1. கே: ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டால், அதை நடைமுறைப்படுத்தாமல் தடுக்க நீதிமன்றம் செல்ல முடியுமா? மக்கள் மன்றம்தான் தீர்வா?
-சுதே.தேவேந்திரன், தூத்துக்குடி.
ப: மக்கள் மன்றமே- எப்போதும்- இறுதித் தீர்ப்புக்கான சரியான இடம்; பற்பல நேரங்களில் உச்ச, உயர்நீதிமன்றங்களின் போக்கு, ‘அசல் அநியாயம்; அப்பீலில் அதுவே காயம்’ என்ற கிராமத்துப் பழமொழியை நினைவூட்டு வதாகவே இருக்கின்றனவே!
2. கே: அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை அரசியலாக்கிக் கேவலப்படுத்திய ஆனந்தவிகடன் நிறுவனத்திற்கு அறம், நேர்மை பற்றிப் பேச – பத்திரிகை நடத்த என்ன தகுதியுள்ளது?
– சி.ஜானகி, ஆரணி.
ப: என்ன செய்வது…? வேடிக்கைதான். இதன் மூலம் – ‘மார்க்கெட்டிங்’ தற்காலம் பெரியார்- அம்பேத்கர்தான் என்பதைப் புரிந்த புத்திசாலிகள்; திராவிட மாடல் ஆட்சிக்கு நல்ல உத்வேகத்தை உருவாக்கிட உதவியிருக் கிறார் – இந்த வெளியீட்டு அரசியல் மேடை மூலம். நன்றி கூறுகிறேன்.
3. கே: ‘‘இந்தியா கூட்டணித் தலைவர்கள் என்னைப் பொருட்படுத்துவதே இல்லை’’ என்ற மம்தாவின் விரக்தி பற்றி என்ன கருதுகிறீர்கள்?
– கே.பாபு, தாம்பரம்.
ப: நியாயமானது; பரிசீலித்து, விரிசல்களைச் சரிசெய்ய வேண்டியது அவசிய அவசரம்.
4. கே: மூன்றாவது குழல் என்னும் தகுதி பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, விமர்சனத் திற்கு உள்ளாவது பற்றி…
– ச.வாஞ்சிநாதன், அருப்புக்கோட்டை.
ப:‘இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து’ (குறள் 879) என்னும் குறளை நமது கொள்கை உறவான எழுச்சித் எழுச்சித் தமிழர் அறிந்தவராயிற்றே! அப்போதுதான் மூன்றாவது குழல் சரியாக இயங்க முடியும்.
5. கே: குஜராத்தில் போலி நீதிமன்றம், போலி அரசு அலுவலகம், தற்போது போலி மருத்துவ வாரியம்! இது எப்படி இருக்கு?
– கே.சவுத்திரி, தாம்பரம்.
ப: இது மிலியன் டாலர் கேள்வி! விடை விரைவிலேயே!
6. கே: திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் 2026இல் கொண்டுவரும் பெரும் பொறுப்பு தாய்க் கழகத்திற்கு இருப்பதால், இப்போதிலிருந்தே சிறு சிறு வெளியீடுகளை வெளியிட்டு மக்களுக்கு விழிப்பு ஏற்படுத்துவீர்களா?
– வ.கோமதி, தாம்பரம்.
ப: தங்களது அரிய யோசனைக்கு நன்றி!
7. கே: ஒவ்வொரு பெண்ணும் 3 குழந்தை களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– த.வேலாயுதம், புதுச்சேரி.
ப: அரசின் குடும்பக் கட்டுப்பாடு- கருத்தடை முயற்சி – கொள்கைகளுக்கு நேர் எதிரான பிரச்சாரம் ஆகும். மேலும் மகளிரின் வாழ்வுரிமைக்கு – சுதந்திரத்திற்கு எதிரான மனித(உடல்) உரிமைப் பறிப்புக்கான வெளிப்படை யான பிரகடனம் இது. இனி, திருமணம் ஆகாத பிரம்மச்சாரி
ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்குத் திருமண வாழ்த்தைக் கூறலாமா?
8. கே: பொதுத்துறையைக் காப்பாற்ற ஊழியர்கள் பா.ஜ.க.விற்கு எதிராய் ஒன்று திரளவேண்டும் என்ற பீட்டர் அல்போன்ஸ் அவர்களின் அறிவுறுத்தல் உடனடியாகப் பின்பற்றப்பட வேண்டிய முதன்மைச் செய்திதானே?
– கா.கார்த்திகா, வேலூர்.
ப: இனி இடஒதுக்கீட்டுக் கொள்கை களைக் காப்பதிலும், தனியார் துறையில் இடஒதுக்கீடும் மய்யப் படுத்தப்பட வேண்டிய இரு முக்கியக் காரணங்கள் ஆகும்.
9. கே: தலித்துக்களுக்கு எதிரான குற்றங்கள் 3 ஆண்டுகளில் தமிழகத்தில் அதிகரித்துள்ளது என்று கவர்னர்
ஆர்.என்.ரவி பேசியுள்ளது உண்மைக்கு மாறான அவதூறு அல்லவா?
– ச. மாரியம்மாள், புவனகிரி.
ப: அது மட்டுமா?… அவர் பேசுவது எல்லாமே உண்மைக்கு மாறானவை. அவரது அஜண்டா- ‘அசத்யமேவ ஜெயதே!’ என்பதே!