தேசிய விருது பெற்ற `தென் மேற்குப் பருவக் காற்று படத்தை இயக்கிய சீனு ராமசாமியின் படம் `நீர்ப்பறவை. மீனவர்களின் வாழ்க்கையைக் கதைக்களமாகக் கொண்டு வந்த படங்களில் இந்த நீர்ப்பறவைக்கு முதலிடம் கொடுக்கலாம்.
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு உரிய அடையாளமே இல்லாத உடைதாங்கிய எம்.ஜி.ஆரின் படகோட்டி போல இல்லாமல், ராமேசுவரம் மீனவர்களின் வாழ்வை அந்த மண்ணிலேயே படம் பிடித்துள்ளார் இயக்குநர்.
மிக மிக ஆபத்து நிறைந்த தொழில் கடலில் மீன் பிடித்தல்தான். எப்போது திரும்பி வருவார்கள் என்பது தெரியாமலேயே காத்திருத்தல் அந்த மக்களுக்கு பழகிவிட்ட ஒன்று.
அப்படித் தொழிலுக்குப் போகும் கதைநாயகனின் படகோட்டும் காட்சியில் இருந்து படம் தொடங்குகிறது. அவனது கதை அவன் மனைவியின் நினைவுகளாய் விரிகிறது. கடலில் கண்டெடுத்து அழைத்துவரப்படும் குழந்தை ஒரு பணக்கார வீட்டுக் குழந்தையாக இருப்பது தமிழ் சினிமாவின் வழமை.ஆனால், அப்படி இல்லாமல் அந்தக் குழந்தையை ஒரு ஈழத்தமிழனாகக் காட்டியதற்காக முதலில் சீனு ராமசாமியைப் பாராட்டவேண்டும்.
மீனவத்தம்பதியிடம் வளரும் அவன் பெரியவனாகி கடும் குடிகாரனாகிறான். திருத்தமுடியாத அவனை கிறித்துவக் கன்னியாஸ்திரி ஒருவரின் வளர்ப்பு மகள் ஒரு வாய்ப்பில் அவனிடம் வெளிப்படுத்தும் அன்பினாலும் அதன் வழி அவன் கொண்ட காதலால் அவன் திருந்துகிறான்.
மீனவக் கிராமங்களின் மக்கள் எப்படி வாழுகிறார்கள் என்பதை பெரும்பகுதி காட்சிகள் எடுத்துக்காட்டுகின்றன.திரைப் பார்வையாளர்கள் அதிகம் பார்த்திராத அம்மக்களின் வாழ்க்கை அவலம் நிறைந்தது என்பதைப் படம் உணர்த்துகிறது.
ஏறக்குறைய எல்லா சினிமாக்களும் இஸ்லாமியர்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் சூழலில்,நீர்ப்பறவையில் இஸ்லாமியக் கதாபாத்திரத்தை மனிதநேயத்தின் உச்சமாக உலவ வைத்திருப்பது,சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் நல்ல முயற்சி.
இலங்கை ராணுவத்தின் தொடர்ந்த அட்டூழியத்தை கடலோர மக்களே தமது வாழ்வு கருதிப் பேசத்தயங்கும் நிலையில், மீனவர்களைக் கொல்லும் பயங்கரவாதச் செயலை அந்த இஸ்லாமியக் கதாபாத்திரம் கண்டிக்கும் காட்சியும் உரையாடலும் அருமை.சிங்கள ராணுவத்தால் பல ஆண்டுகளாகத் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும் கொடுமையைக் காட்டி தமிழர்களின் உணர்வுகளை இந்திய அரசின் தலையில் ஒரு குட்டு வைத்துச் சொல்கிறது படம். ஈழத்தமிழர்களும் நாமும் ஒரே இனம், அவர்களை அரவணைப்பது நமது கடமை என்பது அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
நடிகர்கள் தேர்வு, காட்சிப்படுத்தியவிதம், ஒளிப்பதிவு,உரையாடல், இசை, பாடல்கள் என அனைத்தும் நேர்த்தி.
தமிழ் சினிமா அண்மைக் காலமாகத்தான் இதுவரை சொல்லப்படாத கதைகளைச் சொல்லத் தொடங்கி-யிருக்கிறது. அதில் மிக முக்கியமாக இதுவரை சொல்லப்படாத மீனவர் வாழ்வைச் சொல்லிய நீர்ப்பறவையை பார்த்துப் பாராட்டி ஊக்கப்படுத்த-வேண்டியது தமிழர்களின் கடமை.
– அன்பன்