நூல் : சங்க இலக்கியம் எனும் சிந்துவெளி திறவுகோல்
(சிந்து வெளி ஆய்வாளர்
ஆர்.பாலகிருஷ்ணன் நேர்காணல் )
வெளியீடு : தமிழ் மரபு அறக்கட்டளை
முதல் பதிப்பு 2024; – பக்கங்கள் : 98 – விலை : ரூ.120/-_
சிந்து வெளி அகழாய்வு முடிவுகள் வெளியான நூற்றாண்டு நிறைவு நாள் (20.09.2024) கருத்தரங்கங்களும் சிறப்புச் சொற்பொழிவுகளும், சமூக வலைதளங்களில் கட்டுரைகளும், புகைப்படங்களும், போஸ்டர்களுமாகக் காணக்கிடைக்கும் இவ்வேளையில், சிந்து வெளி பற்றிய சுவையான தகவல்களைத் தரும் நூல் ஒன்றை இப்போது அறிமுகம் செய்கிறேன்!
தனி ஒரு மனிதராக ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் மிகக் கடுமையான உழைப்பையும், நேரத்தையும், பயணத்தையும் மேற்கொண்டு அதன் பயனாக, சிந்து வெளி – கீழடி – சங்க இலக்கியம் இம்மூன்றையும் ஒரே கோட்டில் கொண்டு வந்து நிறுத்திய மிகப்பெரிய சாதனைக்குச் சொந்தக்காரர் சிந்து வெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன். IAS(ஓய்வு) அவர்களுடன் – தமிழ் மரபு அறக்கட்டளைத் தலைவர் முனைவர் க.சுபாஷினி நடத்திய நேர்காணலின் தொகுப்பே இந்தச் சிறிய நூல்! சிந்து வெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணனிடம் முக்கியமான பத்து கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான விரிவான பதில்களாக எளிய முறையில் விளக்கம் தரும் நூலாக அமைந்தது பாராட்டுக்குரியது. இந்தக் கேள்வி – பதில் மூலமாக மொத்த ஆய்வின் நோக்கமும் தாக்கமும் நமக்கு விளங்கி விடுகின்றது! இப்படி ஒரு முயற்சியைச் சிறப்பாகச் செய்த தமிழ் மரபு அறக்கட்டளையைப் பாராட்டாமல் கடந்து செல்ல முடியாது !
நேர்காணலின் முதல் கேள்வியாக – சிந்து வெளி நூற்றாண்டு ஏன் கொண்டாடப்பட வேண்டும்?… என்ற மிகப் பொருத்தமான கேள்வியை தமிழரின் சார்பில் கேட்டுத் தெரியும் முயற்சியாக உள்ளது . இதற்கான பதில் மிக நீண்டதாகவும் விரிவாகவும் தரப்பட்டிருந்தும் அதன் சாரத்தைத் தந்துள்ளேன்:
ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களின் பதில்: “முதலாவதாக, சிந்து வெளி கண்டுபிடிக்கப் படவில்லை என்றால், இன்னமும் நாம் வேத காலங்களிலிருந்து தான் இந்தியப் பண்பாடு தொடங்கியதாக நம்பியிருப்போம்! உலகம் அதை நம்பியிருக்கும்! ” …என்று நச்சென்று விளக்குகின்றார்! நமது இனத்தின் உண்மையான அடையாளமும் அடித்தளமும் சிந்து வெளியிலிருந்து தோன்றியது என்பது எவ்வளவு பெரிய பெருமை! அதைக் காப்பாற்ற வேண்டும் அல்லவா?
இரண்டாவது முக்கியக் காரணமாக அவர் கூறியது – “Undated Pre-History என்ற தேதியிடப்படாத வரலாற்றுக்கு முற்பட்ட காலங்கள், இந்தியாவில் ஒரே எட்டில் இன்றைய தேதியிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பு என்றும், கிறிஸ்து பிறப்பதற்கு முன் 3000 ஆண்டுகளுக்கு முன்பு என்றும் மாற்றி அமைத்தது சிந்து வெளியின் ஒரு பெரிய சாதனை! அதனால் தான் சிந்து வெளி கொண்டாடப்பட வேண்டும்!”…
‘நாம் அறியாத ஒன்றைப் புரிந்து கொள்வதன் மூலம் (சிந்துவெளி ஆய்வு முடிவுகள்) நாம் அறிந்த வற்றின் (திராவிட நாகரிகம்) முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும்’… என்ற பேருண்மையின் காரணத்திற்காகவும் சிந்து வெளி ஆய்வு முடிவுகள் தமிழர்களின் கொண்டாட்டமாக மாறி விட்டது!
இந்திய வரலாற்றில் ஜான் மார்ஷலின் பங்களிப்பு பற்றிய கேள்வி பதிலில் நமக்கு நிறைய தகவல்கள் கிடைக்கின்றன:
1902இல் ஜான் மார்ஷல் இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் டைரக்டர் ஜெனரல் பதவியில் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் சிந்து வெளிப் பகுதிகளில் அகழாய்வு நடைபெற்றது!
1920இல் ஹரப்பாவில் முதல் முறையாக அகழாய்வு செய்தவர் ராய் பகதூர் தயாராம் சாஹ்னி .
1922இல் மொகஞ்சதாரோவில் அகழாய்வை மேற்கொண்டவர் ஆர்.டி.பானர்ஜி என்றும் அறிகிறோம்!
1924ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சிம்லாவில் ஜான் மார்ஷல் ஒரு கருத்தரங்கம் நடத்தினார். அங்கு சிந்து வெளி அகழாய்வில்
கண்டெடுத்த பொருள்களைக் காட்சிப்படுத்தினார். ஹரப்பா- மொகஞ்சதாரோ இடையே 700கி.மீ. தொலைவு இருந்தாலும் அந்த இரண்டு
இடங்களிலிருந்தும் எடுக்கப்பட்ட பொருள்களில் பல ஒற்றுமைகளைக் கண்டறிந்தார். அதற்கான ஆதாரங்களைப் பட்டியலிட்டார்!
ஜான் மார்ஷல் அந்த ஆய்வின் முடிவுகளை லண்டனுக்குக் கொண்டு சென்று அறிவிக் கின்றார். அவை 20.09.1924 அன்று லண்டன் இதழில் இவ்வாறு வெளியிடப்பட்டது!
First Light on a Long Forgotten Civilisation – New discoveries of an unknown Pre historic Past in India – By John Marshall, Director General of Archeology in India.
இது போன்ற பல சுவாரஸ்யமான கேள்வி பதில்களின் தொகுப்பாக அமைந்துள்ளது. மேலும், சிந்து வெளிப் பண்பாட்டின் முக்கியமான அடையாளங்கள்; சிந்து வெளியில் திராவிடப் பரிமாணம்; கொற்கை – வஞ்சி – தொண்டி வளாகம் (K.V.T. Complex) இடப்பெயர் ஆய்வுகள்… இன்னும் பல .
தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் க. சுபாஷினி அவர்களின் சீரிய முயற்சியால் சிந்து வெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் அவர்களின் சிறப்பான விளக்கங்களைப் பெற்று ஒரு தொகுப்பு நூலாக, தமிழர்களின் அறிவுப் பசிக்கு நல்லதொரு ஊட்டச்சத்தாக வழங்கியதற்காக இருவரையும் பாராட்டுகிறேன்!
இந்த நூலை ஒவ்வொருவரும் – குறிப்பாக மாணவர்கள் படித்துத் தெளிவு பெற வேண்டும்!
திராவிடர்களின் கடந்த கால வரலாற்றிலிருந்து நிகழ் காலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு எதிர் காலத்திலும் உதவக் கூடியதாக அமைந்து விட்டது சிந்து வெளி அகழாய்வு முடிவுகள் !