மனிதம் வளர்த்த மாபெரும் புரட்சியாளர் பெரியார்!

2024 டிசம்பர் 16-30 2024

உலகில் உள்ள உயரிய கருத்துகளின் ஒற்றைக் குறியீடுதான் மனிதம். அந்த மனிதத்தின் மறுபெயர்தான் பெரியார். ஆம் பெரியாருக்கென்று தனிப்பட்ட கருத்துகள், நோக்கங்கள் எதுவும் இல்லை. எதுவெல்லாம் மனிதமோ அதுவெல்லாம் பெரியார் கொள்கைகள்.

மனிதம் என்பது நம்மைப் போல் பிறரையும் நினைத்தல். நமக்குள்ள உணர்வுகள் பிறருக்கும் உண்டு என்று உணர்தல். இந்த உணர்வு வந்தால் சமத்துவ எண்ணம் தானே மலரும். சமத்துவம் மனிதத்தின் மலர்ச்சி; ஆதிக்கம் மனிதத்தின் எதிர்நிலை. எனவே, மனிதத்தை நிலைநாட்ட விரும்புகின்றவர்கள் ஆதிக்கத்தை அழிக்கப் போராடுவர்; ஆதிக்கத்தை ஒழிப்பர்.

ஆதிக்கவாதிகள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த கடவுள், முற்பிறவி, விதி, பிறப்பால் உயர்வு தாழ்வு, மூடநம்பிக்கைகள் போன்றவற்றைப் பரப்புவர். மக்களைச் சிந்திக்கவிடாமல் தடுப்பர்.

மனிதம் காக்க, வளர்க்க, நிலைக்க விரும்பக் கூடியவர்கள் பகுத்தறிவை வளர்ப்பர்; சிந்திக்கத் தூண்டுவர்; மூடநம்பிக்கைகளை ஒழிப்பர்.
மனிதம் விரும்பக்கூடியவர்கள், உலக நோக்கில் சிந்திப்பர்; உலக மக்கள் அனைவரை யும் உடன்பிறந்தவர்களாய் எண்ணுவர்; சமமாக மதிப்பர். ஜாதி, மதம், இனம், மொழி, நாடு என்ற பிரிவு, பற்று மறுப்பர்.

எனவேதான், பெரியாரும் அவற்றைச் செய்தார். பெரியார் ஒரு நாட்டுக்கோ, ஒரு மொழிக்கோ, ஓர் இனத்துக்கோ உரிய தலைவர் அல்லர். அவர் உலக மக்கள்
அனைவருக்குமான உலகத் தலைவர்! உலகம் உய்ய, உயர, மகிழ வழி சொன்னவர்.

பெரியார் பல கோணங்களை, பல பரிமாணங்களைக் கொண்ட ஆற்றலாளர்; ஆய்வாளர்; போராளி, வழிகாட்டி, புரட்சியாளர். அவரை, கடவுள் மறுப்பாளர்; ஆரிய எதிர்ப்பாளர்; மதமறுப்பாளர் என்ற அளவில் சுருக்கிச் சொல்வது சூழ்ச்சி யாளர்களின் யுக்தி. எனவே, பெரியாரின் முழுமை யையும் ஒவ்வொருவரும் அறிதல் வேண்டும்.

உலகம் உய்ய வழிகாட்டியவர்:

பண்டைத் தமிழர்களின் உயர்கொள்கை களான, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்!’ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பனவற்றை தன் கொள்கையாக வரித்துக்கொண்டவர் பெரியார். ‘‘எனக்கு நாட்டுப்பற்றோ, இனப்பற்றோ, மொழிப்பற்றோ, ஜாதிப்பற்றோ கிடையாது. எனக்கு உள்ளதெல்லாம் மனிதப் பற்றுதான்’’ என்று உறுதிபட, வெளிப்படையாய்க்கூறி, அதன்படி வாழ்ந்தவர், வழிகாட்டியவர் பெரியார். அதனால்தான் சுயமரியாதை, சமத்துவம், சமஉரிமை, பொதுவுடைமைக் கொள்கைகளைப் பின்பற்றக் கூறினார். வர்ணாஸ்ரம எதிர்ப்பு, ஜாதி எதிர்ப்பு, மத எதிர்ப்பு போன்றவை உலகப் பார்வையின் விளைவுகளே! பெண்ணுரிமை, ஆண் – பெண் சமத்துவம் போன்றவையும் மனிதப் பற்றின் மலர்ச்சிகளே!

ஆதிக்கம் எதிர்த்தவர்

ஆதிக்க எதிர்ப்பை முதன்மைப் பணியாகக் கொண்டவர். பணம், பொருள் அடிப்படையிலோ, ஆட்சி, அதிகாரம் அடிப்படையிலோ, பெரும்பான்மை சிறுபான்மை அடிப்படையிலோ, நிறம், பலம், தொழில் அடிப்படையிலோ, ஒருவரை மற்றவர் ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தார். ஆதிக்கத்திற்கு அடிப்படையாய் எது அமைந்தாலும் அதை எதிர்த்தார்; தகர்த்தார்.

மூடநம்பிக்கைகளை எதிர்த்தார்!

ஆதிக்கவாதிகளின் ஆயுதம் மூடநம்பிக்கை களே! மக்களை மூடநம்பிக்கையில் ஆழ்த்தி விட்டால் அவர்களுக்குச் சிந்தனை ஏழாது; தங்களது தாழ்நிலைக்குக் காரணம், போன பிறவியில் நாம் செய்த பாவம் என்றும், உயர் நிலையில் இருப்பவர்கள் சென்ற பிறவியில் புண்ணியம் செய்தவர்கள் என்றும் தங்களுக்குத் தங்களே சமதானம் கற்பித்துக்கொள்வர். எனவேதான் மக்களுக்கு விழிப்புணர்வு வராமல் இருக்க புராணங்கள்; சாஸ்திரங்கள், சடங்குகள், முற்பிறவி, விதி என்று பலவற்றை மக்களின் மூளையில் ஏற்றி வைக்கின்றனர். இதை நன்கு புரிந்துகொண்ட தந்தை பெரியார், அவற்றைத் தகர்ப்பதில் தன் உழைப்பை அதிகம் செலவிட்டார். மூடநம்பிக்கைகளை விளக்கி அவற்றை மக்கள் கைவிட வேண்டுமென்று பெரிதும் பிரச்சாரம் செய்தார். அதிக அளவு மூடநம்பிக்கைகளை ஒழித்தார். அதன் விளைவாய் மக்கள் பெரிதும் விழிப்புப் பெற்று, தங்களை யாரும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது; தாங்கள் யாருக்கும் அடிமையல்ல என்று எழுச்சி பெற்றனர்.

சமத்துவத்தை நிலைநாட்டினார்:

மக்கள் அனைவரும் சமம். பிறப்பால் யாரும் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ அல்ல. பிறப்பால் ஒருவர் வாய்ப்பு, உரிமைகளைப் பெறுவதும் மற்றொருவருக்கு அவை மறுக்கப் படுவதும் கூடாது. எல்லாருக்கும் எல்லாமும்; எல்லாருக்கும் எல்லா உரிமைகளும் உண்டு; சொத்துகள் அனைத்தும் பொதுவாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதனால், கம்யூனிசக் கொள்கைகளை ஆதரித்தார். கம்யூனிச அறிக்கையை மொழிபெயர்த்து மக்களுக்குக் கொண்டு சேர்த்தார். ஆண்களுக்கு உள்ள உரிமைகள் பெண்களுக்கும் வேண்டும் என்று வலியுறுத்தி அதிலே வெற்றியும் பெற்றார்.

தன் முனைப்பு, செருக்கு இல்லாதவர்:

மானுடப் பற்றின் மறுவடிவம் பெரியார் என்பதால் அவரிடம் ‘தான்’ என்ற செருக்கு அறவே இல்லை. தான் கூறுவதே சரி என்று எப்போதும் கூறியது இல்லை. நான் கூறுவது சரியென்றால் ஏற்றுக்கொள்ளுங்கள் என்றுதான் எப்போதும் கூறினார். தான் தலைவர், தான் செல்வக் குடும்பத்தில் பிறந்தவர், செல்வாக்கு மிக்கவர் என்ற ஆணவத்தில் அவர் ஒரு போதும் செயல்பட்டதில்லை. பிறர் செயல்படுவதையும் அனுமதித்தது இல்லை.

தன் புலமையைக் காட்ட பேசியதோ எழுதியதோ இல்லை. மக்களுக்குப் புரிய வேண்டும் என்று எளிய பாமர நடையிலே பேசினார்; எழுதினார். கருத்து முதன்மையானதே தவிர, கவர்ச்சி முதன்மையானது அல்ல. கவர்ச்சி கருத்தை விழுங்கிவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தார்.
தன்னால் செய்ய இயலாதவற்றை வேறு யாராவது செய்ய முன்வந்தால் அவர்களைப் பாராட்டுவேன். பரிசளிப்பேன் என்றுகூட ஊக்கப்படுத்திய பெருந்தகை.
தன்னல நோக்கு அறவே அற்றவர். இதனால் தனக்குப் பதவி கிடைக்கும், பாராட்டுக் கிடைக்கும், உயர்வு கிடைக்கும், புகழ் கிடைக்கும் என்று அவர் எதையும் பேசியதும் இல்லை; செய்ததும் இல்லை.

இழப்பையும் இழிவையும் ஏற்றவர்:

தாம் செய்வதும், பேசுவதும், எழுதுவதும் தமக்கு எதிர்ப்பை உருவாக்கும்; அதன்மூலம் இழப்பு, இழிவு, தண்டனை கிடைக்கும் என்று நன்கு தெரிந்தாலும், அது மக்கள் நலனுக்குத் தேவையென்றால் அதைச் சிறிதும் தயங்காது செய்தவர். தன்மீது மலம், செருப்பு வீசப்பட்ட போதுகூட, அதைப் பற்றிக் கவலை கொள்ளாது, பின்வாங்காது துணிந்து தன் பணிகளைச் செய்தார்.

மற்றவர் உணர்வுகளை மதித்தவர் தனக்கு எதிரான கொள்கை கொண்டவர்கள் என்றாலும் அவர்களின் உணர்வுகளை மதிக்கும் மாண்புடையவர் பெரியார். திரு.வி.க., குன்றக்குடி அடிகளார் போன்றவர்களிடமும் ராஜாஜியிடமும் அவர் காட்டிய அன்பும் மரியாதையும் மாண்பின் உச்சம். தனக்குக் கடவுள் மறுப்பு கொள்கையென்றாலும், கடவுளை நம்பும் கோடிக்கணக்கான மக்களின் உரிமைக்காக, கோயில் நுழைவுக்காக, கருவறை நுழைவுக்காகப் பாடுபட்டார். கொள்கைக்கும் உரிமைக்கும் உள்ள வேறுபாட்டை நன்கு உணர்ந்து செயல்பட்டார்.

மறைத்துப் பேசாதவர்:

தன் மனத்திற்குச் சரியென்று பட்டதைத் துணிந்து செய்தார், பேசினார். பிறர் எதிர்ப்பார்களே, தப்பாக நினைப்பார்களே என்பதற்காக அவர் எதையும் மறைத்து ஒளித்தது இல்லை. உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசாத உயர் இயல்பு உடையவர் தந்தை பெரியார். நீதிமன்றத்திலே, நீதிபதிகளிடம் கூட தன் மனத்தில் எதையும் மறைக்காமல் மனம் திறந்து பேசியவர்.

சமரசம் செய்துகொள்ளாதவர்

உறவுக்காகவோ, நட்புக்காகவோ, தன்னலத்திற்காகவோ தம் கொள்கையில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாதவர். வைக்கம் போராட்டம் நடத்தச் சென்றபோது, அங்கு திருவாங்கூர் சமஸ்தான மன்னராக இருந்தவர் இவரது நண்பர். பெரியாருக்கு அரசமரியாதை கொடுத்து தனது மாளிகைக்கு அழைத்த போதும், நான் விருந்தாளியாக வரவில்லை; போராளியாக வந்துள்ளேன். என்னைப் போராட விடுங்கள் என்று கூறி போராட்டம் நடத்தி வெற்றி பெற்றவர். தனக்கு அரச மரியாதை கொடுத்தவர்களாலேயே விலங்குமாட்டப்பட்டுச் சிறையிலடைக்கும்படி நேரும் அளவுக்கு தன் கொள்கையில் உறுதியுடன் நின்றவர்.
எளிமையானவர்

ஆடம்பரங்களை, புனைவுகளை, மிடுக்குகளை அறவே வெறுத்தவர். எளிய உடை, மலிவான உணவு, பழுதான வாகனத்தில் பயணம் என்றே 90 வயதுக்கு மேலும் வாழ்ந்தவர். இடுப்பில் லுங்கியும், மேலே மெல்லிய உடையும் மட்டுமே அணிந்தவர். எந்த விழாவிற்குச் சென்றாலும் அதே உடைதான். தன் தொண்டர்கள் தரும் எளிய உணவையும் விரும்பி உண்டவர்.

சிக்கனமானவர்

வீண் செலவுகளை அறவே வெறுத்தவர். தேவையானவற்றிற்கு மட்டும் செலவு செய்யக் கூடியவர். சிறுகச் சிறுகச் சேர்த்து பெருமளவிற்கு மக்களுக்குப் பயன்பட நிறுவனங் களை உருவாக்கியவர். எதையும் விரயம் செய்யக்
கூடாது என்பதில் உறுதியாய் இருந்தவர்.

பாசம் மிக்கவர்

உலக மக்கள் அனைவரையும் நேசித்த பாசக்காரர். நாகம்மையார் மறைந்தபோதும், அண்ணா சிகிச்சைகக்காக அமெரிக்கா சென்ற போதும் அவரது பாசவுணர்வு பளிச்சென வெளிப்பட்டது.

திணிப்பையும் பிணைப்பையும் தகர்த்தவர் எந்தக் கருத்தையும், எந்தச் செயலையும் ஒருவர்மீது திணிக்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்தார். பெண்ணுக்கென்று எந்த விருப்பமும், உரிமையும் இல்லை; இருக்கக்கூடாது; அவர்களை இரண்டு வயதிலும், அய்ந்து வயதிலும் எட்டு வயதிலும் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும்; அப்படிப்பட்ட நிலையில் அக்கணவன் இறந்து போனால் அக்குழந்தை வாழ் நாள் முழுக்க விதவையாகவே வாழ வேண்டும்; மறுமணம் செய்து கொள்ளக்கூடாது என்றும், கணவன் இறந்தால் அவனை எரிக்கும் நெருப்பில் உயிருள்ள மனைவியையும் எரித்துவிட வேண்டும் என்றும், பெண்ணுக்குக் கல்வியும், சொத்தும் தரக்கூடாது என்றும், அவள் ஆணை நம்பியே வாழ்நாள் முழுக்க வாழ வேண்டும் என்றும் பெண்ணின்மீது பல்வேறு நடைமுறைகள் திணிக்கப்பட்டன. அவள் ஆணோடு பிணைக்கவும் பட்டாள். இந்த நடைமுறைகளை எதிர்த்து, அவை அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்றும் பாடுபட்டார் தந்தை பெரியார். இவற்றை ஒழிக்கத் துணை நின்றவர்களைப் பாராட்டினார்.

அதேபோல் வர்ணாஸ்ரமக் கோட்பாடுகள் மக்கள் மீது திணிக்கப்பட்டு, பிறப்பின் அடிப்படையிலேதான் எல்லா உரிமைகளும் என்று வலியுறுத்திய – கட்டாயப்படுத்திய நடைமுறைகளை எதிர்த்தார். அப்பன் தொழிலையே பிள்ளைகளும் செய்ய வேண்டும் என்ற குலத்தொழில் முறையைக் கண்டித்தார்; தகர்த்தார். பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கப்படுவதை எதிர்த்தார். ஜாதி, தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தினார். தன் வாழ்நாளிலேயே அவற்றை ஒழித்து வெற்றியும் கண்டார்.

கவர்ச்சியை ஒதுக்கி கருத்துக்கு முதன்மையளித்தவர் அவருடைய பேச்சாக இருந்தாலும், எழுத்தாக இருந்தாலும், செயலாக இருந்தாலும் அவை கருத்தை முன்னிறுத்தியே இருக்கும். கவர்ச்சிக்கு, ஆடம்பரத்திற்கு, அலங்காரத்திற்கு அவர் முன்னுரிமை அளித்தவர் அல்ல. அப்படி முன்னுரிமை அளிப்பதையும் கண்டித்தார். கவர்ச்சி, கருத்தைப் பின்னுக்குத் தள்ளிவிடும் என்பதுதான் அதற்குக் காரணம். புரியாமல் புலமையைக் காட்டும் வகையில் எழுதுவதையும் பேசுவதையும் அவர் எதிர்த்தார். புரிவதற்கு எப்படி எழுதவேண்டுமோ, பேசவேண்டுமோ அப்படி பேசவும் எழுதவும் வேண்டும். கவர்ச்சியை முதன்மைப்படுத்தினால், கருத்தை விட்டுவிட்டு, கவர்ச்சியை ரசித்துவிட்டுப் போவார்கள். அதனால் என்ன பயன் என்று கேட்டார்.

அழிவு வேலைக்காரர் :

மனிதர்களுக்கு எது கேடோ, தடையோ, இழிவோ அதை அழிப்பதே என் முதல் பணி. எனவே, நான் ஓர் அழிவு வேலைக்காரன் என்றார். இந்த அழிவு வேலையைச் செய்வது தான் கடினம்; இதைச் செய்யத்தான் எவரும் முன்வருவதில்லை. எனவேதான் நான் இந்த வேலைக்கு முன்னுரிமை அளிக்கிறேன் என்றார்.

நிலத்தைப் பயிரிடுகின்றவர்கள் முதலில் கரடு, கரம்பு, முள் புதர் என்று களைகள் பலவற்றை யும் அழித்து, நிலத்தைப் பண்படுத்திவிட்டுத்
தானே பயிர் செய்வர்? அதே அணுகுமுறைதான் பெரியாருடையது. எனவே, அவர் செய்தது பெரும்பாலும் பண்பாட்டுப் புரட்சியே! அவ்வாறு அவர் அழித்ததில் முதன்மை யானவை ஆதிக்கமும், மூடநம்பிக்கைகளும் ஆகும். காரணம், மனிதற்கு அழகு மானமும் அறிவும். ஆதிக்கம் ஒழித்தால் மானம் மிகும்; மூடம் தகர்த்தால் அறிவு வளரும்; மானமும் அறிவும் மிகுந்தால் மனிதம் தழைக்கும். எனவே, ஆதிக்கம் அழித்து, அறிவு வளர்த்து, மனிதம் செழிக்கச் செய்த புரட்சியாளர்தான் தந்தை பெரியார். அப்பணியை நாமும் செய் வதே அவர் நினைவைப் போற்றும் செயலாகும். எனவே, அதை அனைவரும் செய்வோம்.