மதமில்லாச் சமுதாயத்தை நோக்கிய பயணம்

பிப்ரவரி 16-28

ஒட்டுமொத்த உலகமே மதம் சார்ந்த சமூகப் பிடியிலிருந்து பகுத்தறிவுச் சமுதாயத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.  நாத்திகம் எனும் சொல்பதம் பல நூற்றாண்டுகளாக தவறாகக் கருதப்பட்டு வந்துள்ளது.  நாத்திகவாதிகளை ஏச்சுக்களுக்கு ஆளாக்கிடும் நடவடிக்கையில் மத நம்பிக்கையாளர்கள் பலவாறு முனைந்து வந்துள்ளனர்.

மத நம்பிக்கையாளர்களின் முழு முயற்சிகளையும் மீறி, நாத்திக சகாப்தம் தொய்வில்லாமல் தொடர்ந்து நடைபோட்டு வருகிறது.  நாத்திகத்தைப் பற்றிய தவறான கற்பிதம், தவறான புரிதல்கள் மறையத் தொடங்கியுள்ளன.  நாத்திகம் ஆழமாக வேர்விட்டு சமுதாயத்தில் மதம்சார்ந்த சமூக வாழ்வியலுக்கு ஒரு புது மாற்றுப் பண்பாட்டுச் சூழலை உருவாக்கி வருகிறது.  நாத்திகம் என்பதை முழுவதும் மனிதநேயம் சார்ந்த வாழ்வியலாக, தனி மனித உள்ளார்ந்த ஆற்றல்களை இயல்பாகப் பெறக்கூடிய சூழலை உருவாக்கி மனித ஆளுமை வளர்ச்சிக்கு உகந்தவாறாக்கும் பண்பாடாக மக்கள் கருதத் தொடங்கிவிட்டனர்.

கடவுள் கருத்தாக்கம் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டது.  இக் கருத்தாக்கம் ஆய்வுப் பரிசோதனைக்கு ஆட்படுத்தப்பட்டால் ஆட்டம் கண்டுவிடும்.  தாக்குப் பிடிக்க முடியாது.  கடவுள் என்பது ஒரு பொய் நம்பிக்கை; கடவுள் இருக்கிறார் – எனும் பொய்யான அடித்தளத்தின் கட்டுமானத்தில் மதம் நிற்கிறது.  மதக் கற்பிதத்தில் நிலவும் நிறைய முரண்பாடுகளாலேயே மதக்கட்டமைப்பு சிதைந்துவிடும்.  பயம், வன்முறை, கொடுங்கோன்மை ஆகிய வழி முறைகளைக் கையாண்டு, மதவாத சக்திகள் தங்களிடம் உள்ள முரண்பாடுகளை, மடமைத்தனத்தை மக்கள் சிந்தித்துப் பார்க்காதவாறு அச்சுறுத்தியே வந்துள்ளன.  மக்களைச் சுதந்திரமாகச் சிந்திக்கவிடவில்லை.  இப்படிப்பட்ட தந்திர இடர்பாடுகளுக் கிடையேயும் உண்மையைக் கண்டறியும் பணி தொடர்ந்தது.  நாத்திகத்தின் சவால்களைச் சந்திக்க மதம் திராணியற்று நிற்கிறது. இதனால் சிற்சில காலங்களில் மதத்திற்குள்ளேயே புரட்சி ஏற்பட்டுள்ளது.  காலந்தோறும், கடவுள் கோட்பாடுகளுக்கான விளக்கம் அளிக்கப்பட்டு வந்துள்ளது.  நாத்திகம் ஏற்படுத்திய சவால்களால்தான் மதம் தங்களது கருத்துகளுக்கு ஒரு விளக்கத்தினை வழங்கிட முன்வந்தது; மனித நேயமற்ற சில பழக்க வழக்கங்களையும் மதமானது புறந்தள்ளி வைத்தது.

குறுகிய எல்லைகளைக் கொண்ட காலாவதியான மதச் சம்பிரதாயங்கள், பழக்கமுறையினைக் கடந்து அறிவியல் முன்னேற்றமும், அறிவியல் மனப்போக்கும், சமூக மாற்றத்திற்கான தளராத முயற்சிகளும் சேர்ந்து ஒரு புதிய சூழலை உருவாக்கி உள்ளன.  நேர்கொள்ள புதிய சவால்களையும், பயன்படுத்தக்கூடிய புதிய வாய்ப்புகளையும் வழங்கி மனிதர்களை பிறர் சார்பற்ற முறையில் தாராள சிந்தனை வயப்பட வைத்துள்ளன.  அறிவியல் முன்னேற்றமும், தொழில்நுட்ப வளர்ச்சியும் புதிய வாய்ப்புகளையும், பண்பீடுகளையும்  (Values)  குறுகிய மத எல்லைகளைத் தாண்டி வளர்த்துள்ளன. மதத்திலிருந்து அறிவியலுக்கான மாற்றுநிலை என்பது இயல்பானது அல்ல; இலகுவானதும் அல்ல. அறிவியல் சகாப்தம் என்பது அறிவியலாளர்கள் பலரின் உழைப்பு, தியாகங்கள் நிறைந்த அறிவியல் விசாரணைகளை உள்ளடக்கியது.  மதவாதக் குருட்டு நம்பிக்கை, கொடுங்கோன்மை மற்றும்  கொடுமைப்படுத்துதலுக்கு உண்மையைத் தேடிய அறிவியல் அறிஞர்கள், சமூகப் புரட்சியாளர்கள் பலர் தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர்.

கணக்கிலடங்காத நாத்திக நாயகர்கள் பலரின் தியாகங்கள் வீணாகிவிடவில்லை.  ஆரம்பக்கட்ட மனித வாழ்நிலையிலிருந்து எதிர்மறை நாத்திகத்தினை மலர்வித்து மதத்தின் தாக்குதல்களைத் தாங்கும் நிலைக்குச் சமுதாயத்தை அமைத்துச் சென்றனர்.  நாத்திகம் அடிப்படையில் நேரிடைக் கருத்துவளம் சார்ந்த ஆக்கப்பூர்வத்தன்மை வாய்ந்தது.  அழிவுத்தன்மை அறவே அற்றது.  ஆனால், மதகுருமார்களும், கட்டமைப்புடன் உள்ள மத வெறியாளர்களும், தங்களது கட்டுக்கடங்காத அதிகார பலம் மற்றும் பிரச்சார வழிமுறைகள் மூலம் நாத்திகம் என்பது எதிர்மறையானது என வலிந்து கூறி களங்கம் கற்பித்தே வந்தனர்.  மதத்தின் தீவிர அடக்குமுறையினை நேர்கொள்ள, நாத்திகம் எதிர்மறைச் சத்தி எனும் அடையாளத்துடன் வெளிக் கிளம்பியது.  இந்த எதிர்மறை நாத்திகமே, நிலைத்துவிட்ட நம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்கி, உண்மையைத் தேடி, அறிவியல் வளர்ச்சிக்கும், நேரிடைச் சமூக மாற்றத்திற்கும் வழி அமைத்தது. பழைமையான சம்பிரதாயங்களையும், நம்பிக்கைகளையும் இடைவிடாத கேள்விக்குள்ளாக்கி, பழம் சடங்குகளையும் ஆச்சாரங்களையும் சவாலுக்கு உள்ளாக்கியது.

அறிவியல் வளர்ச்சிக்கு ஆதாரம் சேர்த்தது.  சமூக மாற்றத்திற்கான வேகத்தையும் அதிகப்படுத்தியது.  அறிவியல் உண்மையைத் தேடியது.  நேரிடைச் சமூக மாற்றம் மனித உறவுகளில் சமத்துவத்தைப் போற்றியது.  உண்மையும், சமத்துவமும் மனித முன்னேற்றத்திற்கான கண்கள், கரங்கள் போன்றவை. சமுதாயத்தில் உண்மையையும் சமத்துவத்தையும் வலியுறுத்தும் எந்தவொரு முயற்சியும், மதத்திற்கு எதிரானது என முத்திரை குத்தப்பட்டது.  நாத்திகம் எனவும் அடையாளம் காட்டப்பட்டது.

புத்தர், சாக்ரடீஸ், மகாவீரர், இயேசுகிறிஸ்து, முகம்மதுநபி, மார்ட்டின் லூதர், ராஜாராம் மோகன் ராய், மகாத்மா காந்தி ஆகிய பெருமக்கள் அவர்தம் வாழ்ந்த காலங்களில் மத எதிர்ப்பாளர்களாகவே கருதப்பட்டனர்.  அவர்களில் சிலர், அந்தத் தலைமுறையைச் சார்ந்தோர்களால் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர்.  அதைப்போன்றே புருனோ, கலிலியோ, வெசாலியாஸ், டார்வின், மார்க்ஸ், ப்ரூட், பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் ஆகிய அறிஞர்கள் கடுமையான மதப் புயலை நேர்கொண்டு உண்மையைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.  உண்மையின் பின்னால் உறுதியுடன் செல்வதை மதம் ஒரு போதும் விரும்பியது இல்லை.  இப்பெருமக்களில் சிலர் அவர்தம் காலங்களில் கொடுமைகளுக்கு ஆளானபோதும், பின்வந்த தலைமுறையினரால் தீர்க்கதரிசி எனப் போற்றப்பட்டனர்.  பின் வரக்கூடிய மாற்றங்களை முன் உரைத்த ஆன்றோர் எனப் புகழப்பட்டனர்.

இவ்வாறு ஒருகால தலைமுறையினரால் முரண் சமயக் கருத்துள்ளவர் என எதிர்க்கப்பட்டவர்கள் வரும் தலைமையினரால் மதிப்புடன் போற்றப்படும் நிலைகள் உருவாகின.

முரண் சமயக் கருத்து (heresy),  எதிர்மறை நாத்திகத்தை ஒத்தது.  முரண்சமயக் கருத்துள்ளோர் அந்தத் தலைமுறை சார்ந்தோரின் நம்பிக்கைகளை எதிர்த்துச் சவால் விடுத்து, காலத்திற்கும், கண்டுபிடிப்புகளுக்கும் ஏற்றவாறு மக்கள் மாறவேண்டும் என வலியுறுத்தியதால் சமுதாயத்தில் புரட்சி உருவாகும் நிலைகள் ஏற்பட்டன.  சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வினைக் காண பழைமையான அணுகுமுறையினை விடுத்து மக்கள் முன்பு புதிய தெரிவுகளை முன்னிறுத்தினர்.  மதவழிப்பட்ட சமுதாயத்தில் பல்வேறு தெரிவுகளுக்கான வாய்ப்புகள் குறைவே.  மதம் முன் நிறுத்தும் தெரிவுகளையே மக்கள் ஒத்துக் கொண்டு அடிபணிந்து நடந்திட வேண்டும் நிலவும் நடைமுறையே நீடிக்க வேண்டும் எனும் பழைமைவாத அணுகுமுறையினையே மதம் விரும்புகிறது. கேள்விக்கு உள்ளாக்கும் நிலையினை – மாற்றுவழிச் சிந்தனையை மதம் அனுமதிப்பதே இல்லை.

இவை அனைத்திற்கும் மாறாக நாத்திகம் மக்கள் கேள்வி கேட்பதை ஊக்குவிக்கிறது.  பழைமைக்கு மாறுபட்டு சிந்திக்கத் தூண்டுகிறது.  தனிமனிதருக்குச் சிந்தனைச் சுதந்திரம் அளிக்கிறது.  மனித இன்னல்களுக்கு மருந்தாக மாற்று வழிமுறைகளைத் தேடுவதற்கு நாத்திகம் உதவுகிறது.  நாத்திகம் மாற்றத்தை விரும்பித் தேர்வு செய்கிறது.  நிலவும் நடைமுறையினை நீடிக்கவிடுவதில்லை.  இத்தகைய அடிப்படை உண்மைகளால்_ மாறுபாடுகளால்தான் நாத்திகத்தின் வரலாறு என்பது மனித நாகரிகத்தின் சகாப்தமாகக் கருதப்படுகிறது.

இருந்தபோதிலும், பெரும்பாலான மக்கள் நாத்திகம் என்றாலே அச்சப்படுகின்றனர்.  சமுதாயத்தில் குழப்பம் நிலவுகிறது.  பழைய பண்பீடுகளும், நம்பிக்கைகளும் நொறுங்கத் தொடங்கியுள்ளன.  ஆனால், புதியன முழுமையாக உருவாகவில்லை.  மக்கள் மதத்தில் நம்பிக்கை இழந்து வருகின்றனர்; அதேநேரம் நாத்திகத்தில் முழு நம்பிக்கை வைத்துவிடவில்லை.  நாம் ஒரு மாறிவரும் காலகட்டத்தில் வாழ்கிறோம்.  மத வழக்கமான – மதரீதியான சமூகத்தில் நம்பிக்கையிழந்த பெரும்பாலானோர் இன்னும் தெளிவான நோக்கப் பார்வையினை வளர்த்துக் கொள்ளவில்லை.  மதம் நீங்கிய சமூகத்தைப் பற்றிய புரிதல் கொள்ள வில்லை.  தற்போது சமூகத்தின் நிலைமையினை மத எதிர்வினை என்பதாக மட்டுமே கொள்ளமுடியும்.

மதச் சமூகத்தில் பய உணர்ச்சியே பண்பீடுகளாக உருவாக்கப்பட்டது.  ஆனால், உண்மையில் பயம் என்பது வெறும் மனித உணர்வே.  கடவுளைப் பற்றிய பய உணர்வாகவே சமூகம் படைக்கப்பட்டது.  இத்துடன் பாவத்தைப்பற்றிய பயம், மதகுருமார்களைப்பற்றிய பயம், நரகத்தைப்பற்றிய பயம் எனச் சேர்ந்து கொண்டது.  கடவுள் கோட்பாடு என்பது பயத்தின் அடிப்படையில் உருவான எதிர்  இயல்பாக்கமே.  மதமானது அறிவு வளர்ச்சியைத் தடைப்படுத்தி, மனநிறைவின்மை, அமைதியின்மையினை அதிகப்படுத்தியதால் மத எதிர்ப்பு என்பது ஒவ்வொருவன் உள்ளத்திலேயே உருவானது.  அறியாமை மற்றும் பய உணர்வின் அடிப்படையில் கடவுள் கோட்பாடு கட்டப்பட்டுள்ளதால் மதம் சார்ந்த சமுதாயத்தால் அறிவு வளர்ச்சியை நீண்ட காலத்திற்குத் தாங்கிக் கொள்ள முடியாது.

நாத்திகம் பய உணர்வினை நிலையாக எதிர்த்து வந்துள்ளது.  பயமற்ற தன்மையினை – அறிவு வளர்ச்சியினை, கட்டுப்பாடுகள் நீங்கிய சூழலில் நாத்திகம் பிரச்சாரம் செய்து வருகிறது.  பயமற்ற தன்மையும், அறிவும் தனிமனிதரிடமிருந்து வெளித்தோன்றுகின்றன.  எனவே, நாத்திகம் சுயமரியாதையின் – தன்னம்பிக்கையின் பங்காளியாக விளங்குகிறது.  சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கை மிக்க தனி நபர்களால் சமுதாயம் கட்டுப்படும் பொழுது அறியாமைக்கும், பய உணர்வுக்கும் அங்கு இடமே இல்லாமல் போய்விடுகிறது.  எனவேதான், அறிவியல் வளர்ச்சியின் மூலமும், சமூக மாற்றத்தின் மூலமும் மனிதர்கள் தங்களது ஆளுமையை – நிகரற்ற தன்மையினை வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.

நாத்திகம் என்பது ஆய்வின் அடிப்படையில் அமைந்தது; அறிவியல் மெய்மையினை முன்னிறுத்தும் தன்மை வாய்ந்தது.  திட்டமான சமூகப் பார்வையுடன், பரிமாற்ற நம்பிக்கையினை மெய்யான அணுகுமுறை மூலம் தனிமனிதர்களிடம் உருவாக்கி மதமற்ற சமுதாயத்தை நாத்திகம் கட்டமைத்து வருகிறது.  கடவுள் என்பது பொய்மை; மெய்மை இல்லாதது.  ஆய்வுக்கு உள்ளாகும் உண்மை நிலை அற்றது.

எனவே, கடவுள் அடிப்படையில் உருவான மதம், உண்மையினை வளர்க்க முடியாது.  கடவுள் என்பதே உண்மையானதல்ல.  பய உணர்வு பரஸ்பர நம்பிக்கையின்மையினையும், வன்முறையினையும் வார்த்து எடுப்பதால் பய உணர்வால் சமுதாயம் மேம்பாடு அடைய முடியாது.  உண்மையில் சமூக மேம்பார்வையினை – தனிமனித ஆளுமையினை ஏற்றம் கொள்ளச் செய்ய இயலாத மத அமைப்பால் சமத்துவத்தை உருவாக்கிவிட முடியாது.

இத்தகைய காரணங்களால் – தன்மையினால் ஒவ்வொரு தலைமுறை மக்களும் மதக் கட்டமைப்பில் மன நிறைவினை எட்ட முடியாமல், மதக் கட்டமைப்பினை மாற்றும் செயலில் முனைந்து வந்துள்ளனர்.

மதக் கட்டமைப்பின் மீதான எதிர்ப்பு, இறுதியாக அரசியல் எழுச்சியில்தான் முடியும்.  தற்கால அரசியல் அமைப்புகள் மதக் கட்டமைப்பிற்கு இணையாக ஏனைய அமைப்புகளை உருவாக்கி உள்ளன.  இதைப்போலவே புனித உருவாக்கக் கோட்பாட்டிற்கு இணையாக பொருள்முதல்வாதமும் வடிவம் பெற்று வருகிறது.

நாடு மற்றும் அரசுகளின் உருவாக்கம் என்பதே மதத்திற்கும் அரசியலுக்கும் இடையே தோன்றிய பிணக்குகளால்தான் என்பது கண்கூடு.  வளர்ந்துவரும் அறிவியல் மனப்பான்மையும் இந்தப் பிணக்கு நிலையினைப் பொருள்வாத நோக்கில் புரிந்தும், விளக்கம் அளித்தும் வருகிறது.  அறிவியல் பார்வை எழுச்சியால் மதம் சார்ந்த சமுதாய அமைப்பிலிருந்து மத எதிர்வினைச் சமுதாய மாற்றத்திற்கு மெதுவாக வழி அமைந்து வருகிறது.

மதத்திலிருந்து அரசியலுக்கு முன் எடுத்துச் செல்லும் பயணமும், கடவுளிலிருந்து பொருள் கருத்தாக்கமும் நமது சிந்தனைப் போக்கினைப் பொருண்மைமிக்கதாய் புரட்சிகரமாய் மாற்றிவருகிறது.  அளப்பரிய மாற்றத்தினை – இந்த நிலைப்பாட்டினைப் புரிந்து கொள்ளும் போக்கினை ஏற்படுத்திவிட்டது.  எதிர்மறை நாத்திகம் வெற்றி கொண்ட மாபெரும் புரட்சிகரச் செயலாகும் இது. மத எதிர்வினைச் சமூக அமைப்பிலிருந்து மதமற்ற சமூக அமைப்பிற்கு மானிடம் முன்னேறிச் செல்லும்.  இந்த முன் எடுத்துச் செல்லும் பயணத்தால் நாத்திகம் மதத்திற்கு இணையான கோட்பாடாக இல்லாமல் ஒரு மாற்றுக் கோட்பாடாக மாறிவிடும் சூழல் ஏற்பட்டுவிடும்.

உலகம் ஒருவித நீர்மத்தன்மையில் நிலவுகிறது; நீடிக்கிறது.  கடந்த காலங்களில் மதமே கோலோட்சியது.  ஆத்திகத்திலிருந்து நாத்திகத்திற்கான படிப்படியான மாற்றங்கள் ஏற்பட்டன.  ஆத்திகர்களிடையே கடவுள் மற்றும் மதம் காட்டும் எழுச்சியான ஆர்வம் அருகி வருகிறது.  இதனால் ஆத்திகர்கள், நாத்திகப் பரிவாளர்களாக மாறும் நிலை உருவாகும்.  இதுவரை ஆத்திகப் பரிவாளர்களாக இருந்தோர் கடவுள் கருத்து, மதச் சடங்குகளை வெறுக்கும் நிலைக்கு மாறுவர்.  ஆத்திகர்கள் வெறும் கடவுள் நம்பிக்கையாளராக – மதப் பழக்கங்களைக் கடைப்பிடிக்காதவராக மாறும் நிலை வரும். இந்த நிலையினால் ஆத்திகப் பரிவாளர்கள், நாத்திகப் பரிவாளர்களாக மாறும் நிலை உருவாகும்.  நேற்றைய நாத்திகப் பரிவாளர்கள் சரியான புரிதலை மேற்கொண்டு இன்றைய நாத்திகர்களாக மாறும் நிலை உருவாகும்.  நாத்திகம் நேரிடை வாழ்வியலாக மாறும் சூழலை அந்த நாத்திகர் ஏற்படுத்துவர்.  நாத்திகம் என்பது மதமில்லாச் சமுதாயத்தின் மெய்யியலாக – வாழ்வியல் நெறியாக மாறும்.  இப்படி அனைத்து உலகமே நாத்திகத்தை நோக்கி நகரும் நிலை வரும்.  அந்த நாள் விரைவில் வருவதற்கு நாத்திகர்களான நாமெல்லோரும் பாடுபட வேண்டும்;  பங்களிப்பினை நல்கிட வேண்டும்.

கோ. லவணம், நாத்திகர் மய்யம், விஜயவாடா

மொழியாக்கம்: கழுவாயி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *