இராமசாமியின் வீடோ
பஜனை செய்யும்
மடமாய்ப் போனது;
பாகவதர்கள்
வந்து செல்லும் தடமாய் ஆனது;
நாயக்கரும்
சின்னத்தாயம்மையாரும்
திருமாலுக்குக் கடன்பட
இராமசாமியோ
அதற்கு உடன்படவில்லை..
தினமொரு பூஜை
நடப்பதால் இராமனை
தினமொரு குளியல்
போடச் சொன்னார்
சின்னத்தாயம்மை..
இராமன்
குளியல் போட்ட நாட்களைவிடவும்
குளியல் போட்டத்தைப் போல
நாடகம் போட்ட
நாட்களே அதிகம்..
பாகவதர்கள் சொன்ன
புராணக் கதைகளையும்
சொற்பொழிவுகளையும்
கேட்டபடியே வளர்ந்தார்;
அதில் குடிகொண்டுள்ள
அபத்தங்களையும் உணர்ந்தார்;
பாகவதர்களை
கேள்வி கேட்டார்;
கேள்விக்கான பதிலை
எந்த பாகவதரும்
சொல்ல மாட்டார்;
இராமன் ஒரு கேள்வி கேட்டால்
பாகவதர்கள்
பல பதிலைச் சொல்லுவர்;
மீண்டும் இராமன்
விளக்கம் கேட்டால்
வெறும் வாயை
மெல்லுவர்;
புராணம்
இதிகாசங்களை
முழுதாய் கற்றவர்களுக்கே
கேட்ட கேள்விக்கு
பதில் தரமுடியவில்லை
என இராமன் உணர்ந்தார்;
இன்னும் பல
கேள்விகளைக் கொணர்ந்தார்;
இராமனின்
கேள்விகளில்
சந்தேகம் இழையோடும்;
நகைச்சுவை
விளையாடும்;
யானைத் தலை
மனித உருவம் சாத்தியமா?
மனித உடலும்
குரங்கு வாலும்
சாத்தியமா?
கடல் என்ன
சாக்கடையா?
தாண்டிச்செல்ல..
அக்னி தேவன் என
தன்னை வணங்கும்
ஏழையின் குடிசையை
அத்தேவனே எரிக்கலாமா?
இப்படியான கேள்விகளை
இராமன் கேட்பார்;
பதில் சொல்லமுடியாமல்
பாகவதர் தோற்பார்;
இராமனின் பேச்சும்
சிந்தனையும்
அனைவரையும்
வியக்கச் செய்தது;
அவரது நகைச்சுவை
அனைவரையும்
மயக்கச் செய்தது;
இத்தகு இராமனை
சின்னத்தாயம்மைக்கு
பிடிக்கவில்லை..
இராமனின்
புத்திசாலித்தனம்
நாயக்கருக்குப் பிடித்தது..
இராமசாமிக்கோ
கல்வியில் நாட்டமில்லை..
கிருஷ்ணசாமிக்கோ
வியாபாரத்தில் நாட்டமில்லை..
கிருஷ்ணசாமிக்கு
ஆன்மீகத்தில் விருப்பு;
இராமசாமிக்கு
அதன் மேல் வெறுப்பு;
இருவரும்
இருவிதமாக வளர்ந்தனர்;
இருப்பினும்
பெற்றோர் முகம்
மலர்ந்தனர்;
(ஈரோட்டுச் சூரியன் உதிக்கும்)
மதுமதி
ஓவியம் : மணிவர்மா