சென்ற இதழ் தொடர்ச்சி…
1. அறிவுத்திறத்தையும் கூர்த்த மதியையும் மழுங்கடிப்பதாகவே கல்வி உள்ளது என்பதே ரசல் மற்றும் தந்தை பெரியார் ஆகியோரின் கருத்துகளாக உள்ளன. ரசல் அவர்கள் கல்வியைப் பற்றிக் குறிப்பிடும்போது “சுயசிந்தனைக்கும் அறிவுத் திறனுக்கும் உள்ள முதன்மையான தடைகளில் ஒன்றாக கல்வி விளங்குகிறது என்னும் முரண்பாடான உண்மையை நாம் எதிர்கொள்கிறோம்” என்று தெரிவித்திருப்பது இங்கு சிந்திக்கத்தக்கது. (“We are faced with the paradoxical fact that education has become one of the chief obstacles to intelligence and freedom of thought” -Bertrand Russell birth centenary souvenir published by Indian Rationalist Association 1972 page 8)
2. அமெரிக்காவின் தலைசிறந்த பகுத்தறிவுச் சிந்தனையாளராகிய இங்கர்சால் (R.G.Ingersoll 1833-1899) அவர்களின் கல்வி பற்றிய சிந்தனையானது ரசல் அவர்களின் கருத்தை எதிரொலிக்கும் வகையில் ஏறத்தாழ இதே நோக்கில் இருப்பதைக் காணமுடிகிறது. அவர்தம் கல்வி பற்றிய சிந்தனைகளில் ஒன்று இது: “கல்லூரிகள் என்பவை சாதாரண கூழாங்கற்களைப் போன்றவர்களை மெருகேற்றுவதும் நல்ல வைரங்களைப் போன்றவர்களை ஒளி மழுங்கச் செய்வதுமான இடங்களாகவே உள்ளன” (Colleges are places where pebbles are polished and diamonds are dimmed – universal Deluxe Dictionary Page 537)
ஆ 1) பகுத்தறிவுக்கு ஒவ்வாத கல்வியை ஏற்காத ரசல் 1927இல் தனது மனைவி டோராவுடன் சேர்ந்து சோதனைப் பள்ளி என்ற பெயரில் பகுத்தறிவுப் பள்ளி ஒன்றைத் தொடங்கினார். (Experimental School at Beacon Hill) இப்பள்ளியில் பயிலும் மாணவர்களோடு ரசலின் இருபிள்ளைகளும் பயின்றனர். இப்பள்ளி நூற்றுக்கு நூறு ஒரு பகுத்தறிவுப் பள்ளியாகும். இங்கு பயிலும் மாணவர்களுக்குச் சுதந்திரமாகச் சிந்திக்கும் உரிமை உண்டு. புதியன காண விழையும் மாணவர்களின் உணர்வுகளை அடக்கி வைக்கும் பழக்கம் இங்கு இல்லை. அதேசமயம் அங்கு ஒழுங்குமுறைக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் இல்லை. அப்பள்ளியில் உள்ள சுமார் பத்து வயதுள்ள மாணவர்கள் தாங்களே நாடகம் எழுதி நடிப்பார்கள். அந்த நாடகத்தில் பல உயர்ந்த கருத்துகள் அடங்கியிருப்பதைக் கண்டு பலரும் வியந்து பாராட்டியுள்ளனர்.
2. இப்பள்ளியின் மீது வெறுப்புற்ற வீணர்களும் பிற்போக்காளர்களும் அவதூறுகளைப் பரப்பும் நோக்கத்துடன் கீழ்த்தரமான கதை ஒன்றைக் கட்டிவிட்டனர். அந்தப் பொய்க்கதை இதுதான்:-
ஒரு நாள் ஒரு பாதிரியார் இப்பள்ளிக்கு வந்ததாகவும் அப்போது கதவைத் திறந்த மாணவி அம்மணமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்ற பாதிரியார் “அட கடவுளே!” என்று கூறியதாகவும் இதைக் கேட்ட மாணவி “அவர் இங்கே இல்லை” என்று கூறிவிட்டுக் கதவை மூடிக்கொண்டதாகவும் பரப்பினர்.
3. சமுதாயத்தை எதிர்த்துக் கொண்டு இது போன்ற பகுத்தறிவுப் பள்ளியை நடத்துவது ரசல் இணையர்களுக்கு அவ்வளவு எளிதாக இல்லை. பொருளாதாரத் தட்டுப்பாடு அச்சுறுத்திக் கொண்டே இருந்தது. பள்ளியைத் தொடர்ந்து நடத்துவது கேள்விக்குறியானது. ரசல் தன் மனைவி டோராவை மணவிலக்கு செய்தபின் ரசலுக்கும் பள்ளிக்கும் உள்ள தொடர்பு அற்றுப்போய்விட்டது. அதன்பிறகு டோரா அம்மையார் மட்டும் அப்பள்ளியை 1939ஆம் ஆண்டுவரை நடத்தினார். (ப.செங்குட்டுவன் எழுதிய பேரறிஞர் பெர்ட்ரண்ட் ரசல் எனும் நூல் பக்கங்கள் 95-97. வெளியீடு: சேகர் பதிப்பகம் சென்னை-83, முதல் பதிப்பு 1976)
இ) பகுத்தறிவு, சுயமரியாதை, ஆராய்ச்சி மனப்பான்மை, மூடநம்பிக்கையை ஏற்காமை, அனுபவ அறிவின் சிறப்பு ஆகியவற்றைப் புகட்டாத கல்வி பயனற்றது என்பதும், கல்வி வேறு: அறிவு வேறு என்பதும் தந்தை பெரியார் அவர்களின் கல்வி பற்றிய சிந்தனைகளின் மய்யக் கருத்துகளாகும். அவர்தம் அறிவார்ந்த சிந்தனைகளுள் ஒரு சில வருமாறு:
1. கல்வி விஷயத்தில் நம் நாட்டு மக்களுக்கு இரண்டு முக்கியமான விஷயம் கையாளப்பட வேண்டியது அவசியம் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஒன்று, கல்வியால் மக்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதை உணர்ச்சியும் ஏற்படவேண்டும். மற்றொன்று, மேன்மையான வாழ்வுக்குத் தொழில் செய்யவோ அலுவல் பார்க்கவோ பயன்
படவேண்டும். (‘குடிஅரசு’ 22.8.1937)
2. கல்வி என்பதைப் பற்றி நமது மக்கள் பெரும்பாலும் புத்தகப் படிப்பையும், குருட்டு உருப்போட்டுத் தேர்வுகளில் தேறிவிடுவதையுமே கல்வி என்று கருதிக்கொண்டிருக்கிறார்கள்… படிப்பு வேறு: அறிவு வேறு என்பதை ஞாபகத்தில் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் படித்த மூடர்களுக்கு எத்தனை உதாரணம் வேண்டுமானாலும் சொல்லலாம். (’குடிஅரசு’ 27.7.1930).
3. அறிவுக்காகக் கல்வி என்பது மாறி முட்டாள்தனமும், விசாரணையற்ற தன்மையும் வருவதற்கே கல்வி பயன்படும்படியாக ஆகின்றது. இது இன்று உலகத்தில் சில தேசங்கள் தவிர மற்ற தேசங்களிலெல்லாம் நடந்துவரும் சம்பவமே ஆகும். (‘குடிஅரசு’ 27.9.1931)
4. படித்தவர்களுக்கு அறிவு விருத்தியாகிறதா? படித்தவர்கள் அறிவாளிகளாக இருக்கிறார்களா? என்றால், ஆம் என்று சொல்ல முடிவதில்லை. இந்த அறிவு என்பதுகூட ஒரு பொது அர்த்தத்திற்குக் கட்டுப்பட்டதாய் இல்லாமல் எதைப் படித்தானோ அதில் அறிவுள்ளவன் என்றுதான் சொல்லக்கூடியதாய் இருக்கிறது.
(‘குடிஅரசு’ 14.7.1945
5. ஒருவன் எவ்வளவோ படித்திருக்கலாம்; படித்திருக்கலாம்: பலே அறிஞன், புத்திசாலி என்று பேசப்படலாம்; எல்லாம் அனுபவப் படிப்பைவிட மட்டரகமானவைகளே. (விடுதலை 10.3.1956)
6. படிப்பாளி என்று கூறப்படும் அத்தனை பேரும் அறிவாளி என்று கூற முடியுமா? அவர்கள் எல்லாம் பெரிய உத்தியோகத்தில் அமர்ந்து இருக்கலாம். அதிக சம்பளம் வாங்கலாம். கொழுத்த பணக்காரர்களாக இருக்கலாமேயன்றி அறிவில் சிறந்தவர்கள் என்று கூற முடியுமா? எனவே கல்வி என்பது மனிதனைப் பெரிய உத்தியோகஸ்தனாக ஆக்கவும், பணம் சம்பாதிகக் ஒரு வழியாகவும் மட்டும்தான் உள்ளது. ஆனால் அறிவாளியாக்கப் போதியதாக இல்லை. மனிதனுக்கு இக்கல்வி அவன் அறிவாளியாகும் இலட்சியத்திற்கு அடிப்படையாக அமையவேண்டும். (விடுதலை 9.3.1956)
தஞ்சை
பெ. மருதவாணன்
7. உலகக் கல்வி வேறு; பகுத்தறிவு வேறு; பட்டம் வேறு…. ஆகையால் மனிதனுக்குப் பகுத்தறிவும் உலகக் கல்வியும் அறிய பள்ளிக்கூடமும் பட்டமுமே போதுமானதாகிவிடா.
(‘குடி அரசு’ 19.12.1937)
8. (ஆசிரியர்களைப் பார்த்து) நீங்கள் படித்த கல்வியும், நீங்கள் கற்றுக்கொடுக்கப்போகும் கல்வியும் வயிற்றுப் பிழைப்புக்கு ஓர் ஆதாரமாகக் கருதிக் கற்கவும் கற்பிக்கப்படவும் ஏற்பட்டிருக்கிறதேயல்லாமல் மக்கள் அறிவுத்தத்துவத்திற்கோ, தேசத்திற்கோ, ஒழுக்கத்திற்கோஒரு பலனையும் அளிக்க முடியாததாய் இருக்கிறது என்பது நீங்கள் அறிந்த விஷயமேதான்.
(‘குடி அரசு’ 1.15.1927)
9. பொதுவாக நம் நாட்டு மாணவர்கள், கல்விப் படிப்பினால் எந்தவிதமான பகுத்தறிவையும் எதையும் ஆராய்ந்து அறியும்படியான தன்மையையும் அடைய முடிவதில்லை.
(‘விடுதலை’ 12.11.1954)
10. நம் நாட்டு மாணவர்களுக்குப் பொது அறிவைப்பு கட்டுவதற்கு வேண்டிய சாதனங்கள் ஒன்றும் இல்லாததாலும் நம் நாட்டுக் கல்வி முறையில் இவை கற்பிக்கப்படாததாலும் அவர்கள் வயது வந்தவர்கள் ஆனதும் பொதுவிடங்களிலும் உலகத்தோடும் நடைமுறையில் பழகுவது கிடையாது.
(‘விடுதலை’ 12.11.1954)