மருத்துவர்
சிவபாலன் இளங்கோவன்,
மனநல மருத்துவர்
கி.மு.அய்ந்தாம் நூற்றாண்டில் ‘மெலன்கோலியா’ என்ற வார்த்தையை ஹிப்போகிரேட்ஸ் முதன்முதலில் பயன்படுத்துகிறார். அதாவது மனிதனின் பண்புகளை நான்காக அவர் வகைப்படுத்தும் போது, அதில் ஒரு வகையை ‘மெலன்கோலியா’ என்று அழைக்கிறார்.
‘மெலன்கோலிக் பண்புகளைக் கொண்ட மனிதர்கள் எப்போதும் உற்சாகம் குறைந்தவர்களாக, ஏதேனும் ஒரு சோகத்தைச் சுமந்து திரிபவர்களாக, வாழ்க்கையின் மீது எப்போதும் எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களாக, மிகச் சில நெருங்கிய நண்பர்களையே கொண்டவர்களாக, எப்போதும் தனிமையையே விரும்புபவர்களாக, எதன் மீதும் நாட்டம் இல்லாமல் ஒரு மேம்போக்கான பிணைப்பைக் கொண்டவர்களாகவே இருப்பார்கள்’ என்கிறார் ஹிப்போகிரேட்ஸ்.
மனிதனின் உடலில் சுரக்கும் அமிலங்களை அடிப்படையாகக் கொண்டு ஹிப்போகிரேட்ஸின் ஆளுமை வகைப்படுத்தல் இருந்தது. உதாரணமாக, கருமை நிற பித்தநீர் (black bile) அதிகமாக ஒருவருக்குச் சுரந்தால் அவர் ‘மெலன்கோலி’வகை மனிதராக இருப்பார் என்கிறார். சிகப்பு நிற பித்தம் பெரும்பான்மையாக உடலில் இருப்பவர்கள் ‘மெலன்கோலி’க்கு நேரெதிராக அதாவது உற்சாகம் கொண்டவர்களாக, வாழ்க்கையின் மீது அதீத நம்பிக்கைகளும், கனவுகளும், நேர்மறை எண்ணங்களும் கொண்டவர்களாக, மனிதர்களுடன் ஆழ்ந்த உறவை ஏற்படுத்திக் கொள்பவர்களாக இருப்பார்கள் என்கிறார்.
ஹிப்போகிரேட்ஸ், மெலன்கோலியாவை நோய் என சொல்லவில்லை. மாறாக, அது சாத்தானின் வேலை என்கிறார். அதாவது ஒருவரது உடலில் சாத்தான் நுழையும்போது, அங்கு அளவுக்கதிகமான கருமை நிற பித்தநீர் சுரக்கிறது அதன் விளைவாக அவர் ‘மெலன்கோலிக்’ பண்புகளைப் பெற்றுவிடுகிறார் என்கிறார். சாத்தான் அவரின் உடலில் இருந்து விலகும்போது கருநிற பித்தநீர் குறைந்து அவர் இயல்பானவராக மாறிவிடுகிறார் என்கிறார்.
ஹிப்போகிரேட்ஸ்
ஹிப்போகிரேட்ஸின் கருத்துகள் தர்க்க ரீதியாக இல்லாவிட்டாலும் கூட, இதை ஒரு நோய் என்று அவர் சொல்லாவிட்டாலும் கூட, ஒரு கருத்தை அப்போதே தெளிவாகக் கூறியிருக்கிறார். அதாவது மெலன்கோலியா என்பது தொடர்ச்சியாக எப்போதும் இருப்பதில்லை. வருவதும் போவதுமாக இருக்கிறது. மேலும், அது எல்லாருக்கும் வருவதில்லை. குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வருகிறது. அதாவது சாத்தான் எல்லோரின் உள்ளேயும் செல்வதில்லை. குறிப்பிட்ட சில பேர் உடலில் மட்டுமே செல்கிறது.அந்த உடலில் அது தொடர்ச்சியாகவும் தங்குவதில்லை. சில காலங்கள் மட்டும் இருந்து விட்டுச் சென்று விடுகிறது. சாத்தான் உடலில் தங்கும் காலத்தில் அவர் மெலன்கோலிக்காக மாறிவிடுகிறார் என்கிறார்.
இதில் சாத்தான் மட்டும்தான் ஹிப்போகிரேட்ஸின் கற்பனை. மிச்சமிருக்கும் அனைத்தும் இப்போது வரை உண்மை. சாத்தானுக்குப் பதில் உயிரியல் காரணங்கள் எனலாம். சில உயிரியல் காரணங்களால் வெகுசிலர் மெலன்கோலியாவால் பாதிக்கப்படுகிறார்கள். அப்படி பாதிக்கப்பட்டவர்கள் உற்சாகம் இழந்தவர்களாகவும், எதிர்மறை எண்ணங்கள் நிரம்பியவர்களாகவும், வாழ்க்கையின் மீதான நம்பிக்கையைத் தொலைத்தவர்களாகவும், சகமனிதர்களிடம் விலகி தனிமையில் உழல்பவர்களாகவும் மாறிப்போகின்றனர். ஆனால், அது ஒரு தொடர்ச்சியான நிலை கிடையாது. சில நாட்களிலேயே அந்த மனநிலையில் இருந்து வெளியேறிவிடுகின்றனர். அந்தக் குறிப்பிட்ட மனநிலை ஏற்பட எந்த வகையிலும் அவர்கள் காரணம் ஆக மாட்டார்கள். ஹிப்போகிரேட்ஸ், அது சாத்தானின் வேலை என்கிறார். நவீன மருத்துவம் அது உயிரியல் மாற்றங்களினால் நிகழ்கிறது என்கிறது. அதனால் அந்த மனநிலை மாற்றம் ஒருவருக்கு நிகழும்போது, அவருக்கு தோன்றும் அந்த எதிர்மறையான எண்ணங்களையும் அதனால் அவருக்குள் ஏற்படும் மன உளச்சலையும் நாம் புரிந்து கொள்வது அவசியமானது. ஏனென்றால் அந்த மனநிலை தற்காலிகமானதே. அதில் இருந்து அந்த மனிதர் மீண்டு வந்துவிடுவார். ஆனால், அது வரை அவரை பாதுகாப்பாகக் கவனித்துக் கொள்ள வேண்டியது நமது கடமை.
எப்போதும் மனதில் ஒரு சொல்ல முடியாத பாரம், தன்னைச் சுற்றியுள்ள அத்தனை மீதும் வெறுப்பு, வாழ்க்கையின் மீதும் மனிதர்களின் மீதும் நம்பிக்கையின்மை, ஏதோ ஒரு குற்றவுணர்ச்சி, முழுமையாக இழந்து விட்ட சுயமதிப்பீடு – இத்தனையும் ஒருங்கே கொண்ட ஒரு மனநிலையில் ஒருவர் என்ன செய்வார்? தன்னையும் தனது இருப்பையும் பாரமாக நினைக்கும் ஒருவர் அடுத்து எடுக்கக்கூடிய முடிவு என்னவாக இருக்கும்? தற்கொலை முடிவாகத்தானே இருக்கும்? அந்த நிலைக்கு அவர் செல்லாமல் இருப்பதற்கு முதன்மையாக நாம் செய்ய வேண்டியது, எந்த வெற்று அறிவுரைகளையும் சொல்லாமல் அவரை முழுமையாக நாம் புரிந்து கொள்ளவேண்டியது தான்.
இந்த ‘மெலன்கோலியா’ பற்றி ஏராளமான தத்துவங்கள், கருத்தியல்கள் வரலாற்றில் ஏராளமான சிந்தனையாளர்களால் தொடர்ச்சியாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. ‘சிக்மண்ட் ஃபிராய்ட் மெளனிங் மற்றும் மெலன்கோலியா’ என்ற புத்தகம் அதில் மிகவும் முக்கியமானது. அதில் அவர், நமக்கு மிகவும் நெருங்கிய ஒருவர், நாம் மிகவும் நேசிப்பவர் இறந்துவிட்டால் நமக்கு எத்தகைய துக்கம் ஏற்படுமோ, அதே அளவிற்கு துக்கம், எந்த ஒரு இழப்பும் இல்லாமலேயே ‘மெலன்கோலியா’விலும் இருக்கும் என்கிறார்.
மனம் சோர்வாக இருப்பது வேறு,
மனச்சோர்வு என்பது வேறு. மனம் சோர்வாக இருப்பது ஒரு நிலை.
தற்காலிக உணர்வு நிலை. ஆனால், மனச்சோர்வு என்பது ஒரு நீடித்த மனநிலை.
இந்த ‘மெலன்கோலியா’ தான் இன்று நவீன மருத்துவத்தில் மனச்சோர்வு (Depression) என அழைக்கப்படுகிறது. வரலாற்றில் ஹிப்போகிரேட்ஸ் காலத்தில் இருந்தே ஏராளமான தத்துவஞானிகளும் அறிஞர்களும் இந்த மெலன்கோலியாவை வெளிப்புற காரணங்கள் ஏதுமற்றதாகவும், மாறக்கூடிய மனநிலையாகவும் பல காரணங்களோடு பேசியிருக்கிறார்கள். ஆனால், நாம் இன்னமும் ஒருவருக்கு மனச்சோர்வு என்றால், ‘‘மனச்சோர்வு வரும் அளவுக்கு உனக்கு என்ன பிரச்சினை?’’ என்னும் அதே கேள்வியை இன்றளவும் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
கேள்வி :
அன்பிற்குரிய மருத்துவர் அய்யா, நான் மிகக் கடுமையான ‘Depression’ பிரச்சினையில் இருந்து மீண்டு உள்ளேன். எந்த நொடியும் சாகக்கூடும் என்ற நினைப்பில் முடங்கி
இருந்த என்னை என் கடமை என நினைத்தவற்றையும், எனக்கு விருப்பமானவற்றையும் செய்யச் சொன்னார்கள்! எனது விருப்பம் மிகப்பெரியது, நடைமுறைக்கு எளிதாக சாத்தியமில்லாதது. இத்தகைய சூழலில் இருந்து மீள்வது எப்படி?
– மருதுபாண்டியன்,
அண்ணாநகர், சென்னை-40
பதில்:
உங்கள் கேள்வியில் இருந்து நீங்கள் இரண்டு வகையான சிக்கலில் இருப்பது தெரிகிறது. ஒன்று, நீங்கள் சொன்னது போல கடுமையான ‘Depression’இல் இருந்து மீண்டு வந்திருக்கிறீர்கள். இங்கு ‘Depression’ என நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்பது தெரியவில்லை. மனம் சோர்வாக இருப்பது வேறு, மனச்சோர்வு என்பது வேறு. மனம் சோர்வாக இருப்பது ஒரு நிலை. தற்காலிக உணர்வு நிலை. ஏதேனும் சில சிக்கல்கள் சார்ந்து மனம் அவ்வப்போது ஒரு சோர்வு நிலைக்குச் செல்லும். அந்த நிலை மாறக்கூடியது. உங்களது எந்த ஒரு முனைப்பும் இல்லாமலே மனமே அந்த நிலையில் இருந்து வெளியில் வந்துவிடும்.
ஆனால், மனச்சோர்வு என்பது ஒரு நீடித்த மனநிலை. அதாவது உங்களுக்கு ஏற்படும் மேற்சொன்ன தற்காலிகச் சோர்வு நிலை இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்துக் கொண்டேயிருந்தால் அது தான் மனச்சோர்வு. அதே மனநிலை தொடர்ச்சியாக நீடித்து அதன் விளைவாக எதன் மேலும் நம்பிக்கையற்று, ஈடுபாடற்று, எதிர்
காலத்தை நினைத்து அச்சப்பட்டு, உங்களைப் பற்றி மிகத் தாழ்வாக மதிப்பிட்டு, அதையே நினைத்து நினைத்து யாரிடமும் பேசாமல், தூங்காமல், சாப்பிடாமல் இருந்து ‘‘ஏன் உயிரோடு இருக்க வேண்டும்?’’ என நினைத்தால் அது மனச்சோர்வு (Depression). அப்படி ஒரு மனச்சோர்வு வந்தால் அது தன்னிச்சையாகச் சரியாகாது. ஒரு மனநல
மருத்துவரின் உதவியை நீங்கள் நாடுவது அவசியமான ஒன்று. உங்கள் கேள்வியில் நீங்கள் மீண்டு வந்ததாகச் சொன்னது ஒரு தற்காலிக உணர்வு நிலையாகத் தான் இருக்கும் என நினைக் கிறேன். அந்த நேரத்தில் இது போன்ற தற்கொலை எண்ணங்கள் வரக்கூடும்.அப்படி ஒரு சூழ்நிலை வரும் வேளையில் நாம் வாழ்வதற்குரிய காரணங்களை மனமே தன்னிச்சையாக எடுத்து பரிசீலிக்கத் தொடங்கிவிடும்.