“இந்துக்கள் இந்தியாவின் நோயாளிகள்; அவர்களின் நோய் பிற இந்தியர்களின் நலத்திற்கும் மகிழ்ச்சிக்கும் தீங்கு விளைவிப்பதாக இருக்கிறது என்பதை அவர்கள் உணரும்படி செய்துவிட்டால், அதுவே எனக்கு போதும்.” – டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர்
ஜாதி ஒழிப்பு என்னுமொரு கட்டுரைத் தொகுப்புக்கு (ஆய்வுரைக்கு) டாக்டர். அம்பேத்கர் எழுதிய முன்னுரையின் இறுதி வரிகள் இவை. அம்பேத்கரின் ஆய்வுக் கட்டுரைகளையும், எழுத்தையும் மேற்கோள் காட்டாமல் இந்தியாவில் ஜாதியத்தைப் பற்றிய எந்த விவாதத்தையும் முன்னெடுக்க முடியாது. வரலாற்று ரீதியாகவும், இந்திய மக்களின் பண்பாட்டு ரீதியாகவும் ஜாதியை மக்களிடம் இருந்து பிரித்தெறிய முடியாத அதன் தொடர்புக் கூறுகளை, அண்ணல் அளவுக்கு இனியொருவர் எழுதுவதற்கு ஏதேனும் மிச்சமிருக்கிறதா என்பது சந்தேகம்தான்.
ஜாதியொழிப்பு என்னும் தலைப்பு நெடுங்காலமாய் விவாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இச்சமூகத்தில் இருந்து முற்றிலுமாக அதை அழித்தொழிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த விவாதத்தின் இறுதி சமரசமாக, ஜாதியொழிப்பை விரும்பாத இந்தச் சமூக அமைப்பினரிடம் இருந்து, அதற்கு இரையாகும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதன் மூலம், குறைந்தபட்சமாக ஏதோவொரு வகையில் இச்சமூகத்தைச் சமன் செய்துவிடலாம் என்கிற முயற்சிகளின் அடிப்படையில்தான்,
1. ஜாதியை ஒழிக்க முடியாமல் போனாலும், இந்த ஜாதிய அமைப்பால் இச்சமூகத்தில் நேரடியாகப் பலியிடப்படும் ஒடுக்கப்பட்ட மக்களைக் காப்பது.
2. தீண்டாமைக் கொடுமைகளைச் சட்ட விரோதமாக்குவது
3. தண்டனைக்கு உட்படுத்துவது
4. ஒடுக்கப்பட்ட மக்கள் மேலெழும்பி வர ஏதுவாய்
உரிமை மீட்புச் சட்டங்களை உருவாக்குவது
5.ஜாதி மறுப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்துவது
போன்ற முன்னெடுப்புகள் மூலமாகவே கணிசமான முன்னேற்றத்தையும், விடுதலையையும் நாம் அடைந்திருக்கிறோம். இவை அனைத்துமே ஜாதியத்தின் புற வடிவிலான
நேரடி ஒடுக்குமுறைகளையும், தீண்டாமையையும் சட்டப்பூர்வமாக ஒழிக்கப் பயன்பட்டிருக்கின்றனவே ஒழிய, ஜாதியத்தின் அக வடிவங்களை, அஸ்திவாரங்களை, துளியும் அசைத்துப் பார்க்க முடியாதநிலையில்தான் ஜாதியம் அன்றும் இருந்தது; இன்றும் இருக்கிறது; என்றும் இருக்கும்.
பத்து ரூபாய் கொடுத்து ஒரு பொருளை வாங்கினால், மிச்சமிருக்கும் ஒரு ரூபாய் அல்லது அய்ம்பது காசு சில்லறைத் தட்டுப்பாட்டுக்குக் கடைக்காரர் ஒரு மிட்டாய் கொடுப்பார், அல்லது அதன் விலைக்கு நிகரான ஒரு பொருளைக் கொடுத்துச் சமன் செய்வார். சில்லறைத் தட்டுப்பாடு ஏற்படும் போது ஹால்ஸ், விக்ஸ் மிட்டாய் மூலம் அதைச் சரிசெய்து கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தவில்லை. எந்தச் சட்டத்திற்கும் கட்டுப்பட்டு அவர்கள் செய்திருக்கவில்லை, சில அடிப்படைச் சிக்கல்களைக் களையவும், இருவரின் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளவும் சமூகத்தில் ஒரு தற்காலிக இணக்கம் தேவைப்படுகிறது. இந்த இணக்கத்துக்குப் பின்னே ஒரு சுயநலமுண்டு, காரணகாரியமுண்டு.
இப்படி தனியொருவரின் சுயநல லாப நோக்கிற்காக இந்தச் சமூகத்தில் நடந்த மாற்றத்தை எல்லாம் வரிசைப்படுத்தி சமூகம் மாறிவிட்டது, ஜாதி ஒழிந்துவிட்டது என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். “இப்போல்லாம் யார் ஜாதி பாக்குறா?” என்பவர்கள் இந்த ரகமானவர்கள் தான். சிலிண்டர் போடுபவரையும், தண்ணீர் கேன் போடுபவரையும் ஜாதி பார்த்து நீங்கள் வாசலில் தடுத்தால், அவற்றின் பாரத்தை நீங்கள் தான் சுமக்க வேண்டியிருக்கும், அதன் பாரத்தை உங்கள் ஜாதி தான் சுமக்க வேண்டியிருக்கும். அப்படியான புற அழுத்தங்கள் நம்மைச் சமத்துவமாய் நடந்துகொள்ள வேண்டி நிர்ப்பந்திக்கிறது, அதன் மூலம் சில மாற்றங்கள் நடக்கின்றன. அந்த மாற்றங்கள் சமத்துவத்தில் சேராது, அதில் சுயநல நோக்கமுண்டு.
ஜாதியை முற்றிலுமாக ஒழித்துச் சமத்துவத்தை நிறுவுவதற்கான வழிகளை நாம் பட்டியலிட்டோ மானால் இந்தச் சமூகம் கதறிச் சாகும். மாறாக ஜாதியை ஒழிக்க நயவஞ்சகமாக சில விஷமமான வழிகளைச் சுட்டிக்காட்டுகிறது இந்தச் சமூகம். அதில்
1. ஜாதிச் சான்றிதழை ஒழித்தல்
2. இடஒதுக்கீட்டை நீக்குதல்
ஜாதிச் சான்றிதழை ஒழித்தல் /இடஒதுக்கீட்டை நீக்குதல்:
இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்களின் ஜாதிவெறியால் நேரடியாகப் பாதிப்புக்குள்ளான சக இந்தியர்கள் புகார் செய்தபோது, இங்கிலாந்து காவல்துறை அந்த வழக்கை எந்தச் சட்டத்தின் அடிப்படையில் அணுகுவது என்று ஆரம்பத்தில் குழம்பியது. “ஜாதி என்பது என்ன?” என்கிற சரியான புரிதல் அவர்களுக்கு இல்லாததே அக்குழப்பத்திற்குக் காரணம், பின்பு தொடர் குற்றச்சாட்டுகள் எழவே இங்கிலாந்து அரசு இதைக் கவனத்தில் கொள்ள ஆரம்பித்தது.
Committee for the Elimination of Racial Discrimination (CERD) பரிந்துரையின்படி 9(5)a Equality Act பிரிவில் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி 2010இல் ஓர் உத்தரவு
பிறப்பித்தது. ஆனால், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அரசு கேள்விக்குள்ளான போது, அரசு தரப்பில் சொல்லப்பட்ட பதில் ‘caste
is complex and hard to define’. ஒரு சட்டத்தை இயற்றுவதற்கு முன் எத்தனை வழக்குகள் கணிசமாகப் பதிவாகி இருக்கின்றன, ஜாதி ஒடுக்குமுறைகள் எங்கெல்லாம் இருக்கின்றன என்பன பற்றி ஆய்வு நடத்தியபோது, பணியிடங்களில் மட்டும் 10% ஜாதிய ஒடுக்குமுறைகள் நடந்துள்ளதாகத் தெரியவந்தது. அதே நேரத்தில், இந்தச் சட்டத்தை
இயற்றவிடாமல் செய்ய ஜாதி ஹிந்துக்கள் குழுமியிருக்கும் இங்கிலாந்து ஹிந்து அமைப்புகள் அழுத்தம் கொடுத்திருக்கின்றன.
“ஜாதி வெறும் இந்தியப் பிரச்சனை அல்ல, இந்தியாவை விட்டுப் போனால், ஜாதி உலகப் பிரச்சனையாகும்” என்று அம்பேத்கர் சொன்னதற்கேற்ப இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா என்று இந்தியர்கள் எங்கெல்லாம் பரவலாக இருக்கிறார்களோ, குடிபெயர்கிறார்களோ, அங்கெல்லாம் இந்தியர்
களோடு சேர்ந்து ஜாதியும் பயணமாகி அந்த நாடும் செல்லரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. விமானத்தில் பயணமாகும் போது, சேதம் விளைவிக்கக்கூடிய எந்தப் பொருளையும் விமான நிலையப் பாதுகாப்புத் துறை அனுமதிக்காது, ஆனால், இந்தியர்கள் பெரும் சேதம் ஏற்படுத்தக்கூடிய ஜாதி என்னும் கிருமியைப் போகும் நாடுகளுக்கெல்லாம் கொண்டு செல்கிறார்கள். அதைப் பரிசோதிக்கும் திறன் எந்த இயந்திரத்துக்கும் இல்லை. அதனால் தான் இங்கிலாந்து அரசு ஜாதி குறித்துக் குறிப்பிடுகையில், ‘Caste is complex and hard to define’ என்று குறிப்பிடுகிறதோ என்னவோ!
ஜாதிச் சான்றிதழ் இல்லாத இங்கிலாந்திலும், இடஒதுக்கீட்டுச் சட்டம் இல்லாத அமெரிக்காவிலும் இந்தியர்களிடையே ஜாதி இருக்கும்போது இந்தியாவில் எப்படி ஒழியும்? ஆக, ஜாதி என்பது சான்றிதழில் இல்லை. ஜாதிச் சான்றிதழ் என்பது உரிமை இழந்த மக்களை அரசியலமைப்புச் சட்டம் இன்னார் என்று கண்டுகொள்ள உருவாக்கி வைத்திருக்கும் ஓர் அடையாள அட்டை.
குறிப்பிட்டுக் கைநீட்டிக் காட்டும்படியான இடத்தில் மட்டுமே ஜாதி இருப்பதில்லை. பிறப்பில் இருந்து இறப்பு வரை அனைத்து பண்பாட்டுத் தளங்
களிலும் ஜாதி புரையோடிப் போய்க் கிடக்கிறது – பாம்புக் குவியல்களின் தலையும் வாலும்போல.
ஒரு மனிதனின் பிறப்பில், இறப்பில், திருமணச் சடங்கில், மனைவியின் தாலியில், கோவிலில், அலுவலகத்தில், சடங்கில், சம்பிரதாயத்தில், இசையில், நாடகத்தில், திரைத்துறையில், கடவுளர்களில், மொழியில், பெயரில், தெருவில், கல்வியில் என்று எங்கும் நீக்கமற ஜாதி நிறைந்து இருக்கும்போது ஜாதியை எப்படி ஒழிக்க முடியும்? ஆனால், முடியும்!
கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியல், நம்பிக்கை, பக்தி, தர்மம் என்னும் அடுக்குகளில் சுகமாய் உறங்கிக் கொண்டிருக்கும் பிற்போக்குத்தனங்களை ஒழிப்பதன் மூலமும், சீராய்வதன் மூலமும் நிச்சயம் ஜாதியைக் காலத்தால் வெல்லலாம். ஜாதியொழிப்பும் சடங்கு சம்பிரதாயச் சீராய்வும் :
1. இந்தியாவில் ஜாதியத்தின் தலைமைப்பீடமாக விளங்குபவை கோவில்களும், பக்தி சார் கிளைகளும் தான். பார்ப்பனர்கள் பெற்றிருக்கும் ஆதிக்கம், உரிமை பொதுமைப்படுத்தப்பட்டு எல்லோருக்குமானதாக பரவலாக்கப்பட வேண்டும். எல்லாக் கோவில்களையும் அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதோடு கோவில் பூஜைகளை மேற்கொள்ளும் பயிற்சிப் பாடசாலைப் பள்ளிகளைத் தனியாரிடம் விடாமல், ஒரு குறிப்பிட்ட காலம் அரசே நேரடியாக நடத்து வதோடு, அதில் மாநில மொழியில் பூஜை மந்திரங்
களைக் கற்பது அவசியமாக இருத்தல் வேண்டும். இப்பள்ளிகளில் இருந்து தகுதி பெறுகிறவர்களை இறை சேவகர்களாக பணியமர்த்தினால், இன்னார் தான் இந்தப் பணியைச் செய்கிறவர்கள் என்னும் தனித்துவத்தை உடைத்தெறியலாம்.
அண்மையில் கேரளாவில் அரசால் நியமிக்கப்பட்ட பார்ப்பனர் அல்லாத தலித் குருக்களிடம், பிரசாதத்தை வாங்கமாட்டோம் எனச் சிலர் புறக்கணித்தது செய்தியாக எதிரொலித்தது. இந்தநிகழ்வு நமக்குணர்த்தும் உண்மை, பார்ப்பனர்களுக்கு இணையாக வேதம் கற்று இறை ஊழியம்
செய்வதற்கான தகுதியை அடைந்திருந்தாலும், அவரின் பிறப்புசார் அடையாளத்தோடு நிச்சயம் ஏதோவொரு இடத்தில் தனிமைப்படுத்தப்படுவார்.
அதன் பொருட்டே இங்கு அடையாளங்கள் களையப்பட வேண்டிய அவசியமிருக்கிறது. சில சமூகங்களிடையே மட்டும் காணப்படும் வழக்கமான பூணூல் அணியும் முறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.
முற்போக்காளர்களும் சறுக்கும் இடம் இதுதான்! ‘எப்படி ஒருவர் சுயமாய்த் தன் விருப்பப்படி அணியும் பூணூலைத் தலையிட்டுத் தடுக்க முடியும்?’ என்று கேட்கலாம். நடைமுறையில்நிச்சயம் இதை அரசாங்கம் கொண்டுவரப் போவதில்லை. அதேநேரம் இதைச் சாத்தியப்படுத்தாமல் ஜாதியை ஒழிப்பதற்கான தீர்வுகள் இல்லையென யாரும் சொல்லிவிடக்கூடாது. அதன் தீர்வுகளில் முதன்மையானதும், முக்கியமானதுமாய்த் தன்னை ஒருவன் இந்தச் சமூகத்தில் இருந்து தனிமைப்
படுத்தும் போக்கை ஆதரிக்காமல் இருப்பது.
ஜெர்மனியில் ஹிட்லர் தலைமையிலான நாஜிப்படைகள், யூதர்களைச் சமூகத்தில் இருந்து முதற்கட்டமாக தனிமைப்படுத்தத் துவக்கினார்கள். யூதர்கள் ஜெர்மானியர்களோடு கலந்திருந்தனர். அவர்களை அடையாளம் காண நாஜிக்கள் ஒரு கட்டளையைப் பிரகடனப்படுத்தினர். யூதர்கள் தங்கள் வீடுகளில், உடைகளில், தொழிற்கூடங்களில் மஞ்சள் நட்சத்திரக் குறியீட்டை எப்போதும் அணிந்தே இருக்க வேண்டுமென்கிற கட்டளை அது ‘Star of David’ என்று அழைக்கப்பட்ட அந்தக் குறியீட்டு நட்சத்திரத்தை உடைகளில் உடுத்திக் கொள்ளாத யூதர்கள் தண்டிக்கப்பட்டனர். கடுமையானச் சட்டங்கள் மூலம் யூதர்கள் மஞ்சள் நட்சத்திரக் குறியீட்டோடு ஜெர்மனியில் வலம் வர, நாஜிக்களுக்கு தூரத்திலிருந்தே யூதர்களைக் கண்டுபிடிக்க ஏதுவாய் இருந்தது. அதன் பிறகே யூதர்கள் கொத்துக்கொத்தாய் வதை முகாம்களுக்குக் கடத்திக் கொல்லப்பட்ட வரலாறு துவங்கியது.
பெருமிதத்தோடோ அல்லது ஒருவரைத் தனிமைப்படுத்துவதற்காகவோ பிறப்பிலான ஓர் அடையாளத்தைச் சுமப்பது – சுமக்கச் செய்வது எந்தவகையிலும் சமத்துவச் சமூகத்துக்கான வழியை வகுக்காது. ஹிந்து மதத்தில் பூணூல் அணியும் வழக்கம் இருக்கும்வரை, பார்ப்பனர்களோடு இன்னபிற பூணூல் அணியும் சமூகங்கள் தங்களைப்
பொதுச் சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்வதாகவே அர்த்தம் கொள்ளப்படும்
(தொடரும்)