படத்தைப் பாருங்கள்; பக்தியின் விளைவு இதுதான். திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவில் 6 மாத கைக் குழந்தையுடன் தீக்குண்டத்தில் இறங்கிய பெண் பரிதாபமாக தவறி விழுந்து தீக்காயமடைந்தார். அவர்களைக் காப்பாற்ற தீயணைப்புத் துறையினர் விரைகின்றனர்.
நெருப்புக் கங்குகள் மீது ஓடுவது மனித உடலின் ஆற்றலுக்கு உட்பட்டதுதானே தவிர, அது ஒன்றும் கடவுள் அருள் அல்ல என்பதை பல ஆண்டுகளாக பகுத்தறிவாளர்கள் நிரூபித்து வருகிறார்கள்.
அண்மைக்காலமாக கார்ப்பொரேட் நிறுவனங்கள்கூட மனத் தின்மையை உறுதிப்படுத்துவதற்காக தமது ஊழியர்களுக்கு நெருப்பில் இறங்கும் பயிற்சியை அளிக்கின்றன. ஆனால், இந்த அறிவியல் விளக்கச் செய்திகளை அரசு சார்ந்த செய்தி ஊடகங்களும், தனியார் செய்தி ஊடகங்களும் அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதில்லை.
மாறாக இது போன்ற மூடநம்பிக்கை விழாக்களை பெருமையாக பத்திரிகைகள் வெளியிடு வதும், தொலைக்காட்சிகள் படம் பிடித்துக் காட்டுவதும் தொடர்கின்றன.
இதனால் மக்களின் பகுத்தறிவு பாழடிக்கப்பட்டு விபரீத விபத்துகள் நிகழ்ந்து உயிருக்கே ஆபத்தான நிலைகளும் அண்மைக் காலமாக ஏற்பட்டு வருகின்றன.
சினிமா, அரசியல் தொடர்பாக நிகழும் சம்பவங் களை ஒட்டி சம்பந்தப்பட்டவர்களைப் பேட்டிகண்டு வெளிவரும் செய்திகள் போல, மூடநம்பிக்கையால் நிகழும் கேடுகளை விளக்கி சம்பந்தப்பட்ட மருத்துவரிடமோ, நிபுணர்களிடமோ, பகுத்தறிவாளர்களிடமோ ஏன் ஊடகங்கள் உண்மை நிலை அறிந்து செய்தி வெளியிடுவதில்லை? இது மூடநம்பிக்கைக்கு துணைபோகும் செயல் அல்லவா?