அய்யாவின் கணக்கு தப்பாது – கி.வீரமணி
திராவிடர் கழகத்தின் தலைவராக அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்கள், 6_1_1974 அன்று திருச்சியில் கூடிய திராவிடர் கழக மத்திய நிர்வாகக்குழு, கழகச் செயல்வீரர்கள் _ வீராங்கனைகள் என சுமார் 5 ஆயிரம் தோழர்கள் திரண்டெழுந்து வந்து கலந்துகொண்ட கூட்டத் தில், ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
அய்யாவால் அடையாளம் காட்டப்பெற்ற அன்னையார் அவர்கள், இதுவரை தந்தை பெரியாரைப் பாதுகாத்தலே, கழகத்தையும் நாட்டையும் இனத்தையும் பாதுகாத்தல் ஆகும் எனக்கருதி 95 ஆண்டுகாலம் வாழவைத்த பணி முடிந்து, அய்யா கண்ட கழகத்தையும் இனி தலைமையேற்று _ நேரிடையான செயல்திட்டத்தில் இறங்கவேண்டிய கடமையாற்ற, பொறுப்பைச் சுமந்தார்.
இதுபற்றி – திராவிடர் கழக மத்தியக் கமிட்டி, செயல்வீரர்கள் கூட்டம் முடிந்த நிலையில், தன் மீது பொறுப்பை சுமத்தியவர்களுக்கு நன்றிகூறும் வகையில் அருமைத் தலைவர் நம் ஆசான் விட்ட பணி முடிக்க சூளுரைத்துக் கிளம்பிடும்முன், ஓர் அறிக்கையில் மிகவும் தெளிவாக தனது பயணம் அய்யா போட்டுத்தந்த பாதையில் எவ்வித சபலங்களுக்கும் இடந்தராத லட்சியப்பயணம் என்பதை இயக்க இலக்கியம்போல் எடுத்துரைத்து விடுதலையில் ஓர் அறிக்கையின் வாயிலாக (10_1_1974) விளக்கினார்கள்.
அதில் உள்ள சிந்தனை முத்துக்கள் இதோ:
1974 ஜனவரி ஆறாம் தேதியன்று திருச்சியிலே கூடிய நாம் ஒருமித்த மனதோடு, அய்யா அவர்கள் ஆற்றி வந்த அறப் பணியினை எவ்விதச் சபலங்களுக்கும் ஆளாகாமல் சிறப்புறச் செய்து முடித்திடுவோம் என்ற உறுதியினை எடுத்துக்கொண்டு விட்டோம்.
அந்த அறப் பணியினை ஆற்றிட இருக்கும் மறவர் படையாகத் திகழும் திராவிடர் கழகத்திற்கும் என்னையே தலைவராக இருந்து செயலாற்றி வரும்படி ஏற்பாடும் செய்து விட்டீர்கள் அன்புக் கட்டளையிட்டு!
அறிஞர்களும், முதியவர்களும், ஆற்றல்மிக்க செயல்வீரர்களும், அனுபவமிக்கவர்களும் ஏராளம் ஏராளமாக இருக்க, இப்பெரும் பொறுப்பை என்மீது சுமத்தி இருக்கிறீர்கள். அத்தகுதிக்கு ஏற்றவளா என்று நினைக்கும்போது எனக்கே உடல் கூசுகிறது. இத்தகைய சிறப்பினை இச்சிறியவளுக்கு நீங்கள் மனமுவந்து ஒருமுகமாய் நல்கியிருக்கிறீர்கள் என்றால் அது எனக்காக அல்ல; என் சிறப்புக்காக அல்ல; என்னைப் பெருமைப்படுத்துவதற்காகவும் அல்ல என்பதே என் தாழ்மையான கருத்து. பின் எதற்கு என்றால், அது அருமைத் தலைவர் அய்யா அவர்களிடத்திலே நீங்கள் கொண்டிருக்கும் நீங்காத பற்றுதல், அன்பு, மரியாதை, நன்றி உணர்ச்சி என்பதன்றி வேறென்ன?
நீங்கள் அனைவரும் அய்யா அவர்கள் மீது காட்டிய அன்பின் மிகுதிக்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.
அருமைத் தோழர்களே, தாய்மார்களே!
நீங்கள் அனைவரும் என்மீது கொண்டிருக்கும் இந்தப் பாசத்திற்கும், பற்றுதலுக்கும் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், நல்லெண்ணத்திற்கும் என் நன்றியை எழுத்தால், சொல்லால் அல்ல, செயலால் நிறைவேற்றி வைப்பேன் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் மிகுந்த பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
நாம் ஏற்றுக் கொண்டிருக்கிற ஈடு இணையற்ற பணிக்கு நிலைகுலையாத கட்டுப்பாடும், ஒற்றுமையும், கடுமையான தன்னல மறுப்பும்தான் தேவை என்று நமதருமை அய்யா அவர்கள் அடிக்கடி கூறுவார்கள்; கூறியதோடு மட்டுமல்ல, அவரின் அருமைத் தொண்டர்களாகிய நம்மையெல்லாம் அந்த வழியிலே நடந்திட நல்ல பயிற்சியினையும் அளித்திருக்கிறார்கள். கருஞ்சட்டைத் தோழர்களிடந்தான் எத்துனை கட்டுப்பாடு! என்று எல்லோரும் வியந்து கூறும் அளவுக்கு நம்மை வழிநடத்தினார்கள்.
அய்யா அவர்களின் காலம் வரையில்தான் இந்தக் கட்டுப்பாடும் ஒற்றுமையும் அரவணைப்பும் தன்னலமறுப்பும் இருக்கும்; பிறகு அவை எல்லாம் கனவாகிப் போய்விடும், சீர்குலைந்து விடும், தடியெடுப்பவனெல்லாம் தண்டல்காரன் என்பதுபோல, ஆளாளுக்குத் தலையெடுத்து ஆடுவார்கள். ஒருவருக்கொருவர் குடுமியைப் பிடித்துக்கொள்வார்கள் என்று நினைத்திருந்தவர்கள் நினைவெல்லாம் இன்று கனவாய் மாயையாய்ப் போய்விடும் அளவுக்கு அய்யா அவர்கள் நம்மைவிட்டு மறைந்த நிமிடத்திலேயிருந்து ஆறாந்தேதி கூட்ட முடிவுறும் வரையிலே நம் கழகத் தோழர்கள் அனைவரும் மிக மிகக் கட்டுப்பாடோடும், தன்னலமறுப்போடும் நடந்துகொண்டதை எண்ணும்போது நெஞ்சம் பூரிக்கிறது.
ஈடு செய்ய முடியாத இழப்புக்கு ஆளாகி விட்டோமே என்று இதயம் நொந்திருந்த காலத்திலுங்கூடக் கழக நடவடிக்கைள் பற்றி விடுதலை என்ன கூறுகிறது என்றுதான் எதிர்பார்த்து நடந்து கொண்டார்கள் இயக்கத் தோழர்கள் அனைவரும். இயக்கத்திற்கு வெளியே இருக்கும் சிலர் -_ நம் இயக்கம் ஒழிய வேண்டும் என்று விரும்பி இருக்கிற சிலர் செய்ய முற்பட்ட செயல்களுக்கு – அற்ப மரியாதைக்கூடக் கொடுக்கவில்லை. காது கொடுத்தும் கேட்கவில்லை. திரும்பிப் பார்க்கக் கூடத் தயாராக இல்லை.
தலைவன் மறைந்ததும் தான்தோன்றிகளாவார்கள் என்று எதிர்பார்த்திருந்தவர்களின் எண்ணங்களை எல்லாம் தூள்தூளாக்கி எக்கட்சியினருக்கும் ஏற்படாத ஒரு சிறப்பினை, ஒரு பெரும் வாய்ப்பினை நம் அருமைக் கழகத்தினர் ஏற்படுத்தி விட்டார்கள். உலகத்தார் வியக்கும் வண்ணம் எதிரிகள் உள்ளத்திலே அச்சத்தையும் ஏற்படுத்தி விட்டார்கள். அய்யா அவர்கள் வாழ்ந்த வாழ்வின் உண்மையினைப் பின்பற்றி -_ அவர் ஆற்றிய தொண்டின் உயர்வை மனதில் இறுத்தி, நீங்கள் அளித்திருக்கும் பொறுப்புக்குச் சிறிதும் களங்கம் ஏற்படாவண்ணம் என்னைப் பக்குவப்படுத்தி என்றென்றும் உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் உடையவளாக நடந்து கொள்கிறேன் என்று உறுதி கூறி, உங்கள் அனைவருக்கும் என் நன்றியையும், அன்பையும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். வணக்கம்.
ஈ.வெ.ரா.மணியம்மை
இதில் அவரது தன்னடக்கம், தகைசான்ற அனுபவம், தகத்தகாய முதிர்ச்சி எல்லாம் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டுக்கொண்டு ஒளிவிட்டன!
இந்த அறிக்கை வெளிவந்த அடுத்த நாளில் இருந்து அன்னை மணியம்மையார் அவர்களின் சுற்றுப்பயணத் திட்ட விவரங்கள் விடுதலையில் வெளிவரத் தொடங்கின. திருச்சியில் நடந்த கமிட்டியில் நிறைவேற்றப்பட்ட ஏழாவது தீர்மானமான உறுதிமொழி ஏற்பு கூட்டங்கள் நடத்துவது பற்றிய அந்த அறிவிப்பில் முதல் கூட்டம் ஜனவரி 16 அன்று வடஆற்காடு மாவட்டம் திருவண்ணாமலையில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து சிதம்பரம், சென்னை, காஞ்சிபுரம், தர்மபுரி, சேலம், தஞ்சை, காரைக்குடி, மதுரை எனப் பயணப் பட்டியல் நீண்டது.
முதல் கூட்டம் திருவண்ணாமலையில் துவங்க அன்னை மணியம்மையார் முடிவெடுத்தற்கு ஒரு காரணம் உண்டு. அய்யா அவர்கள் டிசம்பர் 20ஆம் நாளன்று உடல்நிலை குன்றிய நிலையில் வேலூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டிசம்பர் 23ஆம் நாளன்று திருவண்ணாமலையில் ஒரு கூட்டத்திற்கு ஒப்புக் கொண்டிருந்தார். இந்தப் பயண விவரம் தொடர்ந்து விடுதலை இரண்டாம் பக்கத்தில் வெளிவந்து கொண்டே இருந்தது. இடையில் இரண்டு நாட்களே இருந்த நிலையில் நானும், புலவர் கோ.இமயவரம்பன், விடுதலை நிர்வாகி சம்பந்தம் ஆகியோரும் அய்யாவிடம் சென்று அய்யா, டாக்டர் இன்னும் ஒருவாரம் நீங்கள் இந்த மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும் என்றே கூறுகிறார்கள்; எனவே விடுதலையில் உள்ள சுற்றுப்பயணத்தைத் தள்ளிப்போட்டு ஒரு அறிவிப்புத் தரலாமா என்று கேட்டோம். அவ்வளவுதான் சீறிப்பாய்ந்த சிங்கமானார் தந்தை பெரியார்.
சுற்றுப்பயணத்திற்குப் போகப்போவது நான்தானே; நீங்கள் அல்லவே என்று சற்றுக் கோபத்துடன் குரலை உயர்த்திக் கூறினார். நாங்கள் அரண்டுவிட்டோம்; சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது. எங்கள் கவலை, வருத்தம் எல்லாம் அய்யா அறிந்ததுதான் என்றாலும், சுற்றுப் பயணத்தைத் தள்ளி வைப்பதை எப்போதும் ஏற்க மறுத்தவர் அவர்.
ஏற்பாடு செய்த தோழர்களுக்கு எவ்வளவு நட்டம்? எதிர்பார்த்த மக்களுக்கு எவ்வளவு ஏமாற்றம்? செத்தாலும் அங்கு சென்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கடமையாற்றும்போது நம் உயிர்போகட்டுமே! என்று பளிச்சென்று பலமுறை கூறியிருக்கிறார்கள்.
அதனால்தான் அய்யா அவர்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்த திருவண்ணாமலை நகரிலிருந்துதான் அம்மாவின் முதல் பிரச்சாரம் _ தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணி துவங்கியது _ தொடர்ந்தது!
வரலாற்றில் இன்னொரு விசித்திரம் என்ன தெரியுமா? அந்த திருவண்ணாமலையில்தான் அய்யா அவர்கள் மணியம்மையாரை திருமணம் என்ற கழக ஏற்பாடு செய்வது குறித்து தனது நெருங்கிய நண்பர் என்கிற முறையில் ஆலோசனை கேட்பதற்காக அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்துவந்த இராஜகோபாலாச்சாரியாரை சந்தித்தார். இதற்கு முன்பாகவே ஆச்சாரியார் இந்த திருமணம் என்கிற ஏற்பாட்டினைப் பற்றி ஆதரவு காட்டாததன் நிலையை கடிதத்தின் மூலம் தெரிவித்திருந்த (பிறகும்) நிலையில் இச்சந்திப்பு நிகழ்ந்தது.
ஆனால் தந்தை பெரியார் போட்ட கணக்கு பொய்க்கவில்லை. ஆச்சாரியாரின் கருத்துதான் பொய்த்துப் போனது என்ற உண்மைகளுக்குச் சான்றாக அன்னை மணியம்மையார் அவர்கள், அய்யா அவர்களின் மறைவுக்குப்பின் தன் சுற்றுப் பயணத்தை அங்கேயே துவக்கியதுதான் வரலாற்றின் விசித்திரமாக அமைந்தது. அங்கே துவங்கிப் பல ஊர்களில் நடைபெற்ற கூட்டங்களில் கழகத் தோழர்களும், பெரியார் பற்றாளர்களும் திராவிடர் இயக்கத்தவர்களும் பல்லாயிரக்கணக்கானோர் கூடினர்.
பெரியார் மறைந்தார்; பெரியார் (தத்துவங்களின்) சுற்றுப் பயணம் தடைபடாது தொடர்ந்தது, தொடர்ந்துகொண்டே இருக்கிறது. நாளையும் இருக்கும் என்பது உறுதி. பெரியார் திடலில் பெரியார் புதைக்கப்பட்டவர் அல்லர்; விதைக்கப்பட்டவர் என்பது அவரது மறைவுக்குப்பின் அடர்த்தியாக நடைபெறுவதே தக்க சான்றாகும்.