ஒரு தலைவருக்கான இலக்கணம் மேலாண்மை இயலில் தலைமைப் பண்புகளுக்கு பல்வேறு கூறுகளை வரையறுத்துள்ளனர். சிலர் அவற்றைக் கற்று அறிந்து கொள்வார்கள். சிலர் தங்களது வாழ்வில் கற்றதையும் பெற்றதையும் கொண்டு வகுத்துக் கொள்வார்கள். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் முன் சொன்ன இரு காரணங்களுக்கு மட்டுமல்ல; மூன்றாவதாக இலக்கணத்திற்கே இலக்கணமாகத் திகழ்பவர்.
கடந்த 50 ஆண்டுகளில் நான் அவரிடம் கண்டு வியந்த சில தலைமைப் பண்புகளை இங்கே பட்டியலிட விரும்புகிறேன்.
தமிழர் தலைவரின் சுறுசுறுப்பு
முதலில் அவரிடத்தில் கவனிக்கச் செய்தது அவருடைய சுறுசுறுப்பு. ஓய்வறியாத ஒப்பற்ற தலைவர் அவர்!
சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனி நாட்டில் கொலோன் மாநகரில் நடைபெற்ற பகுத்தறிவுக் கருத்தரங்கிற்குப் பின் எல்லோரும் ரைன் நதியில் பயணம் மேற்கொண்டு, பின் வேறு சில இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு அறைக்குத் திரும்பினோம். சொல்ல மாளாத அளவிற்கு உடல் அயற்சி, களைப்பு. அறைக்குச் சென்று ஓய்வு எடுக்கலாம் என்று விடுதிக்குத் திரும்பும்போது, தமிழர் தலைவர் அவ்வூர் நண்பர் ஒருவரிடம், இங்கே அருகில் புத்தகக் கடை ஏதாவது உள்ளதா என்று கேட்டு அவரோடு கிளம்பி விட்டார். நாம் அறைக்குச் சென்று நன்றாக உறங்கி ஓய்வெடுத்து விட்டு இரவு உணவுக்காகக் கீழே வரும்போது அய்யா திரும்பி வருகிறார். நாம் அவரைவிடப் பல ஆண்டுகள் வயதில் சிறியவர். இருந்தபோதிலும் அங்கே அவரது சுறுசுறுப்புக்கு முன்பு நாம் தோற்கடிக்கப்பட்டோம். வெட்கப்பட்டோம். அன்று முதல் நம்மைத் திருத்திக் கொள்ள உறுதி பூண்டோம்.
நாற்காலியில் உட்காருவது எப்படி?
நாற்காலியில் அவர் உட்காருவதே வித்தியாசமானது. நாற்காலியை உட்காருவதற்கு மட்டுமே பயன்படுத்துவார். அதில் சாய்ந்து கொள்வதற்கு வசதி இருக்கிறது என்பதை அறிந்தவர் இல்லையோ எனத் தோன்றும். ஆசிரியர் சாயும் பலகையில் நன்கு சாய்ந்து அமர்ந்ததை நான் பார்த்ததே இல்லை. ‘அமைதிப்படை’ சத்யராஜ் போல விளிம்பில் தான் அமர்வார். (தேர்தலில் சத்யராஜ் வெற்றி பெற்றவுடன் நாற்காலியில் நன்கு சாய்ந்து உட்கார்ந்து கொள்வார். அத் திரைப்படத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க காட்சி அது.)
தன் வாழ்வில் எத்தனை எத்தனையோ இமாலய சாதனைகள் புரிந்திருந்தாலும் தமிழர் தலைவர் ஆசிரியர் நாற்காலியின் விளிம்பில் தான் இப்போதும் உட்காருவார்.
ஒருமுறை வேலூரிலிருந்து அவரோடு பயணம் செய்யும்போது இது குறித்துக் கேட்டேன். அவர் சொன்ன காரணம் ஏற்புடையதாக இருந்தது. அய்யா தந்தை பெரியார் அவர்கள் அவரது அறையிலிருந்து எப்போது வேண்டுமானாலும் கூப்பிடலாம். ஒரு நொடி கூட தயங்காமல், பாய்ந்து செல்ல ராணுவ வீரன் போலத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக அப்படி அமர்ந்து பழகி விட்டேன் என்றார். அது அப்போது சரி. ஆனால், அய்யாவுக்குப் பிறகு இப்போதும் ஏன் எனக் கேள்வி எழுந்தாலும், இந்தச் சமூகத்திற்கு உழைக்கும் கருஞ்சட்டை காவற்காரர், கால்களுக்கு ஓய்வு கொடுக்கத் தான் உட்கார வேண்டுமே தவிர, ஓய்ந்துவிடக் கூடாது என்பதை நமக்கு நினைவுபடுத்த நாமும் செயல்படுத்தக் கற்றுத் தரும் நோக்கத்தில் அவ்வாறு அமர்கிறார் என நாம் எடுத்துக் கொள்கிறோம்.
நினைத்துப் பார்க்க முடியாத நினைவாற்றல் அவரிடத்தில் இருக்கின்ற இன்னொரு ஒப்பற்ற கூறு – துல்லியமான நினைவாற்றல். கணினி போல… அல்ல அல்ல, செயற்கை நுண்ணறிவு போலத் தகவல்களைத் துல்லியமாக வைத்திருப்பார். காலையில் பார்த்த ஒருவரை மாலையில் மறந்து விடுகிற நம்மைப் போன்றவர்கள் உள்ள இவ்வுலகில் எப்படி அவரிடத்தில் இத்தகைய பேராற்றால் உள்ளது என்று பலமுறை ஆச்சரியப்பட்டு இருக்கிறேன். ஒரு முறை அவரிடமே கேட்டதற்கு, அவர் சொன்ன பதில் ‘பயிற்சி’. ஒருவரோடு உரையாடும் போது முழுக் கவனத்துடன் செய்திகளை உள்வாங்கி நினைவு அடுக்குகளில் சரியாகப் பொருத்த வேண்டும். புள்ளிகளாய்ச் செய்திகளை உள்வாங்கும்போது அவை தங்காமல் போய்விட வாய்ப்புண்டு. ஏற்கனவே நம்முள் இருக்கும் அதை ஒட்டிய செய்திகளோடு, புள்ளிகளை இணைத்து, கோலமாக்கி விட வேண்டும். அப்போது
நினைவில் நிரந்தரமாகப் பதிந்து விடுகிறது.
உதாரணத்திற்கு ஒரு நண்பர் இந்த ஊரிலிருந்து வருகிறேன் என்று சொன்னால், வெறும் அந்த ஊரை மட்டும் கேட்காமல் அந்த ஊரிலுள்ள சம்பவங்கள் சிலவற்றை நினைவு அடுக்குகளிலிருந்து எடுத்து உரையாடி, பிறகு நண்பர் சொல்லும் செய்தியையும் அதே இடத்தில் கொண்டு போய்ச் சேமிக்கும் போது எப்போதெல்லாம் அந்த ஊரின் பெயர் நினைவுக்கு வருகிறதோ அப்போது எல்லாம் பழையது – புதியது என எல்லாம் நினைவுப் பேழையிலிருந்து வெளிவந்து விடும் என்றார்.
மேலும், தொழிற்சாலையோ அலுவலகமோ, வீடோ – பொருட்களை அவ்வவற்றுக்கு எனக் குறிப்பிட்ட இடத்தில் வைத்துப் பழகி விட்டால், எந்தப் பொருளையும் எப்போதும் தேடாமல் எடுக்க முடியும். அதேபோலத்தான் ஒருவரைப் பற்றிய விவரங்களையோ அல்லது ஒரு நிகழ்ச்சியையோ அல்லது ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது கிடைக்கும் செய்தியையோ கோர்வையாகச் சரியான நினைவு அடுக்குகளில் பதிய வைத்து விட்டால் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும் என ஆசிரியர் வகுப்பு எடுத்தார். புத்தர் சொன்னது போல அந்தத் தருணத்தில் வாழப் பழக வேண்டும். ஆங்கிலத்தில் இதை ‘மைண்ட் ஃபுல்னஸ்’ என்று சொல்கிறார்கள்.
நாம் ஒரு விஷயத்தைச் சொல்லும் போது ஆசிரியர் அவர்களுடைய உடல் மொழியைக் கவனியுங்கள். கண்கள் கூராக நம்மைப் பார்க்கும். காதுகள் இரண்டும் விரிந்து, சொல்லும் செய்தியைக் கேட்கும். அந்த நேரத்தில் பக்கத்தில் ஏதாவது கீழே விழுந்தால் கூட திரும்ப மாட்டார். கவனம் நாம் சொல்வதில் மட்டுமே இருக்கும். அதனால்தான் எல்லா விஷயத்தையும் மிக ஆழமாகப் பதிவு செய்து கொள்ள முடிகிறது.
சமூக வலைத்தளங்களில் மூழ்கியுள்ளோர் கற்றுக்கொள்ள வேண்டிய உயர் பண்பு இது.
வாழ்வதில் ஓர் அர்த்தம்
விக்டர் பிராங் என்னும் எழுத்தாளர் தன்னுடைய புகழ்பெற்ற ‘மேன்ஸ் சர்ச் ஃபார் மீனிங்’ என்னும் புத்தகத்தில் சொல்லுவார் – நம்முடைய வாழ்க்கையில் எப்போதும் வாழ்வதற்காக ஏதேனும் ஓர் அர்த்தத்தைக் கொண்டிருக்க வேண்டும். எல்லா நேரங்களிலும் பயனுள்ளவற்றைச் சிந்திக்க வேண்டும் . அதனைச் செயல்படுத்த வேண்டும் என்ற எண்ண ஓட்டம் இருக்க வேண்டும். இரண்டாம் உலகப் போரில் நாசிப் படைகளால் கைது செய்யப்பட்டு விஷ வாயு அறை வரை சென்று மரணத்தின் பிடியிலிருந்து தப்பி வந்த சில ஆயிரம் யூதர்களில் ஒருவர் விக்டர். கொடுஞ்சிறையில், கடுங்குளிரிலும் நோயிலும் பசியிலும் பணிச்சுமையாலும் அவதிக்கு உள்ளாகி ஏராளமானவர்கள் மாண்ட போதும் ஒரு சிலர் மட்டும் மன உறுதியோடு நாட்களைக் கடத்தி மீண்டார்கள். சிறையிலிருந்து வெளிவந்த பிறகு விக்டர் பிராங் எழுதிய புத்தகம் இது.
ஏன் ஒரு சிலர் எல்லாக் கொடுமைகளையும் தாங்கி உயிரோடு இருக்க முடிந்தது என்றால்,
அவர்கள் நிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும் கருத்தில் கொள்ளாமல் எதிர்காலத்தைப் பற்றியே சிந்தித்ததால் எல்லா இன்னல்களையும் தாங்கக்கூடிய உறுதி ஏற்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானில் ‘இக்கிகாய்’ என்ற ஒரு புத்தகம் வெளிவந்து உலகம் முழுக்க பரபரப்பாக விற்பனையானது. அந்தப் புத்தகத்தில் கூட விக்டர் பிராங்க் அவர்களின் புத்தகத்தைப் பற்றிப் பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஜப்பான் நாட்டில் ஒரு தீவில் வாழும் மக்கள் எல்லோருமே நூறு வயதுக்கு மேற்பட்டவர்கள். 120, 125 வயதில் கூட மிகச் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர்கள். மேலைநாட்டு ஆய்வாளர் ஒருவர் அங்குத் தங்கி அதை ஆய்வு செய்து தன் முடிவை வெளியிட்டார். அதன் தொகுப்பே ‘இக்கிகாய்’ புத்தகம். நீண்ட ஆயுளுக்கும் சுறுசுறுப்பான வாழ்க்கைக்கும் சொல்லப்பட்ட மிக முக்கியமான காரணம், அவர்கள் வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தைக் கொண்டு உள்ளார்கள். நான் இன்று என்ன செய்ய வேண்டும், நாளை என்ன செய்ய வேண்டும், அடுத்த வாரம் என்ன செய்ய வேண்டும், அடுத்த மாதம், அடுத்த ஆண்டு என திட்டங்களை வகுத்துக் கொண்டு அதைச்செய்கிறார்கள். மேற் சொன்ன இரு புத்தகங்
களைப் படிப்பதற்கு முன்பே இவற்றை நான் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து பழகியே கற்றுக் கொண்டேன்.
அவரை எப்போது சந்தித்தாலும் அடுத்தது என்ன என்பதைத் தான் பேசுவார். சரியான இலக்கை அமைத்துக் கொண்டு அதை நோக்கி நகருவார்.
நவீனத்தை வரவேற்போம்!
அய்யா தந்தை பெரியாரைப் போலவே அறிவியலையும் நவீனங்களையும் முழுமையாக ஏற்றுக் கொள்பவர். வாழ்வியல் நெறியாகக் கொண்டவர்.
உலகமே சில ஆண்டுகளுக்கு முன்பு (கோவிட்) தொற்று நோய் காரணமாக முடங்கிய போது கூட நாம் அறிந்தவரை இந்தியாவிலேயே ஜூம் இணைய வழியாக முழுமையாக மக்கள் பணி செய்தவர் தமிழர் தலைவர். உலகில் எந்த நவீன கண்டுபிடிப்பாகட்டும் அதை முதலில் தமிழ் உலகில் பயன்படுத்துவது ‘விடுதலை’ இதழும் திராவிடர் கழகமும் தான் என்றால் அது மிகையாகாது. அச்சகத்தில் நவீனமாகட்டும், டிஜிட்டல் உலகமாகட்டும் – எல்லாவற்றிலும் நாம் தான் முதல் அடி எடுத்து வைத்தவர்கள்.
ஆசிரியர் ஆசிரியரே!
ஒரு சிறந்த ஆசிரியரின் பண்புகளில் ஒன்று- தன்னுடைய எண்ணங்களில் தோன்றும் கருத்துகளை குற்றமற மற்றவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் தான் இருக்கிறது. தமிழர் தலைவர் அதில் தனித்தன்மை வாய்ந்தவர். இதனை நாம் மட்டுமல்ல; எதிரிகளுமே நன்கு உணர்ந்திருக்கின்றனர். தனி உரையாடல்களாகட்டும், மேடைப் பேச்சுகளா
கட்டும், எழுத்தாகட்டும் எல்லாவற்றிலுமே அவர் சொற் சிக்கனம் கொண்டவர்.
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல் என்னும் குறள் வழியில் தேவையற்ற சொல்லைப் பயன்படுத்த மாட்டார்.
வயது என்பது நாம் வகுத்துக் கொண்டது. பூமி சூரியனை 365 நாட்கள் சுற்றி வருகிறது. அதை ஒரு ஆண்டு என்கிறோம். கோள்கள் சுழல்வதும் சுற்றி வருவதும் சூரியக் குடும்பத்தின் இயல்பு. அதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? ஆகவே, தமக்கு வயதாகிவிட்டது என்று புலம்பி ஒடுங்கி நலிந்து போவோர் நிறைந்த இவ்வுலகில் – வயது எனக்குப் பொருட்டல்ல; சூரியன் இருக்கும் வரை பூமி அதனைச் சுற்றிக் கொண்டிருக் கும்; பூமி சுற்றிக் கொண்டிருக்கும் வரை நான் என் மக்களுக்காக – அவர்கள் ஏற்றத்திற்காகச் சுற்றி வருவேன் என்று சூளுரைத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒப்பற்ற தலைவர் தமிழர் தலைவர் அவர்கள்நமக்கு உயிரூட்டும் ஆக்ஸிஜன்.
வாழ்க பெரியார்!
வாழ்க தமிழர் தலைவர்!!
வளர்க பகுத்தறிவு!!!