அப்பா, அப்பா வீட்டுக்கு போகலாம்பா… வீட்டுக்குப் போகலாம்பா, ப்ளீஸ் இது பீட்சா படத்தின் இடைவேளையின் போது திரையரங்கில் கேட்ட அநேகக் குழந்தைகளின் குரல்! அவ்வளவு திகிலான காட்சி அமைப்போடு இருந்தது பீட்சா திரைப்படம். குறும்பட ஊடகத்திலிருந்து புது யுக இளைஞர்கள் திரைப்படத் துறையில் கால்பதிக்கப் புறப்பட்டிருப்பதை அண்மைக்காலப் படங்களினூ டாக அறியமுடிகிறது. அப்படி ஒருவர் தான் கார்த்திக் சுப்புராஜ். புதிய சிந்தனைகளோடு வரட்டும் இளைஞர்கள். அத்துடன் தமிழ்ப்படத்தின் பெயர்களைத் தமிழில் வைக்கட்டும் – அது நமது வேண்டுகோள்.
ஒருவரின் சட்டவிரோத செயலுக்கு, மூடநம்பிக் கைகளுக்கும் உண்டான உறவைப் பற்றித் தான் பேசுகிறது பீட்சா படத்தின் கதை. – தெரிந்தோ, தெரியாமலோ முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பது போல, பேய் என்னும் பொய்ப் பிம்பத்தையும் அதனால் உண்டாகும் பயத்தையும் மக்களிடையே அகற்ற வேண்டும் என்ற நோக்கமே கூட இப்படத்தின் இயக்குநருக்கு இருந்திருக்கலாம்.
பேயெல்லாம் கிடையாது என்று சொல்லிக் கொண்டாலும் உள்ளத்திலே அதைப் பற்றிய அச்சம் உடையவராக இருக்கும் கதாநாயகன், அவரை விளையாட்டாக அச்சப்படவைக்கும் கதாநாயகி (நாவல் எழுதுவதற்காக பேய்கள் பற்றிய ஆராய்ச்சியில் இருப்பவர்), கையில் பல வண்ணக் கயிறுகள், மகளுக்குப் பேயடித்துவிட்டதாகக் கருதி, நாளும் பேயோட்டுபவரை நம்பி வாழ்ந்து கொண்டு, அதிகபட்ச மூடநம்பிக்கையுடன் இருக்கும் கடை உரிமையாளர் இவர்களைச் சுற்றி பீட்சா சுட்டிருக்கிறார்கள்.. பீட்சா சப்ளை செய்யப் போகும் இடத்தில் கடந்த வாரம் இறந்துவிட்ட 5 ஆட்களின் பேய் களைச் சந்தித்து, அங்கே தன் காதலியும் இறந்துகிடப் பதாக மிரண்டு கடைக்கு வந்து சேரும் கதாநாயகனால் பீதியுடன் வீட்டை நெருங்கவும் முடியாமல் ஒருபுறமும், கதாநாயகன் உண்மைதான் சொல்லு கிறானா என்ற சந்தேகத்துடன் மறுபுறமும் இருக்கின்றனர் கடை உரிமையாளரும், ஊழியர்களும்.
பேயிடமிருந்து எப்படி மீள்வது, பேய் பயத்தில் இருந்து கதாநாயகனை எப்படி மீட்பது என்பதற்காகவா இவ்வளவு அக்கறையுடன் தேடுகிறார்கள் என்று யோசித்தால், கடை உரிமையாளரின் கடத்தல் சரக்கைக் கைக்கொள் ளும் முயற்சியே பேய்க்கதை என்று படத்தின் கதை நிறைவு செய்யப்படுகிறது.
படத்தில் வரும் வசனங்களும் நறுக்கென்று இருக்கின்றன. எடுத்துக்காட்டாக சில:
இப்படி ஒரு கதையை எப்படிடா சொன்ன?
பயப்படறவன் இப்படி ஒரு கதையைச் சொல்ல முடியும் (பள்ளி, கல்லூரிகளின் சிறார்கள் இப்படித்தான் ரீல் அந்து போகும் அளவிற்கு ஓட்டுவார்கள்.)
ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு விசயத்துல வீக்னஸ் இருக்கும். சிலருக்கு பணத்தில வீக்னஸ், சிலருக்கு கடவுள் வீக்னஸ்; சிலருக்கு பெண்கள் விஷயத்துல வீக்னஸ், உங்க பாஸுக்கு பேய்ல வீக்னஸ், சோ… நம்ம இத யூஸ் பண்றோம் போன்றவை பளிச்சென புத்தியில் பதிகின்றன.
கதாநாயகனின் விவரிப்புக்கேற்ற திகிலூட்டும் காட்சிகளைப் படமாக்கிய விதத்தில் பாராட்டுப் பெறும் குழுவினர், கதாபாத்திர ஆக்கத்திலும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். தன் அறையைச் சுற்றிலும் பல தினுசுகளில், பல சைசுகளில் வைத்திருக்கும் சாமி படங்களைக் கொண்டு, தன்னை மிகப்பெரிய பக்திமானாகக் காட்டிக் கொள்ளும் கடை உரிமையாளர் கடத்தல் வைரத்தை அந்த அறையிலிருந்து போட்டுக் கொடுக்கும்போதே பக்தியின் லட்சணம் புரிந்துவிடும். பீட்சா படத்தை பேய், பில்லி, சூனியம் எனப் பலவகை மூடநம்பிக்கைகளுக்குப் பயப்படுபவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். இதைவைத்து பிழைப்பு நடத்துவோரை மட்டுமல்ல, ஏமாற்றுவோரையே ஏமாற்றும் தந்திரம் குறித்தும் இப்படம் விளக்குகிறது.
முதல் பாராவில் சொன்னது போல் ஒரு குழந்தை எங்களுடன் படம்பார்த்தது. போய்விடலாம் என்று பெற்றோரிடம் சொல்லிக் கொண்டிருந்த குழந்தையிடம், கடைசி வரை படம் பார்த்தா தான் நீ நிம்மதியா போய் வீட்டுல தூங்க முடியும் என்று நாம் சொன்னதும், பெற்றோரை ஒரு முறை உற்றுப் பார்த்துவிட்டு, உட்கார்ந்து முழுமையாகப் படம் பார்த்தது. கடைசியில் பயம் தெளிந்து வீடு சென்றது. அண்மையில் வந்த யாவரும் நலம், ஈரம் போன்ற திகில் படங்களும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. அவை யாவும் பழிவாங்கத் துடிக்கும் பேய்க்கதையைச் சொல்லியே கதையை ஓட்டி, காசு பார்த்தன. அவற்றில் படத்தின் முடிவும் மூடநம்பிக்கையை வலியுறுத்துவதாகவே இருந்த.ன. ஆனால்,புதிய திரைக்கதை உத்திமூலம் உண்மையைச் சொல்லி வெற்றியும் பெற்றிருக்கும் படக் குழுவினருக்கு நம் பாராட்டுகள்!
படத்தின் இயக்குநரை மட்டுமல்லாமல், தயாரிப்பாளரையும் அவசியம் பாராட்டவேண்டும்.
வெகுமக்களும் பார்க்கும் உன்னதமான காட்சி ஊடகம் சினிமா.ஆனால்,அது பெரும்பாலும் வெகுமக்களின் பணத்தைக் குறிவைப்பதற்காகவே பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.அறிவியலின் விளைவால் உருவான இந்தத் தொழில் நுட்பம் அறிவுக்குப் புறம்பான விஷயங்களைப் பரப்பவும் பயன்படுத்தப்படுகிறது.அறிவியல் கூறும் காரண காரிய விளக்கங்களைச் சொல்லும் படங்கள் மிகக் குறைவே.யாருமே பார்த்திராத,உணர்ந்திராத பேய், பூதம், பிசாசுகளை சினிமா ஊடகம் வந்தபிந்தான் அதற்கு உருவம் கொடுத்தனர். அதுவரை கற்பனை யின் விவரிப்பில் உலா வந்த பேய்கள் திரையில் வலம் வந்தன. அது சினிமா தயாரிப்பாளரின் வயிற்றை பையை நிரப்பியதே தவிர சமூகத்திற்கு எப்பயனும் இல்லை. இத்தகைய சினிமா உலகில் திகில் அனுபவத்தைப் படமாக்கி படம்பார்க்கும் அனைவரையும் உரையச் செய்து எப்படி பேய்க் கதைகள் உருவாகின்றன என்பதை அழகாகச் சொல்கிறது இந்த பீட்சா.
– புரூனோ