பெர்ட்ரண்ட் ரசல் – பெரியார் சிந்தனைகள் ஒரு கண்ணோட்டம்…- தஞ்சை பெ. மருதவாணன்

2024 கட்டுரைகள் டிசம்பர் 16-30 2024

பெண்ணியப் புரட்சி பேசும் இரட்டை இலக்கியங்கள்

அ) 1. பெர்ட்ரண்ட் ரசல் அவர்களின் ‘திருமணமும் ஒழுக்கமும் (Marriage and Morals)’ எனும் நூலும் தந்தை பெரியார் அவர்களின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ எனும் நூலும் இருபதாம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட, பெண்ணியப் புரட்சி பேசும் இரட்டை இலக்கியங்கள் என்று கருதத்தக்க பெருமை உடையவை ஆகும்.

2. ரசல் அவர்களின் திருமணமும் ஒழுக்கமும் எனும் உலகப் புகழ் பெற்ற நூல் 1929ஆம் ஆண்டு வெளிவந்த நூல் ஆகும். அக்காலத்தில் வேறு எந்த ஒரு நூலும் இந்த நூலைப் போல் மூர்க்கமான எதிர்ப்பலைகளைச் சந்தித்திருக்குமா என்பது அய்யத்துக்குரியதே. இந்த நூல் வெளிவந்த சிறிது காலத்தில் ரசல் மேற்கொண்ட அமெரிக்கப் பயணத்தின் போது அவருக்கு எதிராக அந்நாட்டில் மதவெறியர்கள் எழுப்பிய கூச்சலும், அவர் உரையாற்றும் போது இடையூறு செய்யும் வகையில் விளைவித்த குழப்பங்களும் கலவரங்களும் அநாகரிகமானவை. அவர் சென்றவிடமெல்லாம் அவரை நோக்கி வீசப்பட்ட வசவுக் கணைகள் துளைத்தெடுத்தன எனும் செய்தி ஜனநாயகத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் பேணுவதாகப் பெருமை பேசும் அமெரிக்காவுக்கே இழுக்கைத் தேடித் தந்தன எனலாம். அதுமட்டுமல்ல; இதன் காரணமாகவே நியூயார்க் நகரக் கல்லூரியில் வகித்து வந்த பேராசிரியர் பதவியையும் ரசல் இழக்க நேர்ந்தது.

3. ரசல் அவர்களுக்கு 1950இல் இலக்கியத் துக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. ‘திருமணமும் ஒழுக்கமும்’ எனும் நூலுக்காகவும் மற்றும் அவரது மனிதாபிமானக் கொள்கைக் காகவும் சிந்தனைச் சுதந்திரத்தை நிலை நாட்டுவதற்காகப் போராடியதற்காகவும் இப்பரிசு வழங்கப்பட்டது. (Awarded Nobel Price for literature for his marriage and Morals and “in recognition of his many side and important work in which he constantly stood forth as a champion of humanity and freedom of thought.”)

4. ரசல் அவர்களின் ‘திருமணமும் ஒழுக்கமும்’ எனும் புரட்சிகரமான நூலுக்கு எதிராக எழுந்த கடுமையான எதிர்ப்பலை களைத் தொடர்ந்து நோபல் பரிசு அளிக்கும் குழுவினர், எந்த ஒரு குறிப்பிட்ட நூலுக்காக வும் ரசல் அவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்படவில்லை என்றும் மனிதாபிமானம், சிந்தனை சுதந்திரம் ஆகியவற்றுக்காக உறுதியுடன் நின்று போராடியதற்காகவே அப்பரிசு வழங்கப்பட்டது என்றும் பின்னாளில் விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது.

5. ‘திருமணமும் ஒழுக்கமும்’ எனும் இந்த நூலில் இடம் பெற்றுள்ள 21 அத்தியாயங்களில் ரசல் பெண்ணியம் தொடர்பான பல்வேறு புரட்சிகரமான கருத்துகளை வழங்கியுள்ளார்.

ஆ) 1. பெண் ஏன் அடிமையானாள்? எனும் நூல் 22.8.1926 முதல் 18.1.1931 வரை ‘குடிஅரசு’ கிழமை இதழில் தந்தை பெரியார் அவர்களால் எழுதப்பட்ட பெண்ணியச் சிந்தனைக் கருத்துகளின் தொகுப்பு ஆகும். இந்நூல் ஈரோடு பகுத்தறிவு நூற்பதிப்புக் கடிதத்தின் முதல் வெளியீடாக 1933இல் வெளியிடப்பட்டது.

2. இந்நூலின் பிரசுரிப்போர் முன்னுரை “இந்நூல் பெண்ணுலகில் ஓர் தலைகீழ்ப் புரட்சியை உண்டாக்கச் சிறந்த கருவியாகும்” என்று கூறுகிறது.

3. பெண்ணியப் புரட்சி பேசும் இந்நூலில் காணும் கருத்துகள் ஒரு குறிப்பிட்ட தேசம், மதம், சமூகம் ஆகிய எல்லைகளைக் கடந்து
உலக மானுடம் தழுவியவை என்பதை அந்நூலுக்கு 1942இல் எழுதிய முன்னுரையில் “இப்புத்தகக் கருத்துகள் இன்றைய நிலையில்
எந்த மதத்திற்கும் எந்தத் தேச மக்களுக்கும் எந்தச் சமூகத்தாருக்கும் பயன்பட்டாக வேண்டும் என்பதே நமது கருத்தாகும்” என்று தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிட்டிருப்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

4. பாலின வேறுபாடின்றி இருபாலினரும் படித்துத் திருந்துவதற்குரிய கருத்துகள் அடங்கிய நூல் இது என்பதை அதே முன்னுரையில் “இப்புத்தகத்தைப் பெண் மக்கள் மாத்திரம் அல்லாமல் பெண்களிடம் ஜீவகாருண்யமும் சமத்துவ உணர்ச்சியும் கொண்ட எல்லா ஆண் மக்களும் வாங்கிப் படித்துப் பார்த்துத் திருந்த வேண்டியது அவசியம்” என்று தந்தை பெரியார் அவர்கள் கூறியிருப்பதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

5. இந்நூல் பெண்ணியத் துறையில் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உலா வரத் தொடங்கியுள்ளது. இதன் ஆங்கில மொழி பெயர்ப்புகள் பலராலும் மேற்கொள்ளப்பட்டு நூல் வடிவில் வெளிவந்துள்ளன. இந்நூல் பிரஞ்சு மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பகுத்தறிவுத் தன்னார்வலர்களால் நாடெங்கும் ஆங்காங்கே ஆயிரக்கணக்கில் இந்நூல் இலவசமாகவும் குறைந்த விலைக்கும் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

6. ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ எனும் ஆங்கில நாளேட்டில் 10.2.2021இல் வெளிவந்த செய்தியின்படி பெரியார் பிறந்த நாளையொட்டி இந்நூலின் ஒரு இலட்சம் படிகளை வெளியிட முடிவு செய்த ஒரு புத்தகப் பதிப்பாளர் அந்த இலக்கையும் தாண்டி 1.20 லட்சம் படிகள் தயாரிக்கப்பட்டு அவையனைத்தும் ஒரே நாளில் விற்றுத் தீர்ந்தன என்றும், அவை கிராமப்புற மக்களுக்கும் மாணவர்களுக்கும் வழங்குவதற்கானவை என்றும் குறிப் பிட்டுள்ளார். (Miles away chennai based publisher kavignar Thambi set a sales Target of one lakh copies of pen yen Adimaiyanal on September 17, periar’s birth anniversary we received orders and sold beyond our Target. About

1.20 lakh books were sold in a single day with many buyers giving it to students and villagers.” He said. (‘Times of India’ English Daily Dated 10/2/2021 ‘விடுதலை’ 13.10.2021 பக்கம் 4)
இ) 1. இரட்டை இலக்கியங்கள் எனத் தகும் ரசல் அவர்களின் ‘திருமணமும் ஒழுக்கமும்’ எனும் நூலும், தந்தை பெரியார் அவர்களின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ எனும் நூலும் பெண்ணியப் புரட்சிக் கருத்துகளின் கொள்கலன்களாக விளங்குகின்றன.

2. இவ்விரண்டு நூல்களிலும் காணும் பல கருத்தொற்றுமைகளைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தந்தை பெரியார் அவர்களிடம் வியப்புடன் எடுத்துக்காட்டியபோது அவர் சட்டென்று “இரண்டும் இரண்டும் நான்கு என்று உலகம் பூராவும் எங்கு கூட்டினாலும் நான்கு என்றுதான் வரும். கூட்டுறவன் ஒழுங்கா கூட்டணும்” என்று கூறியதாக நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

3. இவ்விரண்டு நூல்களில் காணும் கருத்துகள் பலவும் எவ்வாறு ஒத்துப் போகின்றன – அவை எப்படி – ஒரே நேர்க்
கோட்டில் பயணம் செய்கின்றன என்பதைப் பின்வரும் பகுதிகளில் காண்போம்.