ஆசிரியர்: பெரியார் நமக்களித்த கொடை!- கோவி.லெனின், இதழாளர்

2024 ஆசிரியர் பக்கம் டிசம்பர் 1-15 2024

‘‘எங்களிடம் இருப்பது பெரியார் கொடுத்த அறிவு’’ – மானமிகு ஆசிரியர் அவர்கள் அடிக்கடி மேடையில் அழுத்தமாகச் சொல்லும் சொற்கள் இவை. 1990களில் பெரியார் திடலில் நடைபெற்ற பல சொற்பொழிவுகளில் ஆசிரியரிடமிருந்து இந்தச் சொற்கள் வெளியாகும். புத்தாயிரம் ஆண்டுகளில் திராவிட இயக்க, பொதுவுடைமை இயக்கக் கருத்துகள், இயக்கங்களின் போக்குகள் இவை குறித்து மூத்த பத்திரிகையாளரும் திராவிடச் சிந்தனையாளரும் ஆசிரியர் அவர்களால் அக்கிரகாரத்து அதிசய மனிதர் இவர்தான் எனப் புகழப்பட்டவருமான சின்னகுத்தூசி தியாகராசன் அவர்களின் அறையில் ஆரோக்கியமான வாதப் போர்கள் நடக்கும்.

பத்திரிகையாளரும் இடதுசாரி சிந்தனையாளருமான தோழர் இரா.ஜவகர், ‘‘அது எப்படி, எங்களிடம் இருப்பது பெரியார் கொடுத்த அறிவு என்று ஆசிரியர் சொல்லலாம். பெரியார் மறைந்து பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், மனிதர்களின் அறிவு வளர்ச்சி மிகப் பெரிய அளவுக்கு முன்னேறியுள்ள நிலையில், பெரியார் கொடுத்த அறிவுடன் திராவிடர் கழகம் தொடர்ந்து செயல்படுவது பகுத்தறிவுக்குப் பொருத்தமானதாகத் தெரியவில்லையே?’’ என்று தன்னுடைய கருத்தைத் தெரிவித்தார்.

மூத்த பத்திரிகையாளர்களான சின்னகுத்தூசியும் இரா.ஜவகரும் திராவிட- பொதுவுடைமை சிந்தனைகள் குறித்த கருத்துகளைப் பரிமாறிக்கொண்டிருந்த நிலையில், ஒரு மாணவனாக அவர்களின் வாதங்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். தோழர் ஜவகர் எழுப்பிய கேள்விக்கு விடை என்ன என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் இருந்தேன். அதற்குள், மற்றொரு பத்திரிகையாளர் அங்கே வந்த நிலையில், அவர் வேறொரு தலைப்பிலான கேள்வியை எழுப்பியதால், முந்தைய வாதம் முடிவுறாமல் முடிந்து போனது.

கடவுளுக்கு மீறிய சக்தியில்லை என்று நம்புகின்ற பக்தர்கள் போல, பெரியார் கொடுத்த அறிவுக்குப் பிறகு வேறு எதுவும் தேவையில்லை என்று பகுத்தறிவாளர்கள் சொல்ல முடியுமா? என்று மனதுக்குள் எழுந்த கேள்விக்கு, ‘‘சொல்ல முடியாது’’ என்பதுதானே சரியான பதிலாக இருக்க முடியும்? பிறகெப்படி, மானமிகு ஆசிரியரும் திராவிடர் கழகத்தினரும் மேடைகளில் அதையேச் சொல்கிறார்கள்?

பெரியார் கொடுத்த அறிவு என்பது பெரியார் வாழ்ந்த காலத்திற்கான அறிவுடன் நின்று போய்விடுவதன்று. ‘‘யார் சொல்லியிருந்தாலும், ஏன் நானே சொல்லியிருந்தாலும் உன் அறிவைக் கொண்டு சிந்தித்துச் செயல்படு’’ என்பதுதான் பெரியார் கொடுத்த அறிவு. அத்தகைய அறிவு, பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளை, சுயமரியாதை உணர்வை, சமூக நீதிக் கொள்கையை எதிர்காலத் தலைமுறைக்கு ஏற்றவகையில், களத்தின் தன்மையையும் அறிவியல் வளர்ச்சியையும் பயன்படுத்திக் கொண்டு செயலாற்றக் கூடிய அறிவாகும். அதைத்தான் ஆசிரியர், ‘‘எங்களிடம் இருப்பது பெரியார் கொடுத்த அறிவு’’ என்று பெருமையோடு குறிப்பிட்டார்.

இனி வரும் உலகம் குறித்து அன்று பெரியாரின் சிந்தனைகளில் வெளிப்பட்ட கருத்துகள் பலவற்றை இன்று அறிவியல் நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. பெரியார் சிந்திக்காத புதுமைகளும் அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சியால் உருவாகியிருக்கின்றன. இத்தகைய வளர்ச்சிகளை மனித குலத்தின் மேன்மைக்கும், உரிமைகளுடன் கூடிய விடுதலை வாழ்க்கைக்கும், பகுத்தறிவு நிறைந்த முற்போக்கான செயல்பாடுகளுக்கும் பயன்படுத்துவதுதான் பெரியார் கொடுத்த அறிவின் பயனாகும். தந்தை பெரியாருக்கும் அன்னை மணியம்மையாருக்கும் பிறகு திராவிடர் இயக்கத்திற்குத் தலைமையேற்று அதை முன்னெடுத்தவர் மானமிகு ஆசிரியர் அவர்கள்.

சென்னைக்கு கம்ப்யூட்டர் வந்திருக்கிறது என்பதை அறிந்ததும் மாடியேறிப் போய் அதைப் பார்த்து மகிழ்ந்தவர் தந்தை பெரியார். அவர் பார்த்த கம்ப்யூட்டரை வைப்பதற்கு ஒரு பெரிய அறை தேவைப்பட்ட காலம் அது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் கணினித்துறை வெகுவாக முன்னேற்றமடைந்து, இனி வரும் உலகம் எப்படி இருக்க வேண்டும் என 1930களில் பெரியார் சிந்தித்ததைப் போல ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் வைத்துக் கொள்ளக்கூடிய அளவிற்கு கணினிப் பயன்பாடு உள்ளது. இந்த அளவுக்கு அறிவியல் வளர்ச்சி பெற்றுள்ள கணினி யுகத்தில், பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கு என்ன தேவை என்றுகூட கேட்கலாம்.
இந்தியாவில் கணினிச் செயல்பாடுகளின் வளர்ச்சி என்பது மேனாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் ஆட்சிக்காலத்தில் வேகம் பெற்றது. 1980களின் பிற்பகுதியில் பிரதமராக இருந்த அவர், ‘‘இந்தியாவை இருபத்தொன்றாம் நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன்’’ என்ற முழக்கத்துடன் அரசு சார்ந்த நிறுவனங்களிலும் தனியார் துறையிலும் கணினியின் செயல்பாடுகளை முன்னெடுத்தார். அப்போது பொதுவுடைமை இயக்கத்தினருக்கு ஓர் அச்சம் இருந்தது. காரணம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பெருகியுள்ள நாட்டில், நிறுவனங்களைக் கணினிமயமாக்கினால் கிடைக்கின்ற வேலையும் கிடைக்கால் போய்விடும் என்பதே அவர்களின் அச்சம். அன்றைய நிலையில் அது நியாயமான அச்சமானதும் கூட.

காலம் அந்த அச்சத்தைப் போக்கினாலும், இந்தியாவில் கணினியின் நுழைவு என்பது அறிவியல் சிந்தனையை மேம்படுத்துவதற்குப் பதில், பழைய பஞ்சாங்கத்தை நவீனப்படுத்தும் வேலைக்குப் பயன்படுத்தப்பட்டது. ‘‘இங்கு கம்ப்யூட்டர் ஜோதிடம் பார்க்கப்படும்’, ‘இவ்விடம் கம்ப்யூட்டரில் ஜாதகம் கணிக்கப்படும்’ என்ற விளம்பரங்கள் பல இடங்களிலும் காணப்பட்டதுடன், சோழி உருட்டும் ஜோதிடரையும், கிளி ஜோசியத்தையும் நம்பியிருந்த மக்கள் கம்ப்யூட்டரில் ஜாதகக் கட்டம் என்ன சொல்கிறது என்கிற ஆர்வத்தினால் உந்தப்பட்டு, அதனை நோக்கிச் சென்றனர். இந்தியாவில் ஜோதிடம் என்பது பரவலான அளவில் வருமானத்தைக் கொட்டியதற்குக் காரணமாக அமைந்தது கணினிப் பயன்பாடுதான் என்றால் மிகையில்லை. இந்த இடத்தில்தான் பெரியார் கொடுத்த அறிவு என்பது வேலை செய்தாக வேண்டும். அந்த வேலையைச் சரியாகச் செய்தது, பெரியார் கொடுத்த அறிவைப் பெற்றிருந்த மானமிகு ஆசிரியரின் மூளை.

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி ஜாதகம், ஜோசியம், புராணம், இதிகாசம் இவற்றைப் பரப்புவதற்கே அதிகம் பயன்படுகிறது என்பதை உணர்ந்து, அதற்கு மாற்றாக அந்த அறிவியல் தொழில்நுட்பத்தைப் பகுத்தறிவுப் பரப்பலுக்கும் சமூக நீதிக் கொள்கையைப் பரவலாக்குவதற்கும் பயன்படுத்தும் பரப்புரையையும் செயல்பாடுகளையும் முன்னெடுத்தார் ஆசிரியர். ‘விடுதலை’ நாளேடு அச்சில் மட்டுமின்றி, ஆன்லைனிலும் வெளியானது. பெரியார் வலைக்காட்சி உருவானது. பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை உருவாக்கப்பட்டு முற்போக்கான குறும்படங்கள் திரையிடப்பட்டன.

வணிகம் சார்ந்த உலகமயப் பார்வைக்கு அரசும் அரசியல் கட்சிகளும் ஆளான நிலையில், சமுதாயச் சீர்திருத்த இயக்கமான திராவிடர் கழகத்திற்குத் தலைமையேற்ற ஆசிரியர் அவர்கள், ‘பெரியாரை உலகமயமாக்குவோம்-உலகையே பெரியார் மயமாக்குவோம்’ என்ற கொள்கையை முன்னெடுத்தார். பெரியாரைப் பார்த்திராத- படித்திராத புத்தாயிரம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையிலான அனைத்து அறிவியல் ஊடகங்களையும் அவர் கையிலெடுத்தார். அதற்கேற்ற ஓர் இளையப் பட்டாளத்தை இயக்கத்தில் உருவாக்கினார்.

சிந்தனையில் என்றும் இளமையான மானமிகு ஆசிரியர் அவர்கள், செயலிலும் நடையிலும் இளைஞர்களையே ஆச்சரியப்படுத்தக்கூடியவர். கொரோனா பேரிடர் காலத்தில் உலகம் முடங்கிய போதும் ஆசிரியரின் முழக்கம் முடங்கவில்லை. மருத்துவ அறிவியல் மீது நம்பிக்கை வைத்து தடுப்பூசி போட்டுக்கொண்டு, அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, காணொலி வாயிலாக நாள்தோறும் பேருரையாற்றினார். சந்திப்புகளை நடத்தினார்.

பேரிடர் முடிந்தபிறகு நேரடியாகக் களமிறங்கி நீட் எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, பாசிச பா.ஜ.க.வின் செயல்திட்டங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், சட்டமன்ற-நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகள் என ஓய்வின்றிப் பயணம் செய்தபடியே இருக்கிறார். பெரியாரின் ‘குடிஅரசு’ இதழுக்கும் சுயமரியாதை இயக்கத்திற்கும் நூற்றாண்டு என்பதால் தமிழ்நாடு முழுவதும் அதற்கான கூட்டங்களை நடத்தச் செய்தார். தந்தை பெரியார் கருத்துகளை வீடுதோறும் கொண்டு சேர்த்திட ஓ.டி.டி தளத்தையும் உருவாக்கியிருக்கிறார்.

ஆசிரியர் சொன்னதுபோல பெரியார் கொடுத்த அறிவு, காலத்திற்கேற்ற வீச்சுடன் களத்தை எதிர்கொள்கிறது. புதிய இளம் தலைமுறையினரிடம் பெரியாரைக் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறது. மதவெறி-பெண்ணடிமைத்தனம்- ஜாதி ஒழிப்பு – பாலியல் சமத்துவம் – சமூக நீதி இவையனைத்திற்குமான கருத்தாயுதம் தந்தை பெரியாரே என்பதை இன்றைய தலைமுறையும் உணர்ந்திருக்கிறது. தன்னிடம் உள்ள பெரியார் கொடுத்த அறிவை, தன்னைவிட 70, 75 வயது குறைந்த தலைமுறைக்கும் வழங்கியிருக்கிறார் மானமிகு ஆசிரியர். அவர் நமக்கு பெரியார் கொடுத்த கொடை. அவரது அறிவுப் பணி சிறக்கட்டும்.ஆண்டு நூறு கடந்து அவர் நலமுடன் வாழட்டும்!