சென்னையில் நடைபெற்ற டெசோ ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாட்டின் தீர்மானங்களை அய்.நா. மாமன்றத்தின் செயல்பாட்டிற்காக, அதன் துணைப் பொதுச்செயலாளர் யான் லியாசன் அவர்களிடம் கடந்த ஒன்றாம் தேதி (நவம்பர் 2012) அய்.நா. தலைமையகத்துக்கு (நியூயார்க் மேன் ஹாட்டினில்) மானமிகு தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், நாடாளுமன்ற தி.மு.க. குழுவின் தலைவர் மானமிகு டி.ஆர். பாலு அவர்களும் சென்று சுமார் அரை மணிநேரம் விளக்கமாக எடுத்துரைத்து, முள்வேலிக்குள்ளும், இராணுவ வளையத்துக் குள்ளும் அவதியுற்றுக் கொண்டுள்ள ஈழத் தமிழர் வாழ்வின் பல வகை அவலங்களைப் போக்க, விடிவு காண வற்புறுத்தித் திரும்பியுள்ளனர்!
அய்.நா. துணைப் பொதுச்செயலாளர் அவர்கள் மிகுந்த பரிவுடன் கேட்டு, அதனை பொதுச் செயலாளர் பான்-கி-மூன் அவர்களிடம் உடனடியாகக் கொண்டு சென்று, பரிகாரம் எப்படி, எந்த அளவுக்குத் தேடிட முடியுமோ, அதைச் செய்வதாக, ஆக்க ரீதியாக (றிஷீவீஸ்மீ க்ஷீமீஜீஷீஸீமீ) செய்துள்ளார்கள்.
அதன்பிறகு அதே தீர்மானங்களை தற்போது சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் உள்ள மனித உரிமை ஆணையத்தில், சிங்கள இராஜபக்சே அரசுமீது பற்பல நாடுகளும் சரமாரி போர்க் குற்றங்களை, அத்துமீறல்களையெல்லாம் பற்றிப் பேசியுள்ளனர்!
இலங்கை அரசின் சார்பானவர்கள் அதைத் தக்க வகையில் எதிர்கொள்ள இயலாத நிலையும், மழுப்பலான வகையிலும் – மறுக்க தங்களுக்கு இடம் உள்ளது என்று பொத்தாம் பொதுவிலும்தான் பேசியுள்ளார்கள்.
ஈழத் தமிழர் வாழ்வுரிமையில் இப்போதுதான் தக்க வகையில் சர்வதேச நாடுகளின் பார்வையை ஈர்த்துப் பரிகாரம் தேடிடும் ஈர நெஞ்சக் குரலொலி கேட்கத் தொடங்கியுள்ளது!
இதற்கு முன்னர் இலங்கை அரசின் தவறான பிரச்சாரத்தை நம்பி, இது ஒரு சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினை – மனித உரிமைப் பிரச்சினை என்று பார்க்காமல், ஏதோ தீவிரவாதம், பயங்கரவாதிகளை எதிர்த்து அந்நாட்டு அரசுப் போராடுவதாகவே தவறாக நினைத்திருந்தார்கள்.
இப்போதுதான் அந்தப் போலிப் பொய்யுரை பனிமூட்டம் விலகத் தொடங்கியுள்ளது!
2008 இல் தீவிரவாதத்திற்கெதிரான போர் என்ற சாக்கில் எப்படி ஒரு இனப் படுகொலை பட்டாங்கமாய் நடந்தது என்பது அய்.நா. போர்க்குற்றம் பற்றிய குழு அறிக்கை மூலம் தொடங்கி, அது மெல்ல மெல்ல ஆனால், உறுதியாக விரிவாகி, பன்னாடுகளும் விளங்கிக் கொள்ளும் வெளிச்சமாகி வருகிறது.
அதனை மேலும் வளர்த்து, மனித உரிமையோடு, வாழ்வுரிமையை அம்மக்களுக்குப் பெற்றுத் தர, டெசோ உருவாக்கப்பட்டு மாநாடும் நடத்தப்பட்டு சிறப்பான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. காழ்ப்புணர் வாளர்களின் காமாலைக் கண்களுக்கு இது சரியாகத் தெரியாது; அதுபற்றி கவலைப் படாமல் முடிந்ததை முயற்சியில் எதுவும் பாக்கியில்லை என்று செய்வது நம் கடமை என்ற உணர்வோடு நடந்த அம்மாநாட்டின் தீர்மானங் களை நேற்று ஜெனீவாவில் மனித உரிமை ஆணையத்தின் கமிஷனர் நவநீதம் பிள்ளை அம்மையார் அவர்களிடம் அளித்துள்ளனர் –
நியூயார்க் அய்.நா. துணைப் பொதுச்செயலாளரது சந்திப்புக்குப் பின்!
அய்.நா. மனித உரிமை ஆணையத் தலைவரான அம்மையாரிடம், அரசியல் தீர்வுக்கு ஒரே தீர்வு மற்ற சில நாடுகளில் அய்.நா. தலையிட்டுச் செய்ததைப்போல, வாக்கெடுப்புதான் சரியான ஒரே தீர்வு என்பதை வலியுறுத்தியுள்ளார்கள்.
அவர்களும் அதனைப் புரிந்து, அனுதாபத்தோடு கேட்டு, ஆவன செய்வதாக வாக்களித்துள்ளார்கள் என்பது பன்னாட்டளவில் நமது உள்ளங்களில் ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள காயங்களுக்கு அவசர முதலுதவி மருத்துவம் செய்ததுபோல உள்ளது!
ஜெனீவாவிலிருந்து சகோதரர்கள் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், டி.ஆர். பாலு அவர்களும் தொலைபேசியில் முதலில் டெசோ தலைவர் கலைஞர் அவர்களிடத்தில் விளக்கி விட்டு, நம்மிடம் தொடர்பு கொண்டு விளக்கமாகச் சொன்னார்கள். அடுத்து இலண்டன் சென்று இப்பிரச்சினை உரிய முறையில், பிரித்தானிய தமிழர் பேரவையில் கலந்து, உரிய பிரிட்டிஷ் எம்.பி.,க்க ளிடம் எடுத்துச் சொல்லவிருப்பதாகக் கூறினார்கள்.
நாம் மகிழ்ச்சியோடு அவர்களுக்கு உலகத் தமிழர்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்தோம்.
இலண்டன் மாநகரில் இங்கிலாந்து நாடாளுமன்றக் கட்டடத்தில் பிரித்தானியா தமிழர் பேரவை சார்பில் நடத்தப்பட்ட உலகத் தமிழர் பன்னாட்டுத் தமிழ் மாநாட்டிலும் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், தி.மு.க. முன்னணியினரும் பங்கேற்றதுடன், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தித் தீர்வு காண வேண்டும் என்ற தலைசிறந்த ஆக்கபூர்வக் கருத்தினை அம்மாநாட்டில் எடுத்து வைத்து முழங்கிய மு.க. ஸ்டாலின் அவர்களின் செயல்பாட்டுக்காகப் பாராட்டுகிறோம் – வரவேற்கிறோம்.
போற்றுபவர், தூற்றுபவர்பற்றிக் கவலைப் படாமல் நம் கடன் பணி செய்து முடிப்பதே என்று டெசோ தனது பயணத்தை நடத்திடுவதும் காலத்தின் கட்டாயமாகும்.
கி.வீரமணி
ஆசிரியர்