பாலன் பொறந்த
மண்ணில்
பழியொண்ணு
படிஞ்சிருச்சே!
அப்பு ஒழச்ச
மண்ணில்
அநியாயம்
நடந்திருச்சே!
சாதிவெறி பாம்பு வந்து
சடக்குன்னு
கொத்திருச்சே!
சிறுகுஞ்சப் பருந்து வந்து
திடுக்குன்னு
எத்திருச்சே!
கல்லூடு கட்டுறது
ஒங்க
கண்ணுக்குப்
பொறுக்கலியோ!
கல்லூரி செல்லுறது
ஒங்க
கருத்துக்கு
ஒறுக்கலியோ!
அகம் புறமா
வாழ்ந்த
இனம்
அடிபட்டுச்
சாகுதே
குறுந்தொகைய
படிச்ச மனம்
இடிபட்டு
வேகுதே!
எரிச்சவுக மூளையில
எருக்கு
முளச்சிருக்கோ!
இடிச்சவுக கைகளில
எலந்த
கௌச்சிருக்கோ!
எதுல ஒசத்தின்னு
எனக்கெடுத்துச்
சொல்வீரோ!
எதுத்தா பேசுறன்னு
என்னையுந்தா
கொல்வீரோ!
அடங்கமறு காலத்துல
அடக்கி விட
முடியாது!
அத்துமீற
துணிஞ்சுபுட்டா
அடிதடிக்கு
முடிவேது!
ஊரு திருந்தாம
உருப்படவே
முடியாது!
சாதி ஒழிக்காம
தமிழிருட்டு
விடியாது!
– அறிவுமதி
(நன்றி : குமுதம்)