இரண்டுவகையான அணுகுமுறைகள்
பார்ப்பனர்களைப் பொறுத்தவரை இரட்டைச் சிந்தனை, இரட்டை நாக்கு என்பது இயல்பாகவே அமைந்துவிட்ட ஒன்று.
ஆ. இராசா பற்றிய பிரச்சினை என்றால் ஆகாயம்வரை குதித்து ஆகா ஊழல் ஊழல்! என்று ஊளையிடுவார்கள்.
அதே எடியூரப்பா (பா.ஜ.க.) பிரச்சினை என்றால் அவாளின் பேனா பின்னோக்கி நகர ஆரம்பிக்கும்
தினமணி, தினமலர், துக்ளக் ஏடுகளைப் புரட்டினால் சில வினாடிகளிலேயே குட்டு உடைபட்டுவிடும்.
கருநாடக மாநிலத்தில் முதல் அமைச்சர் எடியூரப்பா நில ஒதுக்கீட்டுப் பிரச்சினையை எப்படி சாமர்த்தியமாக துக்ளக் எழுதியிருக்கின்றார். (9.2.2011).
அம்மாநில ஆளுநர் பரத்வாஜ் எப்படியாவது எடியூரப்பா ஆட்சியைக் கீழே தள்ளிவிட வேண்டும் என்று குறியில் இருக்கிறாராம்; பரத்வாஜின் அதீத நடவடிக்கைகள் குறித்து சோனியா காந்தி வாயே திறக்கவில்லையாம்.
பொதுவாக முதல்வர்கள் நிலங்கள் , வீடுகளை ஒதுக்குவதற்குச் சட்டரீதியான முன்னுரிமை வழங்கிட சட்டமிருக்கிறது. தனக்கு முன் முதல்வராக இருந்த குமாரசாமி, கிருஷ்ணா போன்ற முதல்வர்களும் தங்களது முன்னுரிமைகளை இவ்விதம் பயன்படுத்தியுள்ளனர் என்று எடியூரப்பா சுட்டிக் காட்டி உள்ளார்.
இவ்வளவையும் எழுதிவிட்டு, இதற்குமேல் எடியூரப்பாவைக் காப்பாற்ற முடியாது என்ற நெருக்கடியில் நட்புக்காக, விதிகளின்படிதான் நிலங்கள் குறைந்த விலைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பது தார்மீக ரீதியாக சரியான வாதமாகாது என்று எடியூரப்பாவின் முதுகைச் செல்லமாகத் தட்டுகிறது.
இதே துக்ளக், தினமணி தினமலர்கள்சட்டப்படி நடந்துகொண்ட இராசாமீது எந்த அளவு சேறுவாறி இறைக்கின்றன என்பதால் நோக்கம் எண்ணிப்பாருங்கள்.
Astronomy Vs Astrology
எந்த மூடநம்பிக்கையையும் முட்டுக் கொடுத்து நிமிர்த்தியே தீரவேண்டிய கட்டாயத்தில் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு கடைந்தெடுத்த எடுத்துக்காட்டாம்.
சோ பெரிய விவாதப்புலி என்று பார்ப்பனர்கள் தூக்கி நிறுத்துகிறார்களே, அவாளின் விவாதங்கள் எந்தத் தரத்தில் இருக்கின்றன என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டுதான்.
ஜோதிடத்தை நம்புவது ஒரு மூடநம்பிக்கை. ஆனால், மருத்துவத்தை நம்புவது அறிவியலின் மீதான நம்பிக்கை. இந்த இரு நம்பிக்கைகளுக்கும் இடையே அடிப்படையான வேறுபாடு உண்டு. ஏன் திறமையான மருத்துவர்களுக்கிடையே திறமைகள் வேறுபடுகின்றன. அனுபவமும் கூடுதல் தகுதியாகும். அறிவியல் ரீதியில் மருத்துவம் என்பது மூடத்தனம் என்று சொல்லும் துணிவு சோ ராமசாமிகளுக்கு உண்டா? ஜோதிடமே அடிப்படையில் மூடத்தனமாகும். இரண்டையும் எப்படி ஒப்பிட முடியும்?
நம்பிக்கையே கூடாது என்று எந்தப் பகுத்தறிவாளர்களும் சொல்லவில்லை. மூடநம்பிக்கை என்பது வேறு, தன்னம்பிக்கை என்பது வேறு, இரண்டும் ஒன்றல்ல – ஜோதிடத்தில் மூலக் கோளான பூமிக்கு இடம் இல்லை, மாறாக, துணைக் கோளான சந்திரனுக்கு ஜோதிடத்தில் முதலில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவம் என்ற அறிவியல், ஜோதிடம் என்ற மூடவியல் _ இரண்டையும் ஒரே கண்கொண்டு பார்ப்பவர்கள் அசல் குருடர் களாகத்தானே இருக்க முடியும்.
Astrology என்பது ஜோதிடம். Astronomy என்பது விண்ணியல் விஞ்ஞானம். இரண்டும் ஒன்றல்ல; இந்த அரிச்சுவடிப் பாடத்தைக் கூடத் தெரியாத இந்த சோ தான் அவாள் வட்டாரத்தில் அறிவு ஜீவி. பார்ப்பனர்கள் படிப்பாளிகளே தவிர அறிவாளிகள் அல்லர் என்று கூறிய அண்ணல் அம்பேத்கர் அவர்களை இந்த நேரத்தில் நினைவுகூர்வது பொருத்தமானதாகும்.
நவக்கிரகங்களின் இராசிகளை முன்வைத்து ஜோதிடம் சொல்கிறார்கள். இதில் சூரியன் என்பதை நவக்கிரகத்தின் பட்டியலில் வைத்துள்ளார்கள். உண்மையிலேயே சூரியன் நட்சத்திரம் – அது போல இராகு, கேது என்று இரு கிரகங்களைச் சொல்லுகிறார்கள். அப்படி எந்தக் கிரகமும் கிடையாது என்பதுதான் அறிவியலின் நிலைப்பாடு.
இந்த வார துக்ளக்கில்கூட (16.2.2011) வான சாஸ்திரத்தையும், கணித சாஸ்திரத்தையும் அடிப்படையாகக் கொண்டது ஜோதிட சாஸ்திரம் என்று எழுதியிருந்தார்.
சோ சொல்லுவது இருக்கட்டும் அவர் ஒன்றும் வான சாஸ்திரி அல்லர்; வேண்டுமானால் புரோகித சாஸ்திரியாக இருக்கலாம்.
உண்மையான வானியல் விஞ்ஞானிகள் என்ன கூறுகிறார்கள் என்பதுதான் முக்கியம். சந்திராயன் புகழ் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை இது பற்றி என்ன கூறுகிறார்?
கேள்வி: ஜோதிடம் என்பது அறிவியலா? வானத்திலுள்ள கோள்களை ஜோதிடர்கள் தங்களுக்குச் சாதமாக்கிக் கூறுகிறார்கள். இதைப்பற்றி தங்களுடைய கருத்து என்ன?
பதில்: இந்தக் கேள்விக்கு என்னுடைய சொந்தக் கருத்தைச் சொல்கிறேன். நான் என்னுடைய தேர்வுக்கான முடிவுக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு ஜோதிடர் எனக்கு ஜோதிடம் பார்த்துவிட்டு என்னுடைய அப்பாவிற்கு மேலே உனக்குப் படிப்பு இல்லை என்று சொன்னார். என்னுடைய அப்பா பத்தாவது வரை படித்திருக்கிறார். அவர் அன்றைக்குச் சொன்னது – நான் எஸ்.எஸ்.எல்.சிக்கு மேலே தேறமாட்டேன். அது எந்த அளவிற்குப் பலித்திருக்கிறது என்பது இப்போது உலகத்திற்கே நன்றாகத் தெரியும். அன்று அந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் எங்கள் கல்வி மாவட்டத்திலேயே முதல் மாணவனாக வந்தேன். ஆக என்னுடைய அனுபவத்தில் ஜோதிடம் என்பது ஒன்றுமேயில்லை. அறிவியல்பூர்வமாகப் பார்த்தால் ஜோதிடமும், வானியலும் ஒன்று இல்லை. அறிவியல்படி அது சரியல்ல என்பது என்னுடைய கருத்து என்று கூறியுள்ளாரே. (அறிவியல் தமிழ் – பிப்ரவரி – மார்ச் 2011)
சரி, மயில்சாமி அண்ணாதுரை அவர்களை விடுங்கள்; அண்மையில் நோபல் பரிசு பெற்றாரே வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், அவர் ஜோதிடம் பற்றி என்ன கூறுகிறார்? கேள்வி: ராசிபலன்கள், ஜோதிடம் பற்றி உங்கள் கருத்து?
இந்தியாவில் தொட்டதற்கெல்லாம் ஜோதிடத்தை நம்புவது மிகவும் வருத்தத்துக்குரியது. உதாரணமாக, ஒவ்வொரு புத்தாண்டின்போதும், வரப்போகும் ஆண்டில் என்னென்ன நடக்கும் என்பதைப்பற்றி ஜோதிடர்கள் கணித்துச் சொல்லுவார்கள். அவர்கள் இதெல்லாம் நடக்கும் என்று சொல்வதில் ஒரு சில நடக்கலாம், ஒரு சில நடக்காமலும் போகலாம். சச்சின் டெண்டுல்கர் அடுத்த மேட்சில் செஞ்சுரி அடிப்பார் என்று சொன்னால், அது நிச்சயமாக நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம். மொத்தத்தில் ஜோதிடம் என்பதே ஒரு சில கணிப்புகளின் அடிப்படையில், ஒரு குத்துமதிப்பாகச் சொல்லப்படுவதுதான். அதையெல்லாம் நம்ப வேண்டாம். இது போன்ற மூட நம்பிக்கைகளுக்கு இடம் கொடுக்காதீர்கள்.
(புதிய தலைமுறைக் கல்வி 17.1.2011)
இந்த விஞ்ஞானிகளைவிட சோ ராமசாமி எந்த வகையில் வானியல் அறிஞர்?
எல்லா விதமான மூடநம்பிக்கை களையும் சற்றும் சேதாரம் இல்லாமல் காப்பாற்றினால்தான் புரோகிதச் சுரண்டல் தட்டுத்தடுமாற்றமின்றி நடக்கும் என்ற தன்மையில் பார்ப்பனர்கள் நடந்து கொள்வார்கள் என்பதை உணர்ந்து கொண்டால் இது போல பிழைபடக் கூறும் கூட்டத்தின் கொட்டம் ஒடுங்கிவிடும்.
விஞ்ஞானிகள் ஒரு பக்கம் ஜோதிடத்தைப் பற்றிச் சொல்லியிருக் கிறார்கள்; இப்பொழுது தலைவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் இதோ
ஜோதிடத்தைப் பொய்யாக்கிய தலைவர்கள்
காந்தியாரின் ஆயுளும் ஜோதிடமும்
காந்தியார் பிறந்தது 2.10.1869 – இல் கோட்சே என்ற மராத்திப் பார்ப்பனனால் சுட்டுக் கொல்லப்பட்டது 30.1.1948 – இல். 78 1/2 ஆண்டுகள்தான் உயிருடன் இருந்தார்.
ஆனால், திருத்தணி ஜோதிடர் வி.கே. கிருஷ்ணமாச்சாரியார் என்பவர் 15.8.1947 பாரத தேவி இதழில் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா? காந்தியடிகள் பிறந்தது சிம்ஹ லக்கினம் மக நட்சத்திரம். விடியற்காலம் மக நட்சத்திரத்தில் ஜனித்தவர்களுக்குத் தீர்க்காயுள் யோகம் உண்டு. இதே போல் சிம்ஹ லக்னமும் நீண்ட ஆயுள் தரக்கூடியது.
மேலும் ஜன்ம லக்னம் சிம்ஹமாகவும் அதில் சந்திரன் தனித்து இருப்பதாலும் ஆயுள் ஸ்தானாதிபதியான குரு தசம கேந்திரத்தில் நின்று லக்னாதிபதியான சூரியனையும் ஆயுஷ்காரகனாகிய சனியையும் பார்ப்பதனாலும் பரமாயுள் என்ற கணக்கான 120 வருஷங்கள் மகாத்மாவுக்கு ஆயுள் உண்டு.
தவிர, முன் காலத்தில் தப ஸ்ரேஷ்டர்களான ரிஷீஸ்வரர்கள் தமது தபோ மகிமையாலும், யோகாசன அனுஷ்டான ஆகார நியமங்களினாலும் தமது ஆயுளைப் பெருக்கிக் கொண்டு ஆயிரக்ணக்கான வருஷங்கள் ஜீவித்திருந்ததாக நமது புராணங்களின் வாயிலாக அறிகிறோம்.
இதேபோல காந்தியடிகளும் தமது ஆகார, அனுஷ்டான நிர்மாணங்களாலும் தெய்வப் பிரார்த்தனையாலும் தமது ஆயுளை விருத்தி செய்து கொண்டு, ஜாதக ரீதியாக ஏற்படும் பரமாயுள் 120 வருஷங்களுக்கு அதிகமாகவே ஜீவித்திருப்பாரென்பது எனது திடமான அபிப்பிராயம்.
மகாத்மா காந்தியடிகள் நீடூழி வாழ பகவானைப் பிரார்த்தித்திருப்போமாக திருத்தணி ஜோதிடரின் அசைக்க முடியாத ஜோதிடக் கணக்குப்படி மேலும் 40 ஆண்டுகள் உயிருடன் இருந்திருக்க வேண்டிய காந்தியடிகளை மதவெறிப் பார்ப்பனன் (கோட்சே) சுட்டுக் கொன்றுவிட்டான் – ஜோதிடம் – ஜாதகம் என்னவாயிற்று?
பெரியார் ஜோதிடம்!
என் ஜோதிடத்தில் எனக்கு 67 வயது என்று குறித்து என் பெற்றோர்கள் அச்சுப் போட்டிருக்கிறார்கள்; ஆனால், நான் இன்று 94 வயதில் சவுக்கியமாக இருக்கிறேன்; என் ஜோதிடம் இன்னமும் இருக்கிறது. ஆனால், பொய்யாகிவிட்டது. அந்தக் காலத்தில் 100 வயது இருப்பது என்பது அதிகம் என்று கருதி எனக்கு 67 வயது என்று ஜோதிடன் கணித்தான். அப்போது சராசரி வயது 10, அதனால் 67 என்று எழுதினான்; இப்போது சராசரி வயது 52. இப்போது அப்படி எழுத மாட்டான்.
– பெரியார் ஈ.வெ.ரா., (ஆதாரம்: பெரம்பலூர் வட்டம், ஓகளூரில் சொற்பொழிவு 13.7.1973)
ஜோதிடம்பற்றி ஆச்சாரியார்
இந்திய சட்டசபையில் சி. ராஜ்ஜியங்கள் மசோதாமீது பேசிய உள்துறை அமைச்சர் சி. ராஜகோபாலாச்சாரியார் குறிப்பிட்டதாவது (26.5.1951).
ஆஜ்மீரின் எதிர்கால அந்தஸ்து என்னவாக இருக்கும் என்று என்னால் கூறவியலாது. இதுபற்றி நான் எந்த ஜோதிடரிடமும் விசாரிக்கவில்லை.
உறுப்பினர்கள்
கேள்வி: மந்திரிகள் இம்மாதிரி ஜோதிடர்களைக் கலந்தாலோசிப்பது உண்டா?
சி.ஆர்.
பதில்: என்னைப் பொறுத்தவரையில் கூறுமிடத்து நான் ஜோதிடத்தில் தீவிர அவநம்பிக்கை கொண்டவன்.
சோ கூட்டத்தின் மகா தலைவர் ஆச்சாரியாரே சொல்லியிருக்கிறாரே – சோ என்ன பதில் சொல்லப் போகிறார்?.
– கவிஞர் கலி.பூங்குன்றன்