‘‘2014 ஆம் ஆண்டு என நினைக்கிறேன். ஒரு நாள் அதிகாலை வேளை. அந்த நாளின் காலையை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. அது மற்ற நாட்களின் காலை போல அல்ல. மெல்லிய வெளிச்சங்களுடன், ஏராளமான புதிர்களுடன் விடியும் காலைப் பொழுதுகளின் மீது எனக்கு எப்போதும் தீராத ஆர்வம் உண்டு. மிச்சமிருக்கும் தூக்கம் நிரம்பிய கண்களும், அந்த நாளின் மீதான ஏராளமான எதிர்பார்ப்புகள் நிரம்பிய மனமும் என எல்லாக் காலையும் எனக்கு ஆர்வமூட்டுவதுமாகவே இருக்கும்.
ஆனால், அந்தக் குறிப்பிட்ட நாளின் காலைப் பொழுது அப்படி விடிந்திருக்கவில்லை.என் மனம் முழுக்க ஏதோ ஒரு வெறுமை படிந்திருந்தது. என்னால் அந்த வெறுமையை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.வெறுமை என்றால் மனதை அழுத்தும் வெறுமை. ஒரு பெரும்பாரத்தை என் நெஞ்சில் வைத்து அழுத்துவது போல இருந்தது. என் கண்களில் இருந்து காரணமே இல்லாமல் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அழுகிறேன்.அழுகிறேன்… அந்தப் படுக்கையில் இருந்து எழ மனமில்லாமல் போர்வையைக் கண்களோடு சேர்த்து இறுக்கிக் கொண்டு பெரும் சத்தமிட்டு அழுகிறேன். ஏன் அழுதேன் என்று கேட்டால் என்னிடம் அதற்குப் பதிலில்லை. இப்போது வரை பதிலில்லை.
அப்போது இருந்த மனநிலையின் வழியாக என் அழுகைக்கான காரணத்தை இப்போது புரிந்து கொள்ள முடியும். ஆனால் அன்று? எதற்கும் பதிலில்லை. என்னைச் சுற்றி உள்ள அனைத்தும் சுருள், சுருளாய் விரிந்து ஒரு பெரிய இருளின் போர்வைக்குள் என்னையும் சேர்த்து உள்ளிழுத்துக் கொண்டு போவது போல இருந்தது. எவ்வளவு நேரம் அப்படியே படுத்துக் கிடந்தேன் என நினைவில்லை. ஆனால் உடலும், மனதும் அப்போது அத்துணை சோர்வாய் இருந்தது. எழுவதன் மீதோ அல்லது அன்றைய நாளில் எனக்கிருந்த வேலைகள் மீதோ என எதிலும் நாட்டமில்லாமல், ஆர்வமில்லாமல் படுத்துக் கிடந்தேன். அந்த நாளின் அந்தக் கொடிய மனநிலை எல்லா நாளும் தொடர்ந்து கொண்டேயிருந்தது.
அது என்னை முழுவதுமாக உள்ளிழுத்துக் கொண்டது. என்னால் சிரிக்க முடியவில்லை. ஆனால், அப்படி என்னால் இருக்கவும் முடியாது. எல்லாக் கணங்களும் நான் எல்லாராலும் கவனிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பவள்.அதனால் ஒரு செயற்கையான புன்னகையை வலிய வந்து என் உதடுகளுக்குக் கொடுத்துக் கொண்டேன். ஆனால், அப்படி சில கணங்கள் மட்டுமே என்னால் இருக்க முடிந்தது. என்னைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளை மறந்து சட்டென்று எனக்குள் வெறுமை கவ்விக் கொள்ளும். உடனே எங்காவது தனிமையில் ஓடிப்போய் கதறி அழுவேன். மீண்டும் திரும்ப வருவேன், மீண்டும் ஒரு வலிய வரவழைத்துக் கொண்டு ஒரு புன்னகை, மீண்டும் ஒரு பேரழுகை. இப்படியே எனது நாட்கள் சென்றன.
நண்பர்கள் சிலரிடம் இது பற்றிச் சொன்னேன் – எனது மனநிலையை, காரணமற்ற எனது அழுகையை, வெறுமை நிறைந்த நெஞ்சத்தை, நெஞ்சத்தை அழுத்தும் துக்கத்தை. அவர்கள் திருப்பி என்னிடம் ஒன்றே ஒன்றைத் தான் கேட்டார்கள் ‘‘அப்படி என்னதான் பிரச்சனை உனக்கு?, ஏராளமான பணம், விரும்பிய வாழ்க்கை, புகழ், கணக்கில்லாத விருதுகள், எதற்குப் போய் இப்படி தேவையில்லாமல் கவலைப்படுகிறாய்?’’ ‘‘தேவையில்லாத கவலை’’ ஆம்! எல்லாரும் சொன்னது அதைத்தான். நான் தேவையில்லாமல் கவலைப்படுகிறேன். இன்னும் ஒன்றையும் சேர்த்துச் சொன்னார்கள். ‘‘எல்லாமும் உனது மனதில் தான் உள்ளது, ‘ரிலாக்ஸாக’ இரு, வாழ்க்கையை ‘எஞ்சாய்’ பண்ணு.’’ எனது இயலாமையே எனது பிரச்சனைக்குத் தீர்வாகச் சொல்லப்படுகிறது.
கால் முறிந்த ஒருவன் நடக்க இயலாமல் படுத்துக் கிடக்கும்போது ‘‘நடந்து பார்! எல்லாம் சரியாகிவிடும், எல்லாமும் உன் கால்களில் தான் உள்ளது, உன்னால் முடியும், நட! எல்லா நேரமும் நட!’’ எனச் சொல்வது போல் இருந்தது. நடக்க இயலாதவனுக்கு நடப்பது தான் தீர்வு என்று சொல்ல முடியுமா? அல்லது ‘‘நீ தேவையில்லாமல் படுத்துக் கிடக்கிறாய்! நீ நினைத்தால் உன்னால் நடக்க முடியும்’’ எனக் கால் முறிந்த ஒருவனிடம் சொல்ல முடியுமா? அப்படித்தான் என்னிடம் சொன்னார்கள்.
ஆனால், என் குடும்பத்தினர் என்னை முழுமையாகப் புரிந்து கொண்டார்கள். எனது இயலாமையைப் புரிந்து கொண்டார்கள்.உண்மையில் அவர்கள்தான் என்னை உளவியல் நிபுணர்களிடம் அழைத்துச் சென்றார்கள். அது எவ்வளவு நன்மை பயத்தது என்பது எனக்கு இப்போது புரிகிறது. என் மனநிலைக்காக மாத்திரைகளை எடுத்துக் கொள்ளச் சொன்னபோது, நான் முதலில் தயங்கினேன். இதுக்கெல்லாம் மாத்திரைகளா? என்று பலபேர் நினைப்பது போல் நானும் நினைத்தேன். ஆனால், அப்போதிருந்த மனநிலையை நான் என்ன செய்தாவது கடக்க வேண்டும் என நினைத்தேன்.அதனால் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளத் தொடங்கினேன். எனது மனநிலை கொஞ்சம் கொஞ்சமாகப் பழைய நிலைக்குச் சீரடையத் தொடங்கியது. சில வாரங்களில் நான் முற்றிலுமாக எனது துயரங்களில் இருந்து வெளியே வந்தேன்.
எனது வாழ்வின் மிகக் கடுமையான காலகட்டத்தில் இருந்து, வாழ்க்கையின் மீதான – வாழ்வதன் மீதான அத்தனை நம்பிக்கைகளும் உடைந்து போன கணங்களில் இருந்து சில மாத்திரைகளே என்னை மீட்டுக் கொண்டு வந்தன. ஒருவேளை என்னை அப்போது உளவியல் மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றிருக்காவிட்டால் நான் இப்போது உங்கள் முன் இருந்திருக்க மாட்டேன். ஏனென்றால், அந்தக் கடுமையான மனநிலையில் இருந்து வெளியே போவதற்குத் தற்கொலை செய்து கொள்வது மட்டுமே அப்போது எனக்கிருந்த ஒரே ஒரு வழியாக இருந்திருக்கும். இப்போது கூட இதை நான் உங்களிடம் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது.
என்னைப் போல இங்கே பல பேர் இருக்கிறார்கள். சொல்ல முடியாத மனஅழுத்தம் இங்கு பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. அவர்களுக்கு எனது இந்த அனுபவம் ஒரு புதிய பார்வையைக் கொடுக்கலாம்.அவர்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தலாம்.
‘டிப்ரஷன்’ என்பது நமது கட்டுப்பாட்டில் இல்லை. அது ஒரு தேவையில்லாத கவலை இல்லை. மாறாக அது சுலபமாகத் தீர்க்கக்கூடிய நோய் என்ற தெளிவை ஏற்படுத்தலாம். அதன் வழியாக இதன் மீதுள்ள எதிர்மறையான பார்வை குறையலாம். அதன் மூலம் பெரும்பாலான மக்கள் அதன் தீர்வை நோக்கி நகரலாம். உயர்ந்து கொண்டிருக்கும் தற்கொலைகளின் எண்ணிக்கை இதன் விளைவாகக் குறையலாம்.
அதன் காரணமாகவே நான் எனது அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.’’
இந்தப் பேட்டியைக் கொடுத்தது வேறு யாரு மில்லை. பாலிவுட்டின் முன்னணி நடிகையும், ஏராளமான விருதுகளைப் பெற்றவருமான தீபிகா படுகோனே. 2016 ஆம் ஆண்டு தனது ‘Depression’ தொடர்பாக பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியின் சாராம்சம் தான் இது.
இந்தப் பேட்டியில் இருந்து சில விஷயங்கள் தெளிவாகத் தெரிகின்றன:
· மனச்சோர்வு (Depression) என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். மிகப் பிரபலமானவரும், அன்றாட வாழ்வின் ஆடம்பரங்கள், சொகுசுகள் என நாம் நினைக்
கும் அத்தனையையும் பெற்ற ஒருவருக்குக் கூட இந்த மனச்சோர்வு ஏற்படலாம்.
· பெரும்பாலான நேரங்களில் மனச்சோர்வு என்பது எந்தப் புறக்காரணங்களும் இல்லாமல்
தான் வருகிறது. அதாவது நம்மைச் சுற்றி நிகழும் காரணங்களால் இந்த மனச்சோர்வு உருவாவதில்லை.
· மனஅழுத்தத்தை வெளியே சொல்லும் போது பெரும்பாலான நேரங்களில் நமக்கு அறிவுரைகளே கிடைக்கின்றன. வேண்டி விரும்பி யாரும் முடங்கிப்போய்க் கிடப்பதில்லை.
· அன்றாட வாழ்வில் சில பிரச்சனைகள் சார்ந்து நமக்கு ஏற்படும் கவலைகள் என்பது வேறு; மனச்சோர்வு என்பது வேறு. பெரும்பாலான நேரங்களில் நாம் இவை இரண்டையும் குழப்பிக்கொள்கிறோம்.
· மனச்சோர்வு என்பது எளிதில் குணப்படுத்தக் கூடியதே! மனநோய்கள் எல்லாம் தீவிர மானது, குணப்படுத்த முடியாதது என நம் எல்லோருக்கும் மனநோய்கள் பற்றி
ஒரு பொதுவான அபிப்பிராயம் இருக்கிறது. உண்மையில் எல்லா மனநோய்களும் ஒன்றல்ல. மனச்சோர்வு என்பது சாதாரண மாக குணப்படுத்தக்கூடிய ஒரு வகை நோய்.
ஆனால், அதற்கான மருத்துவத்தை நாம் செய்யத் தவறும்போது அது கொஞ்சம் கொஞ்ச மாகத் தீவிரத் தன்மையை நோக்கிச் செல்லத் தொடங்கும். பெரும்பாலும் மருத்துவம் செய்யப்படாத நிலையில் உள்ள மனச்சோர்வு தான் தற்கொலைகளில் சென்று முடிகிறது.
· நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். இந்த நிலைமையில் யாராவது நம்மிடம் வந்து தங்களுக்கு ‘Depression’ இருப்பதாகச் சொன்னால் அதை அலட்சியப்படுத்தாமலும், வெற்று அறிவுரைகளைக் கூறாமலும் அவர்களது பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவதன் வழியாக நாம் அவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதை நோக்கிப் பயணம் செய்யலாம்.
– தொடரும்