சங்கீத மேதைமையில் கேள்விக்கு அப்பாற்பட்டவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி! ஆனால், அவர் ஏன் தான் பிறந்த இசைவேளாளர்
குலத்தின் அடையாளத்தை மறைக்க நிர்பந்திக்கப்பட்டார்! பிராமணர்கள் ஏன் அவருக்கு புனித பிம்பத்தைக் கட்டமைத்து, தங்களவராகச் சித்திரித்தனர்.
டி.எம்.கிருஷ்ணா பேசிய உண்மை சுடுகிறதா..? அலசுவோம்…
‘‘எம்.எஸ்.எஸ். அம்மாவை இழிவாகப் பேசிவிட்டார், அவரது நம்பகத் தன்மையை கேள்விக்கு உள்ளாக்கிவிட்டார்… ஆகவே, டி.எம்.கிருஷ்ணாவிற்கு மியூசிக் அகாதெமியின் சங்கீத கலாநிதி விருதை வழங்கக் கூடாது’’ என முழங்குகிறார்கள் சிலர்! இவர்கள் நீதிமன்றம் சென்று ‘இந்த ஆண்டுக்கான எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயரிலான ‘சங்கீத கலாநிதி’ விருதை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கக் கூடாது’ என்ற நீதிமன்ற உத்தரவையும் பெற்று விட்டனர்.
டி.எம்.கிருஷ்ணா
உண்மையில் டி.எம்.கிருஷ்ணா, எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மா பற்றிக் கடுகளவும் தவறாகப் பேசியதில்லை, எழுதியதில்லை. மாறாக, மிக உயர்வாகவே எம்.எஸ். அம்மாவைக் கொண்டாடி வந்துள்ளார்! அப்படியானால், ஏன் பல கர்நாடக சங்கீதக் கலைஞர்கள் கிருஷ்ணாவை இவ்வளவு எதிர்க்க வேண்டும்? ஏன் என்றால், கிருஷ்ணா சில மறைக்கப்பட்ட உண்மைகளைப் பேசினார். எம்.எஸ்.அம்மாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை – குறிப்பாக யாரும் பேச மறுக்கும் எம்.எஸ். அம்மா தன் சுயத்தை இழக்க நேர்ந்த துயரத்தை – அவர் துணிச்சலாக வெளிப்படுத்தினார். ஆகவே, இவர்கள் பதற்றமடைகிறார்கள்!
இவர்கள் தங்கள் சுயநலத்திற்காகக் கட்டமைத்து வைத்திருந்த எம்.எஸ். அம்மாவின் பிம்பத்தை உடைக்கிறார். இசைக் குயிலாய், காற்றிலே வரும் கீதமாய் வலம் வந்த எம்.எஸ். அவர்களைக் கூண்டுக் கிளியாக்கி, எம்.எஸ்.சின் சுயத்தை அழித்த, அவருடைய கணவர் சதாசிவத்தின் சுயநலத்தை அம்பலப்படுத்தியது தான் பிழையாகிவிட்டது.
தாய் சண்முகவடிவு
உண்மையில் கிருஷ்ணா, எம்.எஸ். அம்மாவை இழிவுபடுத்தி இருந்தால் கூட, இவர்கள் அதற்கு இவ்வளவு ‘ரியாக்ஷன்’ தந்திருப்பார்களா? என்பது தெரியாது. அவர், எம்.எஸ். அம்மாவை ஓர் இசைக் கலைஞராக உள்ளார்ந்து உள்வாங்கி, உன்னதமான நிலையை எட்டி இருக்க வேண்டிய எம்.எஸ்.எஸ்சின் வளர்ச்சியைத் தடுத்து, அவருக்கு புனிதப்படுத்தப்பட்ட பிம்பத்தைக் கட்டமைத்து, அவரை தெய்வீகப் பொம்மையாக வலம் வர வைத்த கயமையைத் தோலுரித்துக் காட்டியது தான் இவர்களுக்குப் பிரச்சனை.
‘‘எம்.எஸ்.சுப்புலட்சுமி – டி.எம்.கிருஷ்ணா விவகாரத்தில் தற்போதைய ‘‘பிராமணர்’’ சமூகம் இரு கூறாகப் பிரிந்து எதிர் எதிர் நிலை எடுத்துள்ளது என்றே கூற வேண்டும்.
‘‘எம்.எஸ்.எஸ். குறித்து கிருஷ்ணா ‘கேரவான்’ இதழில் எழுதியதிலோ, எம்.எஸ்.எஸ் அவர்களின் நூல் வெளியீட்டில் பேசியதிலோ எந்தத் தவறும் இல்லை. காலங்கடந்தேனும் சில யதார்த்தங்களை நாம் ஏற்க மறுப்பதில் நியாயமில்லை’’ எனச் சொல்பவர்கள் மியூசிக் அகாதெமி மற்றும்
‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் குழுமத்தினர்.
ஜி.என்.பாலசுப்பிரமணியம், எம்.எஸ்.சுப்புலட்சுமி
‘‘அய்யகோ உண்மைகளைப் பேசுவதா? பொய்மையைக் கட்டமைத்து பாதுகாப்புச் சுவர் அமைக்காவிட்டால், நாம் கட்டமைத்த பிம்பம் கலைந்துவிடாதா?’’ என்போர் பழமைவாதிகள்- இவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர் துக்ளக் குருமூர்த்தி.
இந்தப் பிற்போக்குக் கூட்டத்தினர் கிருஷ்ணா விற்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான ‘சங்கீத கலாநிதி’ விருதை தரக் கூடாது என நெருக்கடி தந்து பிரச்சினையாக்கியதால் இந்த ஆண்டு மியூசிக் அகாதெமியில் ஆண்டு விழா நடத்துவதற்கு ‘துக்ளக்’ நிருவாகத்தினர் தந்த முன் பணத்தைத் திருப்பித் தந்துவிட்டது மியூசிக் அகாதெமி. அதற்குப் பழி தீர்க்கும் விதமாக இந்தக் கூட்டத்தினர் எம்.எஸ்.எஸ்சின் வளர்ப்புப் பேரனைத் தூண்டிவிட்டு, நீதிமன்றம் சென்று, ‘கிருஷ்ணாவிற்கு, எம்.எஸ். பெயரில் விருது தரக் கூடாது’ என தீர்ப்பைப் பெற்று விட்டனர்.
ஆனால், உண்மையில் நீதிமன்றம் சில உண்மைகளைக் கவனிக்கத் தவறிவிட்டது என்பதே உண்மை! இதோ அந்த உண்மைகளை நாம் வெளிப்படுத்துவோம்.
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தாய் சண்முகவடிவு.
கணவர் சதாசிவத்துடன்
எம்.எஸ்.சுப்புலட்சுமி
எம்.எஸ்.சுப்புலட்சுமி என்ற குஞ்சம்மா ஒரு பிறவி இசைமேதை! காரணம், அவரது குடும்பமே ஒரு இசை வேளாளர் குடும்பமாகும். அவரது பாட்டி அக்கம்மா ஒரு வயலின் கலைஞர், தாயார் சண்முக வடிவோ ஒரு பிரபல வீணைக் கலைஞர். இந்தப் பின்னணியில் குழந்தைப் பருவத்திலேயே குஞ்சம்மா கேட்பவர் மயங்கும் இசைப் பாடகியாக இருந்தார்.
10 வயதில் அவர் பாடிய ’மரகத வடிவும், செங்கதிர் வேலும்’ என்ற முருகன் பாடல், கிராமபோன் ரெக்கார்ட் விற்பனையில் சாதனைப் படைத்தது!
11 வயதில் பொது நிகழ்வில் பாடத் தொடங்கி, 13 வயதிலேயே தமிழகம் அறிந்த வரவேற்புக்குரிய பாடகியானார். இதனால் அவரது பதினாறு, பதினேழு வயதுள்ள பதின்மப் பருவத்திலேயே சென்னை மியூசிக் அகாதெமியில் அவர் பாடுகிறார் என்றால், கூட்டம் அலை மோதும் அளவுக்கான சொந்தக் கச்சேரியை நடத்தினார். 20 வயதில் அன்றைய புரட்சிகர இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் சேவாசதனம் படத்தில் நடித்துப் புகழ் பெற்ற கதாநாயகியானார்.
இந்தப் படத்தில் நடிப்பதற்காக தன் தாயைப் பிரிந்து தன்னந்தனியாக மதுரையில் இருந்து சென்னை வந்தவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. அந்த அளவுக்கு வாழ்க்கை குறித்த சுய தேடலும், தன் நம்பிக்கையும் அவரிடம் இருந்துள்ளது.
1940இல் சகுந்தலை என்ற படத்தை சதாசிவம் தயாரிக்கிறார். அதில் துஷ்யந்தனாக நடித்தவர் பிரபல சங்கீத மேதையும், அன்றைய பிரபல கதாநாயகனுமான ஜி.என்.பாலசுப்பிரமணியம். இந்த ஜோடிக்குள் ஒரு நெருக்கமும், பிணைப்பும் உருவாகிறது. பார்ப்பனரான ஜி.என்.பிக்கு தன் சமூகம் இந்தத் திருமணத்தை அங்கீகரிக்குமா என்ற தயக்கம் இருந்தது. எம்.எஸ்.எஸ்சின் காதல் கடிதங்கள் அவரது மனதை உருக்கினாலும் தடுமாறினார்.
சதாசிவத்திற்கு ஆரம்பம் முதலே எம்.எஸ்.எஸ். மீது ஆசை இருந்தது. ஆனால், அவர் திருமணமானவர் என்பதால் அது தடையாக இருந்தது. இந்தப் படப்பிடிப்பின் போதே சதாசிவத்தின் மனைவி இறந்து விடவே, அவர் அவசர, அவசரமாக திருநீர்மலைக்கு அழைத்துச் சென்று எளிய முறையில் திருமணத்தை நடத்தி, எம்.எஸ்.எஸ்சை உரிமையாக்கிக் கொண்டார்.
இதற்கிடையில் ஆனந்தவிகடனில் விளம்பர நிருவாகியாக இருந்த பிசினஸ்மேன் சதாசிவம் தன் நண்பர் கல்கியோடு பிரிந்து வந்து தனிப் பத்திரிகை தொடங்கும் போது, ‘சாவித்திரி’ என்ற படத்தில் நடித்து, எம்.எஸ்.எஸ். தந்த பணத்தைக் கொண்டே கல்கி
இதழைத் தொடங் கினார்.
அதற்குப் பிறகு மீராவில் எம்.எஸ்.எஸ். நடித்தபோது, இசை அமைப் பாளர் எஸ்.வி. வெங்கட்ராமனாக இருந்தாலும், தன்னுடைய பாடலுக்கான மெட்டை அவரே உருவாக்கிப் பாடினார். காற்றினிலே வரும் கீதம் போன்ற அத்தகு பாடல்கள் இன்றளவும் பிரபலமாக உள்ளன. இதே படம் இந்தியிலும் வெளியாகி அகில இந்தியப் புகழ் பெறுகிறார். ஆனால், அதற்குப் பிறகு சதாசிவம் எம்.எஸ்சை நடிக்க அனுமதிக்கவில்லை.
மீரா படத்தில் கிருஷ்ணன் புகழ் பாடும் மீரா பஜனை பாடல்களைப் பாடி, புகழ்பெற்ற எம்.எஸ்.எஸ்சை பக்திப் பாடல்களுக்கான ஸ்பெசலிஸ்ட்டாக்கி, பஜ கோவிந்தம், விஷ்ணு சகஸ்ரநாமம், சுப்ரபாதம்.. ஆகிய இசைத் தட்டுகளைக் கொண்டு வந்தது தொடங்கி, கச்சேரிகளுக்கு ‘கால்ஷீட்’ தருவது தொடங்கி என்னென்ன பாடல்களைப் பாட வேண்டும் என்பது வரை அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, எம்.எஸ்.எஸ்சை வெறும் பதுமையாக்கி
வைத்து விட்டார் சதாசிவம். எம்.எஸ்.எஸ்சுக்கு ‘அப்பழுக்கற்ற ஒரு பிராமண இல்லத்தரசி’ என்ற தோற்றத்தைக் கட்டமைத்தார் சதாசிவம்.
இதனால், தான் பிறந்த குலத்தின் தொடர்புகளை முற்றிலும் துண்டித்துக் கொண்டு, தன் புகழாலும், கொட்டோ கொட்டு என்று கொட்டிய வருமானத்தாலும் தான் சார்ந்த சமூகத்திற்கு ஏதொன்றும் செய்ய முடியாதவராகிப் போனார் எம்.எஸ்.சுப்புலட்சுமி. இது எந்த அளவுக்கு
அவரைப் பாதித்து இருக்கும்! எம்.எஸ்.எஸ். அவர்கள் 1944லேயே இசைக் கச்சேரிகள் மூலம் இரண்டு கோடிகள் திரட்டித் தந்தவர். இப்படி வாழ்நாளெல்லாம் பல நூறு கோடிகள் சம்பாதித்தார். அதை அவர் கணவர் சதாசிவமே நிர்வகித்தார். இதில் பெருமளவு பயன் பெற்றவர்கள் பிராமண குலத்தாரே!
ஏனென்றால், அவரது இளம் பருவத்தில் அவர் பிரபல நாட்டிய மேதையும், தன்னுடைய இசை வேளாளர் குலத்தைச் சேர்ந்தவருமான பாலசரஸ்வதியுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார் எம்.எஸ்.எஸ். இந்த இருவரும் சேர்ந்து அடிக்காத லூட்டியில்லை. அன்றே நைட் டிரஸ்சில் எம்.எஸ்.எஸ். பாலசரஸ்வதியுடன் சேர்ந்து சிகரெட்டை வாயில் வைத்தபடி புகைப்படம் எடுத்துள்ளார் என்றால், என்ன சொல்வது?
நாட்டிய மேதை பாலசரஸ்வதியும், இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமியும்!
பாலசரஸ்வதி என்ற மாபெரும் நாட்டிய மேதை கடைசி வரை தன் சுயத்தை இழக்கவில்லை. ‘சதிராட்டம்’ என்ற தங்கள் தாசி குலத்தின் நாட்டியத்தைத் தங்களிடமே எடுத்து, அதற்குப் ‘பரத நாட்டியம்’ என்ற புதுப் பெயர் சூட்டி, மேட்டுக்குடி கலாச்சாரத்திற்கானதாகவும், வர்த்தக லாபமீட்டும் தொழிலாகவும் மாற்றிய ருக்குமணி அருண்டேலின் பித்தலாட்டத்தை பாலசரஸ்வதி ஏற்கவில்லை. இந்திய திரையுலக மேதை சத்யஜித்ரே அவர்கள் பாலசரஸ்வதி பற்றி ஆவணப்படம் ஒன்று எடுத்தார். ‘‘பாலசரஸ்வதி உண்மையான நாட்டியக் கலையின் வடிவம்’’ என்றார்.
‘அவரது நாட்டியத்தில் உள்ள நளினத்தையும், உயிர்ப்பையும் வேறெவர் நாட்டியத்திலும் பார்க்க முடியாது’ என அன்றைய நாளில் பார்த்தவர்கள் போற்றினார்கள். அவர் மட்டும் பார்ப்பனர்களோடு சமரசம் செய்து கொண்டிருந்தால், இன்றைய கலாக்ஷேத்திராவின் நிறுவனராக ருக்குமணி அருண்டேல் இருந்திருக்க முடியாது. எம்.எஸ்.எஸ். எப்படி கர்நாடக இசையின் அடையாளமாகி புனிதப் பிம்பம் பெற்றாரோ, அது போல பரத நாட்டியக் கலையின் ‘‘தெய்வீக’’ வடிவமாகக் கொண்டாடப்பட்டு இருப்பார் பாலசரஸ்வதி.
அவர் தான் ‘பரதநட்டியம் என்ற பித்தலாட்டப் பெயர் சூட்டலையே’ எதிர்த்தாரே! அதனால், தான் பாலசரஸ்வதி அவர்கள் கடைசிக் காலத்தில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, வறுமையில் வாட நேர்ந்தது. ஆனால், கடைசி வரை சுயத்தை இழக்காமல், சமரசத்திற்கு ஆளாகாமல் கம்பீரமாக வாழ்ந்து மறைந்தவர் பாலசரஸ்வதி.
ஆனால் எம்.எஸ்சின் நிலை என்ன..?
‘‘ஒரு கலைஞர் தன் கலையில் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டால் தான் உன்னதச் சிகரங்களை விரும்பியபடி தொட முடியும். அது எம்.எஸ்.எஸ்.க்கு வாய்க்கவில்லை. இங்கு தான் எம்.எஸ்.எஸ். குரலில் முன்பிருந்த கட்டற்ற தன்மை காணாமல் போனதாக கிருஷ்ணா சொல்கிறார். அது சுதந்திரமாகப் பறந்து கொண்டிருந்த பட்டத்தின் மீது ஒரு கல்லைக் கட்டிவிட்டதைப் போல இருந்தது…! இதில் அவரது இசையின் ஆதாரத் தன்மை பாதிக்கப்பட்டது. மீராவுக்குப் பிறகு இந்தியா முழுமையிலும் கிட்டதட்ட ஒரு துறவி போல ஆகிவிட்ட அவரது புதிய அந்தஸ்தை அவரது இசை பிரதிபலிக்க வேண்டி இருந்தது. தமது சமகாலத்தவரான டி.கே.பட்டம்மாள் கர்நாடக இசைக் கச்சேரிகளில் தன் விருப்பப்படி பாடுவதைப் போல, எம்.எஸ்.எஸ். அவர்களால் பாட முடியாமல் போனது.
கணவரின் விருப்பப்படியும், கச்சேரிகளில் வந்து உட்காரும் அதிகார மய்ய பிரபலங்களின் ஆசைகளை நிறைவேற்றத் தக்க வகையில் அதிரடியாகக் கணவர் இடும் கட்டளைகளை ஏற்றுப் பாட வேண்டியவராகவும் எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்ட போது, ஒரு கலைஞராக அவர் மனம் எப்படித் துன்புற்று இருக்குமோ தெரியவில்லை!’’ என்கிறார் கிருஷ்ணா.
‘‘அவரது வாழ்க்கை எப்போதும் வேறொருவரின் கட்டுப்பாட்டில் இருந்திருக் கிறது. அவர் கணவர் சொல்வதைச் செய்வதற்
காகத் தன் தனிப்பட்ட ஆளுமையை விட்டுக் கொடுத்தார். அவரால் தன் சுயத்தை முழுமை யாக வெளிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. எம்.எஸ்.எஸ்.ஸின் கணவரான சதாசிவம் கட்டமைத்த பிம்பமே அவர் மீது படர்ந்திருந்தது. அதற்குள்ளாகவே அவர் வாழ்ந்தார். இசை சார்ந்து அவர் ஒரு பாதுகாப்பான அறைக்குள் பூட்டப்பட்டிருந்தார். சதாசிவம், ராஜாஜியின் சுதந்திரா கட்சியின் அதிகார வட்டாரங்களில் பிரபலமானவர். இதனால், எம்.எஸ்.எஸ். தன் கணவர் ஏற்பாடு செய்த கூட்டங்களில் தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தார்.
தனது மிகப் பெரிய இல்லமான கல்கி தோட்டத் திலும், அதிகார வட்டத்தினர் இல்லங்களுக்கும் சென்று எம்.எஸ்.எஸ். பாடினார். பல பெரும்
புள்ளிகளை மகிழ்விப்பதற்காக இந்தக் கச்சேரி ஏற்பாடுகள் பெரும்பாலும் இருந்தன. எம்.எஸ்.எஸ்.ஸின் இயக்குநரும், திரைக்கதாசிரியரும் அவரின் கணவர் சதாசிவம்தான். ஒரு கச்சேரியில் எந்த ராகத்தைப் பாட வேண்டும், எந்தப் பாடலைப் பாட வேண்டும் என்பதையெல்லாமும் சதாசிவமே தீர்மானித்தார். கச்சேரி நடக்கும் போதே சதாசிவத்திடமிருந்து உத்தரவுகள் வரும். எம்.எஸ்.எஸ்.ஸை அறிந்தவர்கள் இந்தக் குறுக்கீடுகள் அவரைத் தொந்தரவு செய்ததாகத் தெரிவித்தார்கள். எம்.எஸ்.எஸ். போன்றதொரு கலைஞரை, இசைக் கலைஞராக அல்லாத ஒருவர், அவர் கணவராகவே இருந்தாலும், அவரைக் கட்டுப்படுத்தியது ஏற்றுக் கொள்ளவே முடியாது’’ என்கிறார் கிருஷ்ணா.
எம்.எஸ்.எஸ். மன உறுதி மிக்கவர். வலிமையானவர். கவனக் குவிப்பும் அர்ப்பணிப்பும் துணிச்சலும் கொண்டவர். அன்பும் பணிவும் மிகுந்தவர். சிறிதும் கடுமை காட்டாமல் மென்மையாகப் பேசுபவர். யாருக்கும் எந்தத் தீமையும் நினைக்க மாட்டார். அவரின் சிரிப்பு அவர் இருக்குமிடத்தை ஒளிரச் செய்யும். முழுமையான ஈடுபாட்டுடன் எம்.எஸ்.எஸ். பாடும்போது அவர் கண்களை மூடிக் கொள்வார். தம்மில் கரைந்து விடுவார். அவரின் இசை நம்மை எப்போதும் வசீகரிக்கத் தவறியதில்லை. அதே நேரம் அந்த இசையரசி ஒரு பெரும் புதிராகவும் இருந்தார்..!?
எம்.எஸ்.எஸ்.ஸை யாராலும் எளிதில் அணுக முடியாது. அவர் துன்புற்ற ஆத்மா அல்ல. ஆனால், அவருக்குள் ஒரு சோகம் எப்போதும் குடியிருந்தது. அவரது வாழ்வில் செலுத்தப்பட்ட கட்டுப்பாடுகளால் அந்தச் சோகம் அவருக்குள் உருவாகியிருக்கலாம்’’ என்கிறார் கிருஷ்ணா.
என்னைப் பொறுத்தவரை மூத்த பத்திரிகையாளர்கள் சிலர் அந்தக் காலத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமியைப் பேட்டி எடுக்கச் செல்லும்போது, பக்கத்திலேயே அமர்ந்து சதாசிவம் கடுமை காட்டிய அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர். அதே போல பிரபல எழுத்தாளர் நா.பார்த்தசாரதி கல்கி இதழில் இருந்து வெளி வந்து, ‘என் ராஜினாமா’ என்ற தலைப்பில் ‘தாமரை’ இதழில் எழுதினார். பின் நாளில் இது புத்தகமாகவே வெளி வந்தது. அதில் கல்கி நிறுவன முதலாளி தன் மனைவியை ‘சோரம் போனவள்’ எனக் குறிக்கும் வகையில் ஆபாச அர்ச்சனை செய்து கொண்டே, வெளியில் புனித பிம்பத்தைக் கட்டி அமைத்ததை அம்பலப்படுத்தி இருந்தார்.
இன்றைக்கு மிக நல்ல மனிதராக அறியப்பட்ட புகழ்பெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு தன் கணவரிடம் இருந்து பிரிந்து தனித்து வாழும் முடிவை எடுக்கிறார். என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியாது. ஆனால், அவரது சுதந்திரத்தை அவரது கணவரான ரகுமானும், இந்தச் சமூகமும் கேள்வியில்லாமல் ஏற்கிறது. இது போன்ற சூழல் எம்.எஸ்.எஸ். வாழ்ந்த காலத்தில் இல்லை. இருந்திருந்தால் அவர் என்ன முடிவு எடுத்திருப்பாரோ?
தனக்குக் கட்டமைக்கப்பட்ட ‘தெய்வீக பிம்பத் திற்காகத் தன் சுயத்தை இழக்கும் தியாகத்திற்கு’ உடன்பட்டிருப்பாரா? அல்லது ‘உண்மையான சுயமே முக்கியம்’ எனத் தீர்மானித்திருப்பாரா? தெரியவில்லை! ’’இங்கே உண்மைகள், யதார்த்தங்கள் தேவையில்லை. எங்கள் பிழைப்புக்குச் சவுகரியமாக நாங்கள் கட்டமைத்த பிம்பத்தைக் கலைப் பாயோ’’ என்பதுதான் இந்தப் பிற்போக்குக் கூட்டத்தின் கோபத்திற்குக் காரணமாகும்.