மருத்துவர்
சிவபாலன் இளங்கோவன்,
மனநல மருத்துவர்
மனச்சோர்வு என்றால் என்ன என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியாமல் உள்ளது. மனச்சோர்வு என்பது மருத்துவ அறிவியலால் தெளிவாக வரையறை செய்யப்பட்டிருக்கிறது. உலக சுகாதார நிறுவனம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பலதரப்பட்ட அறிவியலாளர்களிடம் இருந்து இதற்கான ஒரு தெளிவான கருத்தொற்றுமையைக் கேட்டுப் பெற்றிருக்கிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் வரையறை யின்படி மனச்சோர்வு:
1. எந்த வித புறக்காரணங்களும் இல்லாமல் அல்லது புறக்காரணங்களின் இயல்பை மீறி ஒரு தொடர்ச்சியான மனக்கவலையை எந்த நேரமும் கொண்டிருப்பது. அப்படி இருக்கும் அந்தக் கவலையானது, மேலோட்டமானதாக இல்லாமல், அதைக் கொண்டிருக்கும் மனிதரின் முதன்மையான உணர்ச்சியாக மாறிப்போயிருப்பது. அதாவது மகிழ்ச்சி, பயம் போன்ற எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்த இயலாத அளவிற்கு அந்த மனக்கவலை முதன்மை பெற்ற உணர்ச்சியாக அவருக்குள் நிலைத்திருப்பது. மேலும் அந்த மனக்கவலை சில நேரங்களில் மட்டும் இல்லாமல் பெரும்பாலான நேரத்தையும் எடுத்துக் கொள்வது.
2. வழக்கமாகச் செய்யும் எந்தச் செயல்களின் மீதும் எந்த விதப் பற்றோ, ஈடுபாடோ இல்லாமல் வெறுமையாக இருப்பது. வழக்கமாக ஒருவருக்கு ஆர்வமூட்டும் செயல் கூட ஒரு சுமையாக எந்த வித சுவாரசியம் அற்றும் இருப்பது. இந்த ஆர்வமின்மை என்பது ஒன்றிரண்டு செயல்கள் என இல்லாமல் எல்லாவிதமான செயல்களின் மீதும் இருப்பது.
3. உடல் முழுவதும் மிகக் கடுமையான சோர்வு இருக்கும் நிலை. உடலில் இருக்கும் ஆற்றல் அத்தனையும் இழந்து போய் மிக சோர்வாக, சாதாரணமாக செய்யக்கூடிய வேலை கூட மிக அலுப்பாகத் தெரியும் அளவிற்கு ஒரு அதீத சோர்வு நிலை உண்டாவது. அந்தச் சோர்வு என்பது காலையில் எழுவது முதல் இரவு உறங்கும் வரை இருப்பது.
அந்தச் சோர்வின் விளைவாக ஒருவர் காலையில் எழும்போதே ‘ஏன் இந்த உலகம் விடிகிறது?’ என்று நினைக்கும் அளவிற்கு அந்தச் சோர்வு இருக்கும். அதனால் இந்த மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த வேலையையும் செய்ய இயலாமல் எந்த நேரமும் படுக்கையில் படுத்திருப்பார்கள். அவருடைய வேலைகளைச் செய்வதற்குக் கூட இன்னொருவரின் உதவி தேவைப்படும் நிலையில் இருப்பார்கள்.
4. எந்த ஒரு செயல் மீதும், எந்த ஒரு நிகழ்வின் மீதும் கவனம் என்பது அவருக்கு முற்றிலும் இருக்காது. அவர்களால் எதன் மீதும் ஒரு தொடர்ச்சியான கவனத்தைச் செலுத்த முடியாது. ஏதேதோ சிந்தனைகள், ஓடி அலையும் எண்ணங்கள் என முற்றிலும் வெளிப்புற உலகத்தின் தொடர்பைத் துண்டித்துக் கொண்டு தங்களைத் தாங்களே முடக்கிக்கொள்வார்கள். இந்தக் கவனமின்மையின் விளைவாக அவர்களால் எந்த வேலையையும் முழுமையாகச் செய்ய முடியாது. யாருடனும் முழுமையாக உரையாடக் கூட முடியாது.
5. தொடர்ச்சியான மன அழுத்தத்தினால் விளையக்கூடிய எதிர்மறை எண்ணங்கள் வாழ்க்கையின் மீது ஒரு பெரிய அவநம்பிக்
கையை அவர்களுக்குள் ஏற்படுத்தும். வாழ்தலின் மீதான பற்றுதல்கள் எதுவும் இல்லாமல் அதற்கான வேட்கைகள் கூட எதுவும் இல்லாமல், எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களாகவே மாறிப்போவார்கள். அது, அந்த மன அழுத்தம் வருவதற்கு முன்பிருந்த அவரது ஆளுமைக்கு முற்றிலும் வேறானதாக இருந்திருக்க வேண்டும். இந்த எதிர்மறை எண்ணங்களும், உடல் சோர்வும், கவனமின்மையும் சேர்வதால் அவர்களின் அன்றாட வாழ்வு மிகவும் மோசமாகப் பாதிக்கப்படும். அதன் விளைவாக அவர்கள் தங்களைப் பற்றி அதுவரை கொண்டிருந்த எண்ணங்கள் எல்லாம் மாறிப்போய் சுய நம்பிக்கை இழந்தவர்களாக, தாழ்வுணர்ச்சி நிறைந்தவர்களாக மாறிப்போவார்கள். இந்தத் தாழ்வுணர்ச்சியின் விளைவாக அவர்கள் முற்றிலும் வெளிப்புற உலத் தொடர்பைத் துண்டித்து, தனிமையில் உழலத் தொடங்குவார்கள்.
6. மனம் முழுவதும் வெம்பித் தவிக்கும் தாழ்வுணர்ச்சியும், நம்பிக்கையின்மையும், உடல் ரீதியான சோர்வுகளும், அலுப்பும், கவனமின்மையும் ஒன்று சேர்ந்து அவர்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் சேதப்படுத்தி விடும். தங்களது இயலாமையை உணர்ந்து கொள்ளும் நேரத்தில், அது அவர்களுக்குள் மிகப் பெரியளவு குற்றவுணர்ச்சியை மனமெங்கும் பரப்பி விடும். தங்களுக்குள் நிகழும் இந்த மாற்றங்கள், வேதனைகள், துயரங்கள் என எதற்கும் எந்த விதக் காரணங்களும் அற்று இருப்பதால், அது தங்களது இயலாமை, தங்களது தோல்வி, தங்களது பலவீனம் என எண்ணத் தொடங்குவார்கள். அது இயல்பாகவே அவர்களுக்குள் குற்றவுணர்ச்சியைக் கொண்டு வந்து விடும்.
7. எந்த நேரமும் மனக்கவலை, அலுப்பு, சோர்வு, உடல் தொய்வு, சாதாரணத் தேவைகளுக்குக் கூட இன்னொருவரைச் சார்ந்திருக்கும் நிலை, நம்பிக்கையின்மை, வாழ்க்கையின் மீது பற்றில்லாத நிலை, தாழ்வுணர்ச்சி, எதிர்மறை எண்ணங்கள், குற்றவுணர்ச்சி என இவை அத்தனையும் ஒருவருக்கு இருந்தால் அவர் அடுத்து எதைப் பற்றிச் சிந்திப்பார்? ஆம்! தற்கொலை பற்றிச் சிந்திப்பார். வாழ்வதன் மீதான ஈடுபாடுகள் அற்ற நிலையில், அதற்கான காரணங்கள் அற்ற நிலையில், தற்கொலை எண்ணங்கள் இயல்பாகவே ஒருவருக்கு வந்து விடும். ஒருவேளை அந்த மனநிலை மாறினால் அந்த எண்ணங்கள் குறையலாம். ஆனால், தொடர்ச்சியாக எந்த நேரமும் எந்தக் கணமும் அந்த மனநிலை தொடந்தால்… தற்கொலை மட்டுமே ஒரு நிரந்தரத் தீர்வாக அவர்களின் கண்முன் தெரியும்.
8. தூக்கம், பசி போன்ற உடலியல் நிகழ்வுகள் பெரிதும் பாதிக்கப்படும். மன அழுத்தமே ஒரு தூக்கம் சார்ந்த பிரச்சினை என்ற ஒரு வாதம் கூட இருக்கிறது, அதாவது, தூக்கம் இல்லையென்றால் மன அழுத்தம் வரலாம் என நாம் நினைப்பதுண்டு. ஆனால், உண்மையில் மனச்சோர்வு இருப்பதால் தான் தூக்கம் பாதிக்கப்படுகிறது. இரவை எதிர்கொள்ளவே ஒருவர் பயப்படும் அளவிற்கு தூக்கமற்ற ராத்திரிகள் அத்தனை தொந்தரவானதாக இருக்கும். அதே போல பசி, எந்தச் சுவையும் இல்லாமல், எந்த ரசனையும் இல்லாமல் சாப்பிடுவதன் மீதான அத்தனை இன்பமும் வடிந்து போய் உணவின் மீதான பெரும் வெறுப்பாக மாறும் அளவிற்கு பசியின்மை இருக்கும். உடல் சோர்வு, இயக்கமற்ற நிலை, குற்றவுணர்ச்சி என அத்தனையும் சேர்ந்து சாப்பிடுவதன் மீதான அத்தனை நாட்டங்களையும் சிதைத்து விடும்.
மேலே சொன்ன அத்தனை பண்புகளும் ஒருவருக்கு இருந்தால் அதுவும் இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக இருந்து வந்தால் அவருக்கு மனச்சோர்வு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
இப்போது திரும்பவும் ஒருமுறை மேலே குறிப்பிட்டவற்றைப் படித்துப் பாருங்கள். மனச்சோர்வு எவ்வளவு மோசமானது என்பதை உணர்ந்து கொள்வீர்கள். இவ்வளவு நாட்கள் ‘Depressed’ என நாம் நினைத்துக் கொண்டிருந்தவை எல்லாம் அன்றாட வாழ்க்கையின் துயரங்களை மட்டுமே! உண்மையில் அத்தகைய ‘Depressed’ மனநிலை உங்களுக்கோ அல்லது உங்களுக்கு நெருங்கிய ஒருவருக்கோ வரும்போது நீங்கள் அந்த தீவிரத்தை உணர்ந்து கொள்வீர்கள். அப்போது உங்களுக்கு உண்மையில் அவர் மீது அக்கறை இருந்தால் அவர்களுக்கு வெற்று அறிவுரைகளைச் சொல்வதை நிறுத்திவிட்டு, ஒரு மருத்துவரைப் பார்க்க அழைத்துச் செல்வதுதான் முறையானதாக இருக்கும். ஏனென்றால், அது மட்டுமே இந்தக் கடுமையான மனநிலையில் இருந்து அவர்களை மீட்டுக் கொண்டு வரும்.
தொடரும்…