குற்றவாளிக் கூண்டில் ‘பக்தியானந்தா’!

நவம்பர் 16-30

நீதிமன்றமே
நிசப்தமாயிருந்தது!
பக்தியானந்தா
பக்தியானந்தா
பக்தியானந்தா
நீதிமன்றக் காவலர்
மும்முறை கூவியழைக்க

முத்துப்போன்ற பற்கள்
முப்பத்திரண்டும் பிரகாசிக்க
ஆண்களையும் சுண்டியிழுக்கும்
ஆன்மீகச் சிரிப்புடன்
பந்தாவாய் வந்து
கூண்டிலேறினார்
பக்தியானந்தா!

குட்டிகளைக் கூட்டிவைத்துக்
கூத்தடிக்கிறீர்!
காவியுடையில்
காமக்களியாட்டம் புரிகிறீர்!
மாஜி நடிகைகளை
மடத்துக்குள் வைத்து
அர்த்தஜாம பூஜைநடத்தி
அர்த்தமுள்ள இந்துமதத்தை
அசிங்கப்படுத்திவிட்டீர்!
மொத்தத்தில் இந்துமதத்தைக்
குத்தகை யெடுத்துக்
கெடுத்துவிட்டீர்!
எதிரிகள் உம்மீது
சாட்டியிருக்கும் இக்குற்றங்களை
ஏற்கிறீரா? மறுக்கிறீரா?
கேட்டார் நீதிபதி!
குண்டலங்கள் காதிலாட
கோவையாய் கண்கள் சிவக்க
கோபத்தின் உச்சத்தில்
நின்றார் பக்தியானந்தா!

அபச்சாரம்!
அபச்சாரம்!
அடியேன் அந்த நடிகையுடன்
அர்த்தஜாமத்தில் நடத்தியதெல்லாம்
ஆன்மீகப் புரட்சியேதான்!
அற்ப மானிடப் பதர்கள்தாம்
அதனைப் பாலியல் குற்றமென்று
கொச்சைப்படுத்திக்
கூறிவருகின்றனர்!
இருப்பினும் என்செயல்
இந்திய தண்டனைச் சட்டப்படி
குற்றமென்றால்…
தாங்கள் அளிக்கும்
தண்டனை எதுவாயினும்
தயங்காமல் ஏற்கிறேன்!
ஆயினும் அதற்குமுன்
அடியேனின் சிறு விண்ணப்பம்!
பாகில் தோய்த்தெடுத்த
பதமான வார்த்தைகளால்
பகன்றார் பக்தியானந்தா!
தங்கள் விண்ணப்பத்தை
தயங்காமல் கூறலாமென
அந்த நீதிபதியும்
அனுமதியளித்தார்!

ஒருத்தியுடன்
ஒருநாள் நான்
நடத்தியதே குற்றமென்றால்
எனை ஆட்டுவித்து
திருவிளையாடல் புரியும்
என்னப்பன் பரமேஸ்வரன்
அன்றொரு நாள்!
அந்திசாயும் வேளை!
தாருகாவனத்திலே-
மதுவுண்ட மந்திகளாய்
ரிஷிபுங்கவரெல்லாம்
நிஷ்டையிலே ஆழ்ந்திருக்க..
அவர்களது ஆருயிர்
தர்மபத்தினிகளையெல்லாம்
ஆற அமர இருந்து
அறுசுவை விருந்தாக்கி
ஆசையைத் தீர்த்துக்கொண்டானே
அது குற்றமில்லையா?

பெற்ற மகளென்றும்
பாராமல் சரசுவதியை
பெண்டாள துணிந்தானே
பிரமதேவன்!
அது குற்றமில்லையா?
தேனிலூறிய பலாவாய்
தெய்வயானையிருக்க
திருட்டுத்தனமாய்
வள்ளிக் குறத்தியை
கள்ள உறவு கொண்டானே
ஆறுமுகக் கடவுள்!
அது குற்றமில்லையா?

சின்ன வயதில்
வெண்ணையைத் திருடி,
அரும்பு மீசைக்காரனாய்
அம்மணக்குளியல் போட்ட
ஆயர்பாடிக் குமரிகளின்
ஆடைகளைக் திருடி,
அறுபதாயிரம்
கோபியருடன்
கூடிக் களித்தும்
அலுத்துப் போகாமல்
நாரதனையும் பெண்ணாக்கி
காமக்களியாட்டம்
நடத்தினானே கண்ணபிரான்!
அது குற்றமில்லையா?

இந்திய தண்டனைச் சட்டம்
இவர்களுக்கெல்லாம்
அளிக்கப்போகும்
தண்டனைதான் என்ன?
அதிகப்பட்சத் தண்டனையை
அவர்களுக்கும் அளித்து
அடியேனுடன் அவர்களையும் உள்ளே தள்ளி
ஒரே செல்லில் அடைத்திட
உத்திரவிடவேண்டுமாய்
பணிவோடு வேண்டுகிறேன்!

பக்தியானந்தா
பவ்வியமாய் கரம்கூப்பி
நீதியரசரை
நிமிர்ந்து பார்த்திட,
காலியாயிருந்தது
அவரது இருக்கை!
மயங்கிய அவரோ
தரையினில் கிடந்தார்!

– சீர்காழி கு.நா. இராமண்ணா, சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *