கேள்வி : காமவெறியன் -நித்யானந்தா நீக்கம் குறித்து மதுரை ஆதினம் அருணகிரிநாதர் எல்லாம் இறைவன் செயல் என குறிப்பிட்டுள்ளாரே?
_ எஸ். கலியபெருமாள், ஆவூர்
பதில் : அப்படி ஆதினம் உண்மையாக நம்பினால், நீதிமன்றத்திற்கே சென்று இருக்கக் கூடாதே!
கேள்வி : குமரி மாவட்டத்தில் ஜெபக் கூடங்கள் அமைக்க அரசு அதிகாரிகள் அனுமதி மறுப்பு. கிறிஸ்தவ அமைப்புகள் ஆர்ப்பாட்டம். அப்படியென்றால் ஆயிரக்கணக்கான தற்காலிக பிள்ளையார் கூடங்கள் அமைக்க ஆதரவளித்ததேன்? – எஸ். நல்லபெருமாள், வடசேரி
பதில் : மதச்சார்பின்மைக் கொள்கை கேலிக்கூத்தாகி வருகிறது! மகாவெட்கம்!
கேள்வி : ராமர் பாலமென்பது, வெறும் கற்பனையே தவிர_ புராணமே தவிர _ அது வரலாறு அல்ல என்று நீதிமன்றத்தில் எடுத்துச் சொல்ல வரலாறு கற்றோர் யாரும் அ.தி.மு.க. ஆட்சியில் இல்லையா? – நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
பதில் : வாயே திறக்க முடியாதவர்கள் மத்தியில் இப்படி ஒரு துணிவு – உண்மையைச் சொல்லும் திறன் எவருக்கும் வராதே!
கேள்வி : தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறைக்கு தி.மு.க.வும் காங்கிரசும் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற தமிழக முதல்வரின் குற்றச்சாட்டு தனது இயலாமையின் வெளிப்பாடு என கருதலாமா? – சா. கோவிந்தசாமி, பெரம்பலூர்
பதில் : அதை 3 மாதத்தில் சரிப்படுத்துவேன் என்று கூறித்தானே பதவிக்கு வந்தார். பிறகேன் பழைய குற்றச்சாட்டை கீறல்விழுந்த கிராமஃபோன் தட்டு வரிகளைப்போல் திரும்பத்திரும்ப கூறவேண்டும்?
கேள்வி : ஆளுநரின் ஆன்மீகப் பயணத்திற்கு தமிழக அரசு முழுச் செலவையும் ஏற்கும் என்கிறதே? – ஜி. சரசுவதி, பெரம்பலூர்
பதில் : மதச்சார்பின்மைக்கு முற்றிலும் எதிரான போக்கு -_ நீதிமன்றங்கள் சென்றால் இது அநேகமாக சந்தி சிரிக்கும் நிலை ஏற்படும்!
கேள்வி : அய்.நா.வில் ஈழப்பிரச்சினை குறித்து டெசோவின் தீர்மானம் அளிக்கப்பட்டுள் ளதால் ஏதேனும் பலன்கள் கிட்டுமா? _ அரு. மலர்விழி, ஆதனக்கோட்டை
பதில் : நிச்சயமாக _ கைமேல் பலன் தெரியும் இரண்டு மூன்று மாதங்களில்!
கேள்வி : இணைதளத்தில் பேஸ்புக், டிவிட்டர் ஆகியவற்றின் மூலம் அண்மைக்காலமாக உருவாகி இருக்கும் கருத்து சுதந்திரத்தை தடுக்கும் விதமாக அரசுகள் முயலுவதுபோல் தெரிகிறதே; இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதல்லவா? – எஸ். ரவிசுந்தர், தங்கச்சிமடம்
பதில் : வரைமுறைப்படுத்தப்பட்ட கருத்துச் சுதந்திரம் வரவேற்கத்தக்கது. கட்டுப்பாடில்லா கருத்துச் சுதந்திரம் காட்டாற்று வெள்ளம் போல் -கெடுதி உண்டாக்கும்.
கேள்வி : மீண்டும் ஒபாமா வெற்றி பெற்றது எதைக் காட்டுகிறது? – எம். ஜான்சன், புளியந்தோப்பு, சென்னை
பதில் : அமெரிக்க மக்களில் பெரும்பாலான வாக்காளர்கள் தெளிவாக உள்ளார்கள் என்பது புரிகிறது. சீர்தூக்கிப் பார்த்து வாக்களிக்கிறார்கள்.
கேள்வி : மின் தட்டுப்பாட்டை தீர்க்க ஆக்கப்பூர்வமான உங்களின் யோசனை என்ன? _ வி. குமாரதேவன், தக்களை
பதில் : சூரிய வெளிச்சம் – Solar E. மின்சக்திக்கான கருவிகளை வீட்டில் பொறுத்த அரசு உதவிகளைக் கூடுதலாகச் செய்து குடிமக் களுக்கு நிரந்தர மின்சக்தி பற்றாக்குறையைப் போக்குதல் -_ போதிய நிலக்கரியை சப்ளை செய்வது அவசர அவசியம் அனல்மின் நிலையங்களுக்கு.
கேள்வி : கெஜ்ரிவாலின் புதிய கட்சியை யானையின் காதில் நுழைந்த எறும்பு என்று ஊடகங்கள் வர்ணிப்பது சரியா? _ கு. சரவண கணேஷ், வேப்பனஹள்ளி
பதில் : பதவியாசை என்ற பானையில் தலையை நுழைத்த ஒட்டகம் என்பது போகப்போக புரியும்.