தந்தை பெரியார் அவர்களால் தோற்றுவிக் கப்பட்ட சுயமரியாதை இயக்கம் உள்ளிட்ட திராவிடர் இயக்கம் – அடிப்படையில் வருணாசிரம தர்மத்தை ஏற்றுக் கொள்ளாதது ஆகும். ஜாதி ஒழிப்பை முக்கிய கொள்கையாகக் கொண்ட இயக்கமாகும். அதற்காக எத்தனையோ போராட் டங்கள். ஒரு கால கட்டத்தில் சென்னை நகர உணவு விடுதிகளில் பஞ்சமர்களும், நாய்களும், பெருநோய்க்காரர்களும் நுழையக்கூடாது என்று பார்ப்பனர்கள் நடத்திய உணவு விடுதிகளில் விளம்பரம் செய்யப்பட்டதுண்டு. (குடிஅரசு -3.5.1936)
தந்தை பெரியார் அவர்கள் பிரச்சாரத்தாலும், திராவிடர் இயக்கமாகிய நீதிக்கட்சி ஆட்சியாலும் அது ஒழிக்கப்பட்டது.
ரயில் நிலைய உணவு விடுதிகளில் பச்சையாக பிராமணாள் -_ இதராள் என்ற போர்டு போட்டிருந்த நிலையும் உண்டு. (விடுதலையில் 27.1.1941).
இந்தியன் கவர்மெண்ட் கவனிப்பார்களா? என்று தலைப்பிட்டு தந்தை பெரியார் தீட்டிய தலை யங்கத்தைப் பார்த்து நியாயத்தை உணர்ந்த வெள் ளைக்கார அரசு அந்த பேதத்தை ஒழித்தது. (8.2.1941)
இன்னொரு காலகட்டத்தில் உணவு விடுதிகளில் பிராமணாள் என்றிருந்ததை நீக்கக்கோரி (27.4.1957) பலரும் நீக்கிய நிலையில் சென்னை திருவல்லிக் கேணி பகுதிகளில் ஒருவர் நீக்க மறுத்தார். வன்முறை க்கு இடங்கொடாமல் தந்தை பெரியார் நடத்திய உறுதியான போராட்டத்தின் காரணமாய் வேறு வழியின்றி தந்தை பெரியாரைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டு பிராமணாள் என்ற பெயரையும் அகற்றிக்கொண்டார். (23.3.1958)
1970களிலும் இதேபோல் பிராமணாள் பெயர் தலைதூக்கி பெரியாரின் போராட்ட வேகத்தால் மீண்டும் அடங்கியது.
1978ஆம் ஆண்டில் இதே பிராமணாள் உணவு விடுதிகள் சிக்கல் ஏற்பட்டபோது ஓட்டல் உரிமையாளர் சங்கத்திற்கு அன்றைய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீரமணி அவர்கள் எழுதிய கண்டிப்பான கடிதத்தால் (20.9.1978) மீண்டும் பிராமணாள் நீக்கப்பட்டது.
இப்படி ஒவ்வொரு முறையும் அடிபட்டு வாலைச் சுருட்டிய பிராமணாள் பெயர்ப்பலகை கடந்த பிப்ரவரி மாதம் கிருஷ்ண அய்யர் பிராமணாள் உணவுவிடுதியாக மீண்டும் முளைத்தது. அதுவும் தமிழக முதல்வர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறீரங்கம் தொகுதியில்! நம் கழகத் தோழர்கள், நேரே சென்று பிராமணாள் என்ற சொல்லை நீக்கும்படி கேட்டனர். உணவு விடுதியாளர் முரட்டுத்தனமாக நீக்க முடியாது. உங்களால் முடிந்ததைப் பாருங்கள் என்று கூறிவிட்டார். பின்னர் காவல்துறையில் புகார் செய்யப்பட்டு, பல சுற்றுப் பேச்சு வார்த்தையிலும் பார்ப்பனர்கள் மசிந்து வரவில்லை.
இந்த நிலையில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் முதலமைச்சர் கவனத்திற்காக அறிக்கை ஒன்றினை விடுதலையில் (19.10.2012) வெளியிட்டார். திராவிடர் கழகத்தின் சார்பில் 28.10.2012 அன்று சிறீரங்கத்தில் ஜாதி ஒழிப்பு என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தார். ஆனால் காவல் துறையினர் கூட்டம் நடத்த அனுமதி மறுத்தனர். இப்போது உள்ள பதட்டமான சூழ்நிலையால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு அதனால் இந்தியாவெங்கிலும் இருந்து வரும் பக்தர்களுக்கும் சிறீரங்கத்தில் வசித்துவரும் மக்களின் அன்றாட வாழ்க்கை நடைமுறைக்கு குந்தகம் ஏற்படும் என்றுகூறி சிறீரங்க காவல்துறை ஆய்வாளர் அனுமதி மறுத்தார்.
தமிழர்களின் இழிநிலை போக்கும் வாழ்வுரிமைக்கான போராட்டத்திற்காகவே தன்னை முற்றிலும் ஈடுபடுத்திக்கொள்ளும் திராவிடர் கழகம் சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொண்டு உயர்நீதிமன்ற (மதுரை கிளை) வாயிலாக காவல்துறையின் அனுமதி மறுப்பை ரத்து செய்ய வைத்ததோடு நவம்பர் 4ஆம் தேதி (4.11.2012) பொதுக்கூட்டம் நடத்த அனுமதியும் பெற்றது.
போராட்ட உணர்விலேயே வடித்தெடுக்கப் பட்ட திராவிடர் கழகத் தோழர்கள் பொதுக்கூட்ட நாளன்று சாரைசாரையாக வந்து குவிந்தனர். அனுமதி மறுக்கப்பட்ட ஊரில் அலைஅலையாக வந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் சிறீரங்கம் – திருவானைக்காவலில் 4.11.2012 அன்று மாலை நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் “சிறீரங்கத்தில் உள்ள உணவு விடுதியில் முளைத்திருக்கும் பிராமணாள் பெயரை நீக்க தமிழக முதல் அமைச்சர் முயற்சி எடுக்க வேண்டும்; இல்லையேல் அப்பெயர் நீக்கப்படும் வரை தொடர் போராட்டம் நடத்துவோம்” என்று அறிவித்தார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
மேலும் அவர் பேசுகையில், “இன்றையப் பொதுக் கூட்டம் வரலாற்றுச் சிறப்பைப் பெற்று விட்டது. இன இழிவை ஒழிக்கக் கூட்டப்பட்டுள்ள பொதுக் கூட்டம். இதே சிறீரங்கத்தில் ரெங்கநாதன் கோயிலுக்கு முன் தந்தை பெரியார் சிலை திறக்கப்பட்டதே – அதனால் எந்த கெடுதல் வந்து விட்டது? அதனை எதிர்த்துக்கூட உச்சநீதிமன்றம் வரை சென்றார்களே – வெற்றிபெற முடிந்ததா? அதிலும் பெரியார் தானே வெற்றி பெற்றார்.
2012-இலும் நாங்கள் சூத்திரர்களா?
நாங்கள் என்ன கேட்கிறோம்? 2012-இலும் நாங்கள் சூத்திரர்களாக இருக்க வேண்டுமா? சூத்திரர்கள் என்றால் என்ன? நீங்கள் எழுதி வைத்த அசல் மனுதர்மம் இதோ என் கையில் இருக்கிறது. இதில் எட்டாவது அத்தியாயம் 415ஆவது சுலோகம் என்ன சொல்லுகிறது?
யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன், பக்தியினால் வேலை செய்கிறவன், தன்னுடைய தேவடி யாள் மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன், குல வழியாக தொன்றுதொட்டு வேலை செய்கிறவன், குற்றத்திற் காக வேலை செய்கிறவன் என தொழிலாளி ஏழு வகைப்படுவர். சூத்திரர்கள் என்றாலே தொழிலாளியாம். நினைத்துப் பார்க்க வேண்டும்.
இந்த 2012-இலும் பிராமணாள் என்று போர்டு மாட்டினால் எங்களை சூத்திரர்கள் – பார்ப்பனர்களின் வைப் பாட்டி மக்கள் என்று சொல்வதாக ஆகாதா? இதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமா?
1927ஆம் ஆண்டு வரை கூட அரசுப் பதிவேடுகளில் சூத்திரன் என்று இருந்ததே! 1927இல் நடத்தப்பட்ட பார்ப் பனர் அல்லாத மாநாட்டில் அந்த இழிவு சுட்டிக் காட்டப்பட்ட பிறகுதானே நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில் அந்தப் பிறவி இழிவு – அரசு ஆவணங்களில் ஒழிக்கப் பட்டது. இந்து லா என்று சொல்லப்படக் கூடிய அரசமைப்புச் சட்டத்தில் ஆதார நூல்கள் வரிசையில் மனுதர்மம்தானே இன்று வரைக்கும் அடிப்படை – மறுக்க முடியுமா?
மனுதர்ம சாஸ்திரம் அங்கீகரிக்கப் படும் வரை எல்லோரும் சூத்திரர்கள் தானே?
இது ஒன்றும் திராவிடர் கழகத்துக்கு மட்டும் உள்ள பிரச்சினை அல்லவே!
தினமலர் ஏடே திராவிடர் கழகத்தின் போராட்டத்தை வரவேற்று எழுதியுள்ளதே பிராமணர் என்பது ஜாதிப் பெயர் அல்ல, வர்ணப் பெயர் என்று கூறி அறிவுரை கூறியிருக்கிறதே கவனத்தில் கொள்ள வேண்டாமா?
எந்தத் தெருப் பெயரும் ஜாதிப் பெயராக இருக்கக் கூடாது என்று எம்.ஜி.ஆர். ஆணை பிறப்பித்தாரே, அதன்படி டி.எம். நாயர் சாலை என்பதுகூட டி.எம். சாலை என்றுதானே மாற்றப்பட் டது? அந்த எம்.ஜி.ஆர். வழி வந்த அரசு பிராமணாளை அனுமதிக்கலாமா? எடுக்கச் சொல்ல வேண்டாமா?
அப்படி எடுக்கப்படாவிட்டால் எடுக்க வைப் போம் – அதற்கான போராட்டத்தில் குதிப்போம்! அந்தப் போர்டு எடுக்கப்படும் வரை போராட்டம் முற்றுப் பெறாது.
டிசம்பர் முதல் தேதி, சென்னையில் கூடவிருக்கும் திராவிடர் கழகத்தின் பொதுக் குழுவில் போராட்டத் திட்டம் அறிவிக்கப்படும். கருஞ்சட்டைத் தோழர் களே, தயாராவீர்!
எங்களுக்கொன்றும் சிறை புதிதல்ல சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டும் – எங்கள் வரலாறு தெரிந்தவர்களுக்கு இந்த உண்மை தெரியும்.
நாங்கள் மான உணர்வுக்காக இந்தப் போராட் டத்தை நடத்துகிறோம். யார்மீதும் எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் பகை இல்லை. காழ்ப்பும் கிடையாது.
இந்தக் கூட்டம் முடிந்தவுடன் யாரும் அந்த உணவு விடுதி பக்கம்கூட செல்லக் கூடாது – வீட்டுக்கு நேராகப் போக வேண்டும்.” என்று இன எழுச்சிப் பேருரையாற்றினார். திராவிடர் கழகத் தலைவர் அறிவிக்கும் எத்தகைய போராட்டத்திலும் பங்கேற்று சிறை செல்லத் தயார் என்று 500க்கும் மேற்பட்ட தி.க.இளைஞர்கள் கைபயொப்பமிட்டு அதே மேடையிலேயே கி.வீரமணி அவர்களிடம் ஒப்படைத்தனர்.
இந்தக் கூட்டம் நிறைவுபெற்ற அடுத்த 48 மணிநேரத்திற்குள் அந்தக் கடை அமைந்த இடத்தின் உரிமையாளர் முயற்சியால், பிராமணாள் கபே பெயர்ப்பலகையோடு சேர்ந்து அந்த ஹோட்டலே இழுத்து மூடப்பட்டது. ஆனால் அதே நபர் வேறோர் இடத்தில் மீண்டும் அந்தக் கடையை வைப்பேன் என்று பேட்டி கொடுத்திருக்கிறார். பார்ப்பனர்கள் திருந்துவதாக இல்லை என்பதை அவரின் அறிவிப்பு காட்டுகின்றது. பார்ப்பனர் களுக்கு இந்துத்துவ அமைப்புகளில் இருக்கும் அடிமைச் சூத்திரர்களும் கையாள் வேலை பார்க்கத் துவங்கியுள்ளனர்.
திராவிடர்கழகம் அப்படியொரு இழிநிலையில் தமிழினத்தை விடாது! கருஞ்சட் டைப் படையினரின் அணிவகுப்பு திருவரங்கத் தெருக்களில் மட்டுமல்லாது எங்கெல்லாம் பிராமணால் பெயர்ப்பலகை இருக்கிறதோ அங்கெல்லாம் நடந்து, சூத்திர இழிவைச் சுட்டெரிக்கும் என்பது மட்டும் உறுதி!
தொகுப்பு: இசையின்பன்