ஜாதியை ஒழிப்பதற்குப் பல அடிப்படையான முறைகள் இருக்கின்றன. ஜாதிப் பட்டங்கள் (அய்யர், முதலியார் பிள்ளை, அய்யங்கார், செட்டியார், நாயுடு, நாய்க்கர், ரெட்டியார், நாடார் முதலியன) சட்ட-பூர்வமாகத் தடுக்கப்பட வேண்டும்.
புதிதாக மணம் புரிவோர் அத்தனை பேரும் கலப்பு மணம் செய்யுமாறு தூண்டக் கூடிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். ஒரே வகுப்பில், ஒரே ஜாதிப் பிரிவில், திருமணம் செய்பவர்களுக்குப் பல கஷ்டமான நிபந்தனைகளையும், கட்டுத் திட்டங்களையும் விதித்து, அத்தகைய திருமணம் புரிபவர் களுக்குச் சமுதாயத்தில் செல்வாக்கு இல்லாமல் செய்ய வேண்டும். ஜாதிகளைக் குறிக்கும், நெற்றிக் குறி, உடை, பூணூல் முதலிய சின்னங்களையும் சட்ட-பூர்வமாகத் தடுக்கவேண்டும். இவ்வாறு செய்தால்தான் ஜாதிகள் அடியோடு ஒழியும்.
இவை மட்டுமல்ல, ஜாதிக்கு அடிப்படையா யிருப்பது எது? ஹிந்து மதம்! அதை ஆதரித்து நிற்பவை எவை? வேதம், இதிகாசம், சாஸ்திரம், புராணம் முதலிய கட்டுக்கதைகள். இவற்றுக்கு அடிப்படையாக உள்ளவை என்ன? இந்துமதக் கடவுள்கள் என்று கூறப்படும் முழுக் கற்பனைகள். எனவே, இவ்வளவையும் ஆணி வேருடன் பிடுங்கி எறிந்தா லொழிய ஜாதியை எப்படி ஒழிக்க-முடியும்? இவ்வளவையும் காப்பாற்று வதற்காக உள்ள ஒரு சமுதாயமான பார்ப்பனர்களின் வைதீக மனப் பான்மையை மாற்றியாக வேண்டும். அல்லது அவர்களைத் தனியாகப் பிரித்து நீக்கி வைக்க வேண்டும்! ஏன்?
ஜாதிகள் ஒழியவதனால் பாதிக்கப்-படுபவர்கள் பார்ப்பனர் களேயாவர். ஜாதி உயர்வு, என்ற அடிப்படையினாலேயே அவர்கள் எல்லாத் துறைகளிலும் முன்னணிக்கு வந்திருக் கிறார்கள். இல்லாவிட்டால் கால்நடைகளை ஓட்டிக் கொண்டு, கால்நடையாக வந்த இந்தக் கால்நடைகள் இன்று இந்நாட்டுக் குடிமக்கள் எல்லோரையும் விட ஆயிரமடங்கு உயர்ந்த நிலைமையில் இருப்பதற்குக் காரணம் என்ன? அது மட்டுமா? இன்று பெரிய பெரிய புரட்சிக்காரன் முதல், மகாகனம் போன்ற பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக் கைக்கூலி வரையில், எல்லா இயக்கங்களிலும் பார்ப்பனர்கள் இருக்கிறார்களே ஒழிய ஜாதியை ஒழிப்பது என்பதைக் கொள்கை யாகக் கொண்டு இடைவிடாத தொண் டாற்றக் கூடிய ஒரு பார்ப்பனராவது இன்று இந்த நாட்டில் இருப்பதாக யாராவது எடுத்துக்கூற முடியுமா என்று அறை கூவிக் கேட்கிறோம். ஹிந்து மதம் ஒழிந்தால் தான் ஜாதி ஒழியும். ஹிந்து மதம் ஒழிந்தால் பார்ப்பனியமும் அதே நேரத்தில் அழிந்து போகும். இதை பஞ்சமா பாதகம் செய்யும் பார்ப்பான் கூட விரும்பமாட்டான்!
இங்கிலீஷ் அரசியல் அமைப்பு என்ற நூலை எழுதிய புரொபசர் டிசே என்பவர் புரட்சி மனப்பான்மையுடையவன் போப் ஆகவே மாட்டான்; போப் ஆகும் மனிதன் புரட்சி செய்ய விரும்பமாட்டான், கூறியிருக்கிறார். அதுபோலவே, பார்ப்பனனாகப் பிறந்தவன் ஜாதிப் புரட்சிக்காரனாக ஆகவே மாட்டான். ஏனெனில், போப்புக்கு உள்ள அதிகாரம், ஆதிக்கம், இவற்றைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகமாக இந்நாட்டுப் பார்ப்பனர்களுக்கு இருக்கின்றன! இவர்கள் இதர ஜாதிகளைத் தூண்டி விட்டு, பார்! கழுதையும், குதிரையும் ஒன்றாகுமா? அய்ந்து விரல்களும் சரியாகுமா? என்று கூறிப் பிரித்து வைத்துக் கொண்டேதான் இருப்பார்கள். ஒரு கடைசிப் பிராமணன் இந்நாட்டில் இருக்கும் வரையில் இங்கிலீஷ் காரரைப் பின்பற்றி இந்தப் பிரித்தாளும் பித்தலாட்ட வேலையைச் செய்து கொண்டுதான் இருப்பான்! ஜாதிப் பிரிவுகள் பகுத்தறிவுக்கு முரணானவை என்பதையும் பார்ப்பனர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில், பகுத்தறிவுக்கு ஹிந்து சாஸ்திரங்கள் 144 உத்தரவு பிறப்பித்துக்கின்றன.
எந்தப் பிராமணன் தர்க்க சாஸ்திர பலத்தைக் கொண்டு வேதத்தின் உண்மையைப் பற்றிச் சந்தேகிக்கின்றானோ, அப்பேர்ப்பட்ட வேத நிந்தகன் சாதுக்களால் நாஸ்திகன் என்று பகிஷ்கரிக்கப்படுகிறான். என்று மகாபாரதம் கூறுகிறது. எனவே, பார்ப்பான் மட்டுமல்ல எந்த இந்துவுமே பகுத்தறிவுக்கு இடந்தர மாட்டான். இடந் தர முடியாது. இடந்தந்தால் இந்துவாக இருக்க முடியாது!
யார் என்ன சொன்னாலும் ஆயிரக்-கணக்கான ஆண்டு களாயுள்ள ஹிந்து மதத்தை அசைக்க எவராலும் முடியாது. எத்தனையோ எதிர்ப்புகளையும், கஷ்டங்களையும் சமாளித்துக் கொண்டு உயிரோடிருக்கிறது நமது ஹிந்து மதம், என்று சர். ராதாகிருஷ்ணன் போன்ற மேதாவிகள் (?) கூறலாம். உயிரோடிருப்பதனால் மட்டும் ஒரு விஷயம் உயர்வான தாய் விடுமா? எவ்வளவோ எதிர்ப்புகளுக் கிடையே எலி, கொசு, ஈ, தேள், பாம்பு, மூட்டைப் பூச்சிகள் கூடத்தான் உயிரோடிருக்கின்றன. மனித சமுதாயமே எதிர்த்து வரும் குடி, விபசாரம் கூடத்தான் உயிரோடிருக்கின்றன? இவை-யெல்லாம் இந்து மதத்தை விடப் புனிதமானவை களா? அதிகப் பலன் தரக் கூடியவைகளா, என்று கேட்கிறோம்.
இறுதியாக ஒன்று கூறுவோம். ஜாதிகளை ஒழிக்க விரும்புவோர் மேடைப் பிரசங்கம் மட்டும் செய்தால் போதாது! கலப்பு மணத்தைத் தவிர வேறு சுயஜாதி மணம் செய்யவே கூடாது. புத்தரும் குருநானக்கும் கூறியதுபோல் வேதமும் சாஸ்திரங்களும் முழுப்பொய் என்று பச்சையாகக் கூறவேண்டும். இவற்றைச் செய்யக்-கூடிய ஆற்றலும், துணிவும், தியாக உணர்ச்சியும் படைத்த இளைஞர்களால் தான் ஜாதியை ஒழிக்க முடியும்? இந்த வேலையைச் செய்பவை தான் நமது திராவிடர் கழகமும், சுயமரியாதை இயக்கமும்.
– 10.1.1947இல் விடுதலையில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கத்திலிருந்து….