இந்தியர் மற்றும் அய்ரோப்பியரிடையே இருந்த இனத்தொடர்புகள் பற்றிய கருத்துகள் உண்மையோ இல்லையோ, இந்திய அய்ரோப்பிய மொழிகளுக் கான மூலம் ஒன்றுதான் என்பதிலோ அவற்றின் சிந்தனை ஒற்றுமையானது என்பதிலோ எவ்வித அய்யமும் இல்லை. மிகப் பழமையான இந்தோ அய்ரோப்பிய இலக்கியச் சின்னமாகவும் தத்துவச் சின்னமாகவும் இலங்குவது ரிக் வேதம் ஆகும் என்றுதான் சர்வபள்ளி இராதாகிருட்டி ணனும் சார்லஸ் ஏ. மூர் என்பவரும் சேர்ந்து எழுதிய இந்தியத் தத்துவத்திற்கான தரவு நூல் (A SOURCE BOOK IN INDIAN PHILOSOPHY) எனும் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே வேதங்கள் ஆரியர்க்கு மட்டும் உரியவை அன்று. மத்திய ஆசியப் பகுதியிலிருந்து மேய்ச்சல் நிலங்களைத் தேடித் தமது மாடுகளுடன் இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியர்களும் அவர்களின் பூர்வ சொந்தக்காரர்கள் ஆன வெள்ளையர்களும் சேர்ந்து படைத்து இந்தியர்களுக்குப் படைத்தவை ஆகும்.
இந்தோ ஆரியர்களின் பிற்கால நடவடிக்கைகள், தத்துவங்களைப் புரிந்துகொள்ள வகையேற்படுத் திடும் ஆதாரங்கள் வேதங்கள் என்று பிசிறில்லாமல் மேற்படி நூல் கூறுகிறது. எனவே, இந்தியத் தத்துவம் என்பது வேதங்களில் கூறப்படுபவை எனக் கூறமுடியாது. அது ஆரியர்களுடைய தத்துவம் என்றே கூறலாம்.
அப்படியானால், இந்தியத் தத்துவம் என்பது எது? இந்துத் தத்துவம் என்கிறார்களே, அது எது? இந்தியத் தத்துவமும் இந்துத் தத்துவமும் ஒன்றா?
இல்லை என்றுதான் கூறவேண்டும். இந்தியா என்பது எது? இந்தியர் என்பது ஏது? இந்து(மதம்) என்பது எது? இந்துக்கள் என்போர் யார்?
இவைகளுக்கான விடைகள் நீளமானவை. நெடுங்காலமாகவே தந்தை பெரியார் அவர்களால் விளக்கப்பட்டுத் தென்னக மக்களால் விளங்கிக் கொள்ளப்பட்டவை. இந்து என்ற சொல்லே, இந்திய மொழிகள் எதிலும் இல்லை. ஆதியில் இல்லாத இச்சொல், பாதியில் நுழைந்தது; நுழைக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்திய மக்களைக் குறிப்பிடுவதற்காகக் கையாண்ட சொல். பொது ஆண்டு 1799இல் சர்.வில்லியம் ஜோன்ஸ் எனும் கவர்னர் ஜெனரல் பயன்படுத்தத் தொடங்கிய சொல். செத்துப்போன சங்கராச்சாரி சாமிநாதன் கூறியவாறு பெயரில்லாத மதத்திற்கு வெள்ளைக்காரன் வைத்த பெயர் இந்து என்பது. பாரசீக மொழியில் மட்டுமே உள்ள சொல். சிந்து என்பதை ஹிந்து என்றுதான் அம்மொழியில் எழுதமுடியும்.
ஏனென்றால், ச அம்மொழியில் கிடையாது. அதற்குப்பதில் ஹ பயன்படுத்துவார்கள். அதுபோலவே சமக்கிருதத்தில் வ கிடையாது. பதிலாக ப பயன்படுத்துவார்கள். வங்காளி என்பதற்குப் பதில் பங்காளி என்றுதான் சமக்கிருதத்தில் எழுதமுடியும். தினமணி ஆசிரியர் வைத்தியநாதனின் பெயரை பைத்தியநாதன் என்றுதான் எழுத முடியும். மொழியின் குறை அது!
அடுத்து இந்தியா என்றொரு நாடு இருந்ததா? வேத காலத்தில் இருந்ததா? புராண காலத்தில் இருந்ததா? முகலாயர் காலத்தில் இருந்ததா? வெள்ளையர் காலத்தில் இருந்ததா? வெள்ளையர் வெளியேறிய போதாவது இருந்ததா? இல்லையே!
வேத காலத்தில் காந்தாரம் (கந்தஹார்) ஆப்கானிஸ்தான் முதல் கூர்ஜரம், வங்கம், கலிங்கம், திராவிடம் என்று 56 தேசங்கள்தான் இருந்தன. இதற்கு ஆதாரமாக மகாபாரதம் வனபருவத்தில் வருணிக்கப்படும் ராஜசூய யாகத்தில் பங்குபெற்ற நாட்டவர்களின் பட்டியல் உள்ளது. புராண காலத்தில் மனுதர்மம் எழுதப்பட்டபோதுகூட, மன்னர்களின் பெயர்களைக் குறிக்கும்போது, அங்கர், வங்கர், திராவிடர் என்றுதான் பட்டியல் நீள்கின்றது. எனவே 56 தனித் தனி நாடுகள்தான்.
முகலாயர் காலத்திலும்கூட, இன்றைய இந்திய நாட்டின் வடபகுதிதான் அவர்களிடம் இருந்தது. மராட்டியம் தனிதான். திராவிடம் மூன்றாக சேர, சோழ, பாண்டியர்களிடம் இருந்தது.
வெள்ளையர் ஆளத் தொடங்கியபோதும் முடிக்கும்போதும்கூட, பிரிட்டிஷ் இந்தியாவும் 500க்கும் மேற்பட்ட சுதேச சமஸ்தானங்களும் இந்நிலப்பகுதியில் இருந்தன. நாட்டைவிட்டு வெளியேறும்போது, பிரிட்டிஷ் இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து கொடுத்துவிட்டுப் போயினர். 500க்கும் மேற்பட்ட மன்னர்களின் நாடுகள் தனித் தனியாகவேதான் இருந்தன.
1947 ஆகஸ்டு 15க்குப் பிறகுதான் மைசூர், திருவாங்கூர், கொச்சி, புதுக்கோட்டை, அய்தராபாத், குவாலியர், ஜெய்பூர், உதய்பூர், போபால் போன்ற மன்னர்கள் ஆண்ட பகுதிகள் இணைக்கப்பட்டு இந்தியா உருவாக்கப்பட்டது.
ஆகவே, இந்து மரபும், இந்திய மரபும் முறையே 210 ஆண்டும் 66 ஆண்டும் ஆயுள் கொண்டவை மட்டுமே.
தமிழ்நாட்டின் கபிலர் என்பவரால் கற்பிக்கப்பட்ட சாங்கியம், யோகம், மீமாம்சம், ஞாயம், வைசேஷிகம் ஆகியவை இந்திய தத்துவ மரபுகள் எனக் கூறப்படுகின்றன. இவற்றுடன் வேதாந்தம் என்ற ஒன்றையும் சேர்க்கிறார்கள்.
வேதம் + அந்தம், அந்தம் என்றால் முடிவு எனப் பொருள். வேதத்தில் முடிவு என்று எடுத்துக் கொள்ளலாம்.
முடிவு என்றால் END என எடுத்துக் கொள்ளக் கூடாது. ESSENCE (பிழிவு) என்று பொருள் கொள்ள வேண்டும்.
இதிலேகூட, இவர்கள் 4 வேதங்களையோ, ஆரண்யகங்களையோ ஒப்புக்கொள்ள மாட்டார்கள். உபநிடதங்களை மட்டுமே கணக்கிலும் கருத்திலும் கொள்கிறார்கள். ரிக் வேதத்தை மட்டுமே பெரிதாக எடுத்துக் கொள்கிறார்கள். இதில் முதல் பகுதி சம்ஹிதை எனப்படும் போற்றிப் பாடல்கள். அடுத்த பகுதி பிராமணம் எனும் சடங்கு, சம்பிரதாயங்களை விளக்கும் பகுதி.
அடுத்தது ஆரண்யகம் எனும் காட்டுப் பாடல்கள் அடங்கியது. உபநிடதங்கள் என்பவை இப்பகுதியில்தான் இருக்கின்றன.
இவை மூன்றும் ஒரே காலத்தில் கூறப்பட்டவையோ, தொகுக்கப்பட்டவையோ அன்று. சம்ஹிதை காலத்தால் மூத்தது. பாலகங்காதரதிலக் எனும் மராத்திப் பார்ப்பனர் இவை 6500 ஆண்டுகளுக்கு முன்பே சார்ந்தவை எனப் பொய்க் கூற்று கூறியுள்ளார். ஆந்திரப் பார்ப்பனரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இதனை ஏற்க மறுத்துள்ளார்.
அவர் எழுதிய இந்தியத் தத்துவம் (INDIAN PHILOSOPHY) எனும் நூலில் இவை 3500 ஆண்டுகளுக்கு முந்தியவை என்றே நாம் கணிக்கிறோம் என்றே குறித்துள்ளார். யாரைப் பார்த்தாலும், வேதம் 4000 ஆண்டுகாலப் பழமையானது என்பார்கள். அது உண்மையா?
நான்கு வேதங்களில் கடைசியாகக் கூறப்படும் வேதம் அதர்வண வேதம் என்பது. ரிக், யஜூர், சாம, அதர்வணம் என்று வேதங்களை வரிசைப்படுத்துவார்கள். அதில் அதர்வண வேதத்தில் சடங்குகள், சம்பிரதாயங்கள், மந்திர, தந்திரங்கள் போன்ற பித்தலாட்டங்கள் மட்டுமே உள்ளன. அவற்றில் கற்பூரம் கொளுத்துவது எப்படி என்பது பற்றிய விளக்கம் கூறப்பட்டுள்ளது. கற்பூரம் என்பது மணம்தரும் ஒரு தாவரத்தின் இலைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெ யிலிருந்து தயாரிக்கப்படும் வெண்ணிறப் பொருள். இது எளிதில் தீப்பிடிக்கும்; விரைவில் ஆவியாகிக் கரைந்துபோகும். இது கண்டுபிடிக்கப்பட்டது சீனாவில். இது கண்டுபிடிக் கப்பட்டு 1220 ஆண்டுகள்தான் ஆகின்றன. அங்கிருந்து இந்திய நாட்டுக்கு வந்து சுமார் 1000 ஆண்டுகள் இருக்கலாம்.
1000 ஆண்டே ஆன பொருள் 6500/3500 ஆண்டு களுக்கு முந்திய வேதத்தில் விளக்கப்பட்டிருக்கிறது என்றால்… கற்பூரத்திற்கு ஆதாரம் உள்ளது. வேதத்திற்கு ஆரியர்களின் அளப்பு மட்டுமே இருக்கிறது. ரிக் வேதத்திலே, கோவையான பாடல்கள் அமைந்திருக்கவில்லை. பல மலர்களின் சேர்க்கை யைக் கதம்பம் என்று கூறுவது போன்ற கலவைப் பாடல்கள் கொண்டது ரிக்வேதம். அறிவுக்குப் பொருந்தாதவை நிறைய உள்ளன. அறிவுக்குப் பொருந்தி வரக்கூடிய பாடல்களும் சிலபல உள்ளன.
அவற்றை திராவிட ரிக் என்கிறார்கள். திராவிடர்களின் சிந்தனைப் பிழிவை எடுத்துப் போட்டு, நாணயமாகத் திராவிட ரிக் எனக் குறித்து ரிக் வேதத்தைத் தயார் செய்திருக்கிறார்கள். எழுதாமல், வாய் மொழியாக மனப்பாடம் செய்து ஒப்புவித்து (தப்பும் தவறுமாய் சொல்வதற்கும் வாய்ப்பு உண்டல்லவா!) எழுதாக்கிளவி, மறைபொருள் என்றெல்லாம் கதை அளந்து கொண்டிருந்தார்கள். வெள்ளைக்காரர்கள் (ஜெர்மனியின் மாக்ஸ்முல்லர் போன்றோர்) அதனை முடிந்தவரை விளங்கி மொழிபெயர்த்து உலகுக்குக் காட்டிய பின்னர்தான் அது வெளிச்சத்திற்கு வந்தது.
ஆரியர்களின் எதிரிகளை எதிர்க்கவும், அழிக்கவும் போரிடுவதற்கும் போரில் உதவுவதற்கும் பிறரின் உதவியை, ஒத்தாசையை நாடிப் பெறுவதற்கான பாடல்கள் கொண்டது யஜுர் வேதம். சாமவேதம் என்பது காமச்சுவை ததும்பும் இசைப்பாடல்களின் தொகுப்பு. வாத்ஸ்யாயன் என்பவர் காமசூத்ரா எழுதுவதற்கான தரவு நூல் சாமவேதம் என்றே சொல்லலாம். அதர்வண வேதம் அயோக்கியத்தனமான சடங்காச்சாரங்கள், வழிமுறைகள், மந்திர தந்திரப் பிரயோகங்கள் போன்றவற்றை விளக்கமாகக் கூறும் வேதம். எதையும் கையாண்டு எப்படியும் வாழவேண்டும் என்கிற ஆரியர்களின் வாழ்வுமுறைக்கு வழிகூறிடவும், பிறரை ஏமாற்றுவதற்கான உபாயங்களைக் கூறிடவும் அவர்களுக்கான வாழும் வழி வகைகளை வகுத்திட்ட வேதம்.
சம்ஹிதைகளின் சங்கதி இப்படி என்றால் இரண்டாம் பாகமான ஆரண்யகம் வனப்பாடல்கள் என்று பொருள்படும். இந்த உலகம் எதிலிருந்து வந்தது?- இந்த உயிர்கள் எங்கிருந்து வந்தன? எங்கே போகின்றன? இறந்த பின் இருக்கப்போகும் நிலை என்ன? இப்படியெல்லாம் கேள்விகள் நிறைந்த பகுதி. விடை இல்லாக் கேள்விகள்; விடை தெரியாக் கேள்விகள். இத்தகையக் கேள்விகளால் என்ன பயன்? ஒன்றும் கிடையாது.
அடுத்தது உபநிஷத்கள். மொத்தம் 108 உள்ளன. இவற்றில் 18 உபநிஷத்துகள் ஒன்றோடொன்று முரண்பட்டு மோதிக் கொள்கின்றன என்பது ஆய்வாளர்களின் கருத்து. அல்லா உபநிஷத் என்றே ஒன்றை எழுதி வைத்துக் கொண்டுள்ளனர். அல்லா எனும் அரபிச் சொல் கடவுள் என்பதைக் குறிப்பதாகக் கூறி அதனை வணங்கவேண்டும் என்கிற மார்க்கம் உருவாக்கப்பட்டு 1433 ஆண்டுகள் ஆகின்ற நிலையில் 6500/3500 ஆண்டுகளான வேத, உபநிஷத்துகளில் ஒன்று என்றால்… இந்தப் புளுகு கந்த புராணத்தில் கூட இல்லை என்பதாகத்தானே இருக்கிறது?
தத்துவம் எனப்படுவது வாழ்க்கைப் பெருமை. வாழ்க்கை நெறி. சிறந்த வாழ்வுக்கான சிந்தனைகளின் முடிவு. செம்மையான வாழ்வின் அடிப்படைச் சிந்தனைத் தெளிவு. அச்சிந்தனைகளின் அடிப்படையில் செயல்படும் ஊக்கம். அப்படிப்பட்ட தத்துவம் மக்களின் அன்றாட வாழ்வின் அடிப்படைகள்பற்றிக் கவலைப்பட்டுக் கருத்து தெரிவிப்பதாக அமைந்திட வேண்டும். சாக்குருவி கருத்துகளைக் கொண்டிருக்கக் கூடாது. இதற்கு என்ன என்ற வினாவுக்கு விடை அளிப்பதாக இருக்கவேண்டும். இதற்குப் பிறகு என்ன என்கிற சாக்குருவி வேதாந்தம் மனித வாழ்க்கைக்குப் பயன்படாது. அப்படிப் பயன்படாத தத்துவம் தேவையேயில்லை. வேதங்களின் அடிப்படையிலான தத்துவம் இந்து தத்துவம் எனலாமே தவிர இந்தியத் தத்துவம் என்பதை ஏற்க முடியாது.
இந்த உபநிஷத்களுக்கு காலடியில், ஆர்யாம்பாள் எனும் விதவைப் பெண்ணுக்குப் பிறந்த (ஆதி) சங்கரன் எனும் பார்ப்பனர் பஜகோவிந்தம் எழுதியிருக்கிறார், வையாகர்ணி ஸ்பண்டித வைஷ்ய (பண்டிதர்களுக்காக இந்தப் பாட்டை எழுதுகிறேன்) என்ற முன்னுரையோடு எழுதியிருக்கிறார். பஜகோவிந்தத்தில் 12 பாடல்கள் உள்ளன. துவாதச மஞ்சரி காரிர தெக்ஷ் என்கிறார். இந்த நூலின் பெயர் துவாதச மஞ்சரிகாரி என்பதாகும். துவாதச என்றால் பன்னிரண்டு என்று பொருள். தமிழில் பத்து, இரண்டு பன்னிரண்டு என்கிறோம். ஆரியர்களின் சமக்கிருதத்தில் இரண்டு பத்து _ (பன்னிரண்டு) துவாதச என்கிறார்கள். நம் வழக்குப்படி இரண்டு பத்து என்றால் இருபது என ஆகும். இப்படிப் பல நேர்வுகளில் நமக்கும் அவர்களுக்கும் நேர் விரோதம். அவர்களின் தத்துவமும் அப்படியே!
நான்கு வேதம் என்றவர்கள், ஆறு சாத்திரம் என்கிறார்கள். ஆனால் அய்ந்தை மட்டுமே பட்டியல் போடுகிறார்கள். சாணக்கியன் எனும் கவுடில்யனின் அர்த்த சாத்திரம் கொடுங்கோல் மன்னர்களுக்கு வழி சொல்லிக் கொடுக்கும் விபரீத சாத்திரம். எப்படி ஏமாற்றுவது, எப்படி வரி விதிப்பது, எப்படித் துரோகம் இழைப்பது, எப்படி காசுக்கு விலைபோகும் விபசாரிகளைப் பயன்படுத்தி எதிரி நாட்டு இரகசியங்களைத் தெரிந்து கொள்வது போன்ற பித்தலாட்ட ஆட்சிமுறைகளைக் கற்றுத் தரும் சாத்திரம். இத்தாலியின் மாக்கியவல்லி எழுதிய தி பிரின்ஸ் எனும் மோசடி கற்றுத் தரும் நூலுக்கே தந்தை எனக் கருதப்படும் சாத்திரம். முன்னுரை இன்னும் முடியவில்லை…
– சு.அறிவுக்கரசு
– தொடர்ச்சி அடுத்த இதழில்