Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

என்றும் இளைஞர்

நம் ஆசிரியருக்கு வயது எண்பது என்பது நம்மைப் போலவே பலராலும் நம்ப முடியாததாக இருக்கிறது. ஆனாலும் உண்மை. இந்தக் காலத்தில் 70 ஆண்டுக்காலமாகப் பொதுவாழ்வில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். பொதுவாழ்வு என்றால் சாய்வு நாற்காலியில் அமர்ந்து (சாய்ந்து) அல்ல. DEMAGOGUE என ஆங்கிலத்தில் கூறுவார் கள்; அப்படிப்பட்ட வல்லமைமிக்க சொற்பொழி வாளர்களையும் அச்சொல் குறிக்கும். அந்த வகையிலும் இவர் விளங்குகிறார். 1933இல் டிசம்பரில் பிறந்திருந்தாலும் 1943 ஜூன் திங்களிலேயே மேடையேறிப் பேசத் தொடங்கியவர். சரியாகச் சொன்னால் மேசையேறிப் பேசத் தொடங்கிவிட்டவர்.

அவருடைய 70 ஆண்டு மேடைப் பேச்சு ஆய்வுக்குரியதாகவே ஓர் ஆய்வாளரால் (முனைவர் நம். சீனுவாசன், மதுரை) எடுத்துக் கொள்ளப்பட்டு நூலாகவும் வெளிவந்து பலருக்கும் பயனளிக்கிறது. எங்கே பேசுகிறோம், அவையோர் எத்தகையவர்கள், என்ன பேசப் போகிறோம் என்பன போன்றவற்றை எண்ணி எண்ணி, அவற்றிற்கான குறிப்புகளைத் தயாரித்துச் சிறந்த கருத்துச் செறிவுள்ள சொற் பெருக்காக ஆற்றும் அவரது ஆற்றல் பலராலும் போற்றப்படுகிறது; பின்பற்றப்படுகிறது. எதையாவது பேசிவிட்டுப் போவது என்பது போலன்றி, எதைப் பேசினாலும் ஆதாரத்துடன் பேசுகிறார் என்ற எண்ணம் உருவாகும் வகையில் அதற்கான ஆதார நூல்களை எடுத்துக்காட்டிப் பேசும் முறை கலைஞர் அவர்களாலேயே பாராட்டப்பட்ட ஒன்று.

100 மீட்டர், 200 மீட்டர் தூரம் போன்று குறுகிய ஓட்டக்காரர்களுக்குத் தேவைப்படும் திறமை, நெடுந்தூர ஓட்டக்காரர்களுக்குத் தேவையான திறமையிலிருந்து மாறுபட்டது. இத்தகைய திறமைகளை மூளையின் ஊக்கம் விளைவிக்கின்றது என்பார்கள். ஒரு துறையிலோ சில துறைகளிலோ மேம்பட்டு ஒளிர்வதைத்தான் கருவிலே திரு என்கிறார்கள். அத்தகைய மேதைமை நம் ஆசிரியரிடம் சிறப்பாக அமைந்து இருப்பது நமக்கெல்லாம் பெருமை சேர்ப்பதாகும்.

அவருடைய, அத்தகைய பேராற்றல் -_ பேச்சாற்றல் _ அவர்தம் தாய்மொழியாம் தமிழில் அமைந்திருப்பது வியப்புக்குரியதன்று என நினைத்திடும் வகையில், பல்வேறு மாநிலங்களில் பல்வேறு நாடுகளில் அவர் இங்கிலீஷ் மொழியில் உரையாற்றுவதைக் கேட்கும்போது _ அறியும்போது _ எவருக்கும் ஏற்படும்.

அவர் ஏற்றுக்கொண்டிருக்கிற _ பரப்பிக் கொண்டிருக்கிற _ கொள்கையை விவரிக்கும்போது எவருக்கும் அஞ்சாமல் கருத்துகளைத் துணிவுடன் வெளிப்படுத்தும் பாங்கு தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் வெளிவருவதை “RELIGIOUS FAITH IS USED AS A PSYCHOLOGICAL FORCE BY THE MINORITY BRAHMINICAL CASTES TO KEEP THE VAST MAJORITY OF LOWER CASTES SUBSERVIENT AND SUBJUGATED…” என்கிற சொற்களைக் கொண்டே புரிந்து கொள்ளலாம். பகுத்தறிவாளர் அமைப்புகளின் இந்தியக் கூட்டமைப்பின் அகில இந்திய மாநாட்டில் ஆசிரியர் நிகழ்த்திய உரையில், மத நம்பிக்கையை மனரீதியிலான பெரும் சக்தியாக, மிகச் சிறுபான்மையராக இருக்கும் பார்ப்பனர்கள் மிகப் பெரும்பான்மையராக இருப்பினும் கீழ்ப்படியும்படிச் செய்யப்பட்ட கீழ் ஜாதியினரிடம் பிரயோகிக் கின்றனர் என்ற கருத்தைத் தெரிவித்தார். இதிலே வியப்புக்குரியது என்னவென்றால் மேற்கண்ட அமைப்பில் பார்ப்பனர்களும் இடம் பெற்றிருக் கிறார்கள் என்பதுதான்.

நயம்பட உரைப்பவர் என்றாலும் பயமின்றி உரைப்பவர் நம் ஆசிரியர்.

இந்திய மக்களை விவரிக்கும்போது படித்தவர், பாதிப் படித்தவர், படிக்காதவர் என்று பாகுபாடு செய்வார் குஷ்வந்த் சிங். இவர் உலகப் புகழ்பெற்ற இங்கிலீசில் எழுதும் இந்திய எழுத்தாளர். ஆனால் நம் ஆசிரியரோ படித்தவர், முழுமையாகப் படிக்கும் வாய்ப்பு பெறாதோர் என்ற அளவில்தான் ஆங்கிலச் சொற்களைக் கையாண்டு மக்களைப் பிரிக்கிறார். இந்த நயம்பட உரைக்கும் தன்மை பலராலும் பாராட்டப் பெறுகிறது.

இங்கிலீசு மொழி உலகம் முழுக்கவும் புரிந்து கொள்ளப்படக் கூடிய மொழியாக இருந்தாலும் இங்கிலாந்தில் ஒரு மாதிரியாகவும் அமெரிக்காவில் ஒரு மாதிரியாகவும் உள்ளது. இந்தியாவில் இரண்டு மாதிரியிலும் பேசி எழுதுபவர்களும் உள்ளனர். ஆசிரியரின் ஆங்கிலப் பேச்சு இங்கிலாந்திலும் நடந்துள்ளது. அமெரிக்காவிலும் நடந்துள்ளது. இங்கிலாந்து நாட்டின் பிரபுக்கள் சபையில் 2004இல் உரையாற்றியுள்ளார். அமெரிக்காவில் 1984 முதல் பல்வேறு நிகழ்வுகளில் உரையாற்றியுள்ளார். டென்மார்க் நாட்டுத் தலைநகர் கோபன்ஹேகனில் அமைதிக்கான பன்னாட்டு மாநாட்டில் 1985இல் உரை நிகழ்த்தியுள்ளார். கனடா, ரஷியா, ஜப்பான் போன்ற பல நாடுகளிலும் பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொண்டு உரையாற்ற அழைக்கப்பட்ட பெருமையைப் பெற்றுள்ளார் எனில் கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் ஆங்கிலப் பேச்சும் அமைந்துள்ளது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

அண்ணா குறிப்பிட்டார், “I RARELY SPEAK IN ENGLISH; BUT IT DOES’NT MEAN THAT ENGLISH IS RARE TO ME”  என்று எப்பொழுதாவது பேசினாலும் ஆங்கிலம் கைவராத மொழியல்ல என்பதைப் போலவே நம் ஆசிரியரைப் பற்றியும் கூறலாம்.

பேச்சாளர்களாக இருப்போர் நல்ல எழுத்தாளர்களாகவும் இருப்பது அரிது. அதுபோலவே, பல எழுத்தாளர்களுக்குப் பேச்சுத் திறமை இருப்பதில்லை. இரண்டும் அமையப் பெற்றவர்கள் தந்தை பெரியாரின் கொள்கை வழி நடக்கும் சுயமரியாதைப் பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே எனத் துணிந்து கூறலாம். இரண்டு வகை ஆற்றலும் கைவரப் பெற்றவர் நம் ஆசிரியர். பல நூல்களுக்குத் தொகுப்பாசிரியராக விருந்து தொண்டு செய்திருக்கிறார். தந்தை பெரியாரின் கருத்துக் கருவூலங்கள் பலவற்றைத் தொகுத்து சிந்தனைத் திரட்டு எனும் தலைப்பில் 1958இல் அவர் வெளியிட்டது அவரது முதல் எழுத்துப் பணி. ஏறத்தாழ 100 நூல்களை அவரே எழுதி வெளியிட்டிருக்கிறார் என்பது அவரது சாதனையில் ஒரு மைல் கல்.

1962 முதல் 51 ஆண்டுகளாக விடுதலை ஆசிரியராக இருப்பது உலகில் எவரும் பெறாத தனிப் பெருஞ்சிறப்பு ஆகும்.

இவற்றினூடே, பல பத்துக்கணக்கான கல்வி நிலையங்களையும் தொடர்புடைய நிறுவனங் களையும் நிறுவி நிருவகித்து வருகிறார். அந்தவகை யில் பலருக்கும் எடுத்துக்காட்டாகவும் வழிகாட்டக் கூடியவராகவும் விளங்குகிற மிகச் சிறந்த மேலாளராக, ஆட்சியாளராகத் திகழ்கிறார். இவரைப் பாராட்டி கனடிய அரசு விருது தந்து கல்விப் பணியைச் சிறப்பித்துக் கூறியுள்ளது. அகில இந்திய அளவில் பல விருதுகளைப் பெற்றவராக இவரது தன்னலமற்ற பொதுத் தொண்டு பாராட்டப்பட்டுள்ளது.

வயதில் அறிவில் முதியார் என்றும் வாய்மைப் போருக்கு இளையார் எனப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தந்தை பெரியாரைப் போற்றினார். அத்தகு வரிகள் நம் ஆசிரியர்க்கும் பொருந்தும் எனப் பலரும் பாராட்டிடும் வகையில் அவர் எண்பதாம் அகவையை அடைந்துள்ளார்.

முதுமையை இரண்டாம் குழந்தைப் பருவம் என்கிறார்கள். இதற்குப் பொருத்தமாகப் பல முதியோர் இருக்கலாம். இவர் முதிர்ச்சியுற்றவர். இவர் என்றும் இளைஞராக இருந்து நம் அனைவர்க்கும் வழிகாட்டுவார். அவர் வழி செல்வோம்!

– சு.அறிவுக்கரசு