நவம்பர் 17, உலக மாணவர்கள் தினமாகப் பல நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது.மார்ச் 8 எப்படி உழைக்கும் மகளிர் சிந்திய இரத்தத்தால் எழுந்த நாளோ, எப்படி மே 1 தொழிலாளர்கள் இரத்தம் சிந்தியதால் எழுந்த நாளோ அதனைப் போலவே, மாணவர்கள் சிந்திய இரத்தத்தால் எழுந்த நாள் நவம்பர் 17.
ஜெர்மனி நாட்டை ஆண்ட ஹிட்லரின் நாசிப்படை என்ற நாசப்படையை நாம் வரலாற்றின் வழியாக அறிவோம். இன்றைய இந்திய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வழிகாட்டு
நர்களில் ஒருவனாக இருக்கக்கூடிய ஹிட்லரின் படையால் துடிக்கத் துடிக்கப் பேராசிரியர்களும் மாணவர்களும் கொல்லப்பட்ட நாள்தான் நவம்பர் 17,1939.தங்கள் இனமே உலகில் மிக உயர்ந்த இனம் என்று கொக்கரித்த ஹிட்லர், கடைசியில் தனக்குத் தானே சுட்டுக்கொண்டு செத்துப்போன ஹிட்லர், ஓர் இனம்,ஒரு பண்பாடு, ஒரு மொழி என்று கொக்கரித்த அந்தக் கொடுங்கோலன் ஹிட்லரின் படையால் அந்தக் கொல்லப்பட்ட மாணவர்களின் நினைவாகத்தான் உலக மாணவர்கள் தினம் உலகின் பல பகுதிகளில் கடைப்பிடிக்கப்படுகிறது.
1939ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த நேரம்.செக்கோஸ்லோவி யாவில் உள்ள ப்ராக் பல்கலைக்கழகத்தின் மீது நாஜிகள் நடத்திய தாக்குதலின் நினைவு தினம் நவம்பர் 17. நாஜிப்படைகள் செய்த கொலைகளை,ஜான் ஆப்லேடல் மற்றும் தொழிலாளி வாக்லாக் செட்லாசெக் ஆகியோரின் கொலைகளை மாணவர்களும் ஆசிரியர்களும் எதிர்க்கின்றனர்.அதன் காரணமாக நாஜிக்கள் மாணவர்களைச் சுற்றி வளைத்து 1 பேராசிரியர், 8 மாணவர்கள் என மொத்தம் 9 பேரைச் சுட்டுக் கொல்கின்றனர்.
அதுமட்டுமல்லாது, பல்கலைக் கழகத்தை மூடி விட்டு, 1200 மாணவர்களை வதை முகாம்களுக்கு அனுப்பி அனைவரையும் கொல்கின்றனர். அந்த மாணவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையிலும் நாஜிகளின் கொடூரத்தை உலகுக்குத் தெரியப்படுத்தும் வகையிலும் நவம்பர் 17, உலக மாணவர்களின் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த நாள் கொடுங்கோலர்களிடமிருந்தும் சர்வாதிகாரிகளிடமிருந்தும் அனைத்துலக மாணவர்களையும் பாதுகாக்கும் நாளாகவும் அனைத்து மாணவர்களின் நலனைப் பற்றியும், அவர்களுக்குப் போதுமான பொருளாதார, சமூக மற்றும் சுகாதார நலன்களை வழங்குவதற்கான ஆதரவினை அளிக்கும் நாளாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. திராவிட இயக்க அரசாங்கங்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ச்சியாக எடுத்துவரும் நடவடிக்கைகள், மாணவ- மாணவியரின் நலனுக்காக எடுத்துவரும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் நம் கண்முன்னே விரிகின்றன.வேறு எவரையும்விட தமிழ்நாடும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அமைந்த தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசும் இந்த நாளைக் கடைப்பிடிப்பதற்கு மிகப் பொருத்தமான அரசாக நமக்குத் தெரிகிறது.
உலக மாணவர்கள் நாளில் நாமும் கல்வியின் முக்கியத்துவத்தை இன்னும் விளக்கமாகச் சொல்லும் நாளாக எடுத்துக்கொள்வோம்.
இந்த நாளை வேற்று மொழியை, பிற கலாச்சாரங்கள் பற்றி அறிந்து கொள்ளும் நாளாகவும் கடைப்பிடிக்கின்றனர். பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்கள் சில மாதங்கள் வெளி நாடுகளுக்குச் சென்று படிப்பதற்கான வாய்ப்பும், அதனைப் போல வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் நம் பல்கலைக்கழகத்தில் வந்து சில மாதங்கள் தங்கிப் படிக்கும் வாய்ப்பும் இருப்பது போல மாணவர்களைப் பரிமாறி, படிக்கவைக்கும் வாய்ப்புகள் எல்லாம் இப்போது உலகம் முழுவதும் உருவாக்கப்படுகின்றன. மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்டுப் படிப்பைத் தொடர இயலாத நிலையில் சில மாணவர்கள் தமிழ் நாட்டிற்கு வந்து படிப்பதைப் பார்க்கின்றோம். இப்படிப்பட்ட நிலையில் இந்த உலக மாணவர் தினம் என்பது இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியாவில் நாஜிய மனப்பான்மை மாணவர்கள் மத்தியில் புகுத்தப்படுத்துகிறது. இந்து மத அடிப்படைவாதிகள் சில மாணவர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு, அமைப்பு என்ற பெயரில் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மேல் நடத்தப்பட்ட வன்முறைகளையும் அதற்குப் பின்னணியில் இருந்தவர்களையும் நாம் அறிவோம்.
ஹிட்லர் பன்முகத்திற்கு எதிரானவன். உலக மாணவர்கள் தினம் பன்முகத்தைப் போற்றுகிறது.பல நாடுகளில் இருந்து வரக்கூடிய, பல பகுதிகளில் இருந்து வரக்கூடிய, பல மொழிகள் பேசக்கூடிய மாணவ,மாணவியர்கள் ஓரிடத்தில் இருந்து படிக்கும்போது அவரவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்னும் கோட்பாட்டை மாணவர்கள், சமூகம் மதிக்கவேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.அதற்கான நாளாக நவம்பர் 17 அமைகிறது.
படிக்கும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு என்பது மிக முக்கியமானது. மதம், ஜாதி என்று எதன் பேராலும் மாணவ, மாணவிகள் அச்சுறுத்தப்படுவதை நாம் அனுமதிக்கக்கூடாது.கிசாப் அணிந்த மாணவிகளைக் கர்நாடகத்தில் சில இந்துத்துவாவாதிகள் தடுத்து அச்சுறுத்தியதை நாம் தொலைக்காட்சிகளில் பார்த்தோம். கைகளில் ஜாதிக் கயிற்றைக் கட்டிக்கொள்ளுங்கள் என்று மாணவர்களுக்கு வேண்டாத அறிவுரைகளைக் கூறும் சமத்துவத்துக்கு எதிரான அறிவிலிகளை நாம் காண்கின்றோம்.அதன் மூலமாகச் சக மாணவர்களை அச்சுறுத்தும் மனப்பான்மையை அவர்கள் வளர்க்க விரும்புகிறார்கள்.
அய்தராபாத்தில் உயர் கல்வி பயின்று வந்த மாணவர் ரோகித் வெமுலா என்பவர் அய்தராபாத் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் 2016, ஜனவரி மாதம் தற்கொலை செய்ய தூண்டப்பட்ட கொடுமையை நாம் அறிவோம். அப்போது முதல் ரோகித் வெமுலா என்னும் பெயர் அநீதிக்கும் அவமதிப்புக்கும் எதிரான பெயராக இந்திய மாணவர்களால் உச்சரிக்கப்படுகிறது. சென்னை அய்.அய்.டி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பட்டியல் ஜாதி, பிற்படுத்தப்பட்ட ஜாதிகளைச் சார்ந்த மாணவ, மாணவிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தொடர்ச்சியாக நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அநீதியை எதிர்த்துப் போராடிய தலைவர்களான தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் பெயரில் அமைக்கப்படும் படிப்பு வட்டங்களுக்கு எதிராகச் செய்யப்படும் அவதூறுப் பிரச்சாரங்களையும் நாம் அறிவோம். பேராசிரியராக இருந்த வசந்தா கந்தசாமி அவர்களுக்குச் சென்னை அய்.அய்.டி.யில் இழைக்கப்பட்ட கொடுமைகளை நாம் அறிவோம்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் அமைப்பினர் ஆட்சியைப் பிடித்து, மூன்றாம் வகுப்பிற்கு மேல் பெண் குழந்தைகள் படிக்கவேண்டாம் என்று கட்டளையிட்டிருக்கின்றனர் என்ற செய்தியைப் படிக்கின்றோம். எதன் பேராலும் குழந்தைகள் படிப்பதைத் தடுப்பதை நாம் கண்டிக்கிறோம்.
இவற்றிற்கெல்லாம் தீர்வு காண- திட்டமிட, செயலில் இறங்கி உறுதி ஏற்கும் நாளாக நவம்பர் 17 அமையட்டும். வாழ்த்துக்கள்!