏற்படுத்தும் வண்ணம் அழுத் தந்திருத்தத்துடன் அதனைப் போர்க் குற்றவாளியாக நிறுத்த வைக்க இந்தியா முன் வர வேண்டும். இதுவரை இந்திய அரசு செய்த தவறுகளுக்குப் பிராயச்சித்தமாக அது இருக்கும். ஈழத் தமிழர்கள் மத்தியிலே பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி, அதனை எப்படியும் செயல்படுத்துமாறு போதுமான அழுத்தத்தை அய்.நா.வுக்கு இந்தியா அந்தரங்கச் சுத்தியோடு கொடுக்க வேண்டும்.
சரியான தருணத்தில் டெசோ டெசோ சரியான நேரத்தில் துவக்கப்பட்டு, சரியான திசையில், சரியான பார்வையோடு கலைஞர் தலைமை யில் செயல்பட்டு வருகிறது; இந்த அய்.நா. உள் அறிக்கை கண்டு டெசோ மேலும் பல முடிவுகளை எடுத்து, இந்திய அரசுக்கும், அய்.நா. மன்றத்திற்கும் இந்திய அரசு மூலம் செயல்பட விரைந்து வற்புறுத்துவோம்.
அய்.நா.வின் பார்வையில், அணுகுமுறையில் நல்ல மாற்றம் காணும் இவ்வேளையில், அமெரிக்கா போன்ற பல நாடுகள் – மெக்சிகோ போன்ற நாடுகள் வலியுறுத்தும் இவ்வேளையில், போர்க் குற்றம் புரிந்த இலங்கையை உலக நாடுகள் முன் நிறுத்தும் வேளை நெருங்கி வருகிறது! கி.வீரமணி, ஆசிரியர்