அன்புடையீர் வணக்கம்
ஜனவரி (1_15) உண்மை இதழில் அருளானந்தரின் ஆன்மீகம் எனும் தலைப்பில் ஈரோடு மே. அ. கிருஷ்ணன் அவர்களின் சிறுகதை படித்துப் பரவசமானோம். பாலியல் கொடுமை புரியும் காவி அணிந்தவர்களையும், புரியாத சமஸ்கிருத மொழியில் சடங்குகள் செய்வதைக் கண்டித்தும், தமிழ்த் திருமணமுறையின் அவசியம்பற்றியும், அவருக்கே உரிய நகைச்சுவை கலந்த நாடகப்பாங்கும், கற்பனைத்திறமும் கொண்டு, படிப்போருக்குத் தொடக்கம் முதல் நிறைவுவரை விறுவிறுப்பாக வியக்கத்தக்க நடையுடன், இன்றைய காலகட்டத்தில் தமிழ்ச் சமுதாயத்திற்குத் தேவையான கருத்துகளைக் கூறியுள்ள பாங்கு போற்றற்குரியது.
கி.ஆ. ஜோதிராமலிங்கம்
திருச்செங்கோடு
அய்யா,
மகரஜோதி தெரிவது இயற்கையா, செயற்கையா என்பது நீதிபதிகளின் கேள்வி. இயற்கை அல்லது செயற்கை என்று கண்டறிவதற்குப் பதிலாக கம்யூனிஸ்ட் முதல்வர் அச்சுதானந்தன் தன் நாட்டிற்கு வரும் வருமானத்தை (கோயில் மூலமாக) இழக்கத் தயாரில்லாதவராக மழுப்பலாகப் பதிலளிக்கிறார். இதே போன்றுதான் முல்லைப் பெரியாறு விஷயத்திலும் சுப்ரீம் கோர்ட் கட்டளைக்கும் கீழ்ப்படியாமல் தன் சுயரூபத்தைக் காட்டினார்.
மகரஜோதி என்பது மக்களை ஏமாற்றும் வேலையா அல்லது உண்மையா என்று மத்திய அரசாங்கம் நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
ஆ.இரா.சே. செபஸ்றியான்
கன்னியாகுமரி மாவட்டம்
அய்யோ அப்பா அய்யப்பா
சாமியே சரணம் அய்யப்பா
உன்னை நம்பி
வந்தவர்களைக் கைவிட்டது ஏனப்பா?
கடன் வாங்கி
வந்தவர்களைக் கருணையின்றி
உதறியது ஏனப்பா? அய்யப்பா
உன்னைத் தேடி
ஓடோடி வந்தவர்களை அய்யப்பா
ஓட ஓட விரட்டி
உயிரைப் பறிச்சிட்டாயே அய்யப்பா
இருமுடியிலே வாய்க்கரிசி
சுமந்து, வந்தாங்களே அய்யப்பா
அதன் உண்மையை உலகிற்கு
உணர்த்திட்டாயே அய்யப்பா
மகரஜோதி பார்க்கவந்தவர்களுக்கு
மரணஜோதி காட்டிட்டாயே அய்யப்பா
எங்க ஊரு சாமியெல்லாம்
வேலை வெட்டி இல்லாம இருக்குதுனு
உன்னைத்தேடி வந்தாங்களே அய்யப்பா
அதற்கு இதுதான் தண்டனையா?
அய்யப்பா நீ சொல்லப்பா
மண்டையிலே மண்ணு இருக்கிற வரைக்கும்
உண்மைகளை அறிவு உணர மறுக்கும்
அய்யோ அப்பா அய்யப்பா
உன் ஆட்டமெல்லாம் பொய்யப்பா
உண்மையை
இந்த உலகிற்கு எவ்வளவுதான்
எடுத்துச் சொன்னாலும் எங்களை எதிரியாய்த் தான் பார்க்கிறது
இந்த பொய்கள் நிறைந்த
ஏமாளிகள் உலகமப்பா!!-புதுவை ஈழன்