சாவதற்குள் தன் செருப்பை
ஆளச்செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்ட ஒருவன்
நடு ரோட்டில் வந்து கூச்சலிட்டான்
அடுத்த முதலமைச்சரை தன் சுட்டு விரல் சொல்லுமென்று
அன்றிலிருந்து அவன் காதுகள் கனவு கண்டன
அவன் இமைகள் கனவுகண்டு நீ சொன்னதுதான் நடக்குமென்றது
வாய் மூக்கு தோள் எல்லாம் கனவு கண்டு சொன்னது
அவன் அமைச்சர் பட்டியலின் பெயரை டிக் செய்தான்
அவனுக்கு வயிற்றின் மீது கோபம் வந்தது
அதற்கு கனவு காணத் தெரியவில்லையென்று ஓங்கி குத்தினான்
கண்ணாடியை பார்த்தான் மீசையை சிரைத்தான்
கனவு காணத் தெரியாத உனக்கு என்னிடம் இடமில்லை
அவன் உக்கிரத்தைக் கண்டு அவன் வீடிலிருந்த மேஜை, கட்டில்,
பீரோ, குப்பைக்கூடை, பழைய காலண்டர், கண்ணாடி, ஃபியூஸ் போன பல்பு எல்லாம் கனவு காணத் தொடங்கிற்று
எதிலும் திருப்தியடையாதவன் வெளியே வந்தான்
அவன் தோட்டத்திலுள்ள மரங்கள் கனவு காணத் தொடங்கின
சிறுசெடிகளுக்கு கனவு காண சொல்லிகொடுத்தது வளர்ந்த மரங்கள்
வானத்தைப் பார்த்தான் கனவின் மழையை கொட்டியது அவன் கூரை மீது
ஒரு கனவு அவனுக்கு படுக்கை போட்டது
இன்னொரு கனவு அவனுக்கு முந்தானை விரித்தது
காலையில் எழுந்தவுடன் ஒரு கனவு அவனுக்கு பல் துலக்கி தேனீர் கொடுத்தது
எல்லோருடைய கனவின் முட்டைகளை எடுத்துப் பார்க்கும்
கனவுக் காலம் தெருக்களில் நடமாடத் தொங்கியது
காலம் தன் சொக்கட்டானை வேறு மாதிரி உருட்ட
அவன் கனவின் எல்லா முட்டைகளும் உடைந்தன
கோபபட்டு தன்னை குத்தி புண்ணாக்கிக்கொண்டான்
அவனை எழுப்பி நிமிர்த்தியது அவனுடைய ஜாதி
வெளியே ஓடிச் சென்று ஒரு கிராமத்தை எரித்து சாம்பலை அவன் உடல் மீது பூசியது எழுந்தவன் சொன்னான்
திராவிடத்தால் வீழ்ந்தோமென்றான்
காலில் கிடந்தவன் திமிறி எழுகிறான் அவன் தலையில் குட்டு என்றான்
காதல் நமக்கு எதிரியென்றான்
யாரும் அவனை காதில் வாங்கிகொள்ளாததால் ஆதிக்கச் சாதிகளின் மாநாடு ஒன்றை கூட்டப்போவதாகவும்
உலக நாடுகளின் பிரதிநிதிகள் வரப்போவதாகவும் சொன்னான்
இனி ஜாதி எதிர்ப்பாளர்களின் வீட்டை நோக்கி பீரங்கிகள் நிறுத்தப் படுமென்றான்
ஏவு கணைகளுக்கு ஆர்டர் செய்தாகிவிட்டது
அது கிராமங்களில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட ஜாதியை மட்டும் தாக்கவல்லதென்றான்
மற்ற ஜாதிகளும் தன்னிடமே ஏவுகணைகளை வாங்க வேண்டுமென்றான்
எல்லா பேரவைகளும் சங்கங்களும் வரிசையில் வந்து நிற்க மீண்டும் கனவு காண தொடங்கி விட்டான்.
அவனுடைய வேட்டி சட்டை ஜட்டி முண்டா பனியன் தான் கண்ட முதல் கனவை அவனிடம் சொல்லத்தொடங்கின.
– கோசின்ரா