ஜாதி காக்கும் நீக்கும் திருமணங்கள்

நவம்பர் 16-30

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வள்ளுவர் உணர்த்திய உண்மையை உணராத தமிழன், ஆரிய வேத மதத்தில் வீழ்ந்ததால் தமக்குள்ளே பிளவுபட்டுக் கிடக்கும் நிலை இன்னும் நீடிக்கிறது.

தென் மாவட்டங்களில் இரு சமூகங்களுக் கிடையே நடந்த மோதலால் கடந்த ஆண்டு 7 உயிர்களும் இந்த ஆண்டு 4 உயிர்களும் இழக்கப்பட் டன.

கடந்த சில நாட்களுக்கு முன் வட மாவட்ட மான தருமபுரி யில் நத்தம் என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்டோர் வீடுகள் கொளுத்தப்பட்டு, 35 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளனர்.

வளர்ந்த நகரங்களில் காதல் திருமணங்க ளால் ஜாதி மறுத்து தமிழர்கள் ஒன்றாகி வரும் சூழலில் கிராமங்களில் இன்னும் ஜாதி வேறுபாடு களை முன்னிறுத்தி தமிழர்கள் தமக்குள் உயிர்ப்பலி வாங்கும் அளவுக்கு ஜாதி வெறி தலைவிரித் தாடுகிறது.

வயது வந்த ஒரு ஆணும் பெண்ணும் தமக்குள் மனம் ஒப்பி திருமணம் செய்வதை சங்ககாலத் தமிழர் களே அனுமதித்துள்ளனர்.

நாகரிக காலமும் அறிவி யல் மனப்பான்மையோடு இதனை அங்கீகரித்து ஜாதி, மத, இன, நாடு ஆகிய எல்லைகளைக் கடந்து மனித இனம் ஒன்றுபட்டுவரும் காலத்தில், இன்னும் ஜாதிப் பழைமை பேசும் இழி நிலையை அகற்ற வேண்டிய சூழலில்,நவீன வசதிகளைக் கொண்ட திருமண மையங்கள் எப்படி இயங்குகின்றன என்பது குறித்தும் இனி திருமண மையங்கள் எப்படி அமையவேண்டும் என்பது பற்றியும் இந்தஇரு கட்டுரைகள் ஆய்கின்றன.

திருமண இணையதளங்களில் ஜாதி

இந்திய சுதந்திரத்திற்கு பிறகு மக்கள் பரவல் காரணமாக தங்கள் ஜாதிக்குள் வரன் பார்க்கும் பழக்கத்தினால் திருமண தகவல் மையங்கள் தோன் றின, முதலில் உயர்ஜாதிகளுக்கான திருமண தகவல் மையங்கள்தான் தோன்றின, இட ஒதுக்கீட்டு பிரச் சினை காரணமாக பிற மாநிலங்கள் நகரங்கள் என தனியார் நிறுவனங்களில் பணியாற்ற உயர்ஜாதியினர் சென்றுவிட அவர்களுக்கான ஜாதியில் பெண்/ ஆண்களுக்கான தகவல் சொல்ல திருமண தகவல் மையங்கள் தோன்றியன, திருமண தகவல் மையங்கள் தோன்றியது 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான்.

திருமண தகவல் மையங்களின் ஆரம்ப நோக்கமே ஒரே மதத்தில் இருந்து ஒரே ஜாதியில் இருந்து ஒரே பிரிவில் இருந்து என்றுதான் இருந்தது, முதலில் பிராமணர்களுக்காக உருவாக்கப்பட்ட திருமண தகவல் மையங்கள் வருவாய் பெருக்கத் திற்காக அவை அனைத்து ஜாதியினருக்கும் என புதிய உருவெடுத்தது, இந்த நிலையில் 1990 களுக்கு பிறகு தொழில் நுட்பவசதிகள் பெருகிய உடன் அயல்நாடுகளில் உள்ள இந்தியர்களுக்காக இணைய தளங்கள் உருவாக்கப்பட்டன, 1996ம் ஆண்டு மும்பையில் உருவாக்கப்பட்ட shaadi.com என்ற இணையதளம் தற்போது உருவாகியுள்ள இணையதளங்களுக்கு எல்லாம் முன்னோடி. 1990களின் இடையிலான காலகட்டங்களில் முக்கியமாக அயல்நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்காக துவங்கியது, ஆரம்ப கட்டங்களில் இந்த இணையதளத்தில் ஜாதிகளுக்கு என்று பிரிவுகள் இல்லாமல் பொதுவாக இந்தியன் இந்து, தமிழ் இந்து, குசராத்தி இந்து என்று இருந்து வந்தது, ஏனெனில் இவற்றை பயன்படுத்துபவர்கள் பொரும்பாலும் உயர் ஜாதியினராக இருந்தால் இவர்களுக்கு ஜாதிப்பிரச்சனை ஏற்படவில்லை, இதற்கு கிடைத்த அமோக வரவேற்பை அடுத்து புற்றீசல் போல் பல இணையதளங்கள் உருவாகின, முதல் 10 இடங்களில் உள்ள இணையதளங்கள்.

1. shaadi.com

2.jeevansathi.com

3.bharatmatrimony.com

4.indianmatrimony.com

5.lifepartenarindia.com

6.vivahbhandan.com

7.matrimonialsindia.com

8.shublagan.com

9.merasathi.com

10.hamarasathi.com

தமிழகத்தில சுயம்வர, கேஎம்மெட்ரொமோ னியல், தமிழ்மெட்ரமொனியல், போன்ற திருமணதகவல் மையங்கள் உள்ளன. இந்த திருமண தகவல் மையங்களில் பதிவிடும்போதே, ஜாதி, கோத்திரம், பிரிவு உட்பிரிவு, உப பிரிவு என பல பிரிவுகள் உள்ளது,

மக்களின் விருப்பம்

திருமண தகவல் மையங்கள் ஜாதியை மையமாக வைத்துதான் ஆரம்பிக்கப்பட்டன, தங்கள் பகுதியில் தங்கள் ஜாதியை சேர்ந்தவர்கள் இல்லாத சூழ்நிலை யில் இந்த தகவல் மையங்களை நாடுவார்கள்,  இந்த தகவல் மையங்கள் பெற்றோர் களிடம் இருந்த தகவல்களை வாங்கும் போதே ஜாதி குறித்த விவரங்கள், அவர்களின் ஜாதியில் உட்பிரிவுகள் போன்றவற்றை கேட்டுபெற்றுக் கொள்வார்கள், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களின் தேடலில் வரும்வரனை பற்றி அவர்கள் தகவல் கூறி ஜாதி திருமணத்தை நடத்தி வைப்பார்கள், இணையதளங்கள் தோன்றிய பிறகு சாட்டிலைட் டீவிக்களில் ஒரு புதிய ஜாதி திருமண நிகழ்ச்சிகள் தோன்றியது, தமிழகத்தில் தான் இதற்கு முதற்புள்ளி வைக்கப்பட்டது,

கல்யாணமாலை என்னும் நிகழ்ச்சியின் மூலம் இந்த வீட்டிற்குள்ளேயே இந்த ஜாதி இந்த ஜாதிக்குள் இந்த பிரிவில் இருந்துதான் வேண்டும் என்று கேட்கும் அவலம் ஏற்பட்டது, நிறுவனத்தாரும் அது வரன்கேட்டு வருபவர்களின் விருப்பம் என்று கூறி தப்பித்தாலும் மறைமுக மாகவே அவர்கள் இதை ஆதரிக்கின்றனர், தங்களது ஜாதிப்பெயர்களும் அங்கு காட்டப் படும் போது வரன் தேடுவோர் தங்களுக்கான ஜாதியை கேட்டு விண்ணப்பம் செய்கின்றனர், இது ஒரு மறைமுக ஊக்கப்படுத்தலே ஆகும்

ஜாதிவேண்டாம் பிரிவு வேண்டாம்

இணையதளங்களில் உள்ள பிரிவில் ஜாதி வேண்டாம் என்று கூறுபவர்களை பொதுவாக பார்த்தால் தங்களுடைய ஜாதி பிரிவில் எது வேண்டுமானாலும்? என்று தான் கூறுவார்கள், ஜாதி வேண்டாம் என்றவார்த்தையே இங்கு நகைச்சுவையாகி விடுகிறது, எடுத்துக்காட்டிற்கு பிராமணர்களிடம் பல பிரிவுகள் உள்ளன. இங்கு பிராமணர்களின் எந்த பிரிவும் எங்களுக்கு ஒத்துவரும் என்றுதான் இணையதளங்களில் பெரும்பான்மையான் மக்கள் பதிவு செய்கின்றனர்.

ஆண்\பெண் வரன்கள்

இணையதளங்களில் பதிவு செய்பவர்களில் 60% மேற்பட்ட ஆண்கள் நேரடியாகவே தங்கள் விவரங் களை பதிவு செய்கின்றனர், இதர உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள், ஆண்களும் சரி உறவினர்களும் பெற்றோர்களும் தங்களுக்கு ஏற்ற வரன் பார்த்து பதிவிடும் போது ஜாதி குறிப்பிடுகின்றனர்.

இளைஞர்களில் மிகவும் சொற்பமாகவே எந்த ஜாதிமதமும் தேவையில்லை என்ற பிரிவில் பதிவு செய்கிறனர், ஆனால் இந்து இளைஞர்களில் 99% பேர் தங்கள் ஜாதியை பதிவு செய்து விடுகின்றனர், அப்படி செய்யும் போது அவர்கள் உயர்ஜாதியாக இருந்தால் உயர்ஜாதி வரன்கள், அதிகம் அவர்களை நாடுகிறார்கள், தாழ்த்தப்பட்ட அல்லது பிற்படுத் தப்பட்ட ஜாதியாக இருந்தால் அது அவர்களுக்கு அவர்களை சார்ந்த வரன்கள் தான் அதிகம் தொடர்புகொள்கிறார்கள், பெண்களில் 25% பெண்கள் தாங்களாகவே தங்கள் தகவலை பதிவு செய்து கொள்கின்றனர், இங்கு 3 அல்லது 4% பெண்கள் மட்டுமே ஜாதியில்லா என்ற பிரிவில் பதிவு செய்கின்றனர், இவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் ஜாதிபெயரை கட்டாயம் பயன்படுத்துகின்றானர், சாதிக்கென்றே communitymatrimonial.com தளம் உருவாகி தொலைக்காட்சிகளில் விளம்பரம் வந்தது, அதில் ஒரு பொது இடத்தில் தங்கள் மகள் ஆடவனுடன் பேசும் போது அந்த பெண்ணின் அம்மா அந்த பையன் எந்த ஜாதியோ நம்ம குடும்ப மானம் போய்டுமே என்கிறாள், உடனே பின்குரலாக கவலைபடாதீர்கள் உங்களுக்காக communitymatrimonial.com  இருக்கிறதே என்று குரல் ஒலிக்கும் உடனே பெண்ணின் பெற்றோர் முகத்தில் மகிழ்ச்சி பொங்கும்

தாழ்த்தப்பட்டவர்களும் திருமண இணையதளங்களும்

சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் திருமண இணையதளங்களிலும் அவமானபடுத்தப்படும் சூழல் நிலவுகிறது, தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவர் தன்னுடைய தகவலை பதிந்தால் dஅவர் வசதியாக இருந்தால் மட்டுமே தாழ்த்தப்பட்ட வரன்களே தொடர்பு கொள்கின்றனர், உயர் ஜாதியினரோ அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரோ தாழ்த்தப்பட்ட பிரிவு வரனை பார்ப்பதே இல்லை, இணையத்தில் தேடும் பகுதிக்கு சென்று தேடினால் வரும் வரன்களில் ஒன்று கூட தாழ்த்தப்பட்டவர்கள் பிரிவில் வருவதில்லை, கூகில் தேடும் படலத்தில் தேவை மணப்பெண்\மணமகள் என்று எழுதி தேடினால் முதலில் கிடைப்பது பிராமணர், அடுத்து இதர என வருகிறது, பல பக்கங்களுக்கு சென்ற பிறகும் கூட தாழ்த்தப்பட்ட பிரிவு என வருவதில்லை, அதே நேரத்தில் தாழ்த்தப்பட்ட மணமகன்\மணமகள் என்று எழுதினால் வருவதெல்லாம் நீண்டகாலமாய் பதிக்கப்பட்ட அல்லது காலாவதியான விவரங்களே,

உயர் ஜாதியினரின் ஆதிக்கம்

திருமண தகவல் இணையதளங்களை பொருத்தவரை உயர்ஜாதியினரின் ஆதிக்கமே அதிகம் மேலோங்கி நிற்கிறது, அது செயற்கைக்கோள் தொலைகாட்சியிலும் காணலாம், முக்கியமாக தமிழகத்தில் ஒலிபரப்பாகும் திருமண வரன் பார்க்கும் நிகழ்ச்சியில் 90% உயர்ஜாதியினரின் வரன்களாகத்தான் இருக்கும் தாங்களை பொதுவாக காட்டிக்கொள்ளவே சில தாழ்த்தப்பட்ட வரன்களை கூட்டி வந்து வணக்கம்மா என்று ஆரம்பிப்பார்கள், மற்றபடி இவர்களுக்கு தாழ்த்தப்பட்ட வரன்கள் முக்கியத்துவம் இல்லாதவைகள்தான், இணையதளங்களிலும் பெரும்பாண்மையான பிற்படுத்தப்பட்ட ஜாதியினரின் வரன்களே அதிகம் பார்க்கப்படுகிறது,

ஜாதி மறுப்பு திருமணங்கள்

ஜாதி மறுப்பு திருமணங்கள் இது குறித்து infochangeindia என்ற இணையதளத்தில் திரு அசோக் கோபால் என்பவர் நடத்திய ஜாதிமறுப்பு திருமணங்கள் என்ற ஆய்வில் முடிவில் கூறியது இணையதளத்தில் ஜாதிமறுப்பு திருமணங்கள் என்பது ஒரு நகைச்சுவையான ஒன்றுதான், ஜாதி மறுப்பு திருமணம் என்றால் ஒரு தளமோ அல்லது வரன் தேடும் நிறுவனமோ இங்கு எந்த ஜாதி வரனும் கிடைக்காது ஜாதிவேண்டாம் என்று கூறுபவர் களுக்கு மட்டுமே என்று எழுதி இருக்கவேண்டும் ஆனால் இந்தியாவில் இருக்கும் 4635 பிரிவுகளுக்கும் அதில் இந்துக்கள் மட்டும் 3000 பிரிவுகளையும் உள்ளடக்கி இணையதளங்கள் வரன் தேடும் விவரங்களை வெளியிடுகிறது அதில் இறுதியில் ஜாதி வேண்டாம் என்ற பிரிவையும் சேர்க்கிறது என்றால் இதை எப்படி ஜாதிமறுப்பு திருமணம் என்று நாம் கூறலாம், என்கிறார்,

மதம் தொடபான விவரங்கள்

இணையதள திருமண தகவல்கள் மேலும் புதிய புரட்சியை இந்தியாவில் செய்து வருகிறது, அதாவது மதமாற்றத்தை தடுக்கும் ஒரு புதியயுக்தியாக இதை பார்க்கலாம், சமீபத்தில் சென்னையை சேர்ந்த புத்தமதத்தவர் சென்னையில் புத்த மதத்தில் உள்ள குடும்பத்தில் இருந்து பெண் எடுக்க முயற்சி செய்தார். ஆனால், இங்கு அவருக்கு பெண்கிடைக் காததால் மராட்டிய புத்த மதத்தை சேர்ந்த ஒருபெண்ணை இணையதளம் மூலமாக தேடி திருமணத்திற்கான தேதியை குறிப்பிட்டு விட்டார், இவருக்கு மராட்டி இந்தி தெரியாது, பெண்ணிற்கு தமிழ் சுத்தமாக தெரியாது ஆங்கிலம் அதுவும் சுமாராகத்தான் இந்த திருமண இணைப்பு பந்தத்தில் ஒரே மதம்சார்பான மொழி தெரியாவிட்டாலும் இணையும் புரட்சியை? இணையதளம் செய்துள்ளது, துணையை இழந்தோர், மணமுறிவு பெற்றவர்கள் மற்றும் ஊனமுற்றோர் இணையதள திருமண தகவல் மையங்களில் இவர்கள் பாவப்பட்டவர்கள் போலும் பொதுவாக இவர்களுக்கு என்று தனிப்பிரிவே உள்ளது, இவர்களில் பெரும்பாலும் குழந்தையை பார்த்துக்கொள்ள, கவனித்துக்கொள்ள, வீட்டை பராமரிக்க என்று ஒரு வேலைக்காரரையோ வேலைக்காரியையோ தேடுவது போல் தான் தகவல்கள் பதிவு செய்கின்றனர், சமீபத்திய பதிவுகளை பார்த்த போது ஒரு பதிவு கூட வாழ்க்கை துணைநலன் தேவை என்று இல்லாமல் வீட்டு வேலைக்காக ஆள் எடுப்பவர்கள் என்பது போலவே பதிவு செய்கின்றனர், இங்கு ஜாதி மதம் இருந்தாலும் ஒன்றுதான் இல்லாமல் பதிவு செய்தாலும் ஒன்றுதான்,   அசோக் கோபால் கூறியது போல் ஜாதி மதமறுப்பு திருமண தகவல் மையம் என்பது நேரடி யாக எந்த ஒரு ஜாதி மதத்தை குறிப்பிடாமல் இருக்கவேண்டும் ஆனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரிவு உட்பிரிவு துணைப்பிரிவுகளை போட்டு ஒரே ஒரு வார்த்தை மட்டும் ஜாதி தேவையில்லை என்று கூறும் இந்த இணையதளங்கள் மற்றும் திருமண தகவல் மையங்கள் அனைத்தும் ஜாதி வளர்க்கும் நவீன உபகரனங்கள் தானே தவிர வேறொன்று மில்லை,   காரணம் இணையதளங்களில்  எனக்கும் ஜாதியில்லை, எனது துணையாக போகிறவர் களுக்கும் ஜாதியில்லை என்று கூறுபவர்களில் இந்து 0.27% முகமதியர்கள் 4% கிருத்துவர்கள் 15% மட்டுமே.

சரவணா இராஜேந்திரன்

 

ஜாதி மறுப்பே!

சமூகக் காப்பு!

இந்தியாவிற்குப் பார்ப்பனர்கள் செய்த கொடுமைகளுள் ஆகப் பெரியது ஜாதியாகும்!

உலகில் வாழும் மக்களுக்குள் எண்ணற்ற வேறுபாடுகள் உள்ளன. அவை மாறக் கூடியதும், மறையக் கூடியதும் ஆகும். ஆனால் ஜாதியானது, உலக நஞ்சுகளில் எல்லாம் தலையானது.

ஜாதிக்கு எதிரான போராட்டம், பல காலம் நாட்டில் நடந்துள்ளது. ஆனால் அதற்கென்ற தொடர்ச்சி இன்றி, தொய்வாகிப் போனது.  ஈரோட்டின் ஈ.வெ.இராமசாமி, தமிழ்நாட்டின் பெரியாரான போது புதிய வரலாறு எழுந்தது. அதன் விளைவாய்  எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்தன.

இன்றைக்கு நாம்  அனுபவிக்கும் அத்தனையும் அதில்தான்  அடங்கும். அன்றைய வலியும், வரலாறும் புரியாதவர்கள் பெரியாரைப் பெரிது செய்யாமல் இருக்கக் கூடும். ஆனால் எத்தனை  நாள் தெரியாமலும், தெரிந்தும் புரியாமலும், புரிந்தும் ஏற்காமலும் இருக்க முடியும்?

உலக நஞ்சுகளில் மிக முக்கிய ஜாதிய நஞ்சால், இன்றைக்கு எத்தனை மரணங்களை கண்டு வருகிறோம். வாழை மரங்களைப் போல, மனிதர்களை வெட்டுகிறார்கள். நம் நாட்டில் அரிவாளை தொடர்ந்து அசிங்கப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு பொருளையும், அதனதன் தேவைக்கே பயன்படுத்த வேண்டும். அறிவியல் அதைத்தான் சொல்கிறது.  இன்றைக்கு மொத்த அறிவியலையும் அனுபவித்துக் கொண்டு, ஆனால் காட்டுமிராண்டி யாய் சமூகத்திற்குத் தொல்லைக்  கொடுப்போம்  என்றால், எப்படி அதை அனுமதிக்க முடியும்?

எனவே எல்லா வகையிலும் ஜாதி என்பது வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப்பட வேண்டியது அவசர, அவசியமாகும் ! அதற்கான வழிகளைகளையும்  பெரியார் ஏராள மாய் சொல்லிச் சென்றுள்ளார். அவற்றை ஏற்று நடந்தாலே, இச்சமூகம் எழில் கொஞ்சும் பூங்காவாக மாறிப் போகும். அந்த வழிகளில் ஒன்றுதான் ஜாதி மறுப்புத் திருமணங்கள். “திருமண செய்ய  ஒரு பெண்ணுக்கு ஆண் வேண்டும். ஒரு ஆணுக்குப்  பெண் வேண்டும். இதற்கு ஜாதி ஏன் வேண்டும்?” என்பது சாதாரண மனிதக் கேள்வி ஒரே ஜாதிக்குள், அதுவும் ஒரே பிரிவிற்குள் திருமணம் செய்து வைக்கப்  பெற்றோர்கள் அனுபவிக்கும் வேதனைகள் சொல்லி மாளாது. ஒரே பிரிவில் இரண்டு, மூன்று மாப்பிள்ளைகளே  இருப்பார்கள்.

அதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் கட்டாயம் ஏற்படும். ஒரே பிரிவின்றி, வேறு சில பிரிவுகளிலும் மாப்பிள்ளைத் தேடினால் பத்து, இருபது தேறும். ஜாதியின் அனைத்துப் பிரிவுகளிலும் தேடும் போது முப்பது, நாற்பது தேறும். இதையே ஜாதிகளை மறுத்துப் பார்த்தால் நூற்றுக்கணக்கில் வாய்ப்புகள் குவியும். ஆக விசாலமான சிந்தனைகளுக்கு ஏற்ப நமக்கு வாய்ப்புகளும் , வசதிகளும் வந்து சேரும். நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்து கொண்டால் பாதிப்புகள் பல  உருவாகலாம் என மருத்துவம் கூறுகிறது. அதேபோல  ஒரே ஜாதிக்குள் திருமணம் முடிப்பதால் சிறப்புப்  பலன்கள் ஏதும் கிடைப்பதில்லை. இந்தப் பெண்  நம்முடைய ஜாதிதான், எனவே வரதட்சணை வாங்க வேண்டாம் என யாரும்முடிவெடுப்பதில்லை.  மாறாக ஒரே ஜாதியில் நடைபெறுகின்ற திருமணங்கள் ஆயிரக்கணக்கில் விவாகரத்தில் வந்து நிற்கின்றன.

இதை எந்த ஜாதித் தலைவரும், சங்க உறுப்பினர்களும் வந்து சரி செய்வதில்லை. ஆனால் ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்யக் கூடாது என மிரட்டுகிறார்கள். இவர்கள் சமூகம் வளர்ச்சி பெறக்கூடாது என விரும்புகிறவர்கள், ஜாதி மறுப்புத் திருமணங்கள் என்பது,  ஏதோ இருவர் தொடர்புடைய தனி விசயமல்ல. அது ஒரு அற்புதமான சமூக மாற்றத்திற்கான வித்து.  ஜாதிகள் கலக்கும் போது மனிதர்கள் பிறப்பார்கள். மனிதர்களாக உருவாகும் போது  மனிதநேயமும் சேர்ந்து வரும், ஒற்றுமை உணர்வு வரும், உதவும் மனப்பான்மை எங்கும் நீக்கமற நிறைந்து காணப்படும்.

இதன் தொடர்ச்சியாய் சமூகம் மீது நமக்கு நம்பிக்கை உருவாகும். பக்கத்து மனிதனை நேசிக்கத் தொடங்குவோம். பொறாமை, பழி வாங்குதல்கள் நின்று போகும் வாழ்கையில் பிடிப்பு வரும். வாழ்வதற்கு ஆசை ஏற்படும் ! இது நமக்கான தனி மனித பலன்கள். சமூகப் பிரச்சினைகளில் வேற்றுமை  குறையும். ஒருமித்த உணர்வு பிறக்கும். உரிமைக்குக் குரல் கொடுக்க அது உதவும். மொழிப் பிரச்சினை, காவிரி, பெரியாறு  பிரச்சினைகள், ஈழப் பிரச்சினை, ஒரே ஒரு தமிழன் ஆப்பிரிக்கக் கண்டத்தில்  பாதிக்கப்பட்டு இருந்தாலும், அவனை மீட்கும் உணர்வு என நாம் அடையும் நன்மைகள் ஏராளம், ஏராளம்!

இவை எல்லாம் நம் கற்பனைப் புதினம் அல்ல. உலகம் முழுவதுமுள்ள மனிதர்களின் வாழ்வியல் நடைமுறை இதுதான். அவற்றை நோக்கி நம் பாதைகளை திசை திருப்ப வேண்டும்.

ஜாதிப் பிரச்சினைகளை ஒழித்து, மேற்சொன்ன மனித வாழ்வை நடைமுறைப்படுத்த அரசியல் அதிகாரத்தால் முடியும். ஆனால் சுய (பெரு) நலம் கருதி அவர்கள் இதைச் செய்யமாட்டார்கள். ஒவ்வொரு தனி மனமும்  முடிவு செய்யும் போது, நாமே இதைச் சாத்தியமாக்கிக் கொள்ளலாம். இவ்வளவு பயன்களும் இருப்பதால்தான் காதலை நாம் வரவேற்கிறோம். காதல் திருமணங்கள் பெரும்பாலும் ஜாதி மறுத்த, சமூக நலனாகவே இருக்கும். காதலர்களுக்கு ஜாதி மறுக்க வேண்டும் என்ற எண்ணமில்லை எனினும் ஜாதியை விட காதல் பெரிது என்கிற முடிவு துணிச்சலானது.

அந்தக் காதல் விரும்பியவரோடு சேர்ந்து வாழ வைக்கிறது, ஜாதியைச் சிதைக்கிறது, சக மனிதர்களை  நேசிக்கத் தூண்டுகிறது. அதேநேரம் காதல் என்பதை உணர்ச்சிகளின் வடிகாலாகவும், புரிந்து கொள்ளாமலும் தொடரும் போது அது தோல்வியில் முடிகிறது. அந்நிலைகள் மாற வேண்டும். எனவே சமூகம் மாறவேண்டும் என நினைக்கிற ஒவ்வொரு மனிதரும், கட்டாயம் ஜாதியை மறுக்க வேண்டும். பெரியார் சிந்தனையாளர்கள், மொழிச் சிந்தனையாளர்கள், கம்யூனிச தோழர்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சமூக இயக்கங்களும் ஜாதி மறுத்த மனிதர்களாக உலா வர வேண்டும். பிறகு படிப்படியாகப்  பொது மக்களையும் அந்நிலைக்கு அழைக்க வேண்டும். அப்படி செய்கிற போது, மேற்சொன்ன நன்மைகள் முதலில் நமக்குக் கிடைக்காவிட்டாலும்,  ஜாதீயப் பிரச்சினைகள் வலுவிழந்து போகும் ! ஆகவே தோழர்களே ! இந்தச் செய்திகளையெல்லாம் முன்வைத்துத் தான் திராவிடர் கழகம் சார்பில் எதிர்வரும் நவம்பர் 25,சென்னை பெரியார் திடலில் “மன்றல்” எனும் தலைப்பிட்டு, ஜாதி மறுப்புத் திருமணம் செய்வோருக்கு பெரும் வாய்ப்புகளையும், வழிகளையும்  உருவாக்கிட முனைந்துள்ளது.

பெரியார் சுமரியாதைத் திருமண நிலையம் எனும் அமைப்பு இப்பணியை பல்லாண்டுகள் செய்து வருகிறது. அதன் வீரியத் தொடர்ச்சியாகத் தமிழ்நாடு முழுவதையும் ஒருங்கிணைத்து, பல்வேறு இயக்கங்கள், அமைப்புகளை ஒன்றுபடுத்தி செய்யவிருக்கிறது. இதில் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் என எந்த வேறுபாடுகளும் இல்லை. நாம் ஜாதி மறுத்த மனிதர்களாக, தமிழர்களாக விளைச்சல் கொடுக்க வேண்டும் என்பதுதான் அதன்  நோக்கம். திரள்வீர் ! திரள்வீர் !!  உங்களோடு உறவினர்களும், உங்களோடு நண்பர்களும் திரள்வீர்! சமூக  அமைப்புகள் இச் செய்தியைத் திக்கெட்டும் கொண்டு சேர்த்து, மாற்றத்திற்கான பயணத்தில் கரம் சேர்ப்பீர்!  சிந்திப்போம்… பின்னர் சந்திப்போம்! நவம்பர் 25!

– வி.சி.வில்வம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *