குமரிக்கண்டம் பற்றிய வரைபடங்களும் குற்றம் சுமத்தும் கூட்டமும்

2024 சிறந்த நூல்களிலிருந்து சில பக்கங்கள் செப்டம்பர் 16-30-2024
நூல் குறிப்பு
நூல் பெயர் : கடலடியில் தமிழர் நாகரிகம்
ஆசிரியர் : என். நந்திவர்மன்
வெளியீடு :உலகத் தமிழாராய்ச்சி 
நிறுவனம், தரமணி, சென்னை.
பக்கங்கள் : 116; விலை : ரூ.55/-
உருசிய ஆய்வறிஞர் அலைக்சாண்டர் கொந்திராதோவ் எழுதிய The Riddle of Three Oceans (1974) நூலின் தமிழாக்கம் 1981இல் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் வெளியிடப்பட்டது. தமிழின் தாயகம் கடல் கொண்ட குமரிக்கண்டமே என மொழி நூலறிஞர் தேவநேயப் பாவாணர் முழங்கினார். பொள்ளாச்சி நா.மகாலிங்கம் பேருரை ஆற்றினார். சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத் தலைவர் கே.கே.பிள்ளையும், ‘‘உலகின் மூத்தகுடி தமிழன் என்பது இனவெறியால் எழுந்த வாதமல்ல; கடலியல் நிபுணர்களும் இனவியலாரும் இலெமூரியாக் கோட்பாட்டை முன் வைத்துள்ளதால் அது பொருள் பொதித்த வாதமே!’’ என்றும் பேசினார்.
குமரிக்கண்டம் எவ்வாறு இருந்திருத்தல் கூடும் என யூகித்துத் தமிழ் அறிஞர் பெருமக்கள் வரைந்து வெளியிட்ட வரைபடங்கள் மீது சுமதி இராமசாமியின் கவனம் பாய்கிறது. இவற்றைப் பட்டியலிடுகிறார்.
முதன்முதலாகத் தமிழிலக்கிய இதழான செந்தமிழில் 1916இல் சுப்பிரமணிய சாத்திரி என்பவர் குமரிக்கண்டம் பற்றிய கருத்தியலைக் கேலி செய்ய ஒரு வரைபடத்தை வெளியிட்டார் என்று சுமதி இராமசாமி சொல்கிறார். அரசன் சண்முகனார் (1868-1915) அடியார்க்கு நல்லாரின் சொல்லோவியத்துக்குக் கற்பனை வடிவம் தந்தாராம். அதை வரைபடமாக்கிய சுப்பிரமணிய சாத்திரி 49 நாடுகளோ 700 காததூரமோ கொண்ட பெரு நிலப்பரப்பு கடலில் மூழ்கி இருக்க முடியாது; ஒரு வட்டம் (தாலுகா) என்ற அளவில்தான் நிலம் கடலால் கொள்ளப்பட்டு இருக்கும் என்று கருதுவதாகச் சுமதி இராமசாமி பதிவு செய்கிறார்.
அய்ரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இலெமூரியா பற்றிய வரைபடங்கள் பெயரில்லாமல் இருந்தனவாம். தமிழ் இலக்கியங்கள் கூறிய இழந்த நாடுகளின் பெயரைப் பெயரில்லா அந்த வரை படங்கள் மீது பொருத்திக் கட்டுக் கதைகள் கட்டிவிட்டனராம் தமிழ் அறிஞர்கள்.
1927இல் கடற்கோளுக்கு முந்தைய புராணக்கால இந்தியா, கடற்கோளுக்குப் பிந்தைய புராணக்கால இந்தியா என இரு வரை படங்கள் வெளிவந்தனவாம். 1946இல் இராவாண காவியம் எழுதிய புலவர் குழந்தை பழைய தமிழகம் பற்றிய வரைபடத்தை வெளியிட்டார். பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்கள் 1981இல் வெளியிட்ட வரைபடம் கி.மு. 30,000இல் இந்தியா என்று ஆங்கிலத்தில் சொல்லியதாம். கடல் கொண்ட குமரி நாடு பற்றிய வரைபடத்தை முனைவர் இரா. மதிவாணன் 1977இல் வெளியிட்டார். இப்படி பல வரைபடங்கள் பற்றிக் கூறும் சுமதி இராமசாமி ஆங்கிலத்தில் 1993இல் Lemuria-of the lost Kumari Continent or Navalam Island என்ற தலைப்பிட்ட படத்தைப் பார்த்ததும் கிண்டல் செய்ய எண்ணம் ஏற்படுகிறது எனச் சொல்கிறார். அய்ரோப்பியரின் அறிவியல் கண்டுபிடிப்பு இலெமூரியா, தமிழர்களின் இலக்கியமும் நிகண்டுகளும் கூறும் பெயர் நாவலந்தீவு, வடமொழிப் புராணங்கள் கூறும் ஜம்புத்தீவு மூன்றையும் மூலமாகக் கொண்டு குமரிக் கண்டம் பற்றிக் கற்பனையில் ஓவியம் தீட்டி விட்டார்கள் என்று சாடுகிறார்.
இப்படி பலர் திருப்பாற்கடல் எங்கிருந்தது என்று தேடாமல், கடலுள் மூழ்கிய குமரிக் கண்டத்தைத் தேடுவது சுமதி இராமசாமிக்குச் சோகத்தைத் தருகிறது.
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை (1907-1989) முதலில் 1941இல் குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு என்ற நூலை வெளியிட்டு அதில் குமரிக் கண்டம் பற்றிய படத்தை வெளியிட்டார்.
Lemuria: Ancient State, Lemuria: Shrunken State என 1904இல் இலெமூரியாக் கண்டம் ஏறக்குறைய உலகம் முழுவதும் பரவிய கண்டமாக ஸ்காட் எலியட் என்பவர் வெளியிட்ட வரைபடத்தில் பெயரிடாமல் விட்டுவிட்ட இடத்துக்குத் தமிழ் இடந்தேடிகள் குமரிக்கண்டம் என்று பெயரிட்டுவிட்டதாகச் சுமதி இராமசாமிக்கு ஆழ்ந்த வருத்தம். அதை நூலாக்கிப் பதிவு செய்துள்ளார். ஆய்வறிஞர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள் மீது தமிழிலக்கியங்கள் கூறும் கடற்கோளை, தமிழர் இழந்த நிலப்பரப்பைச் சுமத்தித் தமிழ் வரலாற்றுக்கு இடந்தேடியவர்கள் கட்டமைத்துவிட்டார்கள் எனச் சுமதி இராமசாமிக்குத் தாங்க முடியாத எரிச்சல். அதை எழுத்தாக்கிவிட்டார்.
ஸ்காட் எலியட் வரைந்த பெயரிடாத கண்டத்துக்குக் குமரிக்கண்டம் என்று பெயர் புனைந்து பன்மொழிப்புலவர் அப்பாத்துரை 1940இல் உருவாக்கிய வரைபடம் தமிழ்ப்பாட நூல்களில் இடம்பெற்றுவிட்டது. 1975இல் கல்லூரிப் பாடப் புத்தகத்திலும் இடம்பெற்றுவிட்டது. தமிழ்நாடு அரசு இப்படி வரலாற்றுக் கற்பனையை மாணவர்கள் மனதில் விதைக்கிறதே என அம்மையார் வருத்தப்படுகிறார்.
கடற்கோள் நிகழவில்லை; அதில் குமரிக்கண்டம், அமிழ்ந்து விடவில்லை என்று சொல்லவில்லை சுமதி இராமசாமி. கடற்கரை ஓரங்களைக் கடல் கொண்டது. ஒரு தாலுக்கா அளவே தமிழ் நிலத்தைக் கடல் கொண்டது. ஒரு தாலுக்கா அளவே தமிழ் நிலத்தைக் கடல் ஏப்பமிட்டது என்று சுப்பிரமணிய சாத்திரி 1916இல் எந்த ஆய்வுக் கருவியும் இன்றி யோக நிலையில் ஆழ்ந்து சொன்னாரோ என்னவோ அதையே வேதவாக்காக எண்ணி வழிமொழிகிறார் சுமதி இராமசாமி.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் புவி அறிவியல் பள்ளியின் ஆய்வுகளை இனிப் பார்ப்போம்.
சோழர்களின் புகழ் பெற்ற பூம்புகார் துறைமுகம் தற்போது கடலடியில் உள்ளது. அதே சமயத்தில் முன்னொரு காலத்தில் கடற்கரை ஓரம் இருந்த சீர்காழி நகரம் தற்போது கடற்கரையில் இருந்து பல மைல் தூரம் உட்தள்ளி உள்ளது. இவை தமிழகக் கடற்கரை ஓரத்தில் ஏற்பட்ட கடல்மட்ட மாறுதல்கள் பற்றிய சரித்திரப் பூர்வமான ஆதாரங்களாகும்.
1. சென்னையில் இருந்து சத்தியவேடு வரை காணப்படும் கடலால் உருவாக்கப்பட்ட மணல் திட்டுகள்
2. நேராகப் பாயும் பாலாறு ஆற்றில் செங்கல்பட்டுக்கு அருகில் காணப்படும் திடீர் வளைவு
3. கடலைச் சந்திக்காமல் திருவெண்ணெய் நல்லாறு அருகே புதையுறும் மலட்டாறு நதி
4. வேதாரண்யம் பகுதியில் திருத்துறைப்
பூண்டி வரை காணப்படும் கடலால் ஏற்படுத்தப்பட்ட மணல் திட்டுகள்
5. வைகை நதியில் காணப்படும் மூன்று கழிமுகங்கள்
என்றுள்ள இயற்கை மாற்றங்கள் மூலம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை வரை கடல் பரவி இருந்தது என்பது தெளிவாக விளங்குவதாகத் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் புவி அறிவியல் பள்ளி சொல்கிறது.
இப்போதுள்ள தமிழ்நாட்டில் கிடைக்கும் இயற்கைச் சான்றுகள் கொண்டு புவி அறிவியல் பள்ளி இம்முடிவுக்கு வருவதை உணர வேண்டும்.
தமிழ்நாட்டுக் கடற்கரை ஓரம் காணப்படும் கோண்டுவானாப் பாறைகளும் (290 மில்லியன் ஆண்டுகள்) கிரிடேசியசுப் பாறைகளும் (70 மில்லியன் ஆண்டுகள்) டெர்டியரிப் பாறைகளும் (7 மில்லியன் ஆண்டுகள்) மேற்சொன்ன தகவல்களை உறுதி செய்வதோடு பல ஆண்டுக்கு முன்பிருந்தே கடல் மட்டம் இப்பகுதியில் உயர்ந்தும் தாழ்ந்தும் இருந்து வந்துள்ளது உறுதியாகிறது என்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொலையுணர்வு மய்ய இயக்குநர் சோம.இராமசாமி ‘கடல் மட்ட மாறுதல்களும் தமிழக கடலோரத்தின் எதிர்கால நிலையும்’ என்ற கட்டுரையில் பதிவு செய்துள்ளார் (தமிழக அறிவியல் பேரவை 3வது கூட்டம் 1994 மலர்.)
தமிழ்நாட்டுக் கடற்கரையோரப் பாறைகள் பல இலட்சக்கணக்கான ஆண்டுகள் பழமையானவை. அவற்றுக்குப் பெயரிடும் முன்பு சோம.இராமசாமியைக் கலந்து ஆலோசிக்காமல் கோண்டுவானாப் பாறைகள் என்று பெயரிட்டுவிட்டார்கள்.
ஆசுத்திரிய நிலவியல் நிபுணர் எட்வர்டு சூயசு தென்னமெரிக்காவையும் ஆப்ரிக்காவையும் இந்தியாவையும் ஆஸ்திரேலியாவையும் இணைக்கும் பாலம் இருந்தது என உணர்ந்தார். இத்துணைப் பகுதிகளையும் உள்ளடக்கிய மாபெரும் கண்டத்துக்குக் கோண்டுவானா என்று பெயரிட்டார்.
Glossopteris என்று Botanical name சூடிய செடி இந்தியாவெங்கும் காணப்பட்டது. இதே வகைச் செடி தென்னமெரிக்காவிலும் காணப்பட்டது. இந்தியாவில் கோண்டு இனப் பழங்குடி மக்கள் வாழும் மாவட்டங்களில் இச்செடி காணப்பட்டமையால் அதை ஒட்டி மாபெருங்கண்டத்துக்குக் கோண்டுவானா என்று பெயரிட்டார். கோண்டுவானாவே இலெமூரியா. இலெமூரியாவே குமரிக்கண்டம்.
கோண்டுவானாப் பாறைகளின் காலம் 290 மில்லியன் ஆண்டுகள் எனத் தமிழ் அறிஞர்களா வரையறை செய்தனர்? இல்லையே! ‘‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடி’’யெனத் தமிழ் அறிஞர்கள் பெருமிதமுடன் முழங்கும் இலக்கிய வரிகள் பொய்யெனப் புகலும் கூட்டம் தமிழ்நாட்டுப் பாறைகள் 290 மில்லியன் ஆண்டுப் பழமை வாய்ந்தவை என்ற அறிவியல் முடிவால் வாயடைத்து நிற்கும். புறப்பொருள் வெண்பாமாலைப் பாடல் அறிவியல் உண்மையைக் கவிதை நடையில் சொன்ன சிறப்புடையது என உலகுணரும்.
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே உதித்த தமிழர்களிடம் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியம் இல்லை. என்சைக்ளோ பீடியா ஆஃப் ராக்சு அண்டு மினரல்சு என ஆங்கில மொழியில் உள்ளது. எனவே தமிழன் சொன்னது தவறு என ஆகிடுமா? காலம் மெய்ப்பித்தது. அறிவியல் கல்லின் காலத்தைக் கணக்கிட்டது. தமிழரின் பழமையைத் தமிழ்நாட்டுப் பாறைகளே உலகுக்கு மெய்ப்பிக்கின்றன.
சோம. இராமசாமி அவர்கள் கூற்றுப்படி சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகள் முன்பு கடல் மதுரை வரை பரவி இருந்தது. சுமார் 90,000 ஆண்டுகள் முன்பு சென்னை, வேதாரண்யம், புதுச்சேரி ஆகியவை கடலால் சூழப்பட்டிருந்தன. ஏறத்தாழ 65,000 ஆண்டு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தன. 27,000 ஆண்டு முன்பு கடல் மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன என்கிறார்.
என்னென்ன மரங்கள் இருக்குமிடத்திலும் புல்வரை இருக்குமிடத்திலும் புற்றுகள் இருக்குமிடத்திலும் நீர் கிடைக்கும் எனப் பைந்தமிழ்ப் பாவலன் தமிழரின் நீரியல் அறிவைப் பதிவு செய்துள்ளான்.
‘‘பருமரக் கருஆல் அத்தி பாற்கொடி
மருதுடன் இலுப்பையும் வஞ்சிமாப் புளி
தருநொச்சி இத்தி ஏழ்பாளை புங்கோர்
கருமொய்த்த எறும்பு விளங்கு காணுமே’’
என்று மரங்கள் இருக்குமிடத்தில் நீர் இருக்குமெனப் பதிவு செய்துள்ளது.
‘‘காணும் வெண்புல் கரும்புல் கருஞ்சடை
தோறு செங்கோல் அணுகு குறுந்தொட்டி
தாணு + தெற்பை சிறுபீளை சாரணை
வெங்கோரை பொடுதலை வெள்ளமே’’
என்று புல்வகைகள் இருக்குமிடத்தில் நீர் இருக்கும் என 19ஆம் நூற்றாண்டுப் பாடல் சொல்கிறது.
சஞ்சீவி பர்வதத்தினின்று இலக்குவனைக் காக்கக்கூடிய மூலிகையை எடுத்துக்கொண்டு எவ்வளவு வேகத்தில் அனுமன் பறந்து சென்றிருக்குக் கூடும் என்ற ஆய்வில் பெர்க்கிலி பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆர்.பி.கோல்டுமென் ஈடுபட்டார். அவரது ஆய்வு முடிவில் மணிக்கு 660 கி.மீட்டர் வேகத்தில் அனுமன் பறந்து வந்து மூலிகை எடுத்துச் சென்றான் என்கிறார் அவர். இந்த ஆய்வு முடிவுகளை அம்மையார் ஏற்பார். ஆனால் கடலில் கண்டெடுக்கப்பட்ட இலெமூரியாவே குமரிக்கண்டம் என்ற இலக்கிய வாணர் கருத்தை ஏற்க மறுப்பார்.
ஆல்பிரட் வெக்கனர் 1912இல் உலக வரைபடத்தை எடுத்து வைத்துக் கொண்டு வெட்டியும் ஒட்டியும் ஒன்றோடொன்று பொருத்திப் பார்த்து ஒன்றாக இருந்தன. உலகின் கண்டங்கள், பிறகு இடப்பெயர்வு நேர்ந்தது என யூகித்தார். அந்த யூகமே மெய்யெனப் பின்னாளில் மெய்ப்பிக்கப்பட்டது. தமிழறிஞர்கள் யூகம் மட்டும் தவறாகிவிடுமா? ஆகவில்லையே! கிட்டிய ஆதாரத்திற்குப் பெயரிடா நிலத்திற்கு இலக்கியப் பதிவு காரணமாகப் பொருத்தமான பெயரைச் சூட்டினார்கள். தமிழர் வரலாற்றை அதன்மீது ஏற்றுவது என இடந்தேடியவர்கள் இலெமூரியாக் கண்டமே குமரிக் கண்டமென உறுதி செய்து கொண்டதாக அவர் கவலைப்படுகிறார்.
பாற்கடலும் அதன்மீது மிதக்கும் பாம்புப் படுக்கையும் பாற்கடலை மத்தாகக் கடைய மேருமலையும் எங்குள்ளன என அத்தகு கூட்டத்தார் தேடிக் கண்டுபிடிக்கட்டும். தொன்மங்கள உண்மையென நிறுவட்டும்! அதற்காக இலக்கியச் சான்றுகள் பொய்யெனப் புகலும் புன்மனம் வேண்டாம். 