ஜோதிடம், மாந்திரீகம் என்ற இரண்டும் இன்றைய பெரும்பாலான மக்களை ஆட்கொண்டு அடிமைப்படுத்தி யிருக்கும் போதை என்று சொல்லலாம்.
பிறப்பு முதல் இறப்புவரை நடைபெறும் நல்ல கெட்ட காரியங்களைத் தீர்மானிப்பது பெரும்பான்மையான இல்லங்களில் ஜோதிடமே. ஒரு மணி நேரம் பேசி, மன நலப் பயிற்சி எடுத்துக் கொண்டு மக்களின் அகக் கருத்துகளை எடுத்துச் சொல்லி, அதற்கான பரிகாரங்களையும் விளக்கி பணம் கறந்து விடுகின்றனர்.
இவர்களை இந்துத்துவாக்களும் ஊக்கப்படுத்துகின்றனர். ஜோசியர்களிலும், ஜோதிட சாஸ்திரத்தை நன்கு அறிந்தவர்கள் இருக்கிறார்கள். அதில் நல்ல அனுபவம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். அவர்களைச் சிலர் நம்பினால், அதில் என்ன தவறு? என்று ஆதரவாகப் பேசுகிறார் துக்ளக் சோ. இவை போதாதென்று அறிவியல் கண்டுபிடிப்புகளான இணையதளம், தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள், பத்திரிகைகள் அனைத்தும் ஆதரவுக் கரம் நீட்டி ஊக்குவிக்கின்றன.
ஜோதிடத்திலும் மாந்திரீகத்திலும் மக்கள் வைத்துள்ள மூடநம்பிக்கையினை மூலதனமாகப் பயன்படுத்தி பணத்தையும் இன்பத்தையும் ஒருசேர அனுபவித்தவரே திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியைச் சொந்த ஊராகக் கொண்ட வி.டி. ஈஸ்வரன்.
பெண்கள் மயங்கும்படிப் பேசுவதே மாந்திரீகம் என்ற புதுவிதியை உருவாக்கியவர் இவர்.
ஜோதிடம் தொடர்பான புத்தகங்களைப் படித்து, சில ஜோதிடர்களிடம் ஜோதிடம் பார்க்கச் செல்வது போல் சென்று தனது அனுபவத்தினை வளர்த்துள்ளார். மேலும், சித்த மருத்துவர்கள் சிலரிடம் சிறிதுநாள் பயிற்சி செய்து ஜோசியக்காரர் ஆனாராம்.
கோவை, செல்வபுரத்தில் ஹம்சவேணி ஜோதிட சித்த மருத்துவ மாந்திரீக நிலையத்தைத் தொடங்கியுள்ளார். ஆண், பெண் வசியம், காதலர்களை வசப்படுத்த, குழந்தையின்மைப் பிரச்சினை என 32க்கும் மேற்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக ஊடகங்களில் விளம்பரப்படுத்திப் பிரபலமாகியுள்ளார்.
குழந்தை இல்லை என்று வரும் ஆண்களிடம் உன் உடம்பு தீ மாதிரித் தகிப்பதால் குழந்தை உருவாக்கும் அணுக்கள் அனைத்தும் இறந்தே வெளியேறுகின்றன. அணுக்கள் பலமாக அஸ்வதந்திரி லேகியத்தைச் சாப்பிட வேண்டும் என்று சொல்லி 100 ரூபாய் விலை மதிப்புள்ள லேகியத்திற்கு 10,000 ரூபாய் பறித்துவிடுவாராம்.
அதுபோல, குழந்தை இல்லை என்று வரும் பெண்களிடம் அவர்களது உடலை சாக்கடை என்று சொல்லி, செக்ஸ் உணர்வைத் தூண்டும்படிப் பேச்சுக் கொடுத்து ஆர்வத்துடன் கேட்பவர்களை மயக்கி உல்லாசமாக இருந்து கட்டணமாக 5,000 ரூபாய் வசூலித்துவிடுவாராம்.
மேலும், அதிர்ஷ்டக் கல் என்று அழகு சாதனக் கடைகளில் (பேன்சி ஸ்டோர்) 10 ரூபாய்க்கு வாங்கிய கல்லை 10,000 ரூபாய்க்கு விற்பதோடு, கண்ணுக்குப் போடும் மையினை வசிய மை என்று சொல்லி முடிந்தவரை பணத்தை வாங்கியுள்ளார் மாந்திரீகத்திற்குப் புது விளக்கமளித்துள்ள ஈஸ்வரன்.
இப்போது இவரைக் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. இவரைவிட இன்னும் பெரிய மோசடிப் பேர்வழிகள் பலர் கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு வெளியில் உலவுகின்றனர். அவர்கள் மாட்டப்போவது எப்போது?