குடியரசு வழங்கும் வரலாற்றுக் குறிப்புகள்

பிப்ரவரி 16-28

ரங்கநாதரும் துலுக்க நாச்சியாரும்

(யோக்கியமாய்ச் சம்பாதித்து வாழ முடியாமல் பொது ஜனங்களை ஏமாற்றிப் பொருளைக் கவர்ந்து பிழைக்கும் ஒரு கூட்டம்தான் பார்ப்பனக் கூட்டம்.  அவர்களின் சூழ்ச்சியும், கற்பனையும் கலந்தவையே அவதாரங்கள் என்பன.  புராண, இதிகாசங்களின்படி சாமிகள் செய்த அவதாரங்கள் கணக்கிலடங்கா.  இவைகளுக்காக ஏற்பட்ட கோயில்களும், திருவிழாக்களும், பணச்செலவுகளும், குருட்டு நம்பிக்கைகளும் கணக்கற்றவை.

ஜனங்களை ஏமாற்றிப் பிழைக்கும் அந்தச் சூழ்ச்சிக்காரர்கள் அவ்வப்போது அவதாரங்களை உற்பத்தி செய்து கொண்டே இருப்பார்கள்.  அதன் நோக்கம் என்னவென்றால் தங்களுக்குச் செல்வாக்கு உண்டுபண்ணிக் கொள்ளவும், பாமர ஜனங்களின் பணமும், பொருள் களும் தங்களுக்குக் கிடைக்கவுமேயாகும்.  அவர்கள் இந்துக்களையே அன்றி முகமதியர்களையும் ஏமாற்றிய செய்தி ஒன்று சுவைபடக் கீழே சொல்லப் படுகிறது).

இந்தியாவை முகமதியர் அரசாண்ட காலத்தில் பார்ப்பனர்கள் அல்லா உபநிஷத் என்று ஒரு புஸ்தகம் எழுதி இஸ்லாம் மதத்தையும் இந்து மதத்தில் சேர்க்கப் பார்த்தார்கள்.  ஏன்? முகமதியரையும் ஏமாற்றித் தங்களுக்குச் செல்வாக்கையும் வயிற்றுப் பிழைப்பையும் உண்டாக்கிக் கொள்வதற் காகத்தான்.  ஆனால், முகமதியர்கள் ஏமாறவில்லை.

பதினாலாம் நூற்றாண்டில் முகமதி யர்கள் ஸ்ரீரங்கம் கோவிலில் புகுந்து கோயிலை இடித்து ரங்கநாதருடைய பித்தளை விக்கிரகத்தைத் தூக்கிக்கொண்டு போய்விட்டபோது பார்ப்பனர்கள் என்ன கதை கட்டிவிட்டார்கள் தெரியுமா?  ரங்கநாதர் ஒரு துலுக்கப் பெண்ணைக் கலியாணம் செய்துகொண்டார்.  ஆகையால் துலுக்கன் வீட்டுக்குப் போயிருக்கிறார், என்று சொல்லி துலுக்க நாச்சியார் என்று ஒரு அம்மனை ஏற்படுத்தி நாச்சியார் கோவில் என்னும் ஊரில் வருஷம்தோறும் உற்சவம் கொண்டாடு கிறார்கள்.

ரங்கநாதர் துலுக்கப் பெண்ணைக் கலியாணம் செய்துகொண்டார் என்றால் அவர் முதலில் சுன்னத்து செய்திருக்க வேண்டும், பிறகு துலுக்க நாச்சியார் வீட்டில் மாட்டுக்கறியும் புலால் சோறும் விருந்து சாப்பிட்டிருக்க வேண்டும்.  ஆனால், பார்ப்பனர்கள் அதைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லை.  ஆ! பார்ப்பனர்களின் கட்டுக்கதைகளும், பொய்புளுகுகளும் குப்புறவிழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்னும் பேச்சுகளும் விந்தையாகத் தானிருக்கின்றன.  ரங்கநாதர் விக்கிரகத்தை முகமதியர்கள் எடுத்துக்கொண்டு போய்விட் டார்கள் என்று யோக்கியமாய் ஒப்புக்கொள் வதைவிட்டு அவர் துலுக்கப் பெண்களைக் கலியாணம் செய்துகொண்டார் என்றும் அவர் நாச்சியார் கோவிலுக்குப்போகிறார் என்றும் பொய்புளுகவேண்டுமா?  அதற்காக உற்சவம் செய்ய வேண்டுமா?  வடிகட்டின முட்டாள்கள் இதை நம்புகிறார்களே!

குடிஅரசு – 17.04.1932
பக்கம் – 4.
தகவல் : முநீசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *