ஈ.ரோட்டுப் பாசறையில் இணைந்து செல்வோம்! – முனைவர் கடவூர் மணிமாறன்

2024 கவிதைகள் டிசம்பர் 16-30 2024

அசையாத பேரிமயம் பெரியார்! வீணர்
அடிபணியாத் தன்மான முரசம் ஆர்த்தார்!
விசையொடிந்த தோள்தம்மை வீறு கொள்ள
விளக்கங்கள் பலதந்தார்; பழமை வீழ்த்தி
வசையாளர் மனம்திருந்தி நன்மை எய்தும்
வழிமுறைகள் பகுத்தறிவால் நல்கி மக்கள்
இசைபெறவே இருவிழிகள் திறக்கச் செய்த
ஈரோட்டுப் பாசறையில் இணைந்து செல்வோம்!
பகுத்தறிவின் உயர்மாண்பைப் பரப்பி வந்த
பரிதியென நம்அய்யா திகழ்ந்தார்! நூலோர்
வகுத்துரைத்த மனுதரும வேத நஞ்சோ
வண்டமிழர் வளவாழ்வை அழிக்கும் என்றே
மிகத்தெளிவாய் எடுத்துரைத்தார்! தமிழர் வாழ்வின்
மேன்மைக்குக் குரல்தந்தார்! மகளிர் எல்லாம்
அகம்குளிரச் சொத்துரிமை கிடைக்கச் செய்த
அய்யாவின் தொண்டறத்தை மறக்கப் போமோ!
சாதிமதப் புரட்டுகளை ஏற்க வேண்டா!
சாத்திரங்கள் என்பதெலாம் சழக்கர் ஏய்க்கும்
தீதென்றார்! கொடிதென்றார்! ஆரி யத்தைத்
தீண்டவரும் நச்சுப்பாம் பென்றார்! நம்மை
மோதிடவும் மிதித்திடவும் முனைந்தோர் ஏற்ற
முடைநாற்ற மடமையினை ஒதுக்கித் தள்ளி
ஏதமிலாப் பெருவாழ்வு வாழ்வோம் என்றே
இனமான வரலாற்றுப் பெருமை சொன்னார்!
விடுதலையில் குடிஅரசில் விளக்கம் தந்தார்
வீறார்ந்த அரிமாவாய் மேடை தோறும்
நடுங்காமல் நற்றமிழர் வாழ்வில் மாற்றம்
நனிசிறக்க நல்லுணர்வை விதைத்து வந்தார்!
மிடுக்குறவே அய்யாவின் நினைவு நாளில்
மீட்பரெனத் திராவிடத்தின் ஆட்சி யாளர்
துடிப்போடு செயலாற்றத் துணையாய் நிற்போம்!
தொடர்கின்ற வஞ்சத்தை வீழ்த்து வோமே!