நிதீஷ்குமாரின் பேச்சு நீரின் மேல் எழுத்து !

2024 ஆசிரியர் பதில்கள் நவம்பர் 16-30
1. கே: ஒருமித்த கருத்து கொண்டவர்களுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ள நிலையில் பி.ஜே.பி.யுடன் எக்காலத்திலும் கூட்டணி கிடையாது என ஜெயக்குமார் கூறியிருப்பது குறித்து தங்கள் கருத்து என்ன?
– அ.தியாகு, புதுச்சேரி.
ப : குழப்பம்தான் அங்கேயே என்பதும் அதனால் ’முன்னே பார்த்தால் நாயக்கர் குதிரை; பின்னே பார்த்தால் ராவுத்தர் குதிரை’ என்று சாட்சியம் சொன்ன கதைதான்! அய்யோ- பதவி அரசியலே!
2. கே: ‘‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாளும் விவாதத்திற்குரியதானதற்கு திருமாவளவன் முடிவு கட்டமுடியும்! முடிவு கட்டவேண்டும்!’’ என்ற நடுநிலையாளர்கள் கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– க.அருள்ஜோதி, நாமக்கல்.
ப : நடுநிலையாளர்கள்தான் இப்போது தோழமை உலகில் பெருமதியாளர்கள்!
3. கே: குறைவான மாணவர் சேர்க்கை உள்ளதைக் காரணங் காட்டி, உத்தரப்பிரதேச அரசு 27,000 தொடக்கப்பள்ளிகளை மூட 
முடிவு செய்துள்ளது மாபெரும் அநீதியல்லவா?
– எஸ்.சுடர், விழுப்புரம்.
ப : அநீதியா? சேச்சே… யார் சொன்னது! அசல் மநுநீதியின் அமலாக்கமாகும்!
4. கே: ‘‘தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் நான் இனியும் தொடர்வேன். எதிரணியில் சேர்ந்த தவற்றை இனிமேல் செய்யமாட்டேன்’’ என்று நிதீஷ்குமார் கூறியுள்ளது பற்றி…?
– செ.தங்கமணி, 
கோபிசெட்டிபாளையம்.
ப : நீரின் மேல் எழுத்தும் நிதீஷின் பேச்சும் என்றுமே நிலைக்காது என்பதை நீங்கள் அறிய மாட்டீரோ?
5. கே: திராவிட மாயையை அகற்ற வந்துள்ளது க.நா.சுப்பிரமணியம் எழுதிய ‘ஏழு பேர்’ என்ற 
நாவல் என்று ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை  (9.11.2024) நூல் விமர்சனம் வெளியிட்டுள்ளது பற்றி தங்கள் கருத்து என்ன?
– கே. பாபு, ஆரணி.
ப : ‘இந்து தமிழ் திசை’ எந்தத் திசைக்குச்  செல்லுகிறது என்பது பலருக்கும் புரிகிறது. திராவிட மாடல் ஆட்சிக்கு எதிராக இவ்வளவு பெரிய விமர்சனமா?
திராவிடம் மாயை அல்ல; முன்பே தோழர் பி.இராமமூர்த்திக்கு நாம் தெளிவுபடுத்திவிட்டோம்.
6. கே: அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் தேர்வாகியுள்ளது இந்துத்துவாவிற்கு நன்மை தருமா? இந்தியாவிற்கு நன்மை தருமா?
– ஆ. செல்வராஜ், கும்மிடிப்பூண்டி.
ப : அரசியல் ஜோஸ்யர்களைக் கேளுங்கள்!
7. கே: உ.பி.யில் 9 சட்டமன்றத் தொகுதி களுக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஆர்.எஸ்.எஸ். முக்கியத் தலைவர்களை அம்மாநில முதலமைச்சர் ஆதித்யநாத் நீண்ட நேரம் சந்தித்துப் பேசியுள்ளதன் நோக்கம் என்ன?
– செ. காஞ்சனா, வேலூர்.
ப : கத்தரிக்காய் முற்றினால் கடை வீதிக்கு வந்துதானே தீரும்! தேர்தல் முடிவு வந்தவுடன் புரியும்.
8. கே: தீவிரவாதத்தை ஒழிப்பது குறித்து இரண்டு நாள் மாநாட்டை பி.ஜே.பி. நடத்தியுள்ளது பற்றி…?
– வ.சரளா, காஞ்சிபுரம்.
ப : வரவேற்போம் – உண்மையாக! தபோல்கர், பன்சாரே, கல்புர்கி ஆகியோரைக் கொன்ற கொலையாளிகள் எந்த அமைப்பின் தீவிரவாதிகள்? அவர்கள் மீது நடவடிக்கை பாய்ந்தால் நல்லது. எதிர்பார்க்கலாமா?
9. கே: பழங்குடி மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்குவதில் தொடர்ந்து காலதாமதமும் மறுப்பும் செய்யப்படுவதற்குத் தீர்வுதான் என்ன?
– கே. கோவிந்தன், ஆற்காடு.
ப : அறப்போர் மூலம் அரசுகளின் கவனத்தை ஈர்க்க மக்கள் முன்வர வேண்டும்.