Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வார சந்தா செலுத்துங்கள்..

மிதியடிகளும், கசையடிகளும்….- சங்கமித்தரா

அரசியல் உலகில் காலணி கதைகளும், கசையடிகளும் பிரிக்க இயலாமல் இணைந்தே பயணிக்கிறது. மிதியடிகளை அவமானக் குறியீடாகச் சமூகம் கருதுகிறது. காலணி ஊரெல்லாம் பயனாளியோடு பயணித்தாலும், கழற்றி விடப்படுவது வாசற்படிக்கு வெளியேதான். மனிதர்கள் அந்த இரண்டுமில்லாமல் வெளியே செல்லமாட்டார்கள். பிரியாத அவ்விரண்டில் ஒன்று காலில் காலணிகள், மற்றொன்று கையில் அலைப்பேசி. எதிராளியைக் கோபத்தில் அவமானம் செய்திட உதிர்க்கும் உக்கிரச் சொல், “செருப்பு பிஞ்சிடும்”. தப்பு செய்த அயோக்கியர்களை அசிங்கப்படித்திட கொடுப்பது “செருப்படிகள்”. வழியில் அறுந்து போனால் காலிலிருந்து கையில் எடுத்துக் கொண்டு மரத்தடியில் காலணி தைக்கும் தொழிலாளியை நாடிய காலம் இருந்தது.

இன்று தெருவோரம் இத்தொழிலாளர்களைக் காண்பது அரிதாகும். கலைந்த கடந்தகால நினைவுகளில் மட்டும் வாழும் தொலைந்
தோர் பட்டியலில் செருப்பு தைத்து தரும்தொழிலாளர்களும் இடம்பெற்றுள்ளனர். தைத்துப்போடுதலும் தொலைந்து, அறுந்த காலணிகள்வீதியில் அநாதையாக விடப்படுகின்றன. பயன்படுத்தி பயனற்றதானதும் தூக்கி எறியும் பொருட்களில் (Use and throw) காதறுந்த காலணிகளும் ஒன்றாகிவிட்டது. அறுந்த பழைய செருப்பு தைக்கும் தொழில் தொலைந்திடலை சமூக நீதியாளர்கள் வரவேற்கின்றனர்.

ஆனால், மநுதர்ம பக்தர்கள் இத்தொழிலை மீட்டெடுக்க விஸ்வகர்மாக்கி கடன் தந்து அழியாது காத்திட அரும்பாடுபடுகிறார்கள். வாழ்க சனாதனம்.

காலணிக்குச் சமூகத்தில் மதிப்பு மரியாதை இருந்ததற்கு ஒரு கதையும் உள்ளது. தன் அன்னையால் அரியணை ஏறும் வாய்ப்பிழந்த அண்ணன் நினைவில் அவரது பாதரட்சைகளைச் சிம்மாசனத்தில் வைத்து ஆட்சி செய்ததாக காவியப் புனைவு கதைக்கிறது. செருப்பணிந்து ஒடுக்கப்பட்டோர் நடப்பது தங்களுக்கு சமமானவர்கள் ஆகிவிடுகிறார்கள் என அஞ்சி, எங்கள் முன் மிதியடியுடன் நடக்காதே என அடாவடி செய்த மடையர் கூட்டமும் இருந்தது,இன்றும் ஒதுக்குப்புறமான ஊர்களில் இக்கொடுமைச்
சிந்தனை செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக வடமாநிலத்தில் இச்சீரழிவு அநியாயம் அரங்கேற்றப்
படுவது அன்றாட நிகழ்வாக உள்ளது. இன்னா செய்தவனுக்கு நன்னயம் செய்து ஒறுத்தலுக்கு சாட்சியான “பூட்ஸ்”ன் வரலாற்றுக் கதை ஒன்று உள்ளது.

தன்னை எட்டி உதைத்த ஆங்கிலேய சிறை அதிகாரிக்குக் கச்சிதமாக காலணி தன் கையால் தயாரித்து பரிசாகக் கொடுத்தார் காந்திமகான். இது மகாத்மாவின் மன்னிக்கும் குணத்திற்கான சாட்சி. சிறை வாழ்க்கையில் கற்றுத் தரப்பட்ட கைத்தொழிலைத் திறம்பட கற்றுத்தேர்ந்த அண்ணலுக்குக் காலணிதயாரிப்பது குலத் தொழில் அல்ல என்பதைப் பரம்பரை
கைவினைஞர்களுக்காகக் கரிசனப்படுகிறவர்கள் உணர்ந்திடல் நன்று.

காலணி அணியமாட்டேன் எனச் சபதம் எடுப்பது எதற்கு? நிறைவேறா ஆசையால் விளைந்தவிரக்தியே சபதத்திற்கான காரணியாகும். மிதியடிகள் அணியமாட்டேன் என தமிழ்நாடு தாமரைக் கட்சி தலைவரின் அறிவிப்பு, தன் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு வழங்க மறுக்கும் வாக்காளர்கள் மீது எழும் கோபத்தை வெளிப்படுத்தும் யுக்தியாக தெரிகிறது. தன் தலைவி முதல்வராக வீற்றுள்ள சட்டமன்றத்தில் செருப்பு அணிவதைத் துறப்பதாக அறிவித்த ராணி விசுவாசத்தையும் தமிழ்நாடு அரசியல் கண்டுள்ளது. தனது வார்டில் செய்வதாக தேர்தலில் சொன்னதைச் செய்யமுடியவில்லை எனும் விரக்தியால் நகர்மன்றக் கூட்டத்திலேயே தனது மிதியடியால் தன்னைத்தானே அடித்துக் கொண்டது ஆந்திர அரசியலில் உண்டு. தனது செருப்பால் தன்னை அடித்து வருத்திக் கொள்வது போன்று, இலக்கணபிழைகளைக் கண்டு எழுத்தாணியால் தலையில் குத்திக் கொண்ட சாத்தனார் கதை தமிழ் இலக்கிய உலகிலும் உண்டு. மொத்தத்தில் வெறுப்பினால், விசுவாசத்தை வெளிப்படுத்திடவோ, மிதியடி அணிதலை விடுவேன் எனும் அதிமேதாவிகளுக்கு ஓர் ஆய்வு சொல்லும் உண்மை…..

வெறுங்காலுடன் வெளியிடத்தில் நடந்தால் எழுபது வகையான நோய்கள் தாக்குமாம் எனும் அறிவியல் எச்சரிக்கையை அரசியல் கோமாளிகளே நினைவில் கொள்ளுங்கள்.

கசையடிகள் குற்றமிழைத்தோருக்கு வழங்கும் தண்டனையாகும். விதிவிலக்காக தன்னைத்தானே சவுக்கால் அடித்துக் கொள்ளும் கழைகூத்தாடிகள் தண்டனைக் குற்றவாளிகள் அல்ல. இவர்கள் தன்னைத்தானே வருத்திக் கொண்டு வயிற்றுப் பிழைப்புக்குக் காசுக்கு கையேந்தும் பரோரிகள். இன்று அறிவுஜீவி(?) ஒருவர் தெருவில் நின்று பஞ்சு சாட்டையால் தன்னைத்தானே அடித்துக் கொண்டார். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு காமக்கொடூரன் நிகழ்த்திய பாலியல் குற்றத்தைக் காரணங்காட்டி திராவிட மாடல் ஆட்சியைக் குறை சொல்லி கசையடி ஆறு எனச் சொல்லி உபரியாக இரண்டு சேர்த்து எட்டு அடித்தார். குற்றவாளி கைது செய்து விசாரணை நடக்கும் போது ஏனிந்த சவுக்கடி நாடகம். பாலியல் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டியவன் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. இந்தக் கசையடி கோபம் மணிப்பூர் நிர்வாண ஊர்வலத்தையும், பொள்ளாச்சி பாலியல் கொடுமையையும் கண்டித்து எழவில்லையே ஏன்? நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என நியாயம் பேசியதாகச் சொல்லப்படுகின்ற மண்ணில் சார்பு கண்ணோட் டத்தில் கசையடி நடத்தியது சரியா?

சமூகநீதிக்கான கட்சி எனப் பகட்டாக பேசும் ஜாதிகட்சி நடத்தும் நிறுவனர் 19-07-1989 அன்று உதிர்த்த வாய்ச்சவடால் அளித்தது அய்ந்து சத்தியங்கள். அதில் மூன்றாவது சத்தியம் “என் வாரிசுகள் கட்சியிலோ,சங்கத்திலோ எந்தப் பொறுப்புக்கும் வரமாட்டார்கள். இது என் தாய்மீது சத்தியம் மீறினால் நடுரோட்டில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள். சொன்னவரது குடும்பக் கட்சியில் இரத்த வாரிசுகளுக்குள் பொதுக்குழு ரசித்த கட்சிப் பதவிக்கு நடந்த அசிங்கம் குழாயடிச் சண்டையை விஞ்சி விட்டது. அரசியல் ஆதாயத்திற்காக மக்களை முட்டாளாக்கி இல்லை ஏமாற்றி வாக்கைப் பெற அரசியல் புளுகினுகளுக்கு அரேபிய நாடுகளில் உள்ள கசையடி தண்டனை தந்திட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். கப்ஸா எத்தனை முறை சொன்னாலும் சொன்னபடி ஏன் செயல்படவில்லை என மக்கள் வினா எழுப்பமாட்டார்கள் என்பதில் அரசியல்வாதிகளுக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை. மக்களும் அரசியலில் இதெல்லாம் சகஜம்பா என எளிதில் கடந்து போபவர்கள் உள்ளனர். மிதியடி அணியமாட்டேன், சவக்கால் அடியுங்கள் அல்லது தன்னைத்தானே சவுக்கால் அடித்துக் கொள்வது போன்ற மலிவான கோமாளி கூத்து செய்தாவது ஆட்சி அதிகாரத்தில் அமர துடிக்கிறார்கள்.

இந்தப் பிழைப்புவாதிகளை அடையாளங் கண்டு அரசியல் களத்தில் அப்புறப்படுத்த வேண்டிய கடமை ஒவ்வொரு வாக்காளருக்கும் உண்டு. இவ்வுண்மையை உணர்ந்து வினையாற்றிடல் மக்களின் புத்திசாலித்தனம். இதிலென்ன இருக்கிறது என்று ஊரை ஏய்க்கும் இந்தச் சவடால் பேர்வழிகளின் பசப்பு வார்த்தைகளுக்கு மதிமயங்கிட வேண்டாம் என மிதியடிகளும், தோலைப் பிய்த்திடும் உண்மையான சவுக்களும் வாக்காள பெருங்குடிகளிடம் வேண்டுகின்றன. அரசியலில் களமாடும் திண்ணைப் பேச்சு வீராதி சூரர்களே! ‘‘மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானம்செய் வாரின் தலை’’ அய்யன் வள்ளுவரின் வாய்மை வழியில் அரசியல் செய்திடுங்கள். காலணி அணிதல் துறப்பு என வாய்ச்சவடால் பேசுவது, தன்னைத் தானே சவுக்கால் அடித்து கொள்ளுதல் போன்ற வேடிக்கை கூத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடல் நன்றிலும் நன்று.