தமிழரா? ஆரியரா? என்று களம் காணாதது ஏன் ?- குமரன் தாஸ்

2024 கட்டுரைகள் டிசம்பர் 16-30 2024

தற்போதுள்ள நிலையில் தமிழ்ச் சமூகம் ஒரு ஜாதிய சமூகம் என்பதை நாமறிவோம். அதாவது, ஜாதிய அடிப்படையிலான சுரண்டலும் ஒடுக்கு முறையும் அதற்கு எதிரான போராட்டமுமே நமது சமூகத்தை இயக்கிச் செல்லும் முதன்மைக் காரணியாக உள்ளது. இன்னும் பல ஒடுக்கு முறைகளும் அதற்கெதிரானப் போராட்டங்களும் உண்டு. எடுத்துக்காட்டாக ஆணாதிக்கம், மொழியாதிக்கம், மத ஆதிக்கம் என்பவையும் அவற்றுக்கெதிரான போராட்டங்களும் நடைபெறுகின்றன.

இவையும் நமது சமூகத்தின் அடிப்படையான பிரச்சனைகள்தாம். இவையும் தீர்க்கப்பட வேண்டியவையே! ஆனால், இவையல்லாத வேறு முரண்
களையே இன்றைய தமிழ்நாட்டின் முதன்மையான முரணாகச் சிலர் முன்னிறுத்திப் பிரச்சாரம் செய்கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம்
தமிழ்நாட்டின் மக்களை அழுத்திக் கொண்டிருக் கும் முதன்மை விரோதிகளான பார்ப்பனியத்தையும் முதலாளியத்தையும் அதனால் லாபம்
பெறும் பிரிவினரையும் மக்களின் வெறுப்பிலிருந்து தப்ப வைத்துக் காப்பாற்றும் வேலையை இவர்கள் செய்கின்றனர்.

எடுத்துக்காட்டாக, மலையாளிகள்+ கன்னடர்கள்+தெலுங்கர்கள் இவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான முரண்பாடு தான் இன்றைய முதன்மையான முரண்பாடு என்றும், அவர்கள்தான் தமிழ்நாட்டு மக்களின் முதன்மையான எதிரிகள் என்றும் கட்டமைக்க முயற்சிக்கின்றனர். இவ்வாறு சொல்வதுடன் நில்லாமல், அத்தெலுங்கு மக்களுடன் திராவிட இயக்கத்தையும் குறிப்பாக தி.மு.க.வையும் முடிச்சுப் போட்டு தெலுங்கர்களின் அரசியல் கட்சிதான் தி.மு.க. என ஒரு உலகமகாப் பொய்யைப் பரப்புகின்றனர்.

முதலில் தமிழ்நாட்டில் பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்ற மொழிச் சிறுபான்மையினர் அதாவது வீட்டிற்குள் மட்டும் வேற்று மொழியையும் பொது வெளியில் தமிழையும் பேசுகின்ற மக்கள் உடலாலும் உணர்வாலும் தமிழர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் ஆண்டாண்டு காலமாகக் கடைப்
பிடித்து வரும் ஒரு ஜாதிய அடையாளம் என்ற வகையில் தான் தெலுங்கையோ கன்னடத்தையோ வீட்டினுள் பேசி வருகின்றனரே தவிர, தங்களை வேற்றினமாகக் கருதியதில்லை. அண்மைக் காலத்தில் தமிழ்ப் பாசிஸ்ட்டுகளின் தாக்குதல்களின் காரணமாகத் தங்களது அடையாளத்தை முன்னிறுத்தி ஒன்றிணைந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயன்றிருப்பார்களே தவிர, இதற்கு முன் தமிழ் மொழிக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும், ஈழத் தமிழர்களுக்காகவும் உணர்வுப்பூர்வமாகப் போராடியதில் தமிழர்களுக்கு இவர்கள் குறைந்து போனதில்லை. மேலும் இந்தப் போராட்டத்தில் கூடுதலான வழக்குகளையும் சிறைத் தண்டனைகளையும் அனுபவித்தவர்களாகவும் இவர்கள் உள்ளனர்.

அதே சமயம், ஒரிஜினல் அக்மார்க் தமிழர்கள் என இந்த நாஜிக்களால் சான்றிதழ் வழங்கப்பட்டு கொண்டாடப் படக்கூடிய பிரிவினரில் இந்தியத்தையும், இந்தித் திணிப்பையும் ஏற்றுக் கொண்ட தலைவர்களையும், தமிழ் தேசியத்தையும், ஈழ விடுதலைப் போராட்டத்தையும் எதிர்த்த தலைவர்களை
யும் நம்மால் பார்க்க முடிகிறதே! இதற்கு இவர்களுடைய பதில் என்ன?

பார்ப்பனரல்லாத மக்களை தமிழர், தமிழரல்லாதவர் என்று கூறு போட்டு மோதவிடத் துடிக்கும் இந்த நாஜிக்கள் பார்ப்பனர்களிடத்தில் மட்டும் மிக கருணை உள்ளத்துடன் செயல்பட்டு தங்களை அம்பலப்படுத்திக் கொள்கின்றனர். ஆம், தமிழை நீச பாஷை என்று பழித்தாலும், தமிழ் அர்ச்சனை மொழி ஆவதற்குத் தகுதியற்றது! தேவ பாஷையான சமஸ்கிருதமே என்றைக்கும் அர்ச்சனை மொழியாக இருக்கும் தகுதி படைத்தது என்று சொன்னாலும், அனைத்துச் ஜாதியினர் அர்ச்சகர் உத்தரவை எதிர்த்து நீதிமன்றம் சென்றாலும், மிக வெளிப்படையாக பார்ப்பனரல்லாத தமிழ் மக்களை சூத்திரர்கள் என்று இழித்துப் பழித்தாலும், எல்லாவற்றுக்கும் மேலாக இன்றுவரை இந்தித் திணிப்பை ஆதரித்தும், ஈழ விடுதலைப் போராட்டத்தை எதிர்த்தும் மிக வெளிப்படை
யாகப் பார்ப்பனர்கள் பேசி வந்தாலும் அவர்கள் தமிழர்கள் தான் என்று சொல்லும் இடத்தில் தான் இந்த இனவெறியர்களின் தமிழ்த் தேசியம் கேலிக்குரியதாகிறது.

அதாவது, தமிழ்நாடு தமிழருக்கே என்று குரல் எழுப்பிப் போராடியவரும் பார்ப்பனரல்லாத தமிழ் மக்கள் மானமும் அறிவும் பெற்று சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்பதற்காகத் தன் வாழ்நாள் எல்லாம் போராடியதுடன், தனது உடல், பொருள் அனைத்தையும் தமிழ்நாட்டு மக்களுக்காகத் தியாகம் செய்த அறிவாசான் தந்தை பெரியார் கன்னடராம். ஆனால், இன்று வரை பெரும்பான்மையான பார்ப்பனரல்லாத உழைக்கும் தமிழ் மக்களைச் சுரண்டியும் அவர்களது கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும் முன்னேற்றத்திற்கும் எதிராகச் செயல்பட்டு வரும் பார்ப்பனர்கள் தமிழர்களாம்! எவ்வளவு அயோக்
கியத்தனம் பாருங்கள்! இந்தப் பார்ப்பனக் கைக் கூலிகள் இருக்கும் தைரியத்தில் தான் பார்ப்பனர்கள் இந்த நாட்டில் இன்றைக்கும் ஜாதி-தீண்டாமை ஷேமகரமானது என்றும், குலத்தொழிலையும் குழந்தைத் திருமணத்தையும் ஆதரித்தும் வெளிப்படையாக மேடைகளில் பேசுகின்றனர். தாங்கள்தான் பிறவி அறிவாளிகள் என்றும் மார்தட்டுகின்றனர்.

இன்னும் வேறு சில பெயரில் இயங்கும் பார்ப்பனக் கைக்கூலிகளோ தமிழ்நாட்டிற்கு நியாயமாகக் கொடுக்கப்பட வேண்டிய நிதியைக் கொடுக்காமல் தொடர்ந்து வஞ்சித்து வருகின்ற பாசிச – பா.ஜ.க. அரசை ஒரு சிறிய அளவில் கூட விமர்சிக்காமலும் எதிர்த்துப் போராடாமலும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் அல்லும் பகலும் போராடிக் கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசையும் திராவிட இயக்கத்தையும் குறை சொல்வதை மட்டுமே முழுநேர வேலையாகச் செய்து வருகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் திராவிட இயக்க அரசை வீழ்த்திவிடலாம் எனக் கனவு காண்கின்றனர்.

ஆகவே, பார்ப்பனரல்லாத மக்களின்ஒற்றுமைக்கு விரோதமாகவும் பார்ப்பனரல்லாதார் அரசியல் ஓர்மைக்கு- அதாவது, திராவிட இயக்கத்திற்கு எதிராக யார் வந்தாலும் எந்த அரசியலின் பெயரில் வந்தாலும் அவர்கள் ஏதோவொரு வகையில் பார்ப்பனர்களுக்கும் பாசிச பா.ஜ.க.வுக்கும் மறைமுகச் சேவையில் ஈடுபடும் பார்ப்பனப் பனியாக் கைக்கூலிகளே என்பதைப் புரிந்து கொண்டு அவர்களைப் புறக்கணிக்கவும், எதிர்த்து அம்பலப்படுத்தவும் வேண்டியது நமது கடமையாகும்.