நீராடல்
நடந்தாய் வாழி காவிரியில்
நீருறிஞ்சுமியந்திரம்
காறியுமிழும் தண்ணீரில்
ஆடிப்பெருக்கு
புனித நீராடிய களிப்பில்
அழுக்கு மூட்டைகள்
ஏற்றுவோம் தீபத்தை
தாய்மார்களே,
அப்பன் கோவிலிலும்
ஆத்தா கோவிலிலும்
நெய்விளக்கும்
மாவிளக்கும்
ஏற்றினீர்கள்
வறுமையும்
நோயும் தீர!
இனி
வீதிகள் தோறும்
வீடுகள் தோறும்
ஒரு சிமிழ்விளக்கு
ஏற்றுங்கள் இருளை விரட்ட!
நிலைமை
பூட்டிய படியே
தொழிற்சாலைகள்
வறுமை
வாட்டியபடியே
தொழிலாளத் தோழர்கள் ஆயினும் கையை ஆட்டியபடியே
எங்கள் அமைச்சர் பெருமக்கள்!
அளவீடு
ஒருவரின்
செழிப்பையும் கவுரவத்தையும்
வைபவங்களில்
வைக்கப்படும் மொய்யே
தீர்மானிக்கிறது
இழவுக்குக் கட்டிக்கொண்டுவரும்
மலர்மாலையைப் போல.
– செழியரசு, தஞ்சை
சாக்ரடீசின் இறுதிக் கோப்பை
எல்லோரும் போல்நானும் முந்தும் தொந்தி இரைதேடும் பேர்வழியாய் இருந்தி ருந்தால் பொல்லாத பேரைஎடுத் திருக்க மாட்டேன்.
புகட்டுதற்கு நஞ்சுகொண்ர்ந் திருக்க மாட்டார்.
அல்லென்றும் பகலென்றும் எவ்வெப் போதும்
அறிவைத்தான் நான்தேடிக் கொண்டி ருந்தேன்.
எல்லார்க்கும் பிடிக்கிறதா அறிவு? மண்டும்
இருட்டுத்தான் அமைதிதரும் உலகத் துக்கு.
தொழுவத்தில் பன்றிகளாய் உழலுதற்குத்
தொழும்பர்களாய்ப் பிறர்க்கடிமை செய்வ தற்கு
எழவேண்டாம் மூளைக்குள் கேள்வி ஏதும்.
எதற்கெடுத்தா லும்ஆமாம் சாமி போதும்.
அழுவதற்கும் தொழுவதற்கும் அணியம் என்றால்
ஆருக்கும் உங்கள்மேல் பகைவராது.
எழுவதற்கு விரும்பினால், கூர்ந்து பார்த்தால்,
எச்சரிக்கை யாய்இருந்தால் விரும்பார் யாரும்.
ஈயென்றால் பல்லழகு தெரியும். தங்க இழைமாலைப் பரிசுவரும். நான்ம றுத்துத்
தேயுமொரு சித்தாந்தக் குப்பை மீது
தீஎரியப் பரிந்துரைத்தேன். புதிதாய் எண்ணி
ஆயுமொரு பழக்கத்தை ஆத ரித்தேன்.
ஆகாயக் கற்பனைகள் வேண்டாம், மக்கள்
காயங்கள் மருந்துபெற வேண்டு மென்றேன்.
கலையத்தில் கொண்டுவந்தார் எம்லாக் நஞ்சு.
– நீலமணி