இந்து-ஜாதி-தீண்டாமை – அண்ணல் அம்பேத்கர்

டிசம்பர் 16-31

சமூக, பொருளாதார வாழ்க்கை முறைகளில் இன்னும் எத்தனை நாட்களுக்கு நாம் இன்னும் சமத்துவத்தை மறுக்கப் போகிறோம்? நாம் நீண்ட நாட்களுக்கு இதை மறுத்தால், அரசியல் ஜனநாயகத்தை ஆபத்தில் தள்ளுவதில்தான் அது முடியும்.

நாம் இந்த முரண்பாடுகளை மிக விரைவில் அகற்றியாக வேண்டும். இல்லையெனில், சமமற்றத் தன்மையால் பாதிக்கப்படும் மக்கள், நாம் மிகவும் சிரமப்பட்டு உருவாக்கிய அரசியல் ஜனநாயகத்தின் கட்டமைப்பையே தகர்த்தெறிந்து விடுவர். இரண்டாவது முக்கியத் தேவை, சகோதரத்துவக் கொள்கைக்கான அங்கீகாரம். சகோதரத்துவம் என்றால் என்ன? அனைத்து இந்தியர்களையும் சகோதரர்களாகக் கருதும் ஒரு உணர்வு – அனைவரும் ஒரு தாய் மக்கள் என்பது. இத்தகைய கொள்கையே சமூக வாழ்க்கை முறையில் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் அளிக்கும். இதை அடைவது கடினம்…

 

…அரசியல் எண்ணமுள்ள இந்தியர்கள், முன்பு இந்திய மக்கள்’ என்று சொல்வதை எதிர்த்தது எனக்கு நினைவிருக்கிறது. இந்திய தேசம்’ என்று சொல்வதையே அவர்கள் விரும்பினர். நாம் ஒரு தேசம் என்று நம்புவதே ஒரு மிகப் பெரிய மாயை என்றே நான் கருதுகிறேன். ஆயிரக்கணக்கான சாதிகளாகப் பிளவுண்டிருக்கும் மக்கள், எப்படி ஒரு தேசமாக முடியும்? சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக நாம் இன்னும் ஒரு தேசமாக ஆகவில்லை என்பதை எவ்வளவு விரைவில் உணர்கிறோமோ, அந்தளவுக்கு நல்லது. அப்போதுதான், நாம் ஒரு தேசமாக வேண்டிய அவசியத்தை உணர்ந்து, அதை அடைவதற்கான வழிமுறையைப் பற்றி கவனமாக சிந்திப்போம்.

ஆனால், இத்தகைய உணர்வு நிலைக்கு வருவது மிகவும் கடினம். அமெரிக்காவில் வந்தது போன்ற நிலைக்கு வருவது கடினம். மேலும், அமெரிக்காவில் சாதிப் பிரச்சனை இல்லை. இந்தியாவில் சாதிகள் இருக்கின்றன. இந்த சாதிகள் தேசத்திற்கு எதிரானவை. முதலில் சாதி, சமூக வாழ்க்கை முறையில் பிளவை ஏற்படுத்துகிறது. சாதி தேசத்திற்கு எதிரானது மட்டுமல்ல; சாதிகளுக்கிடையேயும் அது பொறாமையையும் எதிர்வினையையும் உருவாக்குகிறது. நாம் உண்மையில் ஒரு தேசமாக விரும்பினால், இத்தகைய இடர்ப் பாடுகளை எல்லாம் கடக்க வேண்டும். ஒரு தேசம் உருவாகும் போதுதான் சகோதரத்துவம் உண்மையாகும். சகோதரத்துவம் இல்லாமல், சமத்துவமும் சுதந்திரமும் வண்ணப் பூச்சு போல ஆழமற்றதாகவே இருக்கும்.    _ 25.11.1949 அன்று, மக்களவையில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி.

இந்த நாட்டில் நிலவும் இத்தகைய சூழல், புத்துணர்வற்ற நிலையை இனி ஆயிரம் ஆண்டு காலத்திற்கு அளித்துவிடும். இந்தச் சூழல் நிலவும் வரை, நம்முடைய முன்னேற்றத்திற்-கானப் புத்துணர்வு ஒருபோதும் கிடைக்காது. இந்த மதத்திலிருந்து கொண்டு நாம் இதை எதிர்கொள்ளவே முடியாது. மநுஸ்மிருதியில் சதுர் வர்ணம் இருக்கிறது. சதுர்வர்ண அமைப்பு முறை மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு மாபெரும் ஊறு விளைவிக்கக் கூடியது. சூத்திரர்கள் அனைத்து வகையான இழிவான பணிகளைத்தான் செய்ய வேண்டும் என்று மநுஸ்மிருதி கூறுகிறது. அவர்களுக்கு ஏன் கல்வி அளிக்கப்பட வேண்டும்? பார்ப்பனர்கள்தான் கல்வி கற்க வேண்டும். சத்ரியன் ஆயுதங்களை எடுக்க வேண்டும். வைசியர்கள் வணிகம் செய்ய வேண்டும். ஆனால், சூத்திரர்கள் தொண்டூ-ழியம் செய்ய வேண்டும். இந்த அமைப்பு முறையை யார் அழித்தொழிப்பது? இந்த அமைப்பு முறையில், பார்ப்பனன், சத்ரியன், வைசியன் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகை பயன் இருக்கிறது. ஆனால், சூத்திரர்களுக்கு என்ன இருக்கிறது? இந்த மூன்று வர்ணத்தைத் தவிர, பிற சாதியினருக்குப் புத்துணர்வு எப்படி வரும்? சதுர்வர்ண முறை என்பது ஒரு வழக்கமல்ல. அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே முடியாது, அதுதான் மதம்.

இந்து மதத்தில் சமத்துவம் இல்லை. நான் ஒரு முறை காந்தியை சந்தித்தபோது, அவர் சொன்னார், நான் சதுர்வர்ணத்தை நம்புகிறேன்.’ நான் சொன்னேன்: உங்களைப் போன்ற மகாத்மா’க்கள்தான் சதுர்வர்ணத்தை நம்பு-கிறார்கள். ஆனால், இந்த சதுர்வர்ணம் என்பது என்ன? சதுர்வர்ணம் என்பது மேல் அல்லது கீழ் என்று உள்ளது. அது எங்கு தொடங்கி எங்கு முடிகிறது? இந்தக் கேள்விக்கு காந்தி பதில் சொல்லவில்லை. அவர் என்ன பதில் சொல்ல முடியும்? நம்மை அழித்தவர்களும் இந்த மதத்தால் அழிக்கப்படுவார்கள். நான் தேவையில்லாமல் இந்து மதத்தைக் குற்றம் சொல்லவில்லை. இந்து மதத்தால் யாருமே வாழ முடியாது; அந்த மதமே ஓர் அழிவு மதம்.

இந்து மதத்தில் படிநிலைப்படுத்தப்பட்ட சாதி முறையில், மேலிருக்கும் வர்ணத்தைச் சார்ந்தவர்கள்தான் பயன் பெற்றார்கள். மற்றவர்களுக்கு என்ன பயன்? ஒரு பார்ப்பனப் பெண் குழந்தை பெற்றால், அவருடைய மனம் ஓர் உயர் நீதிமன்ற நீதிபதி பதவி எப்பொழுது காலியாகும் என்பது பற்றி சிந்திக்கிறது. ஆனால், இதற்கு நேர் மாறாக நம்முடைய துப்புரவுத் தொழிலாளர் பெண்மணி குழந்தை பெறும்-போது, அரசாங்கத்தில் ஒரு துப்புரவுப் பணி எப்பொழுது காலியாகும் என்று நினைக்கிறார். இந்து மதத்தின் வர்ண அமைப்பு முறை தான் இத்தகைய விந்தையான சமூக அமைப்புக்கு காரணம். இதிலிருந்து என்ன வகையான மேம்பாட்டை நாம் காண முடியும்? பவுத்த மதத்தின் மூலமே நீங்கள் எதையும் சாதிக்க முடியும்.

_ (15.10.1956 அன்று மாபெரும் மதமாற்ற நிகழ்வையொட்டி ஆற்றிய உரை)

சாதி முறைக்குத் தீங்கு இல்லாமல் தீண்டாமையை ஒழிக்க விரும்புவோர், மநுஸ்மிருதி பத்தாம் அத்தியாயம் நான்காம் சுலோகத்தைத் தங்கள் கருத்துக்கு ஆதாரமாகக் கொள்கிறார்கள். இந்த சுலோகத்தில் மநு, நான்கு வர்ணங்கள்தான் உண்டு என்றும், அய்ந்தாவது வர்ணம் இல்லை என்றும் கூறுகிறார். இந்த சுலோகத்தின்படி, தீண்டத்த-காதவர்கள் நான்காம் வர்ணத்தில் சேர்க்கப்-பட்டுள்ளனர் என்றும், அவர்கள் சூத்திரர்களில் ஒரு பகுதியினர் என்றும், சூத்திரர்களைத் தொடுவதற்குத் தடை இல்லாததால்  தீண்டத்தகாதவர்களைத் தொடுவதற்கும் தடை இருக்க முடியாது என்று பொருள் கூறப்-படுகிறது. அரசியல் ஈடுபாடு உள்ள இந்துவுக்கு இவ்வாறு பொருள் கூறுவது மகிழ்ச்சியளிப்-பதாக இருந்தாலும், இது மநு கூற விரும்பும் கருத்துக்குப் பொருந்துவதாக இல்லை.

இந்த சுலோகத்துக்கு மற்றொரு விதமாகவும் பொருள் கூற முடியும். நான்கு வர்ணங்களுக்கு வெளியே உள்ள இந்த சமுதாயங்களை, அய்ந்தாம் வர்ணமாக ஏற்றுக் கொண்டு, சதுர்வர்ண முறையைப் பஞ்சவர்ண முறையாக விரிவுபடுத்த மநு தயாராக இல்லை என்பதும் இதன் பொருளாக இருக்க முடியும். அய்ந்தாம் வர்ணம் இல்லை என்று அவர் கூறுவதன் பொருள், இந்த சமுதாயம் நான்கு வர்ணங்களுக்கு பதில் அய்ந்து வர்ணங்களைக் கொண்டதாகச் செய்வதன் மூலம், நான்கு வர்ணங்களுக்கு வெளியில் உள்ள மக்களை இந்து சமூகத்தில் இணைத்துவிட விரும்ப-வில்லை என்பதேயாகும். அவர் கூற விரும்பிய கருத்து இதுதான் என்பது, பாஹ்யர்கள்’ அல்லது வர்ண பாஹ்யர்கள்’ என்ற ஒரு பிரிவைப் பற்றி அவர் பேசுவதிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிகிறது.

எல்லா மக்களையும் நான்கு வர்ணங்-களுக்குள் சேர்த்துக் கொள்ள மநு விரும்பி-யிருந்தால், சிலரை வர்ண பாஹ்யர்கள்’ என்று பேச காரணம் இல்லை. உண்மையில் வர்ண பாஹ்யர்களில் இரண்டு உட்பிரிவுகளை அவர் குறிப்பிடுகிறார். இந்த உட்பிரிவுகளை ஹீனர்கள்’ என்றும் அந்த்யோவாசின்கள்’ என்றும் அவர் அழைக்கிறார். இந்த உண்மை-களை வைத்துப் பார்க்கும்போது, மநுஸ்மிருதி சுலோகத்துக்குக் கூற முயலும் பொருள், தீவிர மதப் பற்றுள்ள இந்துவை ஏமாற்றிவிட முடியாது. தீண்டாமையைப் பின்பற்றுவது மநுஸ்மிருதிக்கு முரணானது என்றும், அதை ஒழிப்பது இந்து மதக் கோட்பாடுகளுக்கு முரணானது அல்ல என்றும் அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார்.

மநுஸ்மிருதிக்கு இவ்வாறு பொருள் கூறி எடுத்து வைக்கப்படும் வாதம், கல்வியறிவில்லாத சாதாரண இந்துவுக்குப் புரியாத அளவுக்கு அறிவு நுட்பம் வாய்ந்தது. அவருக்குத் தெரிந்தது, சமூக உறவுகளில் தாம் பின்பற்ற வேண்டிய மூன்று தடைகள் உள்ளன என்பதே. இந்தத் தடைகள் : 1. சேர்ந்து உண்ணக் கூடாது 2. கலப்புத் திருமணம் செய்யக் கூடாது 3. சில வகுப்பு மக்களைத் தொடக் கூடாது. முதல் இரண்டு தடைகளும் சாதிப் பிரிவினையாகும்; மூன்றாவது தடை தீண்டாமையாகும். சாதி இந்துவுக்குத் தடைகளின் எண்ணிக்கை பற்றிக் கவலையில்லை. தடைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதில் அவர் குறியாயிருக்கிறார். தடையைப் பின்பற்ற வேண்டாம் என்று அவரிடம் கூறினால், ஏன் வேண்டாம் என்று அவர் திருப்பிக் கேட்கிறார்.

அவருடைய வாதம் இதுதான் : முதல் இரண்டு தடைகளையும் நான் பின்பற்றலாம் என்றால், மூன்றாவது தடையைப் பின்பற்று-வதில் என்ன தவறு? உளவியல் ரீதியாக சாதியும் தீண்டாமையும் ஒரே கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த ஓர் ஒருங்கிணைந்த முறையாகும். சாதி இந்துக்கள் தீண்டாமையைப் பின்பற்றுகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் அவர்கள் சாதியில் நம்பிக்கை வைத்திருப்பதேயாகும்.

இந்தக் கருத்தை வைத்துப் பார்த்தால், சாதி முறையை அழிக்காமல் தீண்டாமையை ஒழிக்கலாம் என்று நம்புவது சற்றும் பயனற்றது. சாதியும் தீண்டாமையும் வெவ்வேறானவை என்ற கருத்து தவறானது. இரண்டும் ஒன்றி-லிருந்து மற்றொன்று பிரிக்க முடியாதவை. சாதி முறையின் நீட்சியே தீண்டாமை. இரண்டும் பிரிந்து நிற்க முடியாது. இரண்டும் சேர்ந்தே நிற்கின்றன, சேர்ந்தேதான் அவை வீழும்.

– (பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கம் 94)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *