சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவன் அய்யப்பன் என்று அறிவுக்கு ஒவ்வாத ஒரு கதையைச் சொல்லி, அண்மைக்காலமாக கேரள சபரிமலை அய்யப்பனுக்கு ஒரு மகத்துவத்தை உண்டாக்கி யுள்ளனர்.
ஆணுக்கும் ஆணுக்கும் குழந்தை பிறக்குமா?
அதுவும் பெண் வடிவில் இருந்த விஷ்ணுவின் கையைச் சிவன் பிடித்தவுடன் கையில் குழந்தை
பிறந்தது என்பது அறிவியலுக்கு ஏற்புடையதா?
இப்படிப்பட்ட முட்டாள்தனமான ஒரு புனைவை கடவுள் என்று நம்பி இந்த அறிவியல் உலகத்திலும் அலைவது சரியா? சிந்திக்க வேண்டாமா?
அய்யப்பன் என்பது கையில் பிறந்ததல்ல. அய்யனார் என்ற காவல் தெய்வமே அய்யப்பனாக ஆக்கப்பட்டுள்ளது. அய்யனார் என்பது ஒவ்வொரு ஊரிலும் உள்ள காவல் தெய்வம். அப்படிப்பட்ட ஒரு காவல் தெய்வந்தான் சபரிமலை அய்யப்பனும்.
கிராமங்களில் வீரன் வழிபாடு, அய்யனார் வழிபாடு, அம்மன் வழிபாடு என்பவை வாழ்ந்து மறைந்த பெரியோரின் வழிபாடே. நிலத்தலைவர் வழிபாடு, பெண்டிர் வழிபாடு போல, வீரர் வழிபாட்டின் ஒரு பிரிவே அய்யனார் வழிபாடு. விருத்தாசலத்தில் உள்ள கொளஞ்சியப்பர், வேடப்பர் போன்ற காவல் தெய்வமே சபரிமலை அய்யப்பனும் என்ற உண்மையை அனைவரும் கருத்தில்கொள்ள வேண்டும். ஊரைக் காப்பவர்கள் என்ற வகையிலே இக்காவல் தெய்வங்கள் வழிபடப்படுகின்றன.
தமிழகத்தின் கிராமங்கள்தோறும் அய்யனார் சாமிகள் காவல் தெய்வமாக இருப்பதைப் போலவே, ஆரியங்காவு பகுதியில் இருந்த அய்யப்பன் கோவிலும் முன்னொரு காலத்தில் எல்லை காவல் தெய்வமாக, சிறு தெய்வ வழிபாட்டில் முக்கிய பங்கு வகித்த தெய்வமாக இருந்தது. வழிபாடுகளில் இரண்டு கடவுள்-களுக்கும் அதிக அளவில் ஒற்றுமைகள் இருக்கின்றன. பழங்குடிகளின் ஊர்க்காவல் தெய்வமாக இருந்த இக்கோவில் பிற்காலத்தில் உயர்ஜாதி மலையாள இந்துக்களாலும், பந்தளம் ராஜ குடும்பத்தாலும் பராமரிக்கப்பட்டு, அக்கோவிலின் நிர்வாகத்தினை அவர்கள் ஏற்று நடத்தத் தொடங்கினார்கள் என்றும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் இருக்கும் பல்வேறு அய்யப்பன் கோயில்களில் அய்யப்பன் திருமணமான கடவுளாகவே காட்சி அளிக்கிறார். அச்சன்கோவில், கோவை போன்ற கேரளத்தை ஒட்டிய தமிழ்நாட்டுப் பகுதிகளில் இருக்கும் அய்யப்பன் கோவில்களில் பெண்கள் வழிபட முழு உரிமையும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களைத் தடுப்பது குற்றம்!
சபரிமலையில் பெண்கள் நுழையக் கூடாது என 1972ஆம் ஆண்டுதான் தடையே விதித்தார்கள். அதற்கு முன்புவரை ஆண்களைப் போலவே பெண்களும் சென்று அய்யப்பனை வழிபட்டு வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1972இல் தடை விதிக்கப்பட்டாலும் அதைப் பெரிதாக நடைமுறைப்படுத்தவில்லை.
பெண்கள் வழிபாடும்
கேரள உயர்நீதிமன்றத் தீர்ப்பும்
1990ஆம் ஆண்டு போடப்பட்ட பொது நல வழக்கின் காரணமாக 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் கோவிலுக்குள் செல்லக் கூடாது என கேரள உயர்நீதிமன்றம் 1993ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தது. அதற்குப் பிறகுதான் பெண்கள் இக்கோவிலுக்கு வருவதில்லை. ஆனால், ஆதிகாலத்தில் இருந்தே சோறுண்ணும் சடங்கிற்காக பெண்கள் இந்தக் கோவிலுக்கு வருவது வழக்கமான ஒன்றாகவே இருந்தது.
1939ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத் தில் ராணியாக இருந்தவர் அய்யப்பன் கோவிலில் வழிபாடு நடத்தி யிருக்கிறார் என்பதற்கான சான்றுகளும் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.
மேனாள் பிரதமரின் செயலாளர் டி.கே.ஏ.நாயரின் அனுபவம்
இந்தியாவில் இருக்கும் மற்ற கோவில்களைப் போலவே இங்கும் பெண்கள் வந்து வழிபாடு செய்து வந்தனர். பிரதமர் மன்மோகன் சிங்கின் முன்னாள் செயலாளராக பணியாற்றி வந்த டி.கே.ஏ.நாயர் இதுகுறித்து கூறுகையில், ‘‘எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் முதன்முறையாக சபரிமலை சென்றபோது நான் என் அன்னையின் மடியில் அமர்ந்திருந்தேன். அன்று எடுத்துக் கொண்ட நிழற்படம் இன்றும் எங்களிடம் இருக்கிறது’’ என்று கூறினார். அவர் காட்டிய அந்த நிழற்படத்தில் ஓர் இளம்பெண், கருவறை முன்னால் நின்றுகொண்டு கடவுளை வேண்டிக் கொண்டிருப்பதாக உள்ளது.
கேரள உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பின், சமூக நல ஆர்வலர்களும், பெண்ணுரிமைப் போராளிகளும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்தனர். இருதரப்பு வாதங்களும் கேட்கப்பட்டு, அதன் பிறகுதான் அனைத்துப் பெண்களும் அய்யப்பன் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. ஆனால், அத்தீர்ப்பை கொஞ்சங்கூட மதிக்காமல் அடியாட்
களை அமர்த்தி பெண்களைத் தாக்கித் தடுத்து வருகிறது பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். கூட்டம்.
பிரம்மச்சரியம், மரபு என்பது பித்தலாட்டம்
அய்யப்பன் பிரம்மச்சாரி என்பது பெரிய பித்தலாட்டம். அய்யப்பனுக்கு ஒரு பெண்டாட்டி அல்ல. இரு பெண்டாட்டி. பூரணி, புஷ்கலை என்று இரண்டு மனைவிகள். இதை மறுக்க முடியுமா?- அப்படியிருக்க அய்யப்பன் பிரம்மச்சாரி. அதனால் பெண்கள் செல்லக் கூடாது என்பது பித்தலாட்டமாகும்.
அதேபோல் பெண்கள் செல்லக்கூடாது என்பது மரபு என்பதும் பெரிய மோசடி.
பெண்ணின் மாதவிடாய் தீட்டு என்றால், அதனால் கோயில் புனிதம் கெடும் என்றால் மற்ற கோயில்களில் பெண்கள் அனுமதிக்கப்-படுவது ஏன்? அங்கு புனிதம் கெடாதா? மற்ற கோயில்களில் பெண்கள் அனுமதிக்கப்படும்-போது, அய்யப்பன் கோயிலிலும் அனுமதிப்பது-தானே சரியாகும்?
அய்யப்பன் பிரம்மச்சாரி என்ற ஒரு பொய்யைச் சொல்லி அதனால் பெண்களைச் செல்லக் கூடாது என்பது வாதப்படியே தப்பாகும்.
பெண்களுக்கு மத்தியில், உள்ளக் கட்டுப் பாட்டோடு உறுதியாய் இருப்பவனே பிரம்மச்சாரி, பெண்களே இல்லாத இடத்தில் கட்டுப்பாடுக்கும், உள்ள உறுதிக்கும் என்ன வேலை? எனவே, அய்யப்பன் பிரம்மச்சாரி என்பது மோசடி வாதம்.
மும்பையில் நீதிமன்ற ஆணை நிறைவேற்றம்!
மகாராஷ்டிராவில் உள்ள சில கோவில்களில் நூற்றாண்டு காலப் பரம்பரை வழக்கம் என்ற பெயரில் பெண்கள் நுழைவது தடை செய்யப்பட்டிருந்தது. அந்த நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள அனைத்துக் கோவில் களிலும் பெண்கள் சென்று வழிபடலாம் என்றும், அதை அரசே நேரடியாகக் கண்காணித்து தடை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்று நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.
சிங்கனாப்பூர் சனிக் கோவிலில் பெண்கள் நுழைவது தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் தடையை நீக்கியும்,
தடை செய்யும் நிருவாகத்திற்கும் நிருவாகிகளுக் கும் தனி நபர்களுக்கும் சிறைத் தண்டனை விதிக்கலாம் என்றும், இவ்விவகாரம் குறித்து மாநில அரசிடம் பதில் அளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்றத்தின் அறிக்கைக்கு மகாராஷ்டிர அரசு தரப்பில் தரப்பட்ட பதில் மனுவில் கூறியுள்ளதாவது, ‘‘சிங்கனாப்பூரில் உள்ள சனிக்கோவில் பெண்கள் நுழைவதற்கு யாரும் தடை செய்ய முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக சனிக்கோவில் நிருவாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இனி பெண்கள் கோவிலுக்குள் நுழைவதை யாரும் தடை செய்ய மாட்டார்கள் என்றும், அதற்கான அறிவிப்பு விரைவில் கோவிலின் வெளியே வைக்கப்படும் என்றும், கோவிலில் நுழைவதைத் தடுப்பவர்கள் மீது 6 மாத சிறை தண்டனை குறித்து சிறப்பு சட்டமியற்றவும் ஆலோசனை செய்து வருகிறோம். கோவில் மற்றும் பொது இடங்களில் பாலின பேதம் கூடாது என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது என்று அந்தப் பதில் மனுவில் கூறியுள்ளது.
அரசின் இந்த முடிவை அடுத்து வழக்கை விசாரணை செய்துவரும் நீதிபதி வகேலா கூறியதாவது, ‘‘கோவிலுக்குள் ஆண் சென்று கடவுளைப் பூசை செய்து வழிபட முடியும் என்றால், பெண்களால் ஏன் முடியாது, ஆகவே, பாலின பேதம் ஏற்க முடியாத ஒன்றாகும். மகாராஷ்டிராவில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் பெண்கள் சென்று வழிபாடு நடத்தலாம். பெண்கள் நுழைய இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும். இதை மகாராஷ்டிர அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறினார். கோலாப்பூர், கண்பதிபுலே நகர், நாசிக், சனிசிங்னாப்பூர் உட்பட தடை செய்யப்பட்டு இருந்த 27 கோவில்களிலும் பெண்கள் சென்று வழிபடலாம். ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. காலிப் பட்டாளமும், கூலிப் பட்டாளமும் அங்கு சென்று ஏன் தடுக்கவில்லை?
மகர ஜோதிப் புரட்டு
மகரஜோதி என்பது தானாகத் தெரிவதல்ல, அது மனிதர்களால் ஏற்றப்படுவதுதான், சபரிமலை தேவஸ்வம்போர்டே இந்தக் காரியத்தைப் பல ஆண்டுகளாகச் செய்து வருகிறது என்பது பகுத்தறிவாளர்களின் ஆதாரப்பூர்வக் குற்றச்சாட்டு. ஆனால், இதற்கு இதுவரைக்கும் நேர்மையான எந்தப் பதிலையும் அய்யப்பன் வியாபாரிகள் சொன்னதில்லை. இந்நிலையில் இப்போது நடந்த விபத்து தொடர்பான விசாரணையில், பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி மனிதர்களால் ஏற்றப்படுகிறதா? அல்லது வானத்தில் தோன்றும் நட்சத்திரமா? என்பதை திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு விளக்க வேண்டும் என்று உத்தரவிட்டுவிட்டது.
நீதிமன்றத்துக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டதால், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு கூட்டம் அதன் தலைவர் எம்.ராஜகோபாலன் நாயர் தலைமையில் ஜனவரி 31 அன்று நடந்தது. இதில் சபரிமலை அய்யப்பன் கோயில் மேல் சாந்தி கண்டரரு ராஜீவரரு, கன்னிபையூர் நாராயணன் நம்பூதிரி (வாஸ்து) மற்றும் பல உயர் பூசாரிகள், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு உறுப்பினர்கள், பந்தளம் அரச குடும்பத்தினர், அய்யப்பன் கோவில் நிருவாகிகள், கட்டடக்கலை வல்லுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்வம் போர்டு தலைவர் ராஜகோபாலன் நாயர் நீண்ட நாட்களாக மறைத்து வைத்திருந்த அந்த ரகசியத்தை(?)உடைத்தே விட்டார். பொன்னம்பலமேட்டில் மகர ஜோதியை மனிதர்கள்தான் ஏற்றுகிறார்கள். இது எல்லோருக்கும் தெரியும். அதை திருவாங்கூர் தேவஸ்வம் போர்டும் அங்கீகரித்து உள்ளது எனக் கூறினார்.